Tuesday, November 25, 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல்கள்; ஐயோ பாவம் ஆளும்கட்சி!

 -சாவித்திரிகண்ணன் 

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தல் ஆளும்கட்சி அதிகார பலத்தை சகலபரிமாணங்களிலும் அராஜகமாக பிரயோகித்த நிகழ்வாயிற்று. 

அந்தரங்க செயல்திட்டங்கள், அதிரடி அறிவிப்புகள் என்ற பாணியிலேயே தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது அ.தி.மு.க அரசு. சட்டமன்றத்தில் இயல்பாக அறிவித்து, விவாதித்து நிறைவேற்ற வேண்டிய அநேக திட்டங்களை 110விதியின் கீழ் அறிவித்தே ஜனநாயகத்தை அவமானப்படுத்தி பழக்கப்பட்ட காரணத்த்தினாலோ என்னவோ, உள்ளாட்சி இடைத்தேர்தலும் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் தரயியலாத வண்ணம் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. 

செப்டம்பர் 18ந்தேதி என்று உள்ளாட்சி இடைத்தேர்தல் அவசரமாக அறிவிக்கப்பட்டதற்கு காரணம் செப்டம்பர் 20ல் ஜெயலிலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கிலான தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதும் ஒரு காரணமாக அரசியல் விமர்களால் பேசப்பட்டது. 

எளிய மக்கள் தங்கள் சுற்றத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் இத்தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, வி.சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. உண்மையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் ஒரு கட்சியை உயிர்ப்போடு ஜிவிக்க செய்வது - ஒரு கட்சியை அடிமட்டம் வரையிலும் ஆளுமை பலத்தோடு திகழவைப்பது உள்ளாட்சி பதவிகளே! இதை பிரதான எதிர்கட்சிகள் புறகணிப்பதாக அறிவித்ததானது அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் அதிகாரம் பெறும் வாய்ப்பை மறுப்பதாகத் தான் அர்த்தம். 

அதே சமயம் எதிர்கட்சிகள் புறக்கணிப்பதற்காக கூறிய காரணங்கள் சில அலட்சியப்படுத்த முடியாதவையாகவும் இருந்தன. 

அவகாசமில்லாமல் அதிரடியாக அறிவிக்கப்பட்டது, சம்பந்தப்ப்ட பகுதிகளில் அரசாங்க செலவில் இலவசத்திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றியது, ஆளும்கட்சிக்கு வேண்டட்டபட்ட அதிகாரிகளை இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பணி அமர்த்திக் கொண்டது போன்ற திட்டமிட்ட அணுகுமுறையோடு இந்த இடைத்தேர்லை ஜனநாயகப்படி ஆளும்கட்சி ஒரு போதும் நடத்தாது எனபவையே! 

இதன்காரணமாக எந்த இடத்திலுமே ஜெயிக்காமல் போனால் அது பெருத்த அவமானத்தை தரும் என எதிர்கட்சித் தலைமைகள் பயந்தன. 

ஆனால், தொண்டர்கள் பயப்படவில்லை. ஏனெனில் தாங்கள் வாழும் பகுதியில் தங்களுக்கென்று இருக்கும் ஒரு சுயசெல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ள இதை விட்டால் வேறென்ன வாய்ப்பு நமக்கு? என்ற பாணியில் ஆங்காங்கே களத்தில் தன்னிச்சையாக நிற்கத்தான் செய்தனர். 

மேயர், நகராட்சித் தலைவர் தவிர மற்ற பதவிகளுக்கு காங்கிரஸ்காரர்கள் கணிசமாகப் போட்டியிட்டனர். கட்சியின் மாநிலத்தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வராவிட்டாலும் கூட கன்னியாகுமரி, திருச்சி, கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் களம் கண்டனர். 

கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொறுத்தவரை இழந்து போன தங்கள் செல்வாக்கை இழுத்து நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக கருதி உள்ளாட்சி தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொண்டனர். ஆளும்கட்சியின் அத்துமீறல்களும், அராஜகங்களும் கம்யூனிஸ்டுகளிடம் தொலைந்து போயிருந்த போராட்ட குணத்தை மீட்டெடுக்கச் செய்தன! 

இந்த உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான கவனம் பெற்ற கட்சியாகத் திகழ்ந்தது பாரதிய ஜனதா கட்சி தான்! தமிழகத்தில் தக்க பலம் இல்லாவிட்டாலும் கூட, மத்திய ஆட்சி தங்கள் வசமிருக்கிறது என்ற காரணத்தாலும் பிரதான கட்சிகள் எதிர்க்க துணியாத போது தான் களம் காண்பது கவனம் பெறும் எனவும் தமிழக பா.ஜ.க தலைமை கருதியது. 

ஆனால், ஆளும்கட்சியான அ.தி.மு.க தங்கள் கண்களில் இந்த அளவுக்கு விரல்விட்டு ஆட்டுவிப்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை. தமிழக பா.ஜ.காவால் களத்தில் இறக்கப்ட்ட நெல்லை மேயர் உள்ளிட்ட சுமார் 40% பா.ஜ.க வேட்பாளர்களை பணபலத்தாலும், அதிகாரபலத்தாலும் வாபஸ் பெற வைத்தது ஆளும்கட்சி. 

இது அ.தி.மு.கவின் அசிங்கமான அரசியலுக்கு அடையாளம் என்றாலும், பா,.ஜ.கவினரின் பலஹீனத்தையும் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

இந்த அவமானத்தை எதிர்க்கதக்க ஆக்ரோசம் அதனிடம் வெளிப்படாதது அதனிலும் அவலம். அதன் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மட்டும் தன்னிச்சையாக ஊடகங்களில் ஆத்திரமும், ஆற்றாமையும் வெளிப்பட பேசிக்கொண்டிருந்தார். அதன் மற்ற தலைவர்கள், நிர்வாகிகளிடையே அ.தி.மு.கவை எதிர்ப்பதில் - இந்த சவாலை எதிர்கொள்வதில் - வெளிப்பட்டிருக்க வேண்டிய ஒற்றுமை கானல் நீராகத்தான் போனது. 

அ.தி.மு.கவில் முதலமைச்சர் தொடங்கி அத்தனை அமைச்சர்களும், நிர்வாகிகளும் இந்த சொற்பமான உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றுவதில் ஏதோ உயிர்காக்கும் போராட்டம் போல களம் கண்ட நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர்களிடம் ஒருங்கிணைப்பும், உத்வேகமும், பிரச்சார வேகமும் வெளிப்படாதது பெரும் பின்னடைவே. 

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பல இடங்களில் அ.தி.மு.க தவிர மற்றவர்களுக்கு வேட்பு மனுவே மறுக்கப்பட்டது. அப்படி மறுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கடத்தப்பட்டனர், மிரட்டப்பட்டனர், பணம் தந்து பணிய வைக்கப்பட்டனர். அதிகார பலத்தால் வாபஸ் பெறும்படி நிர்பந்திக்கப்பட்டனர். இன்னும் சில இடங்களில் வேட்பு மனுக்கள் தக்க காரணமின்றி தள்ளுபடியாயின. வேட்பாளர்கள் துணிந்து களம் கண்ட இடங்களில் வாக்காளர்கள் பணம் தந்து வளைக்கப்பட்டனர். இவை போதாதென்று கள்ள ஓட்டு போட வெளியூர் ஆட்களை திரட்டிக் கொண்டுவந்து காவல்துறை பலத்தோடு கள்ள ஓட்டு மகாத்மியம் கச்சிதமாக நடந்தேறியது. இதை எதிர்த்த பா.ஜ.க வேட்பாளர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர், பொய்வழக்கு போடப்பட்டது. அராஜகத்தோடு அவமானப்படுத்தலும் எல்லைமீறிப்போனது. 
கோவையிலும், தூத்துகுடியிலும் நிகழ்ந்தவையே இதற்கு சாட்சி. தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துகொடுத்தே தமிழக பா.ஜ.க தளர்ந்து போனது. அளிக்கப்பட்ட புகார்களெல்லாம் அலட்சிப்படுத்தப்பட்ட நிலையிலோ அரண்டுபோனது. 

இந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் உருக்குலைந்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தங்கள் கட்சி தொண்டர்களே காவு கொடுக்கப்பட்ட நிலையிலும், மத்திய பா.ஜ.க தலைமை மௌனம் காத்தது. உள்துறை அமைச்ச்ர் ராஜ்நாத்சிங்கிற்கு இது உறுத்தவில்லை. தன்வெற்றிக்காக பாடுபட்ட தமிழக பா.ஜ.க தொண்டர்களின் பரிதாப நிலை கண்டு மோடி பதறியதாகத் தெரியவில்லை.
 தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் ஜெயலிலிதாவை சந்தித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு இதையெல்லாம் சட்டைசெய்ய நேரமில்லை பாவம்! 'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று எத்தனையோ முறை நீட்டி முழக்கி பேசியுள்ள வெங்கையா நாயுடு வெகுண்டு எழவில்லை. தேசியத்தலைவரும், உத்திரபிரதேசத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பவருமான அமித்ஷா அலட்டிக் கொண்டதாகக் கூட தெரியவில்லை. குறைந்தபட்சம் ஏதெனும் ஒரு தேசியத் தலைவராது டெல்லியில் இருந்தவாறே ஊடகங்களை அழைத்து அ.தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுக்க க் கூட முன்வரவில்லை. 

இந்த வகையில் பா.ஜ.கவின் தேசிய தலைமைக்கும், ஏன் தமிழகத்தலைவர்கலேயே கூட சிலருக்கும் அ.தி.மு.கவிற்கும் உள்ள உள்ளார்ந்த ஒரு இணக்கம், பரஸ்பர புரிதல்கள் தான் தமிழகத்தில் பா.ஜ.க தலையெடுக்க முடியாதற்கான அம்சமாகவும் கருதலாம். 

இந்த விசித்திரமான நிலைமை தான் தமிழக பா.ஜ.கவின் கூட்டணிகட்சித் தலைமைகளை பா.ஜ.கவிடமிருந்து அந்நியப்படுத்திவருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவு என்று கூறியபோதும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தோ, பிரேமலதாவோ, ம.தி.மு.க தலைவர் வைகோவோ பா.ம.கவின் பிரதான தலைவர்களோ பா.ஜ.கவிற்கு பிரச்சாரம் செய்ய முன்வரவில்லை. ஏனெனில் ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க பா.ஜ.க தலைமையிலான அரசின் செல்வாக்கு பிரயோகப்படுத்தப்படுவதாகக் கூட தமிழக பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகளிடையே ஒரு எண்ணம் நிலவுகிறது. 

தமிழகத்தின் ஜனநாயக அரசியலுக்கு ஒரு பேராபத்தான அறிகுறியைத்தான் இந்த இடைத்தேர்தல் உணர்த்தி சென்றிருக்கிறது. 1996ல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது மிக கண்ணியமாக உள்ளாட்சிக்கான அதிகாரபரவல் என்ற லட்சிய முழக்கத்தோடு அணுகப்பட்டது. 

சுயசெல்வாக்குள்ள அதிகமான சுயேட்சைகள் அத்தேர்தலில் வெற்றிக்காண முடிந்தது. பிறகு 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தான் கணிசமான பணபலம் பிரயோகப்படுத்தப்பட்டது. கட்சிகளின் அதிகாரபலம் கண்கூடாக வெளிப்பட்டது. 2006 தி.மு.க ஆட்சியின் போது நடத்தப்பட்ட உள்ளாட்சி தேரதல் ஜனநாயகத்தை உருக்குலைய வைத்தது. அராஜகங்கள் அத்துமீறல்கள் அளவின்றி நடந்தேறின. 2011ல் அ.தி.முக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் அவ்வளவு மோசமில்லை என்றாலும் அராஜகங்கள், அதகார பலங்கள் பிரயோகிக்கப்படாமல் இல்லை. 

ஆனால், தற்போது நடந்துள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் அராஜகத்தின் உச்சம் என்று தான் சொல்லவேண்டும். 

தி.மு.க போன்ற பலமான எதிரியும் களத்தில் இல்லை அதுவும் போக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அ.தி.முகவின் அதீத செல்வாக்கை வெளிபடுத்தி இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிக்கு ஓட்டுபோடுவதால் தங்கள் பகுதிகான அடிப்படை தேவைகள் நிறைவேறும் என்ற பொதுகருத்தும் வலுப்பெற்றுள்ளது. 

அப்படியிருக்க, அசூரமான அரசபலத்தை இந்த சிறிய இடைத்தேர்தலில் பிரயோகிக்க வேண்டிய தேவை என்ன? 

ஒரு வேளை தி.மு.க களத்தில் இருந்திருந்தால் கூட அ.தி.மு.கவின் இத்தனை அராஜகங்களும் அரசியல் விமர்சகர்களால், "தி.மு.க செய்யாததா? பதிலுக்கு பதில் தானே" என்று நியாயப்படுத்தப்பட்டிருக்கும். 

தி.மு.க அராஜகம் நிகழ்த்தியபோது, 'ஜனநாயகத்திற்கு ஆபத்து' என்று பொதுக்கூட்டம் போட்டு பேசிய அறிவு௨ஜூவிகள், சமூக ஆர்வலர்கள் பலர் தற்போது தங்கள் தார்மீகக் குரலை தொண்டைக்குள்ளே புதைத்துக் கொண்டு மௌனித்திருப்பதை என்னென்று சொல்வது? 
ஒரு மிகச்சிறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் இந்தளவு ஆட்சிதலைமையில் உள்ளவர்கள் அத்துமீறி மூக்கை நுழைப்பதற்கான அவசியம் என்ன? 

தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தடுத்தும், மறுத்தும் சில உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றியது அ.தி.மு.க இதில் புதுக்கோட்டை நகராட்சி உட்பட பல உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். 

நெல்லையிலோ பா.ஜ.க வேட்பாளரை மட்டும் போட்டியிட அனுமதித்தனர். மற்றவர்களின் வேட்பு மனுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. பிறகு பா.ஜ.க வேட்பாளரை வாபஸ் பெற வைத்து முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் இணைத்தனர். 

போட்டியின்றி தேர்வானவர்கள் 

மாநகர மேயர் -1, மாநகராட்சி உறுப்பினர்கள் -4 
நகராட்சி தலைவர்கள் -4 
நகராட்சி உறுப்பனர்கள் -30 
பேரூராட்சி உறுப்பினர்கள் -64 

திருச்சி மாவட்டத்தில் மட்டுமே 83இடங்களுக்கான உள்ளாட்சி பதவிகளில் 59பேர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காஞ்சிபுரத்தில் மொத்தமுள்ள 65 உள்ளாட்சி பதவிகளில் 38பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இப்படியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் பாதிக்கு மேற்பட்டவை பணபலத்தால் விலைபேசி வாங்கப்பட்ட நிகழ்வும், ஏராளமான வேட்புமனுக்களை தகுதி நீக்கம் செய்து, போட்டியின்றி அ.தி.மு.கவினர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தமிழகம் இதற்கு முன் கண்டறியாத உச்சபட்ச அராஜகமாகும். 

இது முதலமைச்சர் சென்று பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியமில்லாத தேர்தல்! அத்தனை அமைசர்களும் ஏதோ போர்கால முதலுதவிப் பணிகளில் ஈடுபடுவதைப் போன்ற அக்கறை தேவைப்படாத தேர்தல் இது. கள்ள ஓட்டுப் போடுவதற்கு வெளியூர்களிலிருந்து ஆட்களை தருவித்து வெற்றி பெற வேண்டிய நிலை ஆளும் கட்சிக்கு அவசியமேயில்லாதது. 

பிறகென்ன வந்தது? ஏன் இப்படி நடந்தேறின...? எதிர்த்து நிற்பவர்கள் தோற்றால் மட்டும் போதாது, டெபாசிட்டும் இழக்க வேண்டும் என்பது ஆளும் கட்சித் தலைமையின் விருப்பமாம்.

 இந்த விருப்பத்தை நிறைவேற்றத் தவறினால் அமைச்சர் பதவி அதிரடியாக பிடுங்கப்படும், கட்சிப் பதவியும் கைநழுவிவிடும்' என்ற எண்ணமே அ.தி.மு.க வினரை கண்ணுமண்ணு தெரியாமல் இயங்க வைத்துள்ளது என்பதே பெரும்பாலன ஊடகங்களின் பார்வையாக வெளிப்பட்டுள்ளது. 

'உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் உயிர்நாடி' என்றார் காந்தி . ஒரு நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், அதன் பிரதிநிதிகள் இயங்கும் வழிமுறைகளைக் கொண்டே ஜனாநயகத்தை மதிப்பீடு செய்ய முடியும். 

அந்த உள்ளாட்சி அமைப்புகளை உலுத்துப்போன ஊழல் அமைப்புகளாக்கி, கட்சித் தலைமைகளின் காலில் விழும் அடிமைகளின் கூடாரமாக்கியுள்ளது தமிழகம். 

உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகளின் தலையீடுகளை முற்றிலும் களைந்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். நமது தமிழக ஆளும்கட்சியிடம் அபரிமிதமான பணபலம் இருக்கிறது. அதீதமான அதிகார பலம் இருக்கிறது. ஐயோ பாவம்! ஆன்ம பலம் தான் அறவே இல்லை.

No comments: