Tuesday, November 25, 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல்கள்; ஐயோ பாவம் ஆளும்கட்சி!

 -சாவித்திரிகண்ணன் 

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தல் ஆளும்கட்சி அதிகார பலத்தை சகலபரிமாணங்களிலும் அராஜகமாக பிரயோகித்த நிகழ்வாயிற்று. 

அந்தரங்க செயல்திட்டங்கள், அதிரடி அறிவிப்புகள் என்ற பாணியிலேயே தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது அ.தி.மு.க அரசு. சட்டமன்றத்தில் இயல்பாக அறிவித்து, விவாதித்து நிறைவேற்ற வேண்டிய அநேக திட்டங்களை 110விதியின் கீழ் அறிவித்தே ஜனநாயகத்தை அவமானப்படுத்தி பழக்கப்பட்ட காரணத்த்தினாலோ என்னவோ, உள்ளாட்சி இடைத்தேர்தலும் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் தரயியலாத வண்ணம் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. 

செப்டம்பர் 18ந்தேதி என்று உள்ளாட்சி இடைத்தேர்தல் அவசரமாக அறிவிக்கப்பட்டதற்கு காரணம் செப்டம்பர் 20ல் ஜெயலிலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கிலான தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதும் ஒரு காரணமாக அரசியல் விமர்களால் பேசப்பட்டது. 

எளிய மக்கள் தங்கள் சுற்றத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் இத்தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, வி.சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. உண்மையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் ஒரு கட்சியை உயிர்ப்போடு ஜிவிக்க செய்வது - ஒரு கட்சியை அடிமட்டம் வரையிலும் ஆளுமை பலத்தோடு திகழவைப்பது உள்ளாட்சி பதவிகளே! இதை பிரதான எதிர்கட்சிகள் புறகணிப்பதாக அறிவித்ததானது அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் அதிகாரம் பெறும் வாய்ப்பை மறுப்பதாகத் தான் அர்த்தம். 

அதே சமயம் எதிர்கட்சிகள் புறக்கணிப்பதற்காக கூறிய காரணங்கள் சில அலட்சியப்படுத்த முடியாதவையாகவும் இருந்தன. 

அவகாசமில்லாமல் அதிரடியாக அறிவிக்கப்பட்டது, சம்பந்தப்ப்ட பகுதிகளில் அரசாங்க செலவில் இலவசத்திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றியது, ஆளும்கட்சிக்கு வேண்டட்டபட்ட அதிகாரிகளை இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பணி அமர்த்திக் கொண்டது போன்ற திட்டமிட்ட அணுகுமுறையோடு இந்த இடைத்தேர்லை ஜனநாயகப்படி ஆளும்கட்சி ஒரு போதும் நடத்தாது எனபவையே! 

இதன்காரணமாக எந்த இடத்திலுமே ஜெயிக்காமல் போனால் அது பெருத்த அவமானத்தை தரும் என எதிர்கட்சித் தலைமைகள் பயந்தன. 

ஆனால், தொண்டர்கள் பயப்படவில்லை. ஏனெனில் தாங்கள் வாழும் பகுதியில் தங்களுக்கென்று இருக்கும் ஒரு சுயசெல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ள இதை விட்டால் வேறென்ன வாய்ப்பு நமக்கு? என்ற பாணியில் ஆங்காங்கே களத்தில் தன்னிச்சையாக நிற்கத்தான் செய்தனர். 

மேயர், நகராட்சித் தலைவர் தவிர மற்ற பதவிகளுக்கு காங்கிரஸ்காரர்கள் கணிசமாகப் போட்டியிட்டனர். கட்சியின் மாநிலத்தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வராவிட்டாலும் கூட கன்னியாகுமரி, திருச்சி, கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் களம் கண்டனர். 

கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொறுத்தவரை இழந்து போன தங்கள் செல்வாக்கை இழுத்து நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக கருதி உள்ளாட்சி தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொண்டனர். ஆளும்கட்சியின் அத்துமீறல்களும், அராஜகங்களும் கம்யூனிஸ்டுகளிடம் தொலைந்து போயிருந்த போராட்ட குணத்தை மீட்டெடுக்கச் செய்தன! 

இந்த உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான கவனம் பெற்ற கட்சியாகத் திகழ்ந்தது பாரதிய ஜனதா கட்சி தான்! தமிழகத்தில் தக்க பலம் இல்லாவிட்டாலும் கூட, மத்திய ஆட்சி தங்கள் வசமிருக்கிறது என்ற காரணத்தாலும் பிரதான கட்சிகள் எதிர்க்க துணியாத போது தான் களம் காண்பது கவனம் பெறும் எனவும் தமிழக பா.ஜ.க தலைமை கருதியது. 

ஆனால், ஆளும்கட்சியான அ.தி.மு.க தங்கள் கண்களில் இந்த அளவுக்கு விரல்விட்டு ஆட்டுவிப்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை. தமிழக பா.ஜ.காவால் களத்தில் இறக்கப்ட்ட நெல்லை மேயர் உள்ளிட்ட சுமார் 40% பா.ஜ.க வேட்பாளர்களை பணபலத்தாலும், அதிகாரபலத்தாலும் வாபஸ் பெற வைத்தது ஆளும்கட்சி. 

இது அ.தி.மு.கவின் அசிங்கமான அரசியலுக்கு அடையாளம் என்றாலும், பா,.ஜ.கவினரின் பலஹீனத்தையும் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

இந்த அவமானத்தை எதிர்க்கதக்க ஆக்ரோசம் அதனிடம் வெளிப்படாதது அதனிலும் அவலம். அதன் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மட்டும் தன்னிச்சையாக ஊடகங்களில் ஆத்திரமும், ஆற்றாமையும் வெளிப்பட பேசிக்கொண்டிருந்தார். அதன் மற்ற தலைவர்கள், நிர்வாகிகளிடையே அ.தி.மு.கவை எதிர்ப்பதில் - இந்த சவாலை எதிர்கொள்வதில் - வெளிப்பட்டிருக்க வேண்டிய ஒற்றுமை கானல் நீராகத்தான் போனது. 

அ.தி.மு.கவில் முதலமைச்சர் தொடங்கி அத்தனை அமைச்சர்களும், நிர்வாகிகளும் இந்த சொற்பமான உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றுவதில் ஏதோ உயிர்காக்கும் போராட்டம் போல களம் கண்ட நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர்களிடம் ஒருங்கிணைப்பும், உத்வேகமும், பிரச்சார வேகமும் வெளிப்படாதது பெரும் பின்னடைவே. 

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பல இடங்களில் அ.தி.மு.க தவிர மற்றவர்களுக்கு வேட்பு மனுவே மறுக்கப்பட்டது. அப்படி மறுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கடத்தப்பட்டனர், மிரட்டப்பட்டனர், பணம் தந்து பணிய வைக்கப்பட்டனர். அதிகார பலத்தால் வாபஸ் பெறும்படி நிர்பந்திக்கப்பட்டனர். இன்னும் சில இடங்களில் வேட்பு மனுக்கள் தக்க காரணமின்றி தள்ளுபடியாயின. வேட்பாளர்கள் துணிந்து களம் கண்ட இடங்களில் வாக்காளர்கள் பணம் தந்து வளைக்கப்பட்டனர். இவை போதாதென்று கள்ள ஓட்டு போட வெளியூர் ஆட்களை திரட்டிக் கொண்டுவந்து காவல்துறை பலத்தோடு கள்ள ஓட்டு மகாத்மியம் கச்சிதமாக நடந்தேறியது. இதை எதிர்த்த பா.ஜ.க வேட்பாளர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர், பொய்வழக்கு போடப்பட்டது. அராஜகத்தோடு அவமானப்படுத்தலும் எல்லைமீறிப்போனது. 
கோவையிலும், தூத்துகுடியிலும் நிகழ்ந்தவையே இதற்கு சாட்சி. தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துகொடுத்தே தமிழக பா.ஜ.க தளர்ந்து போனது. அளிக்கப்பட்ட புகார்களெல்லாம் அலட்சிப்படுத்தப்பட்ட நிலையிலோ அரண்டுபோனது. 

இந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் உருக்குலைந்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தங்கள் கட்சி தொண்டர்களே காவு கொடுக்கப்பட்ட நிலையிலும், மத்திய பா.ஜ.க தலைமை மௌனம் காத்தது. உள்துறை அமைச்ச்ர் ராஜ்நாத்சிங்கிற்கு இது உறுத்தவில்லை. தன்வெற்றிக்காக பாடுபட்ட தமிழக பா.ஜ.க தொண்டர்களின் பரிதாப நிலை கண்டு மோடி பதறியதாகத் தெரியவில்லை.
 தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் ஜெயலிலிதாவை சந்தித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு இதையெல்லாம் சட்டைசெய்ய நேரமில்லை பாவம்! 'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று எத்தனையோ முறை நீட்டி முழக்கி பேசியுள்ள வெங்கையா நாயுடு வெகுண்டு எழவில்லை. தேசியத்தலைவரும், உத்திரபிரதேசத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பவருமான அமித்ஷா அலட்டிக் கொண்டதாகக் கூட தெரியவில்லை. குறைந்தபட்சம் ஏதெனும் ஒரு தேசியத் தலைவராது டெல்லியில் இருந்தவாறே ஊடகங்களை அழைத்து அ.தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுக்க க் கூட முன்வரவில்லை. 

இந்த வகையில் பா.ஜ.கவின் தேசிய தலைமைக்கும், ஏன் தமிழகத்தலைவர்கலேயே கூட சிலருக்கும் அ.தி.மு.கவிற்கும் உள்ள உள்ளார்ந்த ஒரு இணக்கம், பரஸ்பர புரிதல்கள் தான் தமிழகத்தில் பா.ஜ.க தலையெடுக்க முடியாதற்கான அம்சமாகவும் கருதலாம். 

இந்த விசித்திரமான நிலைமை தான் தமிழக பா.ஜ.கவின் கூட்டணிகட்சித் தலைமைகளை பா.ஜ.கவிடமிருந்து அந்நியப்படுத்திவருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவு என்று கூறியபோதும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தோ, பிரேமலதாவோ, ம.தி.மு.க தலைவர் வைகோவோ பா.ம.கவின் பிரதான தலைவர்களோ பா.ஜ.கவிற்கு பிரச்சாரம் செய்ய முன்வரவில்லை. ஏனெனில் ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க பா.ஜ.க தலைமையிலான அரசின் செல்வாக்கு பிரயோகப்படுத்தப்படுவதாகக் கூட தமிழக பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகளிடையே ஒரு எண்ணம் நிலவுகிறது. 

தமிழகத்தின் ஜனநாயக அரசியலுக்கு ஒரு பேராபத்தான அறிகுறியைத்தான் இந்த இடைத்தேர்தல் உணர்த்தி சென்றிருக்கிறது. 1996ல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது மிக கண்ணியமாக உள்ளாட்சிக்கான அதிகாரபரவல் என்ற லட்சிய முழக்கத்தோடு அணுகப்பட்டது. 

சுயசெல்வாக்குள்ள அதிகமான சுயேட்சைகள் அத்தேர்தலில் வெற்றிக்காண முடிந்தது. பிறகு 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தான் கணிசமான பணபலம் பிரயோகப்படுத்தப்பட்டது. கட்சிகளின் அதிகாரபலம் கண்கூடாக வெளிப்பட்டது. 2006 தி.மு.க ஆட்சியின் போது நடத்தப்பட்ட உள்ளாட்சி தேரதல் ஜனநாயகத்தை உருக்குலைய வைத்தது. அராஜகங்கள் அத்துமீறல்கள் அளவின்றி நடந்தேறின. 2011ல் அ.தி.முக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் அவ்வளவு மோசமில்லை என்றாலும் அராஜகங்கள், அதகார பலங்கள் பிரயோகிக்கப்படாமல் இல்லை. 

ஆனால், தற்போது நடந்துள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் அராஜகத்தின் உச்சம் என்று தான் சொல்லவேண்டும். 

தி.மு.க போன்ற பலமான எதிரியும் களத்தில் இல்லை அதுவும் போக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அ.தி.முகவின் அதீத செல்வாக்கை வெளிபடுத்தி இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிக்கு ஓட்டுபோடுவதால் தங்கள் பகுதிகான அடிப்படை தேவைகள் நிறைவேறும் என்ற பொதுகருத்தும் வலுப்பெற்றுள்ளது. 

அப்படியிருக்க, அசூரமான அரசபலத்தை இந்த சிறிய இடைத்தேர்தலில் பிரயோகிக்க வேண்டிய தேவை என்ன? 

ஒரு வேளை தி.மு.க களத்தில் இருந்திருந்தால் கூட அ.தி.மு.கவின் இத்தனை அராஜகங்களும் அரசியல் விமர்சகர்களால், "தி.மு.க செய்யாததா? பதிலுக்கு பதில் தானே" என்று நியாயப்படுத்தப்பட்டிருக்கும். 

தி.மு.க அராஜகம் நிகழ்த்தியபோது, 'ஜனநாயகத்திற்கு ஆபத்து' என்று பொதுக்கூட்டம் போட்டு பேசிய அறிவு௨ஜூவிகள், சமூக ஆர்வலர்கள் பலர் தற்போது தங்கள் தார்மீகக் குரலை தொண்டைக்குள்ளே புதைத்துக் கொண்டு மௌனித்திருப்பதை என்னென்று சொல்வது? 
ஒரு மிகச்சிறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் இந்தளவு ஆட்சிதலைமையில் உள்ளவர்கள் அத்துமீறி மூக்கை நுழைப்பதற்கான அவசியம் என்ன? 

தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தடுத்தும், மறுத்தும் சில உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றியது அ.தி.மு.க இதில் புதுக்கோட்டை நகராட்சி உட்பட பல உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். 

நெல்லையிலோ பா.ஜ.க வேட்பாளரை மட்டும் போட்டியிட அனுமதித்தனர். மற்றவர்களின் வேட்பு மனுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. பிறகு பா.ஜ.க வேட்பாளரை வாபஸ் பெற வைத்து முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் இணைத்தனர். 

போட்டியின்றி தேர்வானவர்கள் 

மாநகர மேயர் -1, மாநகராட்சி உறுப்பினர்கள் -4 
நகராட்சி தலைவர்கள் -4 
நகராட்சி உறுப்பனர்கள் -30 
பேரூராட்சி உறுப்பினர்கள் -64 

திருச்சி மாவட்டத்தில் மட்டுமே 83இடங்களுக்கான உள்ளாட்சி பதவிகளில் 59பேர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காஞ்சிபுரத்தில் மொத்தமுள்ள 65 உள்ளாட்சி பதவிகளில் 38பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இப்படியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் பாதிக்கு மேற்பட்டவை பணபலத்தால் விலைபேசி வாங்கப்பட்ட நிகழ்வும், ஏராளமான வேட்புமனுக்களை தகுதி நீக்கம் செய்து, போட்டியின்றி அ.தி.மு.கவினர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தமிழகம் இதற்கு முன் கண்டறியாத உச்சபட்ச அராஜகமாகும். 

இது முதலமைச்சர் சென்று பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியமில்லாத தேர்தல்! அத்தனை அமைசர்களும் ஏதோ போர்கால முதலுதவிப் பணிகளில் ஈடுபடுவதைப் போன்ற அக்கறை தேவைப்படாத தேர்தல் இது. கள்ள ஓட்டுப் போடுவதற்கு வெளியூர்களிலிருந்து ஆட்களை தருவித்து வெற்றி பெற வேண்டிய நிலை ஆளும் கட்சிக்கு அவசியமேயில்லாதது. 

பிறகென்ன வந்தது? ஏன் இப்படி நடந்தேறின...? எதிர்த்து நிற்பவர்கள் தோற்றால் மட்டும் போதாது, டெபாசிட்டும் இழக்க வேண்டும் என்பது ஆளும் கட்சித் தலைமையின் விருப்பமாம்.

 இந்த விருப்பத்தை நிறைவேற்றத் தவறினால் அமைச்சர் பதவி அதிரடியாக பிடுங்கப்படும், கட்சிப் பதவியும் கைநழுவிவிடும்' என்ற எண்ணமே அ.தி.மு.க வினரை கண்ணுமண்ணு தெரியாமல் இயங்க வைத்துள்ளது என்பதே பெரும்பாலன ஊடகங்களின் பார்வையாக வெளிப்பட்டுள்ளது. 

'உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் உயிர்நாடி' என்றார் காந்தி . ஒரு நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், அதன் பிரதிநிதிகள் இயங்கும் வழிமுறைகளைக் கொண்டே ஜனாநயகத்தை மதிப்பீடு செய்ய முடியும். 

அந்த உள்ளாட்சி அமைப்புகளை உலுத்துப்போன ஊழல் அமைப்புகளாக்கி, கட்சித் தலைமைகளின் காலில் விழும் அடிமைகளின் கூடாரமாக்கியுள்ளது தமிழகம். 

உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகளின் தலையீடுகளை முற்றிலும் களைந்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். நமது தமிழக ஆளும்கட்சியிடம் அபரிமிதமான பணபலம் இருக்கிறது. அதீதமான அதிகார பலம் இருக்கிறது. ஐயோ பாவம்! ஆன்ம பலம் தான் அறவே இல்லை.

ஜெயலலிதாவின் கைதும், எதிர்வினைகளும்

 -சாவித்திரிகண்ணன் 

ஊழலுக்கு எதிரான ஒரு தார்மீகக் கோபம், 

அறம் சார்ந்த விழமியங்கள் 

தமிழகத்தில் அரிதாகிக் கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தமிழகத்தில் பரவலாக வெளிப்பட்ட எதிர்வினைகள் நேர்மையை நேசிப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது! 66கோடி சொத்து சேர்ப்பில் சுமார் 56கோடிக்கு ஜெயலலிதாவால் கணக்கு காட்ட முடியவில்லை என்பதே அவர் சிறைக்கு போனதற்கான காரணம்! 

ஆக, இதெல்லாம் ஒரு பெரிய தொகையா? இதை விட பல்லாயிரம் கோடி ஊழல் செய்பவர்களை எல்லாம் சிறையில் தள்ளவில்லையே..." 

கருணாநிதிக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் ஜெயலிலிதாவைக் குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? 

ஜெயலிலிதா எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறார் அது தடைபட்டுவிடுமே.... 

ஜெயலிலிதா இல்லாவிட்டால் தமிழகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிறைவேற்றுவதற்கு யார் ஒருவரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லையே... 
போன்ற சொல்லாடல்கள் தொடர்ந்து வெளிப்பட்டவண்ணமிருந்தன...! 

இவையாவும் அலட்சியப்படுத்தமுடியாதவை என்ற பிரச்சாரமும் எட்டுத்திக்கும் வேகம் பெற்றன. 
கட்டமைக்கப்பட்ட இந்தச்சூழலில் கண்ணுக்குத் தெரிந்த உண்மைகள், யதார்த்தங்கள் காணாமலடிக்கப்பட்டன. 

மேற்படி நான்கு வாதங்கள் குறித்து ஒவ்வொன்றாக அலசுவோம். 
இந்த நாட்டில் பெரிய தொழிலதிபர்கள் பல்லாயிரம்கோடி கடன்பெற்று வங்கியில் திரும்பச் செலுத்தாமால் உள்ளார்கள் என்பதற்காக ஒரு வங்கி மனேஜரிடம் ஒரு திருடன் மிரட்டிப் பணம் பறிக்கும் போது பிடிப்பட்டால் விட்டுவிட நினைப்போமா? அல்லது அந்த திருடனை போலீசில் ஒப்படைக்க நினைப்போமா? 

மற்றொரு உதாரணம் சொல்கிறேன். பக்கத்துவீட்டில் பெரும் நகை, பணம் சமீபத்தில் கொள்ளை போனது. தற்போது உங்கள் வீட்டில் வெறும் ஆயிரம் ரூபாயை அபகரித்து செல்பவனை நீங்கள் அனுமதித்து விடுவீர்களா...? அவன் பிடிப்பட்டால், "தொகை கொஞ்சம் தான் தேவையில்லை அவனைவிட்டு விடுங்கள்" என்பீர்களா? அவனிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்று, அவனை நான்கு நாட்களாவது ஜெயலில் தள்ள நினைப்பீர்கள் தானே! மேலும் ஒரு திருடன் திருந்தாதவரை அவனை சமூகத்தில் நடமாட அனுமதிப்பது ஆபத்தல்லவா.....? 

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை 18ஆண்டுகளுக்கு முன்பு அவர் தவறானவழியில் சேர்த்த ஒரு குறைந்தபட்ச தொகைக்காக பிடிபட்டிருக்கலாம். தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் பின்னும் அவர் அபரிமிதமாக பணம் ஈட்டாத தூய்மையான அரசு நிர்வாகத்தைத் தான் தந்தார் என்று ஒரு போதும் சொல்லமுடியாது. அதுவும் தற்போது அதிமோசமான உச்சபட்ச ஊழல் நிர்வாகத்தையே தமிழகம் கண்டுகொண்டுள்ளது. எனவே இவ்வளவு குறைந்த தொகைக்காக ஜெயலிலிதா தண்டிக்கப்படுவதா? எனக்கேட்பவர்கள் தற்போதைய யதார்த்தங்களை அலட்சியப்படுத்தக்கூடாது. 

மேலும் இந்த வழக்கில் 18 ஆண்டுகள் நீதித்துறைக்கு அவர் பெரும் சங்கடங்களை உருவாக்கி, வழக்கை இழுத்தடிக்க படுமோசமான பித்தலாட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றியவண்ணமிருந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. அத்துடன் ஏற்கனவே கலர்டிவி ஊழல்வழக்கு, டான்சிவழக்கு, டிட்கோவழக்கு, பிளசண்ட் ஸ்டேவழக்கு, தெற்காசிய விளம்பரத்துக்கான வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல், வருமானவரி ஏமாற்று, லண்டனில் சொத்து வாங்கிய வழக்கு போன்றவற்றை அதிகாரபலத்துடன், அபரிமிதமான பணபலத்தால் சட்ட வல்லுநர்களின் துணைகொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அக்கரஹார லாபி துணைகொண்டும் நீர்த்துப்போக வைத்த நிதர்சனத்தை புறந்தள்ளலாகாது. 

இவை அனைத்தையும் விட சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு ஆதரவான அதிசக்திவாய்ந்த அழுத்தங்கள் தரப்பட்ட வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என சட்டவல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட அழுத்தங்களை பொருட்படுத்தாது, ஆசைகாட்டிய நிர்பந்தங்களுக்கு அடிபணியாது, சலனங்களுக்கு சற்றும் இடம்கொடாது அறக்கோட்பாட்டிலிருந்து அடி பிறலாது ஊழலுக்கு எதிரான ஒரு தீர்ப்பை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இனிவரக்கூடிய அனைத்து ஊழல் வழக்குகளின் தீர்ப்புகளிலும் மேற்கொள் காட்டப்படக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இந்த தீர்ப்பை திசைமாற்றும் முயற்சிகளும், திட்டிதீர்க்கும் ஆர்ப்பாட்டங்களும் ஜெயலலிதாவை மட்டுமல்ல, கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்குமே ஆதரவானது என்பது தான் உண்மை. 

இன்று ஜெயலலிதாவை காப்பாற்றும் முயற்சி, ஊழல் செய்துள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் நாளை காப்பாற்றி மீட்டெடுப்பதற்கான சுலபமான பாதையை சமைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

கருணாநிதிக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் பிறர் ஊழலை சுட்டிக்காட்டும் தார்மீகத் தகுதி இல்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த காரணமே ஜெயலிலிதா செய்து கொண்டு போகும் அதீத ஊல்களுக்கு தந்த அங்கீகாரமாகிவிட முடியாது! ஒவ்வொரு ஊழல்வாதியும் தனக்கு எதிரான மற்றொரு ஊழல்வாதியை உதாரணம் காட்டியே தங்கள் பிழைப்பை மாற்றி, மாற்றி நடத்திக்கொண்டு போவதற்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும். கருணாநிதியும், சுப்பிரமணியசுவாமியும் ஊழல்வாதிகள் என்பதால் புறக்கணிக்ப்பட்டதைப் போல ஜெயலிலிதாவையும் மக்கள் புறக்கணிப்பது தானே சரியானது. 

ஜெயலிலாதவின் மக்கள் நலத்திட்டங்கள் என்பவை பிரம்மாண்டப்படுத்தப்பபட்டுவரும் மாயை. இது குறித்த மிக விரிவான ஆழமான புரிதலை உள்ளடக்கிய கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். தமிழகத்தில் சுமார் 7000 டாஸ்மாக் மதுபான கடைகளையும் 4000 மதுபான பார்களையும் அரசாங்க பலத்தில் நடத்தி கொள்ளை இலாபம் ஈட்டமுடிந்த ஜெயலலிதா அரசுக்கு ஏன் 300க்கும் குறைவான அம்மா உணவகங்களை மட்டும்தான் திறக்கமுடிந்தது. இதை மிக சுருக்கமாகச் சொல்வது என்றால் டாஸ்மாக் மதுவின் மூலம் சுமார் 24,000கோடிகளை அள்ளும் அநீதியைச் சமன்செய்யும் பொருட்டே அவர் சில எழும்புத்துண்டுகளை விட்டெறிகிறார். இது குறித்து காந்திய மக்கள் இயக்கம் ஏற்கெனவே விரிவாக தந்துள்ள விபரங்களின் படி ஜெயலலிதா மது மூலம் மக்களிடம் அபகரிப்பதை ஒப்பிடும் போது மக்களுக்கு இலவசமென்றும், மானியம் என்றும் தருவது மிகக்குறைவே என்பது நிருபிக்கப்பட்ட உண்மை! இந்த இலவசங்கள், மானியங்கள் என்பவை மக்கள் உழைப்பை உதாசினப்படுத்தி, உள்ளத்திறனையும் ஊனப்படுத்தும் தந்திரங்கள் தான்! 

ஜெயலிலிதா இல்லாவிட்டால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்திற்கான முழுமுதற்குற்றவாளியே ஜெயலிலிதா தான். திறமையாளர்களை, நேர்மையாளர்களை ஒரம்கட்டுவது அல்லது ஒழித்துகட்டுவது, கட்சியையும், ஆட்சியையும் அடிமைகளின் கூடாரமாக மாற்றியது எல்லாம் சாட்சாத் அவர்தானே! 

ஆரம்பம் தொடங்கி இன்று வரை பட்டியலிட்டால் பட்டியல் வெகுநீளமாகும். உதாரணத்திற்கு சில என்றால் க.ஆராசாராம், பண்ருட்டி ராமசந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், கே.ஏ.கிருஷ்ணசாமி, அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.ஆர், ரகுபதி, திருச்சி, கே.சௌந்திரராஜன், கோவைதம்பி, விஸ்வநாதன், பொன்னையன், முத்துசாமி... என பற்பலர். இது கட்சிக்குள் என்றால், ஆட்சி அதிகாரத்திலும் அவர் புறந்தள்ளிய நேர்மையான அதிகாரிகளின் பட்டியல் மிகப்பெரியது இறையண்பு, உ.சகாயம், உமாசங்கர்.... இப்படி ஏராளம்! 

ஒருவர் தக்கவர், தகுதியில்லாதவர் என்பது அவர் விட்டுச்செல்லும் எச்சத்தாற் உணர்ப்படும் என்றார் வள்ளுவர். ஜெயலிலிதாவின் எச்சங்கள் எனப்படும் இரண்டாம் கட்டத்தலைவர்களின் தகுதியின்மைய என்பது உண்மையில் அவர்கள் சம்பந்தப்பட்டதல்ல, அது ஜெயலிலிதாவின் தகுதியை உணர்ந்துகொள்வதற்கான முக்கிய அடையாளமாகும். சசிகலா போன்ற மன்னார்குடி குடும்ப வகையறாக்களைக் கொண்டே நாம் ஜெயலிலிதாவை மதிப்பிடவேண்டும். இன்றைய ஜெயலிலதாவின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அவரது கூட நட்பு கூட்டத்தின் மீதும், அந்த கூட்டத்தின் மீதான தன் நாட்டத்தை இன்று வரை விலக்ககொள்ள முடியாத ஜெயலலிதாவின் மீதும் மக்களுக்கு இயல்பாக எழும் கோபத்தை மடைமாற்றவே கருணாநிதியும், சுப்பிரமணியசுவாமியும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

"தீதும் நன்றும் பிறர் தரவாரா" 
என்பது அவரவரின் அனுபவங்கள் கற்பிக்கும் பாடமாகும். 

ஊழலுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை சமீபகாலமாக வெளிபடுத்தி வந்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு விரைந்து ஜாமீன் வழங்கியுள்ளது. 

ஜாமினில் வெளிவந்துள்ள ஜெயலிதாவை ஜெயா டிவி 'மக்கள் முதல்வர்' என்று புதுமையாக அழைத்தது. 'மக்கள் முதல்வரின் ஆணைக்கேற்ப....' என்றும் செய்திவாசிக்கிறது. 

ஆக, குற்றவழக்கில் தண்டனை பெற்று தற்காலிக நிவாரணம் பெற்றுள்ள ஜெயலிலதா தான் தமிழகத்தின் நிஜ முதல்வர். சட்டத்தின் பார்வைக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தெரிவார். ஆனால் சமானியனுக்கும் புரியும் போயஸ்தோட்டமே உண்மையான தலைமையைக் கொண்ட செயலகம் என்பது! இது அனைவரும் அறிய அரங்கேறும் நாடகம்! 

தமிழக மக்கள் தங்களை பிறர் ஏமாற்ற அனுமதித்தது என்பது கருணாநிதியின் காலகட்டம். 
தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள தயாராக்கப்பட்டுள்ளது என்பதே ஜெயலிலிதாவின் காலக்கட்டம். 

வெளிதாக்குதலில் வீழ்ந்தவர்களை மீட்டெடுப்பதைக் காட்டிலும் உள் தாக்குதலால் சுயமிழந்து நிற்பவர்களை மீட்டெடுப்பது என்பது மிக மிக சவால் நிறைந்ததாகும்! 

ஏனெனில், தாங்கள் வீழ்ந்துள்ளோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது ஆகப்பெரிய சவாலாகும்! வெளியிலுள்ள ஒரு எதிரியை அடையாளப்படுத்தி ஒருவனை வீறுகொள்ளவைப்பது சுலபம்.ஆனால் தனக்குள் இருக்கும் எதிரயை உணர்த்தி மீட்டெடுப்பது தான் மிகவும் கஷ்டம். இந்த தாக்கம் நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் எல்லையில்லா பாதிப்புகளை தந்துகொண்டிருக்கும்! 

பாக்ஸ் மேட்டர் 

ஊடகங்களின் பாரபட்சம் ஜெயலலிதா கைதில் நிகழ்ந்த எதிர்வினைகளுக்கு தமிழக ஊடகங்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. 

இந்த வழக்கு விசாரணை பற்றிய தகவல்களை தொடர்ந்து ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவந்தன. வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பில் சொல்லப்பட்ட பொய்கள், பித்தலாட்டங்கள், இழுத்தடிப்புகள், தடங்கல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் தற்போதைய ஜெயலலிதாவின் ஊழல் மலிந்த ஆட்சி செயல்பாடுகள் எண்ணற்றவற்றை மக்களின் பார்வைக்கு கொண்டுவராமல் ஊடகங்கள் கவனமாக மறைத்துவருகின்றன. 

ஆனால், அதே சமயம் இரண்டாம் அலைக்காற்றை ஊழல் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதிலும், சொல்வதிலும் மிக சிறப்புடன் செயலாற்றுகின்றன. 
கருணாநிதி, ஜெயலலிதா தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் தொடர்ச்சியான பாரபட்ச செயல்பாடுகள் ஒரு மிகப்பெரிய சமூக ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியதாகும். இந்தச்சூழல்கள் நமக்கு பெரியாரியலின் பெரு முக்கியத்துவத்தை ஆழமாக உணர்த்துகின்றன.

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி!

 -சாவித்திரிகண்ணன் 

இந்தியாவையே உலுக்கிய இமாலய ஊழல்கள் 2ஜி எனப்படும் இரண்டாம் அலைக்கற்றை ஊழலும், நிலக்கரிச் சுரங்க ஊழலும்! 

இந்த ஊழல்களை விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற பொறுப்புள்ள ஒரே விசாரணை அமைப்பு சி.பி.ஐ எனப்படும் சென்ட்ரல் இண்டலிஜன்ஸ் பீரோ. 

ஆனால், இந்த அமைப்போ ஆட்சியாளர்களின் கை அசைவுக்கும், கண் அசைவிற்கும் காத்திருக்கும் ஏவல் நாய்! 

ஆக, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? தப்புவிக்கப்படுவார்களா? என்பதற்கு சாலமன் பாப்பையாவை அழைத்து பட்டிமன்றம் நடத்தித் தான் விடைகாணவேண்டும் என்பதில்லை. 

தற்போது இந்த இரண்டு இமாலய ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களை தப்புவிக்க சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தன் வீட்டிற்கே அழைத்துப் பேரம் பேசிய விவகாரத்தைத் தான் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார். 

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீடு என்பது புது தில்லியின் அதி முக்கிய பிரமுகர்களும், அமைச்சர்களும் குடியிருக்கும் ஜன்பத் சாலையில் தான் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி வசிப்பது இந்த சாலையில் தான்! 

சி.பி.ஐக்கு புதுதில்லியில் மிக விஸ்தாரமான 11 அடுக்குகளைக் கொண்ட தனி அலுவலகம் சுமார் 200கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. அதன் பிரதான அலுவலகத்திலும் 52கிளைகளிலுமாக சுமார் 5,600அதிகாரிகள், ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். 

சம்பந்தப்பட்ட யாரையும் அழைத்து விசாரிக்க நவீன வசதிகள் கொண்ட, ஏராளமான கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட்ட குளிர்பதன வசதிகள் கொண்ட தனி அறைகள் அந்த அலுவலகத்தில் நிறையவே உள்ளன. இந்த அமைப்புக்கென்று நமது மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 400கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்குகிறது. இவ்வளவு இருக்க, சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இந்த இமாலய ஊழல்களில் சம்பந்தப்பட்ட முக்கிய தொழில் அதிபர்களையும், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் தன் இல்லத்திற்கு அழைத்து பேச வேண்டிய அவசியம் என்ன? 

ரஞ்சித் சின்ஹாவை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட அனில் அம்பானி தன் மனைவியுடன் சிலமுறை! அம்பானியின் வலது கரமான ஏ.என்.சேதுராமன் சுமார் 50முறைக்கும் மேல் ரஞ்சித் சின்ஹாவின் இல்லம் சென்றுள்ளார், ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும் சந்தித்துள்ளனர். 

நீராராடியா போன்ற இந்தியாவின் பிரபல அரசியல் தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் என சுமார் 52பேர் 329முறை அவரது இல்லம் சென்றுள்ளனர். 

மேற்படி தகவல்கள் சி.பி.ஐ அலுவலகத்திற்கு போட்டி அலுவலகமாக தன் இல்லத்தை ரஞ்சித் சின்ஹா மாற்றியுள்ளதைத் தான் உறுதிபடுத்துகின்றன. 

உண்மையான, அதிகாரபூர்வமான சி.பி.ஐ அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அரும்பாடுபட்டு ஊழல்புகார்களுக்கு ஆளானவர்கள் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்களை தேடி உழைத்துக் கொண்டிருப்பது ஒரு புறம் என்றால், அந்த ஆதாரங்களை கொண்டு தன் இல்லத்தில் ஊழல் பெருச்சாளிகளிடம் பேரம் நடத்தியுள்ளார் ரஞ்சித் சின்ஹா! 

இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். 

இத்தனை பெரிய துரோகச் செயல்பாடுகளை தன் இல்லத்தில் உட்கார்ந்து ஆற அமரச் செய்யும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது? யார் தந்தது? தனி ஒரு மனிதராக இதனை அவர் செய்யமுடியுமா? 

அதுவும் உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் இமாலய ஊழல்களுக்கு ஜன்பத் சாலை இல்லத்தில் உட்கார்ந்து கொண்டு சாமதி கட்டி வந்துள்ளார் என்றால், அவர் எப்படி சி.பி.ஐ இயக்குநராக முடிந்தது? அவரை சி.பி.ஐ இயக்குநராக்கியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்றும் நாம் ஆராய வேண்டியுள்ளது. 

2ஜி ஊழலிலும், நிலக்கரி சுரங்க ஊழலிலும் ஐ.மு.கூ அரசு மக்களிடம் அம்பலப்பட்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதன் ஊழல் செய்திகள் சரம்சரமாக வெளியாகிக் கொண்டிருந்த ஒரு சூழலில் தான் - நவம்பர் 2012ல் - சி.பி.ஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். 

இவரது நியமனத்தை அன்றே ஊழலுக்கு எதிரான அமைப்புகள் எதிர்த்தன. சென்னையைச் சேர்ந்த முன்னாள் சி.பி.ஐ இன்ஸ்பெக்டரும், தியாகி ஜெபமணியின் மகனுமான மோகன்ராஜ் ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் பிரமாண பத்திரத்தில் ரஞ்சித் சின்ஹா மாட்டுதீவன ஊழலில் இருந்து லாலுபிரசாத் யாதவை காப்பாற்ற உதவிய வகையிலும், அந்த வழக்கையே நீர்த்து போக செய்த வகையிலும், பெரும் பங்காற்றியதாக பீகார் உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பதோடு, அவர் ரயில்வே துறையில் ஆர்.பி.எப்.பின் பொது இயக்குநராக இருந்தபோது ஏராளமான ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். மோகன்ராஜின் இந்த வாதங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகவில்லை. 'ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது' என்பது இதில் உறுதிபட்டது. 

ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தை அன்றைய எதிர்கட்சியான பா.ஜ.க பெயரளவுக்குத் தான் எதிர்த்தது. பெரிய முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரஞ்சித் சின்ஹா ஒரு 'அக்மார்க்க பிராடு' என்பது அனைத்து வகையிலும் சந்தேகக்கிடமற்ற உண்மை. ரயில்வே பாதுகாப்புப் படையை பலஹீனப்படுத்தி, அதன் திறமைகளை, செயல்பாடுகளை சிதைக்குமளவுக்கு ரஞ்சித் சின்ஹாவின் ஊழல் கொடிகட்டிப் பறந்தது ஊரறிந்த உண்மை. அப்படிப்பட்ட அநீதி திலகத்தை அதி முக்கிய விசாரணை அமைப்பின் தலைமை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தது என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நோக்கம் வேறொன்றுமில்லை. 

இனி திருடனிடம் சாவி கொடுத்தாயிற்று. எனவே இது வரை திருடப்பட்டது குறித்து அவன் கேள்வி எழுப்ப போவதில்லை. திருடியதில் பங்கு வேண்டி பிச்சை கேட்பதற்கே அவனது நேரம் விரயமாகும். பிச்சை போட்டுவிட்டால் எடுத்தவனுக்கும் விடுதலை, பெற்றவனுக்கும் சந்தோஷம். எனவே நமக்கு விசுவாசமிக்க ஏவல் நாய் வேண்டுமென்றால் அது இரைதேடுவதற்கு நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? நாம் அமைத்த வேலி பயிரை பாதுகாக்க அல்ல, பயிரை நம்மோடு சேர்ந்து மேய்ந்து கொள்ளத்தான்! இந்த பரஸ்பர புரிதல் தான் ரஞ்சித் சின்ஹா சி.பி.ஐ இயக்குநராக சிம்மாசனம் ஏறக்காரணமாயிற்று. 

நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குலைத்துக் கொண்டு தெருவில் ஓடி குப்பையைக் கிளறித் தின்பதை விடாது என்ற பழமொழி உண்டு. அடிப்படையிலேயே கோளாறுள்ள ஒருவருக்கு ஆகப்பெரிய பதவியைக் கொடுத்தாலும் தன் இயல்பிலிருந்தும் குணத்திலிருந்தும் ஒரு போதும் அவர் விடுபடமாட்டார் என்பது ரஞ்சித் சின்ஹா பதவி ஏற்ற பிறகான அவரது ஒவ்வொரு அசைவிலும், பேச்சிலும் வெளிப்பட்டே வந்தது. 

சி.பி.ஐயின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ரஞ்சித் சின்ஹா பேசும் போது, "விளையாட்டுகளில் சூதாட்டத்தை தடுக்க முடியாவிட்டால் அரசே அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் தந்துவிடலாம். இதன்மூலம் அரசுக்கும் பலநூறு கோடி வருமானமாவது கிடைக்கும். பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து பெரிய அளவில் பேசப்படுகிறது. பெண்கள் பாலியல் பலாத்காரத்தை எதிர்க்க முடியாமல் போகும் தருணங்களில் அதை சந்தோஷமாக அனுபவித்து விடலாம்" என்றார். 

இந்த பேச்சு நாடெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகளும், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் போர்கோலம் பூண்டன. அதன் பிறகு ரஞ்சித் சின்ஹா, "நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று சமாளித்தார். 

நிலக்கரித் துறை ஊழல்குறித்து வரைவு அறிக்கை தயார் செய்த ரஞ்சித் சின்ஹா, அதை அன்றைய சட்ட அமைச்சர் அஸ்வாணிகுமாரிடமும், அத்துறையின் இரு அதிகாரிகளிடமும் காட்டியுள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கும் வரைவு அறிக்கை தந்துள்ளார். பிறகு ஆட்சியாளர்கள் செய்த திருத்தங்களை ஏற்று வரைவு அறிக்கையையே மாற்றிவிட்டார். 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுவழக்கு தொடரப்பட்டபோது சி.பி.ஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஹரேல் ராவல் பிண்டே 'இப்படி எதுவும் நடக்கவேயில்லை' என அடித்துப் பேசினார். 

ஆனால், ரஞ்சித் சின்ஹா வரைவு அறிக்கையை திருத்தம் செய்தது உச்சநீதிமன்றத்தில் நிருபணமானபோது, அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, "இதனால் இந்த வழக்கிற்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறேன். இனி இதுபோல் யாருக்கும் காட்டமாட்டேன் என உறுதியளிக்கிறேன்...." என்று சமாளித்தார். நீதிபதிகள் அன்றே ரஞ்சித் சின்ஹாவை தண்டித்திருக்க வேண்டும். ஆனால் ரஞ்சித் சின்ஹாவின் சமாதானத்தை நீதிபதிகள் ஏற்று விட்டுவிட்டனர். 

இப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு விசுவாசம் காட்டி வந்த ரஞ்சித் சின்ஹா, 2014 தொடங்கி பா.ஜ.க பக்கம் நகரத் தொடங்கினார். அடுத்து பா.ஜ.க ஆட்சி தான் வரவுள்ளது. எனவே தனது கோக்கு மாக்குகளை தொடரவும், பதவியை பாதுகாக்கவும் பா.ஜ.கவின் பரிவு அவசியம் எனப்புரிந்து செயல்பட்டதோடு அவ்விதமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் தயங்கவில்லை. 

இஸ்ரத்ஜகான் என்ற கல்லூரி மாணவியும் அவளது நண்பர்கள் மூவரும் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல வழக்கில் அமித்ஷாவின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் வேண்டுமென்றே விடுவித்தார் ரஞ்சித் சின்ஹா. இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அமித்ஷாவின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இருந்திருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகிழ்ந்திருக்கும்" என்றார். 

அப்படியானால் அமித்ஷாவின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லாததால் யார் மகிழ்ந்திருக்ககூடும் என்ற கணிப்பிலேயே ரஞ்சித் சின்ஹா காய் நகர்த்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கஷ்டமல்ல. 

எதைச் செய்தால் யார் மகிழ்வார்கள்? யார் வருத்தமடைவார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பது ஒரு சி.பி.ஐ இயக்குநரின் வேலையல்ல. அது அதிகார வர்க்க அடிவருடிகளுக்கு மட்டுமே தோன்றும் யோசனையாகும். 

இது மட்டுமின்றி, மற்றொரு விவகாரத்திலும் ரஞ்சித் சின்ஹாவின் உண்மை சொருபம் வெளிப்பட்டது. சி.பி.ஐக்கான கூடுதல் இயக்குநரை தேர்ந்தெடுக்க ஒரு தேர்வு குழு உள்ளது. அந்தக்குழு கூடுதல் இயக்குநருக்கு பரிந்துரைத்த பெயர் பச்சனந்தா. ஆனால் ரஞ்சித் சின்ஹா அதை புறக்கணித்து தமிழகத்தின் ஐ.பி.எஸ்ஸான 

அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டார். மத்திய காங்கிரஸ் அரசு தமிழக அரசிடம் தகவல்கூட தராமல், மாநிலப் பணியிலிருந்து அவரை விடுவிக்கக் கூட கால அவகாசம் தராமல் சி,பி,ஐயின் கூடுதல் இயக்குநராக அரச்சனா ராமசுந்தரத்தை நியமித்தது. ஆனால், தமிழக அரசு நீதிமன்றம் சென்று போராடி அந்த நியமனத்தை முறியடித்தது. அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமித்ததின் பின்னுள்ள அரசியல் உள்நோக்கங்களே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் அர்ச்சனா ராமசுந்தரத்தை விடுவிக்க மறுத்து பிடிவாதம் காட்டியதற்கு காரணமாகும். முதலாவதாக சி.பி.ஐயின் கூடுதல் இயக்குநராகும் அளவுக்கான தகுதி படைத்தவரல்ல அர்ச்சனா ராமசுந்தரம். அடுத்தது, அவரது கணவர் ராமசுந்தரம் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மிகவும் வேண்டபட்டவர். 

பொதுபணித்துறை செயலாளராக ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் இருந்தபோது, அதில் புதையல் தோண்டி பொன்னெடுத்து விருந்து படைத்தவர் என்ற வகையில் கருணாநிதிக்கு நெருக்கமானவர். அண்ணா நூலக கட்டிட உருவாக்கத்திலும் அளப்பரிய ஊழல்களை அரங்கேற்றியவர். இதனால் முன் எச்சரிக்கை உணர்வுடன் அ.தி.மு.க ஆட்சி வருவதற்கு முன் விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர். எனவே 2ஜி ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கு ஆதரவாக காய்நகர்த்தவே அரச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐயின் கூடுதல் இயக்கநராக்கப்படுகிறார் என ஜெயலிலிதா சந்தேகித்தார். அதனாலேயே அதை மூர்க்கமாக தடுத்துவிட்டார் என்ற கருத்து காவல்துறை வட்டாரத்தில் முனபே பலவாறு விவாதிக்கப்பட்ட விவகாரம் தான்! 

ரஞ்சித் சின்ஹா போன்றவர்கள் தன் சகாவாக ஒருவரை விரும்புகிறார் என்றால் நிச்சயம் அது கிரண்பேடி ஐ.பி.எஸ் போன்ற ஒரு நேர்மையானவராக இருக்கமுடியாது என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. தன் பதவிக்காலம் முடிக்கு வந்த பிறகும் தன் தில்லுமுல்லுகளை தொடரவும், தன் செல்வாக்கை சி.பி.ஐக்குள் நிலை நிறுத்தவும் தக்க ஒருவரைத் தான் விரும்ப முடியும். ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 

இப்படியாக பயிரை மேய்வதற்காகவே வேலியை நட்டகதையாகத்தான் ரஞ்சித் சின்ஹா நியமனமும், அதைத்தொடர்ந்த நடவடிக்கைகளும் உள்ளன. தற்போது ரஞ்சித் சின்ஹாவின் உண்மைசொரூபத்தை பிரசாந்த்பூஷன் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதில் ரஞ்சித் சின்ஹாவை தண்டிக்கவோ, குறைந்தபட்சம் பதவிநீக்கம் செய்யவோ முன்வரவில்லை உச்சநீதிமன்றம். மாறாக, ரஞ்சித் சின்ஹா கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது வீட்டில் அவரைச் சந்திக்கச் சென்றவர்களின் வருகை பதிவேட்டை பிரசாந்த் பூஷனுக்கு தந்தது யார்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை நாட்டு மக்களுக்கு பெரும் அதிரச்சியை, ஆழ்ந்த வருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது.

 ரஞ்சித் சின்ஹா மாதிரியானவர்கள் நீதிமன்றத்தால் மன்னிக்கப்பட்டாலோ, மரியாதைக்குரியவர்களாக நடத்தப்பட்டாலோ அது மக்கள் மனங்களை ரணப்படுத்திவிடும். பிறகு சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்டை சீர்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையே அடியோடு ஆட்டம் கண்டுவிடும். 

ரஞ்சித் சின்ஹாவின் வார்த்தைகளிலேயே அவரது செயல்பாடுகளை விளக்குவதென்றால், 'ஊழலை தடுக்க முடியாது என்பதால் சட்டபூர்வமாக அதை சரிகட்ட முயன்றேன். ஊழல்வாதிகள் வீடுதேடி வந்து விருந்து வைத்ததால் அதை விருப்பதோடு அனுபவித்து மகிழ்ந்தேன்'. 

ஆம், இது தான் ரஞ்சித் சின்ஹாவின் இயல்பு. 

உடல் சுகம் வேண்டும் காமுகர்கள் யாருமே பத்தினியின் வீடுதேடி பணம் கொண்டு தருவதில்லை தானே!

இருள் சூழ்ந்த சமூகம் - இளந்தலைமுறையின் அவலம்

 -சாவித்திரிகண்ணன் 

மாணவர்களிடையே அடிதடி, வெட்டு, குத்து, பதட்டமான சூழல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 

இரு கல்லூரி மாணவர்களிடையேயான மோதலிலும், கத்திக்குத்து சம்பவங்களிலும் சென்ற வருடம் சென்னையில் மட்டுமே 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு புறம் அரசு கல்லூரி மாணவர்கள் தினசரி அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது கூச்சலும், கலாட்டமாகவும் பயணிக்கிறார்கள்! 
பேருந்துகளை ஓங்கி தட்டிக்கொண்டு பாடுவது, மாணவிகளை சீண்டி கிண்டலடிப்பது, பெரும் கூச்சலெடுத்து பேசுவது, கெட்டவார்த்தைகளை பொது வெளியில் பிரயோகிப்பது... என அவர்கள் செய்யும் கலாட்டா உடன் பயணிப்பவர்களை அச்சுறுத்துவதாக உள்ளன. 

இதனால் எரிச்சலடைபவர்கள் கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வேதனைப்பட்டவாறு பயணிக்கின்றனர். ஏதேனும் கேட்டால் மாணவர் கூட்டம் தாக்கி விடுமோ என்ற அச்சுசசத்தால் பொதுமக்கள் காட்டும் சகிப்புதன்மை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிவிடுகிறது. 

இது போதாதென்று 'பஸ்டே' என்ற அடாவடிக் கொண்டாட்டங்கள் வேறு! 
சம்பந்தப்பட்ட நாளில் அந்த பேருந்து முழுவதுமே மாணவர்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். 
மேற்கூரையில் ஏறி நடனமாடுவார்கள் 'ஒ'வென்று பேரிரைச்சலோடு நகரை வளம் வருவார்கள்! 

எதிரில் வருபவர்கள் எலலாம் மிரண்டு விலகி செல்வதைக் கண்டு உள்ளுக்குள் உவகை கொள்வார்கள்..! 

பேருந்து பயணிக்கும் வழிகளில் உள்ள கடைகளில் புகுந்து அகப்பட்டதை அள்ளுவார்கள்! 
இதற்கு பயந்து கடைக்காரர்கள் மடமடவென்று ஷெட்டரை சாத்துவதும் நடக்கும்! 

'இந்த சம்பவத்திற்கு அனுமதி தரக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தடை ஆணை பிறப்பித்துள்ள போதிலும் இந்த 'பஸ்டே' கொண்டாட்டங்கள் அவ்வப்போது நிகழாமலில்லை. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று மதுபழக்கம் மட்டுமீறி அதிகரித்துக் கொண்டுள்ளது. 
அத்துடன் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கமும் பரவி வருகிறது. 

மாணவ சமுதாயம் இப்படிப்பட்டதொரு இழிநிலையில் உலாவக் காரணம் என்ன? 
அவர்களின் இந்த நடத்தைகளுக்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? எந்த சமூகத்திலிருந்து அவர்கள் உருவானார்களோ, 
எந்த குடும்பக் கட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளிவந்துள்ளார்களோ 
அந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் இதில் பங்கில்லையா? 

சமூகத்திலும் சரி,வீட்டிலும் சரி அவர்களுக்கு எப்படிப்பட்டவர்கள் ரோல் மாடல்களாக இருக்கிறார்களோ... 
அவர்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்க முடியும். நம் மாணவர்கள் வேற்று கிரகத்திலிருந்து குதித்த அதிசயப்பிறவிகளா என்ன? 
ஆனால் பாதிக்கப்படும் பொது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்...! 

"சே...ஸ்டுடன்ஸா இதுங்க, பொறுக்கிங்க... இவனுகள எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடணும் சார்... 

"ஐயோ மோசமான கயவாளிப்பயலுக சார்! என்னா காட்டுமிராண்டித்தனம்... என்னா கூச்சலு... எல்லாம் கலிகாலம் தான் போங்க..."

 "படிக்கிற புள்ளிங்களா இதுங்க... கம்மனாட்டிப்பசங்க, சுத்த உதவாக்கரை தான்! இதுங்க வீட்டுக்கும் பாரம், நாட்டுக்கும் பாரம்..." 
என மக்கள் சகட்டுமேனிக்கு கொட்டித்தீர்த்துக் குமுறுகிறார்கள்...! 

ஆனால், இந்த மாணவர்கள் உண்மையில் பரிவோடு பார்க்கப்பட வேண்டியவர்கள்! 
ஏனெனில், இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அடிதட்டிலிருந்து முதன்முதல் கல்லூரியில் காலடிவைத்தவர்கள்! 

இவர்களின் குடும்பச்சூழலோ குடிகாரத்தகப்பன், கூலிவேலை செய்து படிக்க வைக்கும் அம்மா என்பதாகத் தான் இருக்கின்றது. 

பிள்ளைகள் பெரும்பாலும் தந்தையைப்பார்ப்பதே தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்! தனிமைப்பட்ட தாயின் அதீத பாசம் அவர்களை முரடர்களாக்கி விடுகின்றது. 

உலகத்திலேயே மிகவும் உன்னதமான பதவி தாயாகவும், தகப்பனாகவும் பொறுப்பேற்பது தான்! 

பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் பெறும் ஞானம் என்பது ஒரு வகை என்றால், பெற்றோர்களின் பல்வேறு நடவடிக்கைகளில், அணுகு முறைகளில் பிள்ளைகள் கண்டடையும் கல்வி என்பது மற்றொரு வகை! 

பிள்ளை வளர்ப்பின் பரிணாம வளர்ச்சி என்பது பண்பட்டவர்களாக குழந்தைகளை உருவாக்குவது என்பது மட்டுமல்ல, பெற்றோர்களும் தங்கள் சகிப்புத்தன்மையாலும், பெருந்தன்மைகளாலும் தங்களை பண்படுத்திக் கொள்வதுமாகும்! 

ஆனால், நமது சமூக கட்டமைப்பில் குடும்பம் அதற்குரிய குணாதிசியங்களை இழந்து கொண்டிருக்கிறது. கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய களங்கள் அமைதி குலைந்து கந்தர் கோலமாக காட்சியளிக்கின்றன! 

மறுபுறம் சமூகத்தளமோ சகலவிதத்திலும் சீரழிந்துள்ளது. 
ஆசிரியர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் பார்த்து பின்பற்றத்தக்க வர்களல்ல. 
ஆன்மீக மையங்களோ ஆபத்தானவையாக மாறிவருகின்றன. 
தொண்டு செய்பவர்களாக கூறுபவர்கள் பொதுச்சொத்தை சூறையாடுகிறார்கள். 
வர்த்தகத்தில் தொழில்தர்மம் காணாமல் போய்விட்டது. கொள்ளை லாபம் வைத்து சம்பாதிப்பவர்கள் கெட்டிக்காரர்களாகப் புகழப்படுகிறார்கள்..!! 
அரசியல் என்பது அத்துமீறுவதற்காக கைகொள்ளப்படும் கருவியாகிவிட்டது. 
இந்தச்சூழலில் மாணவர்கள் மட்டும் சாதுவாக இருப்பது சாத்தியமேயில்லை. 
அவர்கள் அப்பாவியாக இருந்தாலுமே கூட நமது சினிமா, டி.வி.பத்திரிக்கைகள் அவர்களை அவ்வாறு தொடர அனுமதிப்பதில்லை. 
பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதே இன்று பெருமபாலான ஊடகங்களின் தொழில் தர்மமாகிவிட்டது. 

அரசு கல்லூரி மாணவர்கள் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள...நாதியில்லை! 
அரசு கல்லூரிகளில் கலை, கலாச்சார விழாக்கள் இல்லை. 
ஒவ்வொரு இளம் உள்ளத்திலும் பீறிட்டு எழும் கலை, கலாச்சார படைப்பாற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துத் தருவதில்லை. 
அதனால் அவர்களே தான் தோன்றித்தனமாக மனம் போன போக்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆடித்தீர்க்கிறார்கள்..! 

இளம் பருவ ஆற்றலென்பது காட்டாற்று வெள்ளமாகும். 
அதை இருபுறமும் பண்பாடு, கலாச்சாரமெனும் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தி தண்ணீர் வெள்ளத்தை தகுந்த வழியில் சென்று சேரவும், 
சமூகத்திற்கு பயன்படவும் செய்யவேண்டியது மூத்தோர் அனைவரது கடமையாகும்! 

நாம் அனைவருமே அக்கடமையை எந்த அளவுக்கு செய்கிறோம்..? 
குடும்பத்தோடு நிறுத்திவிடுவதும் குற்றம் தான்! 
நாம் பொதுத்தளத்தில் எவ்விதம் வெளிப்படுத்துகிறோம்..? 
பணம் சம்பாதிப்பதற்கானதாக மட்டுமே நம் உழைப்பு முழுமையும் தருகிறோமா? 
நம் கையில் கிடைக்கிற பணம் அதர்ம வழியில் வருகிறதா? அல்லது சமூகம் பயனடைய நாமும் பயன்பெறத்தக்க அளவில் வருகிறதா...? 

ஏனெனில், நாம் இளைய தலைமுறையினருக்கு வெறுமனே உபதேசம் செய்வதில் உபயோகம் ஒன்றுமில்லை. 
நம் செயல்பாடுகளும், வாழ்க்கையுமே அவர்களிடம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைத்துக் கொள்வோமாக! 
நாம் சொல்லொன்றும், செயலொன்றுமாக வெளிப்பட்டால் நாம் சொல்வதெல்லாம் செல்லாக் கசாகிவிடும் இளைய தலைமுறையிடம்! 
ஆக, இந்த கட்டுரையின் அடிநாதம் இளைய தலைமுறையின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை எச்சரிப்பதல்ல...! எச்சரிக்கை பெரியோர்களுக்கே!