Wednesday, September 3, 2014

கடலில் கலக்கும் காவேரி! - கண்ணீர் கடலில் விவசாயி

 -சாவித்திரிகண்ணன் 

இந்த ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவேரி டெல்டா பகுதி முழுவதும் தண்ணீரோடு மிகழ்ச்சி வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சாத்தியமென்று நம்பலாம். 

தற்போதெல்லாம் தமிழகத்தில் குறுவை சாகுபடி பெரும்பாலும் பொய்த்துப் போகிறது. சுமார் 4லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து கொண்டிருந்தது படிப்படியாகக் குறுகி, ஒன்றேமுக்கால்லட்சம் என்றாகி வறட்சி காலங்களில் அதுவும் குறைந்துவிடுகிறது. 

அடுத்து வரும் சம்பா பருவத்திலாவது சரிவை நிமிர்த்திவிடலாம் என சங்கல்பத்துடன் காத்திருக்கும் விவசாயிகள் சம்பாவும் சாத்தியப்படாமல் போகும் போதோ சாகும்படியான துன்பத்தில் உழல நேர்கிறது...! 

காவேரி ஆறு என்பது கிட்டதட்ட சரிபாதி தமிழக விளைநிலங்களின் பயிராதாரம். எனவே பெரும்பான்மையான விவசாயிகளின் வாழ்வாதாரம்! இது மட்டுமின்றி, சென்னை தொடங்கி இராமநாதபுரம் வரையிலான தென்கிழக்கு பகுதியில் வாழும் மக்களுக்கும், கோவை தொடங்கி நாகை வரை மேற்கிலிருந்து கிழக்கு வரையில் வாழும் இடைப்பட்ட பகுதியிலுள்ள அத்தனை ஊர்மக்களுக்குமான குடிநீர் ஆதாரம்! 

இவற்றிற்க்கெல்லாம் மேலாக காவேரி தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த கலாச்சார அடையாளம்! ஆனால், துரதிஷ்டவசமாக தற்போது காவேரியை கலகத்தின் அடையாளமாற்றிவிட்டது தமிழக அரசியல் அணுகுமுறைகள்... 

காவேரி பிரச்சினையில் கர்நாடகம் நமக்கு அநீதி இழைக்கிறதா என்றால், 'ஆமாம்' என்று சிறுகுழந்தையும் சொல்லும்! சந்தேகமேயில்லை. ஆனால், காவேரி தண்ணீரைப் பயன்படுத்தும் அணுகுமுறையில் நாம் நமக்கு நாமே அநீதி இழைத்துக் கொள்கிறோம் என்பதை அதிகாரத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களும் உணரமறுப்பது தான் தமிழக விவசாயிகளின் ஆகப்பெரும் துயரம்! 

ஆண்டுக்காண்டு பயிர்சாகுபடி காலங்களிலெல்லாம் கர்நாடகாவிடம் கெஞ்சியும், போராடியும் நீர் பெற்றுவருகிறோம். மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் மீண்டும் மீண்டும் அணுகுகிறோம். வழக்குகள், தீர்ப்புகள், மீண்டும் வழக்குகள்... என ஒயாமல் போராடிப்போராடித் துவழ்கிறோம். ஆனால் நமக்கு கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்தாமல், அதற்கு முறையான செயல்திட்டங்களை வகுத்து பாதுகாக்காமல் இழந்து கொண்டிருக்கிறோம். 

மேட்டூர் அணை பிரட்டிஷ் பேரரசு நமக்கு கட்டித்தந்த அணை, கல்லணை தொடங்கி களிங்கராயன் வரையிலான நீர்பாதுகாப்பு ஆதாரங்கள் மன்னராட்சி காலத்தவை. கீழ்பவானி, அமராவதி, புள்ளம்பாடி, கீழ்கட்டளைகால்வாய் காமராஜர் காலத்தவை! 

தடையில்லாமல் காவேரி வந்து கொண்டிருந்த காலத்திலேயே மிகுந்த அக்கரை எடுத்து நம் முன்னோர்கள் கட்டி வைத்த நீர்பாதுகாப்பு ஆதாரங்களே இன்றளவும் தமிழகத்தை தாங்கி நிற்கிறது. ஆனால் காவேரிக்குத் தடை ஏற்படத்தொடங்கிய பிறகாவது கிடைக்கும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பையே காட்டாதது தான் சோதனைக்களுக்கிடையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேதனை. 

1970கள் தொடங்கி கர்நாடகா தொடர்ந்து பெரிய, சிறிய நீர்தேக்கங்களை ஏராளமாக கட்டிய வண்ணமுள்ளது. குறிப்பாக கபினி, ஹேமாவதி, சாரங்கி, யாகச்சி போன்ற பெரிய அணைகளையும், ஸ்வர்ணவதி, மங்கலா போன்ற சுமார் 20 சிற்றணைகளையும், மற்றும் ஏராளமான கதவணைகள், தடுப்பணைகள், நீரேற்றும் திட்டங்கள், புதிய பாசனகால்வாய்கள் ஆகியவற்றை செயல்படுத்தி மைசூரில் சுமார் 25,000ஏரிகளும். எண்ணற்ற குளம் குட்டைகளும் நீர்வசதி பெறவழிவகுத்துள்ளது. இவை யாவும் மத்திய நீர்வள ஆணையம், காவேரி கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றின் அனுமதியின்றி அத்துமீறிக் கட்டப்பட்டவை. 

ஆனால் நமக்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீரை பாதுகாக்க நாம் அணைகள், சிறிய நீர்தேக்கங்கள் கட்டுவதற்கு எந்தத்தடையுமில்லை. இன்னும் சொல்வதென்றால் நம் இரு மாநில பிரச்சனைகளை ஒட்டி காவேரி டெல்டா பகுதிகளை கள ஆய்வு செய்த நீர்வள நிபுணர்களும், நடுவர்களுமே கூட காவேரி தண்ணீரை தமிழகம் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். 

உதாரணத்திற்கு மேட்டூர் அணையை பாதுகாப்பதிலேயே கூட நாம் கோட்டை விட்டுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் சேகரித்துக் கொள்ள முடியாமல் சேதாரமாக வெளியேறிவரும் தண்ணீர் அளவு மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 75டி.எம்.சி! இந்தவகையில் நாம் இழந்துள்ளது 3000த்திற்கும் அதிகமான டி.எம்.சி தண்ணீரை! இதை தவிர்க்க நாங்கள் தெரிவித்த திட்டங்களெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கானது. மேட்டூர் அணையில் உயரம் 120அடி. இதில் சுமார் 28% பரப்பளவில் வண்டல் மண் குவிந்துள்ளது. இவை பல்லாண்டுகளாக நீரில் அடித்துக் கொண்டுவரப்பட்டு சேர்ந்தவை. இதனை அள்ளி எடுத்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்டிடப் பணிகளுக்கான மணல் தேவைக்கு சுமார் ஐந்தாண்டுகள் பயன்படும். அணையில் கூடுதல் தண்ணீரை சேமித்துவைக்கலாம்..." என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தலைவர் அ.வீரப்பன். 

சரி, அப்படி மிகைத்தண்ணீர் வெளியேறும் போது அதை சரியாக பயன்படுத்தவோ, பாதுகாக்கவோ நாம் என்ன முயற்சி எடுத்துக் கொண்டோம்...? 

காவிரியில் கொள்ளிடம் வரை சுமார் 16கதவணைகள் கட்டவேண்டும். அத்துடன் ஏராளமான காவிரியின் உப நதிகளான அமராவதி, பவானி, நொய்யல்.... போன்றவற்றில் நூற்றுக்கணக்கான தடுப்பணைகள் தேவை. காவிரியின் கிளை ஆறுகளான குடமுருட்டி, அரசலாறு, மகிமலையாறு... போன்ற 22 ஆறுகளிலும் குறைந்தபட்சம் 60தடுப்பணைகள் அவசியம் தேவை. காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள சுமார் 1870 ஏரிகளின் தற்போதைய நிலையோ மிகப்பரிதாபகரமாக உள்ளது. இவற்றிலும் வண்டல்மண் படிந்துள்ளது. இதற்கு தண்ணீர் வந்து சேர்க்கக் கூடிய சுமார் 23,000 கால்வாய்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை தாட்சண்யமில்லாமல் அகற்றவேண்டும். அத்தோடு அக்கால்வாய்களை அகலப்படுத்தவேண்டும். இந்த ஏரிகளை குறைந்தது ஒரு சில மீட்டர் அளவு ஆழப்படுத்தினாலே கூட சுமார் 150டி.எம்.சிக்கும் அதிகமான தண்ணீரைப் பெறமுடியும். 

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று பொதுவான ஒரு கருத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் ஆண்டுக்கு சராசரியாக தமிழகத்திற்கு கிடைக்கும். மழைநீர் அளவு 925 மி.மீ. 

ஆனால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ நம்மை விடக்குறைவான மழை நீரே கிடைக்கிறது. அதுவும் குறிப்பாக கர்நாடகத்தில் 732மி.மீ மழை நீர் தான் கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டு தான் மன்னாரட்சி காலங்களில் மிகத்திறம்பட நீராதாரத்திட்டங்களை செய்துள்ளனர். ஏரி, குளம் இல்லாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை. இன்று தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கிறதென்றால் அது தமிழகத்திற்கு நம் முன்னோர் தந்த கொடைகள். அன்று பெய்யும் மழை, அவை வழிந்தோடிச் சேரும் திசை ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து இவை ஏற்பட்டுள்ளதை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது. 

ஆனால், இந்த ஏரிகளை நாம் அக்கரையோடு பராமரிக்கத் தவறியதின் விளைவாக இன்று இவற்றால் பெறவேண்டிய பயன்பாட்டில் 20சதவிகிதத்தைத் தான் பெறுகிறோம். 

இப்போதும் கூட மத்திய அரசுகளையோ, மாநில அரசுகளையோ நம்பாமல் அந்தந்த கிராம உள்ளாட்சிகளே கூட தங்கள் கிராமத்தில் வெறும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் சிறுசிறு பண்ணை குட்டைகளை அமைத்து அற்புதமாக நீரைச்சேமிக்கலாம். ராமநாதபுரம் போன்ற இடங்களில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. 

எல்லாவற்றிற்கும் மேலாக காவேரி கரையோரங்களில் நிகழும் மணல் கொள்ளையை உடனே முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தமிழகத்தின் எதிர்காலமே சூனியமாகிவிடும். அந்த அளவுக்கு காவேரி படுகைகளெல்லாம் பள்ளதாக்குகளாகியுள்ளன. 

இதன் காரணமாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. இதனால் காவேரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அந்தத் தண்ணீர் பல பகுதிகளை எட்டுவதே இல்லை. திருவாரூரில் உள்ள கோரையாறுக்கு கூடத் தண்ணீர் செல்வதில்லை. நகரத்தில் பிரியக் கூடிய வாய்க்கால்களோ மிக மோசமாக உள்ளன. பன்னெடுங்காலமாக காவேரி ஆற்றுத்தண்ணீரை பெற்றுவந்த ஏராளமான ஊர்கள் தற்போது காவேரி தண்ணீரை கண்டு 25வருடங்களாகிவிட்டன... என்பது ஒரு கசப்பான உண்மை. 

எனவே காவேரியில் நாம் முறையாக திட்டமிட்டுச் செயல்புரியாததால் தான் நமது விளை நிலங்களை இழந்து ரியல் எஸ்டேட்டுகளுக்கு விலை போகும் நிலங்களாக்கி வருகிறோம். 

1924லே கர்நாடகாவில் காவேரி பாசனப்பகுதிகளில் 1,23,000ஏக்கர் நிலங்களில் தான் விவசாயம் நடந்தது. அது 1956ல் 5,65,400ஏக்கரானது. 1971லோ, 6,68,000 ஏக்கரானது. தற்போதோ 22லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடக்கிறது. 

ஆனால் தமிழகத்தில் 1971ல் 28லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக இருந்த காவேரி டெல்டா பகுதி விவசாயம் தற்போது சரிபாதிக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. கர்நாடகத்தின் அநீதியை மட்டுமே இதற்கு காரணமாக்குவது நம்மை நாமே ஏமாற்றிக் கொல்வதற்கு வேண்டுமானால் உதவலாம்! 

தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்களான ந.நடராஜன், சி.எஸ்.குப்புராஜ், டி.எஸ்.விஜயராகவன், மோகனகிருஷ்ணன், அ.வீரப்பன் போன்றவர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே தண்ணீர் பாதுகாப்பு திட்டங்களை அரசுக்கு சமர்பித்துள்ளனர். அதை செயல்படுத்தினாலே அண்டை மாநில அநீதிகளையெல்லாம் மீறி தமிழக விவசாயத்தில் தன் நிறைவு பெறலாம். 

காவேரியில் தண்ணீர் கரைபுரண்டுடோடுகிறது. 

காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நீங்கா துன்பம் 
தண்ணீர் வராவிட்டாலும் கண்ணீர், தண்ணீர் வந்தாலும் கண்ணீர்! 
தண்ணீர் வராத காலங்களில் வறட்சி நிவாரணம்..... 
வந்துவிடும் நேரங்களில் வெள்ள நிவாரணம்... 

இந்த நிலையை மாற்ற அவர்கள் நீண்ட நாட்களாக கேட்கும் கோரிக்கை தான் கதவணைகள். இது சுமார் அரை நூற்றாண்டு கோரிக்கை! மக்கள் தண்ணீரை தடுக்க கேட்டதோ, கதவணைகள் 

ஆனால், ஆட்சியாளர்கள் மக்கள் கோரிக்கை குரல்கள் தங்கள் காதுகளில் விழாமல் இருக்க ஏற்படுத்திக் கொண்டதோ காதணைகள்! 

எனவே தான் இந்த கோரிக்கை இது நாள் வரை செவிடன் காதில் ஊதிய சங்கானது. 
ஆனால், இப்போது தான் ஆட்சியாளர்கள் சற்றே அசைந்துகொடுத்தள்ளனர். சமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, "காவேரியின் பிரதான வெள்ளநீர் போக்கியான கொள்ளிடம் ஆற்றில் கீழணை தவிர எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால், மழைகாலத்தில் தண்ணீர் கடலில் விரையமாகிறது. 
இதை தடுக்க 400கோடி செலவில் 0.6டி.எம்.சி கொண்ட கதவணை கட்டப்படும்" என தெரிவித்துள்ளார். இது யானைப்பசிக்குப் போடப்பட்டுள்ள சோளப்பொறி போல என்றாலும் கூட, இதனால் காட்டு மன்னார் கோவில், மயிலாடுதுறை, சீர்காழின்னு பல ஊர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 

ஆனால், இத்துடன் நின்று விடாமல் கீழணைக்கு மேலே 7கதவணைகள் கட்டப்படும் போது தான் அது காவேரி டெல்டா விவசாயிகளின் கண்ணீருக்கும் அணை கட்டியதாக இருக்கும். இந்த ஏழு கதவணைகளால் காவேரி டெல்டாவில் கடலில் கலக்காமல் காப்பாற்றபடும் தண்ணீர் மட்டுமே சுமார் 50டி.எம்.சிக்கும் அதிகமாகும்! எனவே, அணிவகுத்து வரும் கவர்ச்சியான அம்மா திட்டங்களுக்கு தரும் முக்கியத்துத்தில் ஒரளவாவது கதவணைத் திட்டத்தில் காட்டினால் வரலாறு முதல்வரை நிரந்தரமாக நினைவில் வைக்கும்.

(Aug2014)

1 comment:

Anonymous said...

fcg : youtube : youtube : youtube : youtube - Vimeo
Fcg, Vimeo, YouTube, TikTok, YouTube Channel, Facebook, Youtube, YouTube Channel, Facebook, Youtube, YouTube Channel. youtube to mp4