Wednesday, September 3, 2014

கல்வி வள்ளல்களா? கல்வி கொள்ளையர்களா?

-சாவித்திரிகண்ணன் 

தமிழ்நாட்டில் கல்விதுறை என்பதே தனியார்களால் களவாணித்துறையாகிவிட்டது. 
அது திருடுவதில் அதிக சமார்த்தியமுள்ளவர்கள் மட்டுமே கட்டி எழுப்பக் கூடிய சாம்ராஜ்யமாகியுள்ளது! 

அதுவும் உயர்கல்வித்துறை என்பதோ, திருட்டுக் கலையில் நம்பர் ஒன்னாக இருப்பவர்கள் ஓங்கி வளர்ந்து நிற்கும் துறையாகிவிட்டது. 

ஏப்ரல், மே மாதங்கள் இவர்களின் அறுவடைக்காலம்...! 

இவர்களின் கல்லா பெட்டிகள் கரன்ஸிகளால் நிரம்பி வழியும் பருவம்....! 

அந்த காலத்தில் தங்கள் சொத்துபத்து நிலங்களை பிறர்கல்விகற்பதற்கு அர்பணித்தவர்களை நாடு கல்விவள்ளல்கள் எனக்கொண்டாடியது. 

இன்றோ, பிறர் சொத்து பத்து நிலங்களை மட்டுமா? ஓட்டுமொத்த சேமிப்பு, நகை என அனைத்தையும் அபகரிக்கத் தெரிந்த கலையைக் கற்றவர்கள் கல்வி வளளல்களாக கற்பிதப்படுத்தப்படுகின்றனர். 
கலி ரொம்பவே முத்திடுச்சு.. என்று தான் சொல்ல தோன்றுகிறது. 
முக்கியமாக மருத்துவக் கல்வி என்பது மருள வைக்கிறது . 
65ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 19ஐ தாண்ட முடியவில்லை. இதில் படித்து வெளிவரும் மாணவர்கள் வருடத்திற்கு 2,555தான்! 

நாளுக்குநாள் நோயாளிகளின் பெருகிக் கொண்டிருக்கும் நாட்டில் மெடிக்கல் காலேஜ் கட்ட அரசாங்கத்திடம் பணமில்லை... ஐயோ பாவம்! 

ஆனா, வேண்டாம் என்று போராடினாலும் டாஸமாக் கடையை வீதிக்கு வீதி திறக்கிறார்கள் மதுவிற்பனையை கையில் எடுத்த 11ஆண்டுகளில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுவிற்பனைக் கடைகளையும், 4000க்கும் மேற்பட்ட மதுபான பார்களையும் உருவாக்க முடிந்துள்ளதே...! 
அட, விடுங்கள், யாரை வாழவைக்கணும், யாரை சாகவைக்கணும்னு அரசாங்கத்துக்கு ஒரு கொள்கை இருக்கும் போலத்தெரியுது! 

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மொத்த எம்.பி.பிஎஸ் இடங்கள் 1,560! இவற்றிற்க்கு ஏகத்துக்கும் கிராக்கி தான்! 
அரசு மருத்து கல்லூரிகளில் ஆண்டுகட்டணம் ரூ 2,500தான்! 
அதிகபட்சம் மற்ற பல கட்டணங்களையும் சேர்த்து ரூ 4,000தான்! 
ஆனா, தனியார் மருத்துவகல்லூரியில் கல்விக்கட்டணம் நான்கு லட்சத்திலிருந்து 8லட்சம் வரை! 
ஆக, ஐந்து வருட கல்வி கட்டணம் மட்டுமே ரூ20லட்சத்திலிருந்து 40லட்சம்! 

ஆனால், இதோடு நிறுத்திக் கொள்வதில்லை. 
நன்கொடை தராதவர்கள் நிர்வாக கோட்டாவிற்குள் நுழைய இடமில்லை. 

ரூ40லட்சத்திலிருந்து 70லட்சம் வரை ஆளைப் பொறுத்து அடித்துப் பிடுங்குவது மற்றொரு கலை! 
இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. ஓரே வகுப்பறையில் 40லட்சம் நன்கொடை தந்த மாணவரும் இருப்பார், 70லட்சம் தந்த மாணவரும் இருப்பார். 

ஆக, தற்போதைய கல்விச்சூழலை வணிகமயமாக்கப்பட்ட கல்வி என்று வர்ணிப்பது மாபெரும் அநீதி. ஏனெனில், எந்தவொரு வணிகத்திற்கும் சில தர்மங்கள் உள்ளன. 'இன்ன பொருளுக்கு இன்னவிலை' என்று அறிவிக்கப்பட்டு விற்கப்படும். அதற்கு ரசீது தரப்படும். 

இரண்டு இட்லி சாப்பிட ஓட்டலுக்குச் சென்றால், விலைப்பட்டியலில் ரூ 30 என்று இருக்கும். நீங்கள் 30ரூபாய் தான் இட்லிவிலை என்பதை தெரிந்து கொள்ள வழியுண்டு. 

ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளாகட்டும், என்ஜினியரிங் கல்லூரிகளாட்டும். எந்த கல்லூரியில் எந்தப்படிப்புக்கு எவ்வளவு ரேட் என்பது உத்திரவாதமாகச் சொல்லி விட மாட்டார்கள்! அதில் வெளிப்படைத் தன்மை இருக்காது. கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது கிடைக்காது. இப்படியிருக்க இதற்கு எப்படி நீங்கள் 'வணிகம்' என்ற நல்ல சொல்லை பயன்படுத்துவீர்கள்...? 

மாட்டுச்சந்தையில் நிற்கும் தரகு வியாபாரியிடம் கூட சில தாராதரம் இருக்கும். அவர் உங்கள் கைகளுக்குத் தான் துணி போர்த்துவார். இவர்களோ வாடிக்கையாளர்களின் கண்களைக் கட்டி கரன்ஸிகளை சூறையாடும் மோடி மஸ்தான்கள்! 

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் தடுக்கி விழுந்தால் தென்படும் தேனீர் கடைகளைப் போல முளைத்துவிட்டன. இன்றைய தேதிக்கு இவற்றின் எண்ணிக்கை 550ஐ கடந்துவிட்டது. இதில் சுமார் 2இலட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் என்றால், புழங்கும் பணத்திற்கு கேட்கவா வேண்டும்? 

இதில் 10சதவிகித கல்லூரிகளுக்குத் தான் படு கிராக்கி. 
இதில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான விலை மதிப்பு சந்தைக்கேற்ப ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகும். கேப்பிடேஷன் பீஸ், டொனேஷன் பீஸ் என ஏகத்துக்கும் வசூலிப்பார்கள்! 

கல்விகட்டணத்தை அரசு, நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து அவ்வப்போது அறிவிக்கிறது. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம், சடங்கு அவ்வளவு தான்! இங்க நாங்க சொல்றது தான் சட்டம், நீதி, தர்மம் எல்லாமே! இது ஒரு தனி சாம்ராஜியம்.." என்பதே இவர்கள் போக்கு. 

இவர்கள் கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலையில் ஜனவரி, பிப்ரவரி மாதமே இடங்கள் விற்றுத் தீர்ந்துவிடும். அதாவது ப்ளஸ்டூ தேர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கல்லாகட்டி முடித்து விடுவார்கள்! 

இது சட்டப்படி பெரும் குற்றமாகும்! மே மாதம் தான் விண்ணப்பாரமே விநியோகிக்க வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள விதி. ஆனால் அதற்கு மூன்று நான்கு மாதத்திற்கு முன்பே, 'ஒரு மாணவனின் மார்க் என்ன?' என்ற அடிப்படை தகவல் கூட அவசியமில்லை என்ற வகையில் வேகமாக காசு பார்க்கும் ஆசை இவர்கள் கண்ணை மறைக்கிறது. 

இது தவிர சுமார் ரகம் என்ற வகையில் ஒரு 25சதவிகித கல்லூரிகளைச் சொல்லலாம். இவற்றில் படித்த அனைவருக்கும் வேலை உத்திவாதமில்லை என்றாலும், ஓரளவு வெளியில் சென்றால் போராடி சமாளிக்க கூடிய அளவிற்காவது 50சதவிகித மாணவர்கள் இக்கல்லூரிகளில் இருந்து வெளிவருவார்கள். 

இன்னும் சுமார் 25சதவிகித பொறியியல் கல்லூரிகள் ரொம்ப சுமார் ரகம்! இதில் படித்து வெளிவருபவர்களில் சுமார் 20முதல் 25சதவிகிதம் பேர் தான் வெளியே வந்தால் ஏதோ வாழ்க்கை போராட்டம் நடத்துவதற்கான தைரியத்தை பெற்றிருப்பார்கள். அதாவது எட்டாயிரம், பத்தாயிரம்னு சம்பளம் கிடைக்கிற வேலையையாவது பெற்றுவிடுவார்கள்! 

மற்றுமுள்ள 40% கல்லூரிகளோ மோசம், மகாமோசம் என்று சொல்லத்தக்க வகையில் தான் உள்ளன. இங்கு அடிப்படை கட்டமைப்பு, ஆய்வுக்கூடம், தகுதியான ஆசிரியர்கள்... என எதையுமே எதிர்பார்க்க முடியாது. இதில் படிப்பவர்களில் சுமார் 80சதவிகிதத்தினருக்கும் மேல் பல செமஸ்டர்களில் தோல்விக்கு மேல் தோல்வி கண்ட வண்ணம் இருப்பார்கள். வெறும் 10%தேர்ச்சி, 5%தேர்ச்சி, 2%தேர்ச்சி, ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறுவதில்லை என்ற வகையிலான பொறியியல் கல்லூரிகளெல்லாம் கூட உள்ளன. 

பிறகு, எப்படி இந்தக் கல்லூரிகள் அண்ணா பல்கலையின் அங்கீகாரம் பெறுகிறது? ஒற்றைச் சாளர முறையில் அரசே மாணவர்களை எப்படி இக் கல்லூரிகளுக்கு அனுப்புகிறது? என்பதையெல்லாம் வில்லங்கமான கேள்விகளாகவே கல்வித்துறை கருதுகிறது..! 

ஆக, இப்படியான கல்லூரிகளில் படித்துவெளிவரும் என்ஜினியர்களும், டாக்டர்களும் நம் சமூகத்திற்கு என்ன சேவை செய்வார்கள்? சேவை செய்வதற்காகவா படித்தார்கள்? அவர்கள் இழந்த அபரிமிதமான பணத்தை இந்த சமூகத்திலிருந்து ஒன்றுக்குப் பலவாக அள்ளிக்கொள்ளும் தேவைக்கான அங்கீகாரமே இந்த படிப்பு, பட்டங்கள் எல்லாம்! 

இச்சூழலில் நல்ல பொறியாளர்களா நமக்கு கிடைப்பார்கள்? தன் பொறியில் யார் சிக்குவார்கள் என்றல்லவா அவர் தொழில் நுட்பம் பேசும்! 

'உயிரைக் காப்பாற்றுவதே மருத்துவம்' என்பதெல்லாம் இன்று கவைக்குதவாத பேச்சு. இவர்களிடம் சிக்கும் நோயாளி தொலைந்தான்! 

ஏற்கெனவே சுகம் தொலைத்தவன், சொத்தையும் தொலைக்கவேண்டியிருக்கும். உருப்படாத மருத்துவத்தால் உயிரையும் இழக்க வேண்டியிருக்கும்! 

ஆக, 2ஜி ஊழல், நிலக்கரிச்சுரங்க ஊழல்களுக்கு இணையானதாக இந்த கல்வி ஊழலை கருதலாம்! 
ஒரு வகையில் அவை கூட ஒரே ஒரு முறை நடந்த கொள்ளை. இதுவோ ஆண்டுக்காண்டு தடையின்றி நடக்கும் கொள்ளை! 

ஆக, கோடிகளைக் கொட்டிக் கொடுத்தால் தான் மருத்துவக்கல்வி.... 
லட்சங்களை கொட்டிக் கொடுத்தால் தான் பொறியியல் கல்வி.... 
இந்த ரீதியில் சுமார் 2லட்சம் பொறியியல் சீட்டுகளையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவ சீட்டுகளையும் விற்கும் இந்த மோடி மஸ்தான்கள், ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டுகிறார்கள்! 
அதுவும் ஆண்டு தோறும் சுருட்டுகிறார்கள். இதில் கல்லூரிகளை விட அதிகம் கல்லா கட்டுபவர்கள் நிகர்நிலை பல்கலைகழகத்தினரே! இவர்களை நிகரில்லா கல்வி கொள்ளையர்கள் எனலாம்! 

எந்தச் சட்டமாகட்டும், விதிமுறைகளாகட்டும் இவர்களுக்கு அதெல்லாம் செல்லாக்காசு தான்! 
1992லே கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 
ஆனால், இதுவரை இந்த சட்டம் இவர்கள் பக்கம் கூடச் சென்றதில்லை. ஒரே ஒருவர் கூட கைதானதில்லை. தண்டிக்கப்பட்டதில்லை. 

இதில் மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்ட பாடப்பரிவுகள் ஐந்தாறு என்றால் இவர்கள் ஆரம்பித்து கல்லாகட்டும் பாடப்பிரிவுகள் 15, 20ஆக இருக்கும். 
இவற்றில் ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்து பணம் வசூலித்துவிடுவார்கள்.அப்படி சேரும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து இவர்களுக்கு என்ன கவலை? அது அந்த மாணவர்களே போராடி பெற்று கொள்ளவேண்டியது. ஏ.ஐ.சி.டி.இ, டி.எம்.இ... எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. நீதிமன்றத்தீர்ப்புகளே கூட இவர்களை கட்டுபடுத்துவதில்லை! 

'வல்லான் வகுத்ததே சட்டம்' என்பது இவர்கள் விவகாரத்தில் நூற்றுக்கு நூறு உண்மை! 

சமீபகாலமாக இப்படியான கல்விவள்ளல்கள் சிலர் அரசியல் அதிகார மையங்களை அண்டி வாழ்வதை விட, நேரடி அரசியலில் இறங்கி அதிகார மையத்தின் அங்கமாகவே மாறத்துடிப்பதையும், மாறிக் காட்டியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(May -2014)

No comments: