Thursday, September 18, 2014

தி.மு.க வீழ்த்தப்பட்டுவிட்டதா?

-சாவித்திரிகண்ணன் 

திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்த்தப்பட்டுவிட்டதா? இது அக்கட்சிக்கு வரலாறு காணாத தோல்வி" "தலித் இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்களை கூட்டணியில் சேர்த்தும் கூட இமாலய தோல்வியை கண்டுள்ளதே..." "மு.க.ஸ்டாலின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை... இனி தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்..." என பலவாறான விமர்சனங்கள், அலசல்கள் வெளிபட்டவண்ணமுள்ளன! மேற்கூறப்பட்ட சொல்லாடல்களில் ஓரளவு உண்மைகள் இருக்கலாம்! ஆனால், முழு உண்மையில்லை. தமிழக மண்ணை, தமிழ்ச் சமுகத்தை, மக்களின் அரசியல் அணுகுமுறைகளை உணரமுடிந்தவர்கள் ஒரு உண்மையை மறுக்க முடியாது. தமிழகத்தில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், மத்தியிலும் திராவிட இயக்கம் தோன்றி, நிலை பெறுவதற்கான சமூக காரணங்கள், தேவைகள் என்னென்ன இருந்தனவோ அவை தொடர்ந்து கொண்டிருக்கும் வரை தி.மு.க போன்ற ஒரு அரசியல் இயக்கத்தின் இருப்பும் தவிர்க்க முடியாததாகவே கணிசமான மக்களால் உணரப்படும். அப்படியானால், அன்றைக்கு நிலவியதைப் போலவா இன்னும் பிராமண மேலாதிக்கம் நிலவுகிறது..? இன்றைக்கென்ன தீண்டாமை பிரச்சனை இருக்கிறது...? பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும் இன்றென்ன வேலை...? என்று அடுக்கடுக்காக பல கேள்விகள் வைக்கப்படலாம்? எங்கே இல்லை பிராமண மேலாதிக்கம்...? ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இல்லையா? தமிழக கோயில்களில் பிராமண அர்ச்சகர்களைத் தவிர தீவிர சைவ, வைணவ தமிழ்ப்பற்றாளர்களுக்கும், தமிழ் மந்திரங்களுக்கும் இன்றேனும் இடம் கிடைக்கிறதா? ஜனநாயகத்தின் உன்னத உயர்ந்த பீடங்களாக நீதித்துறை, உயர் கல்வி துறை,நிர்வாகத்துறை என எல்லாவற்றிலுமே பிராமணலாபி பிண்ணிப் பிணைந்தருப்பதை மறுக்க முடியுமா? உடனே சில பேர் இத்துறைகளிலுள்ள பிராமணர்களின் எண்ணிக்கை சார்ந்த புள்ளி விபரங்களை பட்டியலிட்டு வானத்திற்கும், பூமிக்குமாக எகிறக்கூடாது... 'பிராமணலாபி' என்பது எண்ணிக்கை சார்ந்ததல்ல, எண்ணிங்களின் பலத்தால் கட்டமைக்கப்பட்டது. எந்த ஒன்றின் ஆதிகத்திற்கும் எதிர்வினை சமூகத்தில் இருந்தே தீரும் என்பதற்கான உதாரணங்கள் தான் பெரியாரிய இயக்கங்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற சமூக இயக்கங்களும் பிராமணர்களின் தீவிர இனப்பற்று, சுயநலம், உயர்ஜாதி மனோபாவம் அனைத்து நல்ல அம்சங்களையும் மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்ளாமல் தாங்களே ஆக்கிரமிக்கும் போக்கு... போன்றவை சமூகத்தில் தொடருகின்ற வரை ஏதேனும் ஒரு திராவிட இயக்கத்தின் தேவை சமூகத்தின் நிர்பந்திமாகிவிடும்! பிராமணமர்களில் முற்போக்குச் சிந்தனையாளர்கள், சுயநலம் துறந்தவர்கள், பரோபகாரிகள், அப்பாவி ஏழைகள்... ஏன் அதி தீவிர புரட்சியாளர்களே கூட இருக்கத்தான் செய்கிறார்கள்...! ஆனால், பாவம் அவர்களே அந்த சமூகத்தின் பெரும்பான்மையினாரல் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவே வாழ வேண்டியுள்ளது. ஏன் தலித் இயக்கங்களும், இஸ்லாமிய இயக்கங்களும் தி.மு.க.வோடு ஓரணியில் நின்றன...! சென்ற தேர்தலில் அ.தி.மு.கவோடு இருந்த இந்த இயக்கங்களால் எதனால் தொடர முடியவில்லை? பொதுவுடமை இயக்கங்கள் கூட அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்க முடியாத சூழலின் தாத்பாரியம் என்ன? இனி தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் யாரோடு கைகோர்க்க முடியும்? அனைத்து இந்துத்துவ இயக்கங்களும், இந்துத்துவ அநுதாபிகளும் அ.தி.மு.க தலைமையை ஆராதித்தப்பதற்கான காரணங்கள் என்ன? இந்த அம்சங்களோடெல்லாம் கலந்திருக்கும் சமூக காரணிகளே தி.மு.கவை உயிர்ப்போடு வாழ வைக்கப் போதுமானதாகும். இவை மட்டுமின்றி தற்போதைய தமிழக அரசு செயல்படும்விதமும் நோக்கமும் அதன் பிராமணிய சிந்தனைகளை அப்பட்டமாக நிலை நாட்டுகிறது என்பதற்கு சில உதாரணங்கள். சமச்சீர் கல்வியை சமாதியாக்க துடித்தது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகுவதற்கு தி.மு.க ஆட்சி செய்த முயற்சிகளை சீரழித்தது செம்மொழி நூலகத்தை சீரழிக்கவைத்தது சிதம்பரம் கோயிலை தில்லை தீட்ஷிதர்களுக்கு தாரை வார்த்தது இந்துதுவ சக்திகளோடு இணக்கம் பாராட்டுவது அடிமை கலாச்சாரத்தை அடிமட்ட தொண்டன் தொடங்கி அமைச்சர்கள் வரை ஸ்தாபித்தது கல்விகோயிலாம் அண்ணா நூலகத்தை கருவருக்க துடித்தது தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றியது ஆட்சி தலைமை குறித்த அச்ச உணர்வை அனைத்து மட்டத்திலும் விதைப்பது சொத்து குவிப்பு வழக்கில் வரலாறு காணாத வாய்தாக்கள் பெற்று, நீதி துறையில் 'லாபி' செய்வது இதையெல்லாம் எதிரத்து போராட இன்றைய தினம் தி.மு.க போன்ற ஒரு இயக்கத்தின் தேவை தமிழர்களுக்கு இன்றியமையாததாகிறது. அதே சமயம் தமிழர்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளை எந்த அளவுக்கு தி.மு.க கடந்த காலங்களில் நிறைவேற்றியுள்ளது? நிறைவேற்றித் தவறியுள்ளது என்பதை நாம் கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், தி.மு.க வை முற்றிலும் நிராகரிக்க முடியாது. ஏனெனில், இன்றைக்கு எந்த ஒரு அரசியல் இயக்கமும் ஜீவித்திருப்பதற்கு அதன் எதிர்ப்பு அரசியலே அடித்தளமாயுள்ளது. அந்த வகையில் தி.மு.கவின் தவறுகளே அ.தி.மு.கவை வாழவைக்கிறது! 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்த போது இரு அணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 23.43% இது, இன்றைய வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் அதிகமே! தி.மு.கவின் குடும்ப அரசியல், உள்கட்சிபூசல்கள் போன்றவை அந்த இயக்கத்தை கணிசமாக பலம் இழக்க வைத்துள்ளது உண்மை எனினும், தற்போதைய ஆட்சித்தலைமை, அடிமட்டத் தொண்டன் தொடங்கி அமைச்சர்கள் வரை ஸ்தாபித்துள்ள அடிமை கலாச்சாரம், சமூகத்தின் சகல தளத்திலும் ஆட்சித் தலைமை குறித்த அச்ச உணர்வை விதைத்திருக்கும் சர்வாதிகார போக்குகள் போன்றவை தி.மு.கவை அதன் பலஹீனங்களைக் கடந்து பலப்படுத்தக் கூடியதாகும். தி.மு.க வீழ்ந்து மண்ணோடு மண்ணாக வேண்டும் எனில், அதை வாழவைக்கும் சமூகக்காரணிகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக சமாதியாக்கப்படவேண்டும். அல்லது தி.மு.கவைக் காட்டிலும் இந்த சமூகதேவைகளுக்கு வடிகாலாக பார்க்கப்படும் இன்னொரு பலமான இயக்கம் கண்டறியப்படவேண்டும்.

அம்மா திட்டங்கள்

 -சாவித்திரிகண்ணன் 

இந்தியா சுதந்திரமடைந்து 67ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், நம் ஆட்சியாளர்கள் மக்களாட்சியின் மாண்புகளை பேண விரும்பாதவர்களாகவே உள்ளனர். ஜனநாயகம், சமத்துவம், கூட்டுச் செயல்பாடு போன்ற சொற்களே கூட அவர்களை எரிச்சலடைய வைக்கிறது. கட்சியானாலும், ஆட்சியானாலும் அது ஒற்றை அதிகார மையமாக மட்டுமே இங்கே இயங்குகின்றன. 

அதுவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு சார்ந்த அணுகுமுறைகள் மன்னராட்சியின் நீட்சியாகவே வெளிப்பட்டுவருகின்றன.. 

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகான முதல் இருபதாண்டுகளில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நாட்டு நிர்மாணத் திட்டங்கள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன. அதுவும் தமிழகத்தில் அக்காலகட்டத்தில் நிறுவப்பட்ட நீர் ஆதாரத்திட்டங்களும், மின் உற்பத்தி திட்டங்களும், தொழில்துறை திட்டங்களுமே இன்று வரை இவ்வளவு சீர்கேடுகளுக்கிடையிலும் தமிழகத்தை தமிழகத்தை தாங்கி நிற்கின்றன. 

தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுமே தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்த பாப்புலிஸ்ட் என்ப்படும் வெகு மக்கள் திட்டங்கள் அனைத்துமே மக்களின் உணர்வுகளை வென்றெடுத்தால் போதும் அவர்களுக்கான உரிமைகளை மறுதலித்துவிடலாம் என்ற நோக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

சென்ற தி.மு.க ஆட்சி, தான் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான காரணமே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்ற அறிவிப்பும், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பும் தான் என உறுதியாக நம்பியது. 

அதன் வழியிலேயே அ.தி.மு.க தலைமையும் 20கிலோ அரிசி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தது. 

இந்த ரீதியான இலவச அறிவிப்புகள், மானியங்கள் என்பவை அரசாங்க நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு அம்சமே என்பதை கடந்து முழு அடையாளமாகவும் மாறிவருவது தான் பெரும் கவலையளிக்கிறது. 

இந்த நிதி ஆண்டிற்கான தமிழகத்தின் வரி வருமானம் 91,835 கோடி! 

இதில், இந்த வகை இலவசங்கள், மானியங்களுக்கான தொகை - 49,068 கோடி
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஒய்வூதியத்திற்கான தொகை 51,740 கோடி 
இது வரை வாங்கிய கடனுக்காக திருப்பி செலுத்தும் வட்டி தொகை - 15,463கோடி. 

ஆக, வரி வருமானத்திற்கு மேல் இதற்கே பணம் தேவைப்படுகிறது. மத்திய அரசு தரும் நிதி, மேன்மேலும் பெறும் கடன்தொகைகள் ஆகியவற்றைக் கொண்டு தான் மற்றவற்றை சமாளிக்க வேண்டும். இந்நிலையில் அடிப்படை கட்டமைப்புகளை வளப்படுத்தும் செயல்திட்டங்களுக்கு ஏது நிதி? 

இந்தச் சூழலிலும் நாளும் பொழுதுமாக புதுப்புது கவர்ச்சி திட்டங்கள் அம்மா திட்டம் என்ற பெயரில் அணி வகுத்து வந்து கொண்டே உள்ளன. 

அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மாவிடுதிகள், அம்மா காய்கறிகனி அங்காடி, அம்மா மருந்தகங்கள், அம்மா விதைகள், அம்மாஇன்சூரன்ஸ் திட்டம், அம்மா வேலைவாய்ப்பு திறன் மற்றும் பயிற்சி திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா பேபிகிட்ஸ், அம்மா சிறுவர்பூங்காக்கள், அம்மா பயிற்சி வகுப்புகள், அம்மா மாணவர் ஊக்குவிப்பு திட்டங்கள், அம்மா அரசுப்பணிதிட்டம், அம்மா பணிபாராட்டும் திட்டம், அம்மா குடை வழங்கும் திட்டம், அம்மா திட்ட முகாம்கள்... என நீண்டுகொண்டே போகிறது. இத்தகு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பதிற்கிணங்க மாநில அரசின் அறிவிப்பாகவும், மாநகராட்சிகளின் அறிவிப்பாகவும் இடையறாது அறிவிக்கப்பட்ட வண்ண முள்ளன. 

இவை மகத்தான மக்கள் திட்டங்கள் என்றும், மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன.... என்றும் ஊடகங்கள் எழுதியும், பேசியும் வருகின்றன. இதில் ஒரு பகுதி உண்மை இல்லாமலில்லை. எந்த ஒரு தீமையை அரங்கேற்றுவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ள சில நன்மைகளை செய்வதும் ஒரு ராஜதந்திர அணுகுமுறை தானே! 

ஒரு ஜனநாயக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? 

குடிமக்கள் கண்ணியமாக உழைத்து வாழ்வதற்கான சூழல், நேர்மையான நிர்வாகம், தங்கள் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைக்கும் நிர்வாக அணுகுமுறை! கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், சாலைவசதிகள், மின்சாரம் போன்றவற்றை தடையின்றி பெறும் உரிமை! 

இதற்காகத் தான் அரசின் பல்வேறு துறைகள் நிர்வாக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு அலுவலகங்களில் மக்கள் சேவை பெற பெரும் தடைகள், அலைச்சல்கள்! 

இவற்றை களைவதற்காகாத்தான் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பபடுகின்றனவாம். இந்த திட்ட முகாம்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களை நாடி வந்து எல்லா பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்ப்பார்களாம்! இது எப்படி நடைமுறை சாத்தியமாகும்? பாதி மனுக்களை தட்டிக் கழிக்கிறார்கள், பெயரளவுக்கு சிலவற்றை நிறைவேற்றுகிறார்கள். ஒரு நாளில் இது தான் சாத்தியப்படும்! 

ஆனால், அதிகாரிகள் தங்களை நாடி வந்து குறை தீர்க்கிறேன் என பாவனை செய்வதை தவிர்த்து, தாங்கள் தேடிவரும் போது கனிவாக காதுகொடுத்து கேட்டு, மீண்டும், மீண்டும் அலைய வைக்காமல் தங்கள் கடமையைச் செய்தாலே போதும் என்று தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த மக்கள் சேவையை உறுதிபடுத்தத்தான் மத்திய அரசு சேவைப்பெறும் உரிமை சட்டத்தை 2011ல் கொண்டு வந்தது. இந்த சட்டம் ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு, ஜாதிச்சான்றிதழ்கள் தொடங்கி பாஸ்போர்ட் வரை ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட காலத்தை கறாராக நிர்ணயிக்க கோருகிறது. அதன்படி அச்சேவை வழங்காவிடில் தாமதப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் கட்ட அத்துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊழியர்களை நிரபந்திக்கிறது. இந்தச் சட்டத்தை இந்தியாவில் கேரளா, ஒரிசா, பீகார், மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், ஹரியானா, உத்திரகண்ட் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. ஆனால் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மக்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் வைக்கப்படும் வேண்டுகோளுக்கு தமிழக அரசு இன்று வரை செவி சாய்க்கவில்லை. 

இந்த சேவைபெறும் உரிமை சட்டத்திற்கு முன்பாகவே அரசு நிர்வாகத் தாமதங்களை தட்டிகேட்கவும், அதன் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மை கொண்டதாக்கவும் - கொண்டு வரப்பட்டது தான் தகவல் பெறும் உரிமைச்சட்டம். இந்தச்சட்டம் எந்த லட்சணத்தில் தமிழகத்தில் அமலாகிறது? தகவல் தரும் ஆணையம் தகவல்களை தர மறுக்கும் தகிடுதத்த ஆணையமாக உள்ளது.... என நாளுக்கொரு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஆயினும் பலனில்லை. ஆனால் கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தகவல் அறியும் ஆணையம் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. எத்தனை விண்ணப்பங்கள் வந்தன? எவற்றுக்கொல்லாம் தகவல்கள் தரப்பட்டுள்ளன..? எத்தனை தரவேண்டியுள்ளன போன்றவை வெளிப்படையாக அலுவலக போர்டிலும், இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பதாரருக்கு அவரது கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அவ்வப்போது தரப்பட்ட வண்ணுள்ளது. இங்கோ தகவல் பெறும் உரிமை தகவல் தரும் ஆணையத்தாலேயே தகனம் செய்யப்பட்டுள்ள அவலநிலை! 

அரசு நிர்வாகத்தில் இத்தனை அவலங்களை நிகழ்த்திக்கொண்டு ஏதோ ஒரு நாளில் அம்மா திட்ட முகாம் போட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு வருவது போல ஊடகங்களில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்த அரசின் மிகப்பெரிய வரவேற்பு திட்டமாக அம்மா உணவகங்கள் பேசப்படுகின்றன. மார்ச் 2013ல் 15 உணவகங்களாகத் தொடங்கி இன்று தமிழகம் தழுவிய அளவில் சுமார் 300 உணவகங்களாக வளர்ந்திருக்கிறது. மேலும் 360 உணவகங்கள் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

மலிவு விலை உணவகம் என்பது ஏழை எளிய மக்களின் பசிப்பிணிதீர்க்கும் அறம் சார்ந்த ஓர் அணுகுமுறை! உணவுபடைத்தலில் அதீத கொள்ளை லாபமீட்டும் ஆயிரக்கணக்கான உணவகங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்வதற்கு ஒரு சிறிதும் முனைப்பு காட்டவில்லை. சரி, சுதந்திரப் பொருளாதாரயுகத்தில் அது சாத்தியமில்லை என்ற பட்சத்தில் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஏற்கெனவே மலிவு விலையில் பலகாரங்களையும். மதிய உணவையும் வழங்கிக் கொண்டிருக்கும் சுயதொழில் முனைவோர்களான தள்ளுவண்டிக்காரர்கள், வீட்டு முற்றத்தையே உணவு தயாரிக்கும் கூடமாக்கியுள்ள ஏழை விதவைப்பெண்கள் போன்றவற்களையல்லவா ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால், அம்மா உணவகங்கள் பல்லாண்டுகளாக இந்த எளிய சேவை செய்து, தங்களும் பசியாறி வந்த அந்த ஏழைக் குடும்பங்களையல்லவா நிலைகுலையவைக்கிறது...? 

அம்மா உணவகம் என்பது கிட்டதட்ட அரசின் இலவச உணவகம் தான்! 
இதற்காகும் செலவுகள் இதில் பெறப்படும் வருவாயைக் காட்டிலும் 200% த்திற்கும் அதிகமாக இருக்கிறது... என்பதே நடைமுறை உண்மை! இலவசமாகச் சாப்பிடுவது கௌரவக் குறைவு எனக்கருதும் மக்களை சமாதானப்படுத்தத்தான் ஒரு மிகக்குறைந்த தொகை பெறப்படுகிறது. சரி, போகட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இது வரப்பிரசாதம் தானே...! ஆமாம் சந்தேகமில்லை அப்படியானால், தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்குமே பலன் பெறும் விதத்தில் அல்லவா இது போன்ற ஒரு திட்டம் விரிவான தளத்தில் திட்டமிட்டிருக்க வேண்டும்? 

எனில், அது மாபெரும் மக்கள் பங்களிப்பில் அல்லவா அரங்கேறி இருக்க வேண்டும். இத்தொழிலில் ஏற்கெனவே சிறிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும், சுய உதவி குழுக்களிலுள்ள லட்சக்கணக்கான பெண்களையும் ஒருங்கிணைத்து கூட்டுறவு முறையில் உணவகங்களை அவர்களே நடத்த அரசு லைசென்ஸ், இட உதவி, வங்கிக்கடன் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தால் அதில் எத்தனையெத்தனை ஏழைபெண்கள் சுயதொழில் முனைவர்களாகி இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையும் வளம் பெற்றிருக்கும். கோடிக்கணக்கான ஏழைகளின் வயிறும் பசியாறி இருக்கும். இதில் ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய்க்கு பதில் இரண்டு அல்லது இரண்டரை ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், சாப்பிடுபவர்களுக்கு நிச்சயமாக அது ஒரு சுமை இல்லை. மேலும் எந்த ஒரு திட்டமும் அரசை மட்டுமே முழுக்க, சார்ந்தியங்குவது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை. அது தன் சேவையால் தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்வதே சுதர்மம். 

ஏனெனில், ஒவ்வொரு நாளும் ஒரு உணவகம் தோராயமாக பத்தாயிரம் ரூபாய் இழந்து கொண்டுள்ளது. இதை ஆண்டு முழுவதுமாகவும், அனைத்து உணவகங்களுக்குமாகவும் கணக்கெடுத்து பார்த்தால் இழப்பு பல கோடிகளைத் தாண்டும். அரசு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் ஊழல், முறைகேடுகள் போன்றவற்றிற்கும் வழிவகுக்கும். 

அம்மா திட்டங்களில் காய்கனி அங்காடி முதலில் வரவேற்பு பெற்றது பின்னர் படுதோல்வி அடைந்துவிட்டது. முந்தைய ஆட்சியில் உழவர்சந்தைகள் பெற்ற வரவேற்பை இவை ஏன் பெறவில்லை, என ஆட்சியாளர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட மக்களின் பங்களிப்போடு அரங்கேற்றப்பட்டது தான் அன்றைய உழவர் சந்தைகள் பெற்ற வரவேற்புக்கு காரணமாகும். 

இதே போல் ரூ 20கோடி செலவில் ஜீலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட 100அம்மா மருந்தகங்களும் வரவேற்பு பெறவில்லை. ஏற்கெனவே கூட்டுறவு துறையில் இயங்கி கொண்டிருக்கும் 210 மருந்தகங்களுக்கு வலு சேர்க்கும் திட்டமாவது தீட்டியிருக்கலாம். அதுவுமில்லை. 

அம்மா மருந்தகங்கள் ஏன் வரவேற்பு பெறவில்லை? அங்கே மக்கள் கேட்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. எல்லா மருந்தகங்களும் அந்தந்த பகுதியிலுள்ள டாக்டர்களின் தயவால் மட்டுமே லாபகரமாகச் செயல்பட முடிகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது. மருந்தகங்களுக்கும் அருகாமையில் உள்ள மருத்துவர் நடத்தும் கிளினிக் மற்றும் மருத்துவமனைக்கும் உள்ள உறவு தான் மருந்தகங்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக உள்ளது. 

இன்று தடுக்கி விழுந்தால் மருந்துகடைகளே என்ற அளவில் தெருவிற்கு தெரு பெருகி, பெரும் போட்டியை சந்திக்கும் அத்துறையில் அரசு மருந்தகங்கள் என்ன செய்யும்? அதுவும் மருந்து விலையில் 10% தள்ளுபடி என்பது ஏற்கெனவே சில மருந்தகங்கள் கையாளும் அணுகுமுறைகள் தான்! 

எனவே, தற்போது இல்லாத எந்த தேவையை ஈடுகட்ட அம்மா மருந்தகங்கள் முளைத்தன? 

இதற்கு பதிலாக அரசு மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளை இருப்பில் வைத்து கொள்ள அக்கறை காட்டியிருக்கலாம்... "இந்த மருந்து இங்கே கிடையாது. போய் கடையில் வாங்கி வா..." என ஏழைகள் துரத்தப்படுவதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கலாம்... 

அதுவுமில்லாமல் மருந்து தயாரிப்பில் இன்று முன்னணியில் உள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் மருந்துவிலையை உற்பத்தி விலையைக் காட்டிலும் பற்பல மடங்கு லாபம் வைத்துக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன... இதில் மருந்து மாத்திரை வாங்க இயலாமல் தடுமாறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசே மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி, உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் நியாயவிலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகுத்திருக்கலாம். ஏற்கெனவே செயல்பட்டு இடையில் மூடப்பட்டுவிட்ட அரசு மருந்து உற்பத்தி செய்த தொழிற்சாலைகளையாவது புனரமைத்திருக்கலாம்! 

இந்த வருடம் ஜூன் மாதம் துவங்கப்பட்டது அம்மா உப்பு வியாபாரம். இதற்கு ஆரம்பத்திலிருந்த வரவேற்பு தற்போது இல்லை. மேலும் இதே விலையிலேயும், இதற்கும் குறைவான விலையிலும் உப்பு கிடைத்துக்கொண்டுள்ளது. உப்பு விற்பனையில் டாடா, இந்துஸ்தான், ஐ.டி.சி, நிர்மா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பிராண்டுகளோடு ஒப்பிட்டால் கூட மிக்குறைவான விலை வித்தியாசமே உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு உப்பு கழகம் வாலிநோக்கம் என்ற இடத்தில் உப்பு தயாரிப்பில் ஈடுபட்டு சந்தை செய்கிறது. மரக்காணத்தில் ஏழை எளிய ஆத்திராவிடர்கள் இணைந்து நடத்தும் கூட்டுறவு உப்பளகம் மிக நலிந்து உள்ளது. மிகக் குறைந்த கூலி, அடிப்படை பாதுகாப்பற்ற தொழில் சூழல், இதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள், எதிர்காலம் என்னாகுமோ என்ற கேள்விக்குறி... என்று உழலும் இந்த உப்பளகங்களை புத்துயிருட்டி, அத்தொழிலாளர்களை வாழவைக்க என்ன செய்யலாம் என திட்டமிட்டிருந்தால் அது மிகப்பயனுள்ளதாயிருந்திருக்கும். 

"அம்மா உப்பு இல்லையென்றால் சோற்றில் உப்புபோட்டே உண்ணமாட்டேன்" என யாரும் சபதமிட்டுக் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடவில்லை. 

உப்பை விடுதலை வேள்விக்கான கிரியா சக்தியாக அன்று உருவகப்படுத்தினார் மகாத்மா காந்தி. இன்று அரசியல் உள்நோக்கத்திற்காக அது கையிலெடுக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ...? 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றெல்லாம் மரபு ரீதியான கருத்தியலைக் கொண்டுள்ள தமிழகத்தில் மக்களை நேரடியாகத் தன்னை விசுவாசிக்க வைக்கும் முயற்சியாக ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா வகை திட்ட அணிவரிசையில் உப்புத் திட்டம என்னவோ தப்பாகித்தான் போனது. 

அம்மா படம் போட்ட குடிநீர் பாட்டில் விற்பனை பேருந்து நிலையங்களில் தனியாரின் 15ரூபாய் பாட்டிலை ஒப்பிடும் போது விலை மலிவு தான்! ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவு ஒரு ரூபாய்க்கும் குறைவு தான்! ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அந்த சுத்திகரிப்பு மெஷினை நிறுவ அதிக செலவாகாது. ஐந்துக்கு ஐந்தடி இடம் போதுமானது. பாட்டில் கொண்டுவருபவர்களுக்கு இரண்டு ரூபாயில் தந்தாலே அரசுக்கு நல்ல லாபம் தான்! 

இப்படி அம்மா பெயரில் ஜெயலலிதா படம் போட்டு ஏற்படுத்தப்படும் எல்லாதிட்டங்களுமே அத்தொழிலில் ஏற்கெனவேயுள்ள நிலவரங்களை கருத்தில் கொள்ளாது கொண்டுவரப்பட்டவையே! மேலும் ஏற்கெனவே வேறு பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், அலுவலகர்களுக்கே இத்தகு புதிய திட்டங்களின் பொறுப்புகளும் திணிக்கப் படுகிறது. கள ஊழியர்கள் தான் தினக்கூலிக்கு எடுக்கப்படுகிறார்கள். 

ஒரு திட்டம் எதற்காகத் தொடங்கப்படுகிறது? அதன் சமூக தேவை என்ன? அதற்கான திட்டமதிப்பீடு என்ன? செயல்திட்டங்கள் என்னென்ன? அதை செயல்படுத்துவதற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்... போன்ற முக்கியமான எந்த யோசனைகளுமின்றி அந்த காலத்தில் மன்னருக்கோ, மகாராணிக்கோ இரவில் தோன்றும் கனவிற்கேற்ப அரசவையில் அறிவிக்கப்படும் அதிரடி அறிவிப்புகள் போல மக்களாட்சியிலும் அடுத்தடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏனென்றால் 'அம்மா' பெயர் கொண்டது, அம்மாவால் அறிவிக்கப்பட்டது என்ற ஒரே ஆணையில் அரசு நிர்வாகத்தை வருத்தி செயல்படவைப்பதின் எதிர்வினை அவர்கள் ஏற்கெனவே செய்து வந்த அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது கண்கூடான நிதர்சனம். அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் இன்றென்ன அறிவிப்போ, நாளை என்ன வருமோ என கலங்கித் தவிக்கிறார்கள். 

இந்த ரீதியில் அம்மா திரையரங்குகள் சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 15 இடங்களில் அதிரடியாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ அம்மா திரையரங்குகள் கட்டாவிட்டால் குடியே முழுகிவிடும் என லட்சோபலட்ச மக்கள் ஒற்றைக் காலில் தவமிருப்பதை தாங்க முடியாத தவிப்பில் அறிவிக்கப்பட்டது போல் இருக்கிறது இந்த அறிவிப்பு. 

இந்த ஆட்சி பதவி ஏற்ற இந்த மூன்றாண்டுகளில் சென்னையில் எட்டு அரசு பள்ளிகள் மாணவர்கள் வருகைக் குறைவை காரணம் காட்டி இழுத்து மூடப்பட்டுள்ளன .இன்னும் சில பள்ளிகளும் மூடப்படவுள்ளதாக தெரிகிறது. கல்வி கூடங்கள் மூடப்பட்டுவருவதும், திரையரங்குகள் திறக்கப்பட்டு வருவதையும் சம்பந்தப்படுத்துவது சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால், மிகப்பரந்து விரிந்து கொண்டிருக்கும் சென்னையில் நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எழுப்பூர் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றைத் தவிர இன்று குழந்தைகளுக்கான உருப்படியான மருத்துவமனை வேறில்லை. இந்த மருத்துவமனையில் காணப்படும் நெரிசலோ சகிக்க கூடியதன்று. கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை தகர்த்து, அங்கே சர்வதேச குழந்தைகள் மருத்துவமனை கட்டப் போகிறேன் என்றார் ஜெயலிலதா. எழுத்தாளர்களும், புத்தக ஆர்வலர்களும் நீதிமன்றம் சென்று இதற்கு தடை பெற்றனர். 

அதே சமயம் இந்த நூலகம் அருகிலேயே காலியாக உள்ள பெரும் நிலப்பரப்பை குழந்தைகள் மருத்துவமனை கட்ட பயன்படுத்தலாம் என ஆலோசனை தரப்பட்டது. 

அந்த ஆலோசனை பொருட்படுத்தப்படவில்லை. வேறு இடத்திலும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்படவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள 'அம்மா கிட்ஸ்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேட்பது கிடைக்காது அல்லது தேவையானது மறுக்கப்படும். 
கொடுப்பதை பெற்றுக்கொள், தருவது என் அதிகாரம், பெறுவது உன் கடமை. 
இது தான் இன்றைய ஜெயலலிதா அரசின் அணுகுமுறையாக உள்ளது. 
அது சரி, திரையரங்குகள் கட்டுவது ஏதோ பாவச்செயல் போன்ற அர்த்தத்தில் போகிற போக்கில் சொல்லிவிட்டதாக நினைக்க கூடாது. 
மனிதன் எவ்வளவு வறுமை, பசி, நோய், துயரம் என்றிருந்தாலும் பொழுதுபோக்கும், ரசனை சார்ந்த லயிப்பும் வாழ்வில் இன்றியமையாத தேவையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். 
இன்னும் சொல்வதென்றால் பற்பலகலைகளை, கலைஞர்களை வாழவைத்துக் கொண்டிருப்பதே ஏழை எளிய மக்களின் ரசனை தான்! 

அதனால் குளு குளு திரையரங்கம், அதில் 25ரூபாய் கட்டணம் என்பது எதிர்ப்புக்குரியதல்ல. ஒரு வகையில் மிகவும் வரவேற்க வேண்டியதே. ஏனெனில் ஆண்டுக்கு சுமார் 150 படங்கள் தயாராகும் தமிழ் சினிமா உலகில் 50படங்களுக்கு மேல் திரையரங்குகளை காணாமல் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. புதியவர்களின் படம், சோதனை முயற்சிகள் பல இதனால் வெளிவராமலே முடங்கி உள்ளன. இது போன்ற புதிய முயற்சிகளை, கலைபடைப்புகளை, மிகக்குறைந்த பட்ஜெட் படங்களை ஆதரிக்கும் திரையரங்கங்களாக இவை இருக்கும் பட்சத்தில் கை கூப்பி வணங்கி வரவேற்கலாம். ஆனால், முதலமைச்சரின் பழைய படங்களை ரீமேக் செய்து ஓடவிடுவதற்காகவோ அல்லது முதலமைச்சர் புகழ்பாடும் படங்களையோ தான் திரையிட அனுமதி என்றாகுமானால் என்னாவது? கலைத்துறையோ ஏற்கெனவே முதுகெலும்பில்லாதவர்களின் புகழிடமாக உள்ளது. ஏற்கெனவே அரசு கேபிள் நிர்வாகத்தால் சேட்டிலைட் சேனல்களின் குரல் வளைகள் நெறிக்கப்பட்டு இருப்பதற்கே விடிவு காணவழியில்லை... இந்தச் சூழலில் உருவாக்கப்படும் திரையரங்குகள் கலைத்துறையை எப்படி ஆட்டுவிக்குமோ தெரியவில்லை... அதுவும் அரசு திரையரங்குகள் எப்படி பராமரிக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஏற்கெனவே மாவட்ட தலைநகரங்களில் உள்ள அண்ணா திரையரங்குகளின் அவலத்தை ஒப்பிட்டே இப்படி யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை 'அம்மா' என்ற பெயர் ஏற்படுத்தும் பயத்தால் அதிகாரிகள் சுத்தமாகக் கூட பராமரிக்கலாம். ஆனால் எக்கராணத்தை கொண்டும் அல்லது சலுகை கருதியும் கலைத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி விடுவது நல்லதல்ல. 

எல்லாமே அம்மா, அம்மா என்றே பெயரிட்டுக் கொண்டே போனால் இந்த சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்த சான்றோர்கள், தலைவர்கள் என்று யாருமே இல்லையா என்ன? கிட்டதட்ட அன்னதானத்திட்டம் போல நடத்தப்படும் அம்மா உணவகங்கள் வள்ளலார் பெயரை அல்லவா தாங்கியிருக்க வேண்டும்? 

இது ஒரு புறமிருக்க, இந்த ஒரு திட்டமானாலும் அதற்கான பணம் முழுமையும் மக்கள் தந்த வரிப்பணத்தை கொண்டே உருவாக்கி செயல்படுத்தப்படுகிறது. இதில் தனியொருவர் தன்னை முன்நிறுத்திக் கொள்வது ஏற்புடையதல்ல. அதுவும் அப்படி முன்நிறுத்திக் கொள்ளும் ஒற்றை நோக்கத்திற்காகவே திட்டங்கள் உருவாக்கப்படுவது மக்கள் பணத்தை தவறாக கையாளும் அபகீர்த்தியில் தான் கொண்டு சேர்க்கும்.

Wednesday, September 3, 2014

மோடியின் அமைச்சரவை உணர்த்தும் செய்தி என்ன?

-சாவித்திரிகண்ணன் 

அதிக எண்ணிக்கையை தவிர்த்திருப்பது, பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தந்திருப்பது என்ற வகையில் நரேந்திரமோடியின் புதிய அமைச்சரவைக்கு ஒரு வசீகரம் கிடைத்துள்ளது. 

அதே சமயம் அமைச்சரவை என்பது எண்ணிக்கை சார்ந்தோ, பிரதிநிதித்துவம் சார்ந்தோ மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. 

பொறுப்பு ஏற்றுள்ளளவர்களின் நேர்மை, திறமை, கடமை உணர்வு, சமூக அக்கறை சார்ந்ததுமாகும். 

அப்படியானவர்களுக்கு பா.ஜ.கவில் ஒன்றும் பஞ்சம் வந்துவிடவில்லை. இதற்கு வாஜ்பாய் அமைச்சரவையே அத்தாட்சி. 

மோடியின் அமைச்சரவையில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இளையவர்களின் பங்கேற்பு நல்லது தான்! 

ஆனால், தகுதி இல்லாதவர்களின் பங்கேற்பு ஆரோக்கியமானதல்ல. 

உயர்கல்வித்துறையை நிர்வகிக்க ஸ்மிருதி இராணி' என்ற சினிமா, டி.வி.சீரியல் பிரபலத்தை தவிர வேறு யாருமே கிடையாதா? 

சமூக ஆர்வலரும், பெண் உரிமைப் போராளியுமான மதுகிஷ்வார் எழுப்பியுள்ள கேள்விகள் கவனத்திற்குரியவை...! 

கல்லூரிகள், ஐ.ஐ.டிகள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், துணைவேந்தர்கள் போன்றவற்றை எதிர்க்கொள்ளவும், பலதரப்பட்ட மாற்று கருத்துகளை உள்வாங்கி நடைமுறைக்குகந்த முடிவு எடுக்கவுமான ஆளுமை வேண்டாமா? அத்தகு திறமையாளரா ஸ்மிருதி இராணி? 

இது நாள் வரையிலான அவரது கலைத்துறை பங்களிப்பில் இருந்து கூட நாம் பெரிதாக ஒன்றும் கண்டடைய முடியவில்லையே? 

அகடமிக் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் அலட்சியப்படுத்த வேண்டியவர்கள் என்ற நிலைபாட்டிலும் நமக்கு உடன்பாடில்லை. 

அகடமிக் தகுதியில்லாத அநேக சமூக சீர்த்திருத்தவாதிகளை, எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் பட்டியல் வெகு நீளமானது. 

ஆனால், அவர்கள் சுயம்புவாக வளர்ந்தவர்கள். எந்த தனிநபர் தந்த சலுகைகளாலோ, பதவிகளாலோ அடையாளம் காணப்பட்டவர்களல்ல. மாறாக, தங்களின் சுய சிந்தனைகளால், ஆற்றல்களால் அகிலத்தையே அதிரவைத்தவர்கள். ஸ்மிருதி இராணியை அவர்களோடு ஒப்பிட்டு அப் பெரியோர்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. 

மிகச்சதாரணமான நடைமுறைக்குகந்த அறிவு சார்ந்து விவாதிப்போம். 

பள்ளிக்கூடமே போகாதவருக்கு வாத்தியார் வேலை இல்லை. கல்லூரி பக்கமே போகாதவர் பிரின்ஸ்பால் ஆக முடியாது. பல்கலைக்கழகமென்றால் என்னவென்று தெரியாதவர் துணைவேந்தராக முடியாது. 

ஆனால், எந்தத் தகுதியுமில்லாவிட்டாலும் கட்சித்தலைமை ஆதரவை பெறுவதாலேயே, ஒருவர் கல்வி மந்திரியாக முடியுமென்றால், அது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகாதா? 

இந்தப் பொறுப்பை ஏற்க ஆளில்லாமல் போய்விட்டதா அக்கட்சியில்? அதுவும் அமேதி தொகுதியில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவரை கொண்டுவந்து அரியணையில் ஏற்றிவைக்கும் அளவிற்கு அதிதிறமைசாலியா? 

முரளிமனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த்சின்ஹா அருண்ஷோரி, அத்வானி.... போன்ற பல திறமைசாலிகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனரே! 

தகுதியானவர்களை சரியான முறையில் பயன்படுத்தும் பக்குவம் பெற்ற ஆளுமையே தலைமைப் பண்பாகும். பெருந்தலைவர் காமராஜ் பொற்கால ஆட்சி தமிழகத்திற்கு தர காரணமானவர்கள் கட்சியில் அவருக்கு எதிரணியில் இருந்த சி.சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றவர்களே. காமராஜ் ஆட்சியின் சாதனைகளை சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே! 

தன்னை மையப்படுத்தி சிந்திக்காமல் நாட்டு நலனை, வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிந்தித்த தலைவர்கள், மாற்று கருத்தாளர்களை மதித்து அங்கிகரித்தார்கள் என்பதே வரலாறு. 

நேருவின் அமைச்சரவையில் அவரது ஆளுமைக்கே சவால்விடக்கூடிய மாற்றுக்ககருத்தாளர்கள் அம்பேத்கார், ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஷண்முகம் செட்டியார் பொன்றோர் இடம்பெற்றது தானே இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியது. 

ஆனால், தன்னைத்தானே மறைத்து சமூகத்திற்கு பொய்தோற்றம் தரும் வண்ணம் தன் கல்வித் தகுதி பற்றி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதமாக பேசியவராயிற்றே ஸ்மிருதி ராணி. 
இப்படிபட்டவர்களை அமைச்சராக்கினால், 'பொய்சொல்வதுதான் அமைச்சராவதற்கான தகுதி' என புரிந்து கொள்ளப்படுமே! 

இது மட்டுமின்றி, ஸ்மிருதி இராணியின் உண்மையான கல்விதகுதி சான்றிதழ் வெளிவருவதற்கு காரணமான தில்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது எதை உணர்த்துகிறது...? இது போன்ற தருணத்தில் தார்மீகக்குரல் எழுப்பும் தகுதியை கடந்த கால கல்விதுதறை செயல்பாடுகளால் காங்கிரஸ் இழந்துவிட்டது..... என்பது உண்மை தான்! 

ஆனால், அநீதிக்கு மாற்றாக நீதியை நிலைநாட்டவே மக்கள் தீர்பளித்துள்ளனரேயன்றி, மீண்டும் அநீதிகளை அரங்கேற்றுவதற்கு அல்லவே!

(May2014)

கடலில் கலக்கும் காவேரி! - கண்ணீர் கடலில் விவசாயி

 -சாவித்திரிகண்ணன் 

இந்த ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவேரி டெல்டா பகுதி முழுவதும் தண்ணீரோடு மிகழ்ச்சி வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சாத்தியமென்று நம்பலாம். 

தற்போதெல்லாம் தமிழகத்தில் குறுவை சாகுபடி பெரும்பாலும் பொய்த்துப் போகிறது. சுமார் 4லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து கொண்டிருந்தது படிப்படியாகக் குறுகி, ஒன்றேமுக்கால்லட்சம் என்றாகி வறட்சி காலங்களில் அதுவும் குறைந்துவிடுகிறது. 

அடுத்து வரும் சம்பா பருவத்திலாவது சரிவை நிமிர்த்திவிடலாம் என சங்கல்பத்துடன் காத்திருக்கும் விவசாயிகள் சம்பாவும் சாத்தியப்படாமல் போகும் போதோ சாகும்படியான துன்பத்தில் உழல நேர்கிறது...! 

காவேரி ஆறு என்பது கிட்டதட்ட சரிபாதி தமிழக விளைநிலங்களின் பயிராதாரம். எனவே பெரும்பான்மையான விவசாயிகளின் வாழ்வாதாரம்! இது மட்டுமின்றி, சென்னை தொடங்கி இராமநாதபுரம் வரையிலான தென்கிழக்கு பகுதியில் வாழும் மக்களுக்கும், கோவை தொடங்கி நாகை வரை மேற்கிலிருந்து கிழக்கு வரையில் வாழும் இடைப்பட்ட பகுதியிலுள்ள அத்தனை ஊர்மக்களுக்குமான குடிநீர் ஆதாரம்! 

இவற்றிற்க்கெல்லாம் மேலாக காவேரி தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த கலாச்சார அடையாளம்! ஆனால், துரதிஷ்டவசமாக தற்போது காவேரியை கலகத்தின் அடையாளமாற்றிவிட்டது தமிழக அரசியல் அணுகுமுறைகள்... 

காவேரி பிரச்சினையில் கர்நாடகம் நமக்கு அநீதி இழைக்கிறதா என்றால், 'ஆமாம்' என்று சிறுகுழந்தையும் சொல்லும்! சந்தேகமேயில்லை. ஆனால், காவேரி தண்ணீரைப் பயன்படுத்தும் அணுகுமுறையில் நாம் நமக்கு நாமே அநீதி இழைத்துக் கொள்கிறோம் என்பதை அதிகாரத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களும் உணரமறுப்பது தான் தமிழக விவசாயிகளின் ஆகப்பெரும் துயரம்! 

ஆண்டுக்காண்டு பயிர்சாகுபடி காலங்களிலெல்லாம் கர்நாடகாவிடம் கெஞ்சியும், போராடியும் நீர் பெற்றுவருகிறோம். மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் மீண்டும் மீண்டும் அணுகுகிறோம். வழக்குகள், தீர்ப்புகள், மீண்டும் வழக்குகள்... என ஒயாமல் போராடிப்போராடித் துவழ்கிறோம். ஆனால் நமக்கு கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்தாமல், அதற்கு முறையான செயல்திட்டங்களை வகுத்து பாதுகாக்காமல் இழந்து கொண்டிருக்கிறோம். 

மேட்டூர் அணை பிரட்டிஷ் பேரரசு நமக்கு கட்டித்தந்த அணை, கல்லணை தொடங்கி களிங்கராயன் வரையிலான நீர்பாதுகாப்பு ஆதாரங்கள் மன்னராட்சி காலத்தவை. கீழ்பவானி, அமராவதி, புள்ளம்பாடி, கீழ்கட்டளைகால்வாய் காமராஜர் காலத்தவை! 

தடையில்லாமல் காவேரி வந்து கொண்டிருந்த காலத்திலேயே மிகுந்த அக்கரை எடுத்து நம் முன்னோர்கள் கட்டி வைத்த நீர்பாதுகாப்பு ஆதாரங்களே இன்றளவும் தமிழகத்தை தாங்கி நிற்கிறது. ஆனால் காவேரிக்குத் தடை ஏற்படத்தொடங்கிய பிறகாவது கிடைக்கும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பையே காட்டாதது தான் சோதனைக்களுக்கிடையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேதனை. 

1970கள் தொடங்கி கர்நாடகா தொடர்ந்து பெரிய, சிறிய நீர்தேக்கங்களை ஏராளமாக கட்டிய வண்ணமுள்ளது. குறிப்பாக கபினி, ஹேமாவதி, சாரங்கி, யாகச்சி போன்ற பெரிய அணைகளையும், ஸ்வர்ணவதி, மங்கலா போன்ற சுமார் 20 சிற்றணைகளையும், மற்றும் ஏராளமான கதவணைகள், தடுப்பணைகள், நீரேற்றும் திட்டங்கள், புதிய பாசனகால்வாய்கள் ஆகியவற்றை செயல்படுத்தி மைசூரில் சுமார் 25,000ஏரிகளும். எண்ணற்ற குளம் குட்டைகளும் நீர்வசதி பெறவழிவகுத்துள்ளது. இவை யாவும் மத்திய நீர்வள ஆணையம், காவேரி கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றின் அனுமதியின்றி அத்துமீறிக் கட்டப்பட்டவை. 

ஆனால் நமக்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீரை பாதுகாக்க நாம் அணைகள், சிறிய நீர்தேக்கங்கள் கட்டுவதற்கு எந்தத்தடையுமில்லை. இன்னும் சொல்வதென்றால் நம் இரு மாநில பிரச்சனைகளை ஒட்டி காவேரி டெல்டா பகுதிகளை கள ஆய்வு செய்த நீர்வள நிபுணர்களும், நடுவர்களுமே கூட காவேரி தண்ணீரை தமிழகம் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். 

உதாரணத்திற்கு மேட்டூர் அணையை பாதுகாப்பதிலேயே கூட நாம் கோட்டை விட்டுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் சேகரித்துக் கொள்ள முடியாமல் சேதாரமாக வெளியேறிவரும் தண்ணீர் அளவு மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 75டி.எம்.சி! இந்தவகையில் நாம் இழந்துள்ளது 3000த்திற்கும் அதிகமான டி.எம்.சி தண்ணீரை! இதை தவிர்க்க நாங்கள் தெரிவித்த திட்டங்களெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கானது. மேட்டூர் அணையில் உயரம் 120அடி. இதில் சுமார் 28% பரப்பளவில் வண்டல் மண் குவிந்துள்ளது. இவை பல்லாண்டுகளாக நீரில் அடித்துக் கொண்டுவரப்பட்டு சேர்ந்தவை. இதனை அள்ளி எடுத்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்டிடப் பணிகளுக்கான மணல் தேவைக்கு சுமார் ஐந்தாண்டுகள் பயன்படும். அணையில் கூடுதல் தண்ணீரை சேமித்துவைக்கலாம்..." என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தலைவர் அ.வீரப்பன். 

சரி, அப்படி மிகைத்தண்ணீர் வெளியேறும் போது அதை சரியாக பயன்படுத்தவோ, பாதுகாக்கவோ நாம் என்ன முயற்சி எடுத்துக் கொண்டோம்...? 

காவிரியில் கொள்ளிடம் வரை சுமார் 16கதவணைகள் கட்டவேண்டும். அத்துடன் ஏராளமான காவிரியின் உப நதிகளான அமராவதி, பவானி, நொய்யல்.... போன்றவற்றில் நூற்றுக்கணக்கான தடுப்பணைகள் தேவை. காவிரியின் கிளை ஆறுகளான குடமுருட்டி, அரசலாறு, மகிமலையாறு... போன்ற 22 ஆறுகளிலும் குறைந்தபட்சம் 60தடுப்பணைகள் அவசியம் தேவை. காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள சுமார் 1870 ஏரிகளின் தற்போதைய நிலையோ மிகப்பரிதாபகரமாக உள்ளது. இவற்றிலும் வண்டல்மண் படிந்துள்ளது. இதற்கு தண்ணீர் வந்து சேர்க்கக் கூடிய சுமார் 23,000 கால்வாய்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை தாட்சண்யமில்லாமல் அகற்றவேண்டும். அத்தோடு அக்கால்வாய்களை அகலப்படுத்தவேண்டும். இந்த ஏரிகளை குறைந்தது ஒரு சில மீட்டர் அளவு ஆழப்படுத்தினாலே கூட சுமார் 150டி.எம்.சிக்கும் அதிகமான தண்ணீரைப் பெறமுடியும். 

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று பொதுவான ஒரு கருத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் ஆண்டுக்கு சராசரியாக தமிழகத்திற்கு கிடைக்கும். மழைநீர் அளவு 925 மி.மீ. 

ஆனால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ நம்மை விடக்குறைவான மழை நீரே கிடைக்கிறது. அதுவும் குறிப்பாக கர்நாடகத்தில் 732மி.மீ மழை நீர் தான் கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டு தான் மன்னாரட்சி காலங்களில் மிகத்திறம்பட நீராதாரத்திட்டங்களை செய்துள்ளனர். ஏரி, குளம் இல்லாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை. இன்று தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கிறதென்றால் அது தமிழகத்திற்கு நம் முன்னோர் தந்த கொடைகள். அன்று பெய்யும் மழை, அவை வழிந்தோடிச் சேரும் திசை ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து இவை ஏற்பட்டுள்ளதை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது. 

ஆனால், இந்த ஏரிகளை நாம் அக்கரையோடு பராமரிக்கத் தவறியதின் விளைவாக இன்று இவற்றால் பெறவேண்டிய பயன்பாட்டில் 20சதவிகிதத்தைத் தான் பெறுகிறோம். 

இப்போதும் கூட மத்திய அரசுகளையோ, மாநில அரசுகளையோ நம்பாமல் அந்தந்த கிராம உள்ளாட்சிகளே கூட தங்கள் கிராமத்தில் வெறும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் சிறுசிறு பண்ணை குட்டைகளை அமைத்து அற்புதமாக நீரைச்சேமிக்கலாம். ராமநாதபுரம் போன்ற இடங்களில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. 

எல்லாவற்றிற்கும் மேலாக காவேரி கரையோரங்களில் நிகழும் மணல் கொள்ளையை உடனே முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தமிழகத்தின் எதிர்காலமே சூனியமாகிவிடும். அந்த அளவுக்கு காவேரி படுகைகளெல்லாம் பள்ளதாக்குகளாகியுள்ளன. 

இதன் காரணமாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. இதனால் காவேரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அந்தத் தண்ணீர் பல பகுதிகளை எட்டுவதே இல்லை. திருவாரூரில் உள்ள கோரையாறுக்கு கூடத் தண்ணீர் செல்வதில்லை. நகரத்தில் பிரியக் கூடிய வாய்க்கால்களோ மிக மோசமாக உள்ளன. பன்னெடுங்காலமாக காவேரி ஆற்றுத்தண்ணீரை பெற்றுவந்த ஏராளமான ஊர்கள் தற்போது காவேரி தண்ணீரை கண்டு 25வருடங்களாகிவிட்டன... என்பது ஒரு கசப்பான உண்மை. 

எனவே காவேரியில் நாம் முறையாக திட்டமிட்டுச் செயல்புரியாததால் தான் நமது விளை நிலங்களை இழந்து ரியல் எஸ்டேட்டுகளுக்கு விலை போகும் நிலங்களாக்கி வருகிறோம். 

1924லே கர்நாடகாவில் காவேரி பாசனப்பகுதிகளில் 1,23,000ஏக்கர் நிலங்களில் தான் விவசாயம் நடந்தது. அது 1956ல் 5,65,400ஏக்கரானது. 1971லோ, 6,68,000 ஏக்கரானது. தற்போதோ 22லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடக்கிறது. 

ஆனால் தமிழகத்தில் 1971ல் 28லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக இருந்த காவேரி டெல்டா பகுதி விவசாயம் தற்போது சரிபாதிக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. கர்நாடகத்தின் அநீதியை மட்டுமே இதற்கு காரணமாக்குவது நம்மை நாமே ஏமாற்றிக் கொல்வதற்கு வேண்டுமானால் உதவலாம்! 

தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்களான ந.நடராஜன், சி.எஸ்.குப்புராஜ், டி.எஸ்.விஜயராகவன், மோகனகிருஷ்ணன், அ.வீரப்பன் போன்றவர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே தண்ணீர் பாதுகாப்பு திட்டங்களை அரசுக்கு சமர்பித்துள்ளனர். அதை செயல்படுத்தினாலே அண்டை மாநில அநீதிகளையெல்லாம் மீறி தமிழக விவசாயத்தில் தன் நிறைவு பெறலாம். 

காவேரியில் தண்ணீர் கரைபுரண்டுடோடுகிறது. 

காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நீங்கா துன்பம் 
தண்ணீர் வராவிட்டாலும் கண்ணீர், தண்ணீர் வந்தாலும் கண்ணீர்! 
தண்ணீர் வராத காலங்களில் வறட்சி நிவாரணம்..... 
வந்துவிடும் நேரங்களில் வெள்ள நிவாரணம்... 

இந்த நிலையை மாற்ற அவர்கள் நீண்ட நாட்களாக கேட்கும் கோரிக்கை தான் கதவணைகள். இது சுமார் அரை நூற்றாண்டு கோரிக்கை! மக்கள் தண்ணீரை தடுக்க கேட்டதோ, கதவணைகள் 

ஆனால், ஆட்சியாளர்கள் மக்கள் கோரிக்கை குரல்கள் தங்கள் காதுகளில் விழாமல் இருக்க ஏற்படுத்திக் கொண்டதோ காதணைகள்! 

எனவே தான் இந்த கோரிக்கை இது நாள் வரை செவிடன் காதில் ஊதிய சங்கானது. 
ஆனால், இப்போது தான் ஆட்சியாளர்கள் சற்றே அசைந்துகொடுத்தள்ளனர். சமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, "காவேரியின் பிரதான வெள்ளநீர் போக்கியான கொள்ளிடம் ஆற்றில் கீழணை தவிர எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால், மழைகாலத்தில் தண்ணீர் கடலில் விரையமாகிறது. 
இதை தடுக்க 400கோடி செலவில் 0.6டி.எம்.சி கொண்ட கதவணை கட்டப்படும்" என தெரிவித்துள்ளார். இது யானைப்பசிக்குப் போடப்பட்டுள்ள சோளப்பொறி போல என்றாலும் கூட, இதனால் காட்டு மன்னார் கோவில், மயிலாடுதுறை, சீர்காழின்னு பல ஊர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 

ஆனால், இத்துடன் நின்று விடாமல் கீழணைக்கு மேலே 7கதவணைகள் கட்டப்படும் போது தான் அது காவேரி டெல்டா விவசாயிகளின் கண்ணீருக்கும் அணை கட்டியதாக இருக்கும். இந்த ஏழு கதவணைகளால் காவேரி டெல்டாவில் கடலில் கலக்காமல் காப்பாற்றபடும் தண்ணீர் மட்டுமே சுமார் 50டி.எம்.சிக்கும் அதிகமாகும்! எனவே, அணிவகுத்து வரும் கவர்ச்சியான அம்மா திட்டங்களுக்கு தரும் முக்கியத்துத்தில் ஒரளவாவது கதவணைத் திட்டத்தில் காட்டினால் வரலாறு முதல்வரை நிரந்தரமாக நினைவில் வைக்கும்.

(Aug2014)

ஜல்லிகட்டு காளையா? சல்லிக்காசு காளையா...?

-சாவித்திரிகண்ணன் 

ஜல்லிகட்டு சுப்ரீம்கோர்ட் தடைவிதித்தாலும் விதித்தது..., 
தமிழர்களுக்கு இது நாள் வரை இல்லாத ரோஷம் எப்படி வந்ததோ தெரியவில்லை...! 

"தமிழர்களின் வீரவிளையாட்டுத் தடைவிதிப்பதா...?" 
"மறத்தமிழன் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்குமா...?" 
"இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால்..." என ஆளாளுக்கும் வானத்திற்கும், பூமிக்குமாக எம்பிக்குதிக்கிறார்கள்....! 

இப்படி தமிழன், வீரம், தன்மானம், இனஉணர்வு... பேசிட்டா மூச்.... தமிழ்நாட்ல அதுக்கு மாற்று கருத்து சொல்றதுக்கே யாருக்கும் தைரியம் வராது பார்த்துக்கிடுங்க...! ஆனா, நம்ம மனசு கேட்பனாங்குது..! 

எது வீரம்...? 
சிவனேன்னு புல்லையும், புண்ணாக்கையும் தின்னுட்டுக் கெடக்கிற வாயில்ல அந்த சாதுவான ஜீவனிடம் கூட்டம் கூட்டமா சேர்ந்து விழுந்து மோதறது தான் வீரமா...? 
அது யாருகிட்டேயாவது வந்து, "வாங்கடா மோதி பார்க்கலாம்னு கூப்பிட்டதா?" 
வாடிவாசல்ல இருந்து அத ஜல்லிகட்டு மைதானத்திற்கு அனுப்புவதற்குள்ள அது, "ம் கூம் மாட்டேன்.. என்னை விட்டுடுங்க" அப்படின்னு முரண்டு பிடிக்கிறதா பாக்குற யாருக்குமே "ஐயோ பாவம்... பாவி மக்கா அத விட்டுட மாட்டீங்களா? அப்படின்னு தான் கேட்கத் தோன்றும்...! 

ஆனா, மாட்டுவாலை முறுக்கிவிட்டு, அதவிடாப்பிடியா நெறித்து தள்ளி வாடிவாசலுக்கு தள்ளி விடுவீக.. அதுல சில மாடுகள் வெளியில வந்ததுமே நிக்குற கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஓட்டம் கின்னிடும் பாருங்க... 

இன்னும் சில மாடுகளோ, 'எதுக்காக இந்த பாவி மக்கா நம்மள புடிச்சு இப்படி தள்ளிவிட்டாய்ங்க.. அப்படின்னு புரிபடாம மலங்க மலங்க முழிச்சு நிக்குமே.. அப்ப அது தான் சாக்குன்னு ஆளாளுக்கு அதோட கொம்ப பிடிக்கிறதும், திமிலை பிடிக்கிறதும், எகிறி மேல விழிகிறதும்னு பாடா படுத்துவாக.. உடனே அது ஐய்யோ சாமி வேண்டாம்பா இந்த இம்சைன்னு தட்டுகெட்ட மாடா தறிகெட்டு ஓடுமே.. அப்ப யாராவது ஒருத்தன் அதோட திமிலையும், கொம்பையும் பிடிச்சா மாதிரி ஒரு முப்பது நாப்பதடிதூரம் கூடவே போவான் ஒடனே அவஞ்ஜெயிச்சதா அறவிக்கப்படும்.... இதுல என்ன வீரமிருக்கு..?

 சொளை சொளையா லஞ்சம் வாங்கின அரசியல்வாதிகள் ஓட்டுகேட்டு வர்றப்ப ஐநூறு, ஆயிரம்னு கொடுத்து ஓட்டை விலை பேசும் போது, 'டே படுவா எங்க பணத்தை கொள்ளையடிச்சு எங்க கிட்டயே தரவந்தியான்னு வராத கோபம்...ரோஷம்...வீரம்... 
தேர்தல் வந்தா மட்டுமே மக்கள் ஞாபகம் வந்து 'ஷோ' காட்டிவிட்டுப் போடும் தலைவர்களிடம் வாரத ரோஷம்... 

இலவசமாக ஒத்த ரூபா சாக்லெட் கிடைத்தாலும் கூட, அதை முட்டி மோதி உருண்டு பிரண்டு, பிச்சுப் பிடுங்கி முக்கு விடைக்க, முழிகள் தெறிக்க வாங்கும் போது வராத தன்மானம்... 

இப்படி வீரவசனங்கள் பேசும் போது மட்டும் தமிழனுக்கு விறைச்சிகிட்டு வந்துடும் போல...! 

ஜல்லிகட்டு என்பது தமிழனின், தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளமாம்! 

சில முரட்டுக் காளைகள், "டேய் வேண்டாங்கடா, விட்டுருங்க... என்ன எம் போக்குல போகவிடுங்கன்னு நின்னு நிதானிச்சு மொறைக்கும்..." 

அப்பத்தான் நம்மாளுங்க ஓஹோ முறைக்கிறியா... சரி வா பாத்திடுவோம்னு எகிறி பாய்வான்...." 
இதுல, சிலபேரு குடல் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா சாவான், 
இன்னும் சில பேருக்கு தொடைகிழியும்... 
இன்னும் சில பேருக்கு படக்கூடாத இடத்துல பட்டுடும்... 
அப்புறம் அவன் கல்யாணத்திற்கே தகுதியில்லாதவானகப் போறதும் உண்டு. 

கதையில, சினிமாவுல வர்றாப்ல இன்னைக்கு எந்தப் பொண்ணும்
"நீ முதல்ல இந்த மாட்டை அடக்கி காட்டு. அப்பதான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு" ஒத்த கால்ல நிக்குறதுமில்ல..... 

'இந்தக்காளைய அடக்குகிறவனுக்குத்தான் எம்பொண்ணுன்னு' எந்த தகப்பனும் கூறுவாறில்லாம அறிவிக்கிறதுமில்ல... 
பெறகு எதுக்கு இந்த விவேகமில்லாத வெத்துவீரம்... 

இதுல நானும் காளைய அடக்க நின்னேனாக்கும்னு ஒப்புக்குச் சப்பாக போய் நிற்பவயங்களும் உண்டு. 
இந்த அப்பாவிகளின் நிலை சில நேரங்களில் அதோ கதியாகிப் போவதுண்டு...மேலும் இதில் பார்வையாளர்காளக நின்னு பலியானவங்களும், காயம்பட்டவர்களும் கணக்கிடலங்காது...! 

இது மட்டுமில்ல, சல்லிக்காசு பொறாத போலி ஜாதிப்பெருமை, குலப்பெருமை, குதர்க்க மனோபாவங்கல்லாம் இந்த ஜல்லிகட்டு சமாச்சாரத்துல பொதைஞ்சி கெடக்கு...! 

இப்படி நாலுப்பேரக்குத்தி கிழிச்சி, இரண்டு பேரை பலிவாங்கிருச்சுன்னா அந்த கொலைக்காரக் காளைக்கு கெடைக்குற மரியாதையே தனிதான்! 

மாலை என்ன..! மரியாதை என்ன..! ஆரத்திகள் என்ன..! 

மனுஷன மனிஷன் குத்திக் கிழிச்சாலோ, கொலை பண்ணினாலோ தான் குற்றம். அதுக்கு ஜெயிலு, தண்டனை எல்லாம்...! 

ஆனா, மனுஷன் மாட்டை ஏவிக்கொன்னா அதுக்கு பேரு பா....ரம்பரிய விளையாட்டு...! 

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 'பாரத்தை யார் சுமப்பா...? ன்னு யாரும் கேட்டு தொலைச்சிடக்கூடாது...! 

அப்படி கேட்பவன் கேணைப்பயல்! அவன் தமிழர்களின் பாரம்பரியப் பெருமை தெரியாத பண்ணாடை! அரை லூசு... இன்னும் என்னவெல்லாம்மாகவோ வெல்லாம் பார்க்கப்படுவான்! என்னமோ நமக்கு ஈரமனசு கேட்கமாட்டேங்குது...! 

இது மனுஷங்க படறபாடுன்னா... தோத்துப் போன காளைகள் அதாவது அடக்கப்பட்டுவிட்டாதாக கருதப்படுகிற காளைகள் அந்தந்த குடும்பங்களல் நடத்தப்படற விதமே ஒரு தினுசாத்தான இருக்கும் பாருங்க... 

அந்தந்த வீட்டுபெண்டு பிள்ளைக மொதக் கொண்டு அதை ஏசியும் பேசியும் தூற்றுவாக.. 
"தண்டக் கருமாந்திரம்.. ஒனைப்போயி இத்தனை நாளா படாதபாடு பட்டு செலவழிச்சு கவனிச்சேன் பாரு..ன்னு" புறக்கணிக்கப்படும்! 

அது பாவம் அதுக்கு என்ன தெரியும்...! அதுக்கு இத்தனை நாளா தனக்கு கிடைச்ச அன்பு, பரிவு, அக்கரைக்கொல்லாம் என்னா அர்த்தம்னு தெரியாது. 

இப்ப ஏதோ கொலைக்குற்றவாளி போல உதாசினப்படுத்துவதற்கான அர்த்தமும் தெரியாது...! 

அதாவது, தான் கொலை செய்யாததைத் தான், தன் எஜமான் வீட்டில குற்றமாக கருதுறாங்கன்னு அந்த சாதுவான ஜீவனுக்கு எப்படித்தெரியும்...? 
இதுல சில காளைகள் மன உளைச்சலுக்களாக்கி பெறகு புண்ணாக்கு, புல்லு தண்ணி எதிலும் ஆர்வம்காட்டாமல் மெலிஞ்சு துரும்பாகி வெகுவிரைவில் மாட்டுச்சந்தையில் கறிக்காக அடிமாட்டு விலைக்குப் போவதுமுண்டு. 

காலமெல்லாம் தன் குடும்பத்துக்கு பாலை கொடுத்து ஜீவனத்துக்கும் காரணமாயிருந்த பசுக்களையே பால் வற்றியதும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு தோளில துண்டைப்போட்டுகிட்டு வருகிற மனுஷப் பராம்பரியம் மல்லவா நம் பாரம்பரியம்...! 

இதுல வீரத்தை காட்டுவதற்குன்னு ஊட்டச்சத்துகள் தந்து வளர்க்கப்பட்ட காளை சோரம் போனபிறகு எப்படி வளர்ப்பான்மனுஷப்பய...? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற வள்ளலார் மனசு எல்லாருக்கும் இருந்தா அப்புறம் வாடிப்பட்டி மாட்டுச்சந்தைக்கு வேலையே இல்லை....! 

இப்பக்கூட பாருங்க, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடை விசிச்சதுன்ன உடனே வாடிப்பட்டி மாட்டுச்சந்தையிலே ஜே....ஜேன்னு மாடுகள் குவிஞ்சுருச்சு.. முன்ன வீரக்காளையாக பாரக்கப்பட்டு ஐம்பதாயிரம், ஒரு லட்சம்னு விலைப்பேசப்பட்ட மாடுகளெல்லாம் இன்னைக்கு எடைமதிப்பிடப்பட்டு ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு விலையோயிருக்கு...! 

உழவுக்கு நீர் இறைத்து, ஏர் இழுத்து பாடுபட்டு தன் உணவுக்கு காரணமாயிருக்கும் காளைகளையே கூட காலப்போக்கில் அதன் உடல்பலம் குறையும் போது அடிமாட்டு விலைக்கு விற்றுச்செல்லும் நன்றி கெட்ட மனுஷஜாதி நாம்! இதில் உழைக்கத் தெரியாத ஜல்லிக்கட்டு காளையென்றாலும் சல்லிக்காசுக்காவது உதவட்டுமேன்னு தான நினைக்க தோணுது. 

அது மாடப்பொறந்தது குத்தம். 

நாம மனுஷனாப் பொறந்தது அதவிட மாபாதகம்!

(May-2014)

370வது சட்டமும், சர்ச்சைகளும்

 -சாவித்திரிகண்ணன் 

இயற்கையின் சாம்ராஜ்ஜியம் கோலாச்சும் எழில்மிகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது இன்னல்களின் தாயகமாகியுள்ளது. 

பட்டாசு வெடிப்பது போல அடிக்கடி வெடிக்கும் நிஜ துப்பாக்கிசத்தங்கள்... 

எங்கெங்கும் காணினும் நீக்க மற நிறைந்திருக்கும் ராணுவ ஜவான்கள்.. 

கேள்விவரைமுறையற்ற கைதுகள், விசாரணைகள், சித்தரவதைக் கூடங்கள்.. 
இவை தான் நாம் இந்தியாவின் அங்கமாக நம்பிக்கொண்டிருக்கும் காஷ்மீர் மாநிலத்தின் காட்சிகள்! 
இன்றைய பொழுது எப்படியோ தெரியாது.... 

நாளைக்கும் இங்கே தான் இருப்போமா என்பதில் உத்திரவாதமில்லை... 
வெளியே சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லை... 
ராணுவத்தினரின் சந்தேகப்பார்வைகள் துளைத்தெடுக்க, 
சந்தோஷத்தை தொலைத்திருக்கும் இந்த காஷ்மீரிகள் அங்கே பிறந்தார்கள் என்பதைத்தவிர வேறென்ன தவறு செய்தனர்....? 

"அடிப்படை உரிமைக்களுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவனிடம் தான் இங்கே சில அரசியல்வாதிகள், "உனக்கேன் விஷேச அந்தஸ்த்து?" என்கிறார்கள்! 

விஷேஷ அந்தஸ்த்தாக பார்க்கப்பட்ட விஷயம் தான் வில்லங்கமாக அவர்களின் இன்று விஷேஷமான வேதனைகளுக்கு காரணமாயிற்று. 
உண்மையில் காஷ்மீர் பிரச்சினை தான் என்ன? 

அது, இந்தியாவின் தலைப்பாகையா? அல்லது தலைவலியா? 
இவற்றை தெரிந்துகொள்ள சில வரலாற்று யதார்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டும். 

இந்தியா - பாகிஸ்தான் என பிரிவினை ஏற்பட்ட போது இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி இந்தியாவாகும் என்றும், முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதி பாகிஸ்தான் என்பதுமாக முடிவானது. 

அதன்படி அன்றைய தினம் சுமார் 80% இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதி என்பதால் அது பாகிஸ்தான் வசம் வந்துவிடும் என்று பாகிஸ்தானியர்கள் நம்பினார்கள். 

ஆனால், அப்போது அதை ஆட்சி செய்த ராஜாவான ஹரிசிங் இந்து என்பதாலும், அதிகாரவர்க்கம் இந்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்துவிடும் என்பது இந்திய ஆட்சியாளர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. 

காஷ்மீர் ராஜா ஹரிசிங் இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் அவருக்கு தந்த வாக்குறுதிகள் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றவே பாகிஸ்தான் பக்கம் சற்றே சாய்ந்தார். 

ஆனால், காஷ்மீர் வாழ் முஸ்லீம்கள் பாகிஸ்தான் பக்கம் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், கலாச்சார ரீதியாகவும், ஆன்மீக வழிமுறைகளிலும் அவர்கள் பாகிஸ்தானிய முஸ்லீம்களிடமிருந்து மேம்பட்டவர்களாகத் தங்களைக் கருதினார்கள். அப்போது காஷ்மீர் மக்கள் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவும் பாகிஸ்தான் பக்கம் செல்வதை விரும்பவில்லை. அதை விட ஷேக் அப்துல்லாவும், காஷ்மீர் முஸ்லிம்களும் மதம் எனும் சிப்பிக்குள் தங்களை அடைத்துக் கொள்ளமல் மதச்சார்ப்பற்றவர்களாக இந்துக்கள், புத்தபிட்சுகள், சீக்கியர்கள் உள்ளிட்டோர்களோடு இணைந்த ஒரு தேசத்தை காணவே பெரிதும் விரும்பினார். 

காஷ்மீர் என்பது இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழும் காஷ்மீரை மட்டுமின்றி, இந்துக்கள் கணிசமாக வாழும் ஜம்முவையும், புத்தமதத்தினர் மற்றும் சீக்கியர்கள் வாழும் லடாக் பகுதியையும் உள்ளடக்கியது. 

ஜம்முவில் உள்ள இந்துக்களும், இஸ்லாமியர்களோடு இணக்கமாகவே இருந்தனர். புத்தமதத்தினர் எந்த பிரச்சினையும் செய்யாதவர்கள். இந்தச்சூழுநிலைகள் ராஜாவை பாகிஸ்தான் பக்கம் போகவிடாமல் தடுத்தது. ராஜாவின் கீழ் இருந்த இந்து அதிகார வர்க்கமோ இந்தியாவுடன் இணைவதில் விருப்பம் காட்டியது. 

இதனால், 'கனியும் என்று காத்திருந்தால் காஷ்மீர் கைநழுவிப்போய்விடும் என பதற்றமடைந்த பாகிஸ்தான் பழங்குடியின படையுடன் அதிரடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இநத்பப்டை காஷ்மீரில் கண்டதை எல்லாம் சூறையாடியது. இஸ்லாமிய, சீக்கியப் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கறிபழித்தது. 

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் தான் காஷ்மீரை காப்பாற்ற முடியும் என்று முடிவுக்கு வந்த ராஜாஹரிசிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டு இந்தியப்படைகள் உதவியுடனும், ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர் பலத்துடனும் பாகிஸ்தான் ஆபத்திலிருந்து தப்பினர். எனினும் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. 

இப்பிரச்சினையை இந்தியா ஐ.நா.வுக்கு எடுத்துச்சென்றது. 
ஐ.நா.சபை மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி மக்கள் விருப்பப்படி காஷ்மீரின் தலைவிதியை தீர்மானிக்கலாம் எனக்கூறியது. 
பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொண்டது. இந்தியாவும் இந்த யோசனையை ஒத்துக் கொள்வதாகவே கூறியது. 

இதன்படி காஷ்மீர் தனிநாடா? இந்தியாவோடு இணைவதா? பாகிஸ்தானோடு இணைவதா? என்ற வாக்கெடுப்பு அன்றே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவே பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் பார்வையாகவும் அன்று வெளிப்பட்டது. 

ஆனால், ஜம்மு பகுதியில் இருந்த பிரஜாபரிஷத் என்ற இந்துகட்சி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கக் கோரி அதிரடிப் போராட்டங்களை நடத்தியது. அப்போதைய ஜனசங்கத் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி இந்த போராட்டங்களுக்கு உத்வேகம் தந்தார். 

இந்தியாவோடு ஐநூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்த போது நாம் மக்களிடம் வாக்கெடுப்பா நடத்தினோம்? காஷ்மீரில் ஏன் நடத்த வேண்டும்? என்பது இந்து இயக்கங்களின் குரலாக ஒலித்தது. 

'வாக்கெடுப்பு நடத்தினால் காஷ்மீர் இந்தியாவிற்கு இல்லமலாகிவிடுமோ?' என்ற அச்சம் இன்று வரை இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ளது. எனவே, வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

ஆனால், அதே சமயம் காஷ்மீரிகளை சமாதானப்படுத்த வாக்கெடுப்புக்கு பதிலாக சில வாக்குறுதிகளை நேரு அரசாங்கம் தந்தது. அதன்படி காஷ்மீருக்கு தன்னாட்சி பெற்ற மாநில அந்ததஸ்த்து தரப்பட்டது. 

உண்மையில் இது போல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகாரம் பகிர்நதளிக்கப்பட்டிருந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கே உச்சபட்ச பெருமை சேர்த்திருக்கும். 

ஆனால், இப்படி வழங்கப்பட்ட அரசியல் சாசன 370வது சட்டப்பிரிவு என்பது ஏதோ இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக வழங்கப்பட்டது என்ற கோணத்தில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த 370வது சட்டப்பிரிவு காஷ்மீருக்கு மட்டுமின்றி அருணாசலபிரதேசம், நாகலாந்து, இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், அவை குறித்து இந்து இயக்கங்கள் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்வதென்றால் இதே போன்ற 371வது சட்டப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது குஜராத்தில் சௌராஷ்டிரா, கட்ச் போன்ற பகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் விதர்பா பகுதிகளுக்கும் வழங்கப் பட்டுள்ளது. 

ஆனால் , காஷ்மீரிகள் விஷயத்தில் மட்டும் ஒரு துவேஷப் பார்வையுடன் இந்த 370வது பிரிவு கடும் விமர்சனம் பெற்று வருகிறது. 
இதன் விளைவாக 1954ல் இந்திய அரசியல் சாசனச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு, இந்த 370ன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. 

1958ல் மற்றுமொரு சட்டம் ஜம்மு, காஷ்மீரின் விசேஷ உரிமைகளைப் பறித்து, மத்திய அரசின் நிர்வாக கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது, 1964ல் மத்திய அரசுக்கு ஜம்மு காஷ்மீரின் சட்டசபையை அதிரடியாக கலைக்கும் அதிகாரம் ஒரு சட்டத்திருத்ததால் தரப்பட்டது. 

இப்படியாக நாம் தருவதாகச் சொல்லி பறித்துக் கொண்டும், இருப்பதாகச் சொல்லி இல்லாமலாக்கி வைத்திருப்பதுமான 370வது சட்டப்பிரிவின் படி இன்றைக்குஒரே ஒரு விசேஷ சலுகை மட்டுமே மிஞ்சியுள்ளது. 

அது அந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமேயான நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை. அதாவது மற்ற மாநிலத்தார் அங்கு செல்லலாம், வியாபாரம் செய்யலாம், சம்பாதிக்கலாம், வாழலாம்... ஆனால் அந்த மண்ணை காஷ்மீரிகளிடமிருந்து அபகரிக்க கூடாது என்பது தான்! 

இதில் கூட இப்போது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டில் ஒரு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, காஷ்மீரில் பிறந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்பவர் அங்கு நிலம், வீடு வாங்கலாம். 
ஆக, அந்த மக்களோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்பவர்களுக்கு அங்கே நிலம் வாங்க பிரச்சினையில்லை. 

ஆனால், இதுவும் போதாது.. யார் வேண்டுமானாலும் அங்கே நிலம் வாங்க உரிமை வேண்டும்.. அதுவும் இந்தியாவின் ஓர் அங்கம் தானே..? என்பது சிலர்வாதம்! 
சரி, இவர்களின் விருப்படியே 370வது பிரிவு விலக்கப்படுமானால் அங்கே ஆதாயமடையப்போவது யாராக இருப்பார்கள்..! 

அம்பானிகளும், அதானிகளும், இந்துஜாக்களும், டாடாக்களும், பிர்லாக்களுமே! காஷ்மீரின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை உடனடியாக பட்டா போட்டு வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த சிலரின் அபிலாசையை நிறைவேற்ற அந்த மக்களின் நிம்மதியை நாம் குலைக்க வேண்டுமா? 

கோடிக்கணக்கான மக்கள் நடைபாதைகளிலும், சேரிகளிலும் எந்த நில உரிமைகளுமற்று வாழும் நாட்டில், அந்த எளிய மக்களின் காணி நில ஆசையை நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுப்பது தானே மக்கள் நல அரசின் முன்னுரிமை திட்டமாக இருக்கவேண்டும். 

காஷ்மீர் விஷயத்தில் இந்தியா செய்யவேண்டிய முக்கியமான கடமை ஒன்று உள்ளது. 
அது, அங்கு நிலவும் மட்டுமீறிய ராணுவ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டியதாகும். 

எப்படி இப்போது இலங்கை மண்ணில் தமிழர் வாழ்விடப்பகுதிகளில் சிங்கள ராணுவம் ஆதிக்கம் கொண்டுள்ளதோ... அதற்கும் சற்று அதிகாமகவே அதுவும், கடந்த கால்நூற்றாண்டாக இந்திய ராணுவம் காஷ்மீரிகளின் இயல்புவாழ்க்கையை பாதித்து வருகிறது. 

கடந்த கால்நூற்றாண்டில் காஷ்மீரிகள் சுமார் ஒன்றரைலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 80%த்தினர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். யாரையும் சுடலாம், கைது செய்யலாம், அடைத்து வைக்கலாம், துன்புறுத்தலாம், பணம் பறிக்கலாம், பொய்வழக்கு புனையலாம், கொல்லலாம்.... என மட்டுமீறிய அதிகாரம் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

'இதை வாபஸ் பெறவேண்டும்' என்றே இந்திய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏராளமான கள ஆய்வுகள் நடத்தி எதிர்வினையாற்றியுள்ளன. 

முதலில் நாம் காந்தி தேசத்து இந்தியர்கள் என்ற வகையில், காஷ்மீரிகளுக்கு அவர்களின் இயல்புவாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு தான் இன்று முன்னுரிமை தரவேண்டும். நமது நடவடிக்கைகளால் நாம் அவர்களை அரவணைத்து வெற்றிகொள்வதற்கு மாறாக, அந்நியப்படுத்தி தோல்வி கண்டு வருகிறோம். 
துவேஷ அரசியல் துன்பத்தையே வளர்த்தெடுக்கும். 
அன்பு, அரவணைப்பு, ஆன்மபலம் கொண்டு தான் நாம் அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். 

மூர்க்கத்தனமாக மலர் பறிக்க முற்பட்டவரின் கையை முட்கள் பதம் பார்த்தனவாம்! "ஐயோ கைகளில் ரத்தம், பூச்செடியின் தீவிரவாதத்தை பூண்டோடு ஒழித்து, மலர் கொய்ய இனி கோடாரியே துணை" என்றானாம் அந்த முட்டாள்! இது போன்ற அணுகுமுறைகளை அறவே தவிர்ப்போம்!

(June 2014)

கல்வி வள்ளல்களா? கல்வி கொள்ளையர்களா?

-சாவித்திரிகண்ணன் 

தமிழ்நாட்டில் கல்விதுறை என்பதே தனியார்களால் களவாணித்துறையாகிவிட்டது. 
அது திருடுவதில் அதிக சமார்த்தியமுள்ளவர்கள் மட்டுமே கட்டி எழுப்பக் கூடிய சாம்ராஜ்யமாகியுள்ளது! 

அதுவும் உயர்கல்வித்துறை என்பதோ, திருட்டுக் கலையில் நம்பர் ஒன்னாக இருப்பவர்கள் ஓங்கி வளர்ந்து நிற்கும் துறையாகிவிட்டது. 

ஏப்ரல், மே மாதங்கள் இவர்களின் அறுவடைக்காலம்...! 

இவர்களின் கல்லா பெட்டிகள் கரன்ஸிகளால் நிரம்பி வழியும் பருவம்....! 

அந்த காலத்தில் தங்கள் சொத்துபத்து நிலங்களை பிறர்கல்விகற்பதற்கு அர்பணித்தவர்களை நாடு கல்விவள்ளல்கள் எனக்கொண்டாடியது. 

இன்றோ, பிறர் சொத்து பத்து நிலங்களை மட்டுமா? ஓட்டுமொத்த சேமிப்பு, நகை என அனைத்தையும் அபகரிக்கத் தெரிந்த கலையைக் கற்றவர்கள் கல்வி வளளல்களாக கற்பிதப்படுத்தப்படுகின்றனர். 
கலி ரொம்பவே முத்திடுச்சு.. என்று தான் சொல்ல தோன்றுகிறது. 
முக்கியமாக மருத்துவக் கல்வி என்பது மருள வைக்கிறது . 
65ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 19ஐ தாண்ட முடியவில்லை. இதில் படித்து வெளிவரும் மாணவர்கள் வருடத்திற்கு 2,555தான்! 

நாளுக்குநாள் நோயாளிகளின் பெருகிக் கொண்டிருக்கும் நாட்டில் மெடிக்கல் காலேஜ் கட்ட அரசாங்கத்திடம் பணமில்லை... ஐயோ பாவம்! 

ஆனா, வேண்டாம் என்று போராடினாலும் டாஸமாக் கடையை வீதிக்கு வீதி திறக்கிறார்கள் மதுவிற்பனையை கையில் எடுத்த 11ஆண்டுகளில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுவிற்பனைக் கடைகளையும், 4000க்கும் மேற்பட்ட மதுபான பார்களையும் உருவாக்க முடிந்துள்ளதே...! 
அட, விடுங்கள், யாரை வாழவைக்கணும், யாரை சாகவைக்கணும்னு அரசாங்கத்துக்கு ஒரு கொள்கை இருக்கும் போலத்தெரியுது! 

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் மொத்த எம்.பி.பிஎஸ் இடங்கள் 1,560! இவற்றிற்க்கு ஏகத்துக்கும் கிராக்கி தான்! 
அரசு மருத்து கல்லூரிகளில் ஆண்டுகட்டணம் ரூ 2,500தான்! 
அதிகபட்சம் மற்ற பல கட்டணங்களையும் சேர்த்து ரூ 4,000தான்! 
ஆனா, தனியார் மருத்துவகல்லூரியில் கல்விக்கட்டணம் நான்கு லட்சத்திலிருந்து 8லட்சம் வரை! 
ஆக, ஐந்து வருட கல்வி கட்டணம் மட்டுமே ரூ20லட்சத்திலிருந்து 40லட்சம்! 

ஆனால், இதோடு நிறுத்திக் கொள்வதில்லை. 
நன்கொடை தராதவர்கள் நிர்வாக கோட்டாவிற்குள் நுழைய இடமில்லை. 

ரூ40லட்சத்திலிருந்து 70லட்சம் வரை ஆளைப் பொறுத்து அடித்துப் பிடுங்குவது மற்றொரு கலை! 
இது ஏதோ மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. ஓரே வகுப்பறையில் 40லட்சம் நன்கொடை தந்த மாணவரும் இருப்பார், 70லட்சம் தந்த மாணவரும் இருப்பார். 

ஆக, தற்போதைய கல்விச்சூழலை வணிகமயமாக்கப்பட்ட கல்வி என்று வர்ணிப்பது மாபெரும் அநீதி. ஏனெனில், எந்தவொரு வணிகத்திற்கும் சில தர்மங்கள் உள்ளன. 'இன்ன பொருளுக்கு இன்னவிலை' என்று அறிவிக்கப்பட்டு விற்கப்படும். அதற்கு ரசீது தரப்படும். 

இரண்டு இட்லி சாப்பிட ஓட்டலுக்குச் சென்றால், விலைப்பட்டியலில் ரூ 30 என்று இருக்கும். நீங்கள் 30ரூபாய் தான் இட்லிவிலை என்பதை தெரிந்து கொள்ள வழியுண்டு. 

ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளாகட்டும், என்ஜினியரிங் கல்லூரிகளாட்டும். எந்த கல்லூரியில் எந்தப்படிப்புக்கு எவ்வளவு ரேட் என்பது உத்திரவாதமாகச் சொல்லி விட மாட்டார்கள்! அதில் வெளிப்படைத் தன்மை இருக்காது. கொடுக்கப்படும் பணத்திற்கு ரசீது கிடைக்காது. இப்படியிருக்க இதற்கு எப்படி நீங்கள் 'வணிகம்' என்ற நல்ல சொல்லை பயன்படுத்துவீர்கள்...? 

மாட்டுச்சந்தையில் நிற்கும் தரகு வியாபாரியிடம் கூட சில தாராதரம் இருக்கும். அவர் உங்கள் கைகளுக்குத் தான் துணி போர்த்துவார். இவர்களோ வாடிக்கையாளர்களின் கண்களைக் கட்டி கரன்ஸிகளை சூறையாடும் மோடி மஸ்தான்கள்! 

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் தடுக்கி விழுந்தால் தென்படும் தேனீர் கடைகளைப் போல முளைத்துவிட்டன. இன்றைய தேதிக்கு இவற்றின் எண்ணிக்கை 550ஐ கடந்துவிட்டது. இதில் சுமார் 2இலட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் என்றால், புழங்கும் பணத்திற்கு கேட்கவா வேண்டும்? 

இதில் 10சதவிகித கல்லூரிகளுக்குத் தான் படு கிராக்கி. 
இதில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான விலை மதிப்பு சந்தைக்கேற்ப ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போகும். கேப்பிடேஷன் பீஸ், டொனேஷன் பீஸ் என ஏகத்துக்கும் வசூலிப்பார்கள்! 

கல்விகட்டணத்தை அரசு, நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து அவ்வப்போது அறிவிக்கிறது. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம், சடங்கு அவ்வளவு தான்! இங்க நாங்க சொல்றது தான் சட்டம், நீதி, தர்மம் எல்லாமே! இது ஒரு தனி சாம்ராஜியம்.." என்பதே இவர்கள் போக்கு. 

இவர்கள் கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலையில் ஜனவரி, பிப்ரவரி மாதமே இடங்கள் விற்றுத் தீர்ந்துவிடும். அதாவது ப்ளஸ்டூ தேர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கல்லாகட்டி முடித்து விடுவார்கள்! 

இது சட்டப்படி பெரும் குற்றமாகும்! மே மாதம் தான் விண்ணப்பாரமே விநியோகிக்க வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள விதி. ஆனால் அதற்கு மூன்று நான்கு மாதத்திற்கு முன்பே, 'ஒரு மாணவனின் மார்க் என்ன?' என்ற அடிப்படை தகவல் கூட அவசியமில்லை என்ற வகையில் வேகமாக காசு பார்க்கும் ஆசை இவர்கள் கண்ணை மறைக்கிறது. 

இது தவிர சுமார் ரகம் என்ற வகையில் ஒரு 25சதவிகித கல்லூரிகளைச் சொல்லலாம். இவற்றில் படித்த அனைவருக்கும் வேலை உத்திவாதமில்லை என்றாலும், ஓரளவு வெளியில் சென்றால் போராடி சமாளிக்க கூடிய அளவிற்காவது 50சதவிகித மாணவர்கள் இக்கல்லூரிகளில் இருந்து வெளிவருவார்கள். 

இன்னும் சுமார் 25சதவிகித பொறியியல் கல்லூரிகள் ரொம்ப சுமார் ரகம்! இதில் படித்து வெளிவருபவர்களில் சுமார் 20முதல் 25சதவிகிதம் பேர் தான் வெளியே வந்தால் ஏதோ வாழ்க்கை போராட்டம் நடத்துவதற்கான தைரியத்தை பெற்றிருப்பார்கள். அதாவது எட்டாயிரம், பத்தாயிரம்னு சம்பளம் கிடைக்கிற வேலையையாவது பெற்றுவிடுவார்கள்! 

மற்றுமுள்ள 40% கல்லூரிகளோ மோசம், மகாமோசம் என்று சொல்லத்தக்க வகையில் தான் உள்ளன. இங்கு அடிப்படை கட்டமைப்பு, ஆய்வுக்கூடம், தகுதியான ஆசிரியர்கள்... என எதையுமே எதிர்பார்க்க முடியாது. இதில் படிப்பவர்களில் சுமார் 80சதவிகிதத்தினருக்கும் மேல் பல செமஸ்டர்களில் தோல்விக்கு மேல் தோல்வி கண்ட வண்ணம் இருப்பார்கள். வெறும் 10%தேர்ச்சி, 5%தேர்ச்சி, 2%தேர்ச்சி, ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறுவதில்லை என்ற வகையிலான பொறியியல் கல்லூரிகளெல்லாம் கூட உள்ளன. 

பிறகு, எப்படி இந்தக் கல்லூரிகள் அண்ணா பல்கலையின் அங்கீகாரம் பெறுகிறது? ஒற்றைச் சாளர முறையில் அரசே மாணவர்களை எப்படி இக் கல்லூரிகளுக்கு அனுப்புகிறது? என்பதையெல்லாம் வில்லங்கமான கேள்விகளாகவே கல்வித்துறை கருதுகிறது..! 

ஆக, இப்படியான கல்லூரிகளில் படித்துவெளிவரும் என்ஜினியர்களும், டாக்டர்களும் நம் சமூகத்திற்கு என்ன சேவை செய்வார்கள்? சேவை செய்வதற்காகவா படித்தார்கள்? அவர்கள் இழந்த அபரிமிதமான பணத்தை இந்த சமூகத்திலிருந்து ஒன்றுக்குப் பலவாக அள்ளிக்கொள்ளும் தேவைக்கான அங்கீகாரமே இந்த படிப்பு, பட்டங்கள் எல்லாம்! 

இச்சூழலில் நல்ல பொறியாளர்களா நமக்கு கிடைப்பார்கள்? தன் பொறியில் யார் சிக்குவார்கள் என்றல்லவா அவர் தொழில் நுட்பம் பேசும்! 

'உயிரைக் காப்பாற்றுவதே மருத்துவம்' என்பதெல்லாம் இன்று கவைக்குதவாத பேச்சு. இவர்களிடம் சிக்கும் நோயாளி தொலைந்தான்! 

ஏற்கெனவே சுகம் தொலைத்தவன், சொத்தையும் தொலைக்கவேண்டியிருக்கும். உருப்படாத மருத்துவத்தால் உயிரையும் இழக்க வேண்டியிருக்கும்! 

ஆக, 2ஜி ஊழல், நிலக்கரிச்சுரங்க ஊழல்களுக்கு இணையானதாக இந்த கல்வி ஊழலை கருதலாம்! 
ஒரு வகையில் அவை கூட ஒரே ஒரு முறை நடந்த கொள்ளை. இதுவோ ஆண்டுக்காண்டு தடையின்றி நடக்கும் கொள்ளை! 

ஆக, கோடிகளைக் கொட்டிக் கொடுத்தால் தான் மருத்துவக்கல்வி.... 
லட்சங்களை கொட்டிக் கொடுத்தால் தான் பொறியியல் கல்வி.... 
இந்த ரீதியில் சுமார் 2லட்சம் பொறியியல் சீட்டுகளையும், ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவ சீட்டுகளையும் விற்கும் இந்த மோடி மஸ்தான்கள், ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டுகிறார்கள்! 
அதுவும் ஆண்டு தோறும் சுருட்டுகிறார்கள். இதில் கல்லூரிகளை விட அதிகம் கல்லா கட்டுபவர்கள் நிகர்நிலை பல்கலைகழகத்தினரே! இவர்களை நிகரில்லா கல்வி கொள்ளையர்கள் எனலாம்! 

எந்தச் சட்டமாகட்டும், விதிமுறைகளாகட்டும் இவர்களுக்கு அதெல்லாம் செல்லாக்காசு தான்! 
1992லே கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 
ஆனால், இதுவரை இந்த சட்டம் இவர்கள் பக்கம் கூடச் சென்றதில்லை. ஒரே ஒருவர் கூட கைதானதில்லை. தண்டிக்கப்பட்டதில்லை. 

இதில் மட்டுமல்ல, அனுமதிக்கப்பட்ட பாடப்பரிவுகள் ஐந்தாறு என்றால் இவர்கள் ஆரம்பித்து கல்லாகட்டும் பாடப்பிரிவுகள் 15, 20ஆக இருக்கும். 
இவற்றில் ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்து பணம் வசூலித்துவிடுவார்கள்.அப்படி சேரும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து இவர்களுக்கு என்ன கவலை? அது அந்த மாணவர்களே போராடி பெற்று கொள்ளவேண்டியது. ஏ.ஐ.சி.டி.இ, டி.எம்.இ... எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. நீதிமன்றத்தீர்ப்புகளே கூட இவர்களை கட்டுபடுத்துவதில்லை! 

'வல்லான் வகுத்ததே சட்டம்' என்பது இவர்கள் விவகாரத்தில் நூற்றுக்கு நூறு உண்மை! 

சமீபகாலமாக இப்படியான கல்விவள்ளல்கள் சிலர் அரசியல் அதிகார மையங்களை அண்டி வாழ்வதை விட, நேரடி அரசியலில் இறங்கி அதிகார மையத்தின் அங்கமாகவே மாறத்துடிப்பதையும், மாறிக் காட்டியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(May -2014)

Tuesday, September 2, 2014

இருள் சூழ்ந்த சமூகம் - இளந்தலைமுறையின் அவலம்

 -சாவித்திரிகண்ணன் 

மாணவர்களிடையே அடிதடி, வெட்டு, குத்து, பதட்டமான சூழல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 

இரு கல்லூரி மாணவர்களிடையேயான மோதலிலும், கத்திக்குத்து சம்பவங்களிலும் சென்ற வருடம் சென்னையில் மட்டுமே 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு புறம் அரசு கல்லூரி மாணவர்கள் தினசரி அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது கூச்சலும், கலாட்டமாகவும் பயணிக்கிறார்கள்! பேருந்துகளை ஓங்கி தட்டிக்கொண்டு பாடுவது, மாணவிகளை சீண்டி கிண்டலடிப்பது, பெரும் கூச்சலெடுத்து பேசுவது, கெட்டவார்த்தைகளை பொது வெளியில் பிரயோகிப்பது... என அவர்கள் செய்யும் கலாட்டா உடன் பயணிப்பவர்களை அச்சுறுத்துவதாக உள்ளன. 

இதனால் எரிச்சலடைபவர்கள் கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வேதனைப்பட்டவாறு பயணிக்கின்றனர். ஏதேனும் கேட்டால் மாணவர் கூட்டம் தாக்கி விடுமோ என்ற அச்சுசசத்தால் பொதுமக்கள் காட்டும் சகிப்புதன்மை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிவிடுகிறது. 


இது போதாதென்று 'பஸ்டே' என்ற அடாவடிக் கொண்டாட்டங்கள் வேறு! 
சம்பந்தப்பட்ட நாளில் அந்த பேருந்து முழுவதுமே மாணவர்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். 
மேற்கூரையில் ஏறி நடனமாடுவார்கள் 'ஒ'வென்று பேரிரைச்சலோடு நகரை வளம் வருவார்கள்! 

எதிரில் வருபவர்கள் எலலாம் மிரண்டு விலகி செல்வதைக் கண்டு உள்ளுக்குள் உவகை கொள்வார்கள்..! 

பேருந்து பயணிக்கும் வழிகளில் உள்ள கடைகளில் புகுந்து அகப்பட்டதை அள்ளுவார்கள்! 
இதற்கு பயந்து கடைக்காரர்கள் மடமடவென்று ஷெட்டரை சாத்துவதும் நடக்கும்! 
'இந்த சம்பவத்திற்கு அனுமதி தரக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தடை ஆணை பிறப்பித்துள்ள போதிலும் இந்த 'பஸ்டே' கொண்டாட்டங்கள் அவ்வப்போது நிகழாமலில்லை. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று மதுபழக்கம் மட்டுமீறி அதிகரித்துக் கொண்டுள்ளது. 
அத்துடன் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கமும் பரவி வருகிறது. 

மாணவ சமுதாயம் இப்படிப்பட்டதொரு இழிநிலையில் உலாவக் காரணம் என்ன? 
அவர்களின் இந்த நடத்தைகளுக்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? எந்த சமூகத்திலிருந்து அவர்கள் உருவானார்களோ, 
எந்த குடும்பக் கட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளிவந்துள்ளார்களோ 
அந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் இதில் பங்கில்லையா? சமூகத்திலும் சரி,வீட்டிலும் சரி அவர்களுக்கு எப்படிப்பட்டவர்கள் ரோல் மாடல்களாக இருக்கிறார்களோ... அவர்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்க முடியும். நம் மாணவர்கள் வேற்று கிரகத்திலிருந்து குதித்த அதிசயப்பிறவிகளா என்ன? ஆனால் பாதிக்கப்படும் பொது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்...! "சே...ஸ்டுடன்ஸா இதுங்க, பொறுக்கிங்க... இவனுகள எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடணும் சார்... "ஐயோ மோசமான கயவாளிப்பயலுக சார்! என்னா காட்டுமிராண்டித்தனம்... என்னா கூச்சலு... எல்லாம் கலிகாலம் தான் போங்க..." "படிக்கிற புள்ளிங்களா இதுங்க... கம்மனாட்டிப்பசங்க, சுத்த உதவாக்கரை தான்! இதுங்க வீட்டுக்கும் பாரம், நாட்டுக்கும் பாரம்..." என மக்கள் சகட்டுமேனிக்கு கொட்டித்தீர்த்துக் குமுறுகிறார்கள்...! ஆனால், இந்த மாணவர்கள் உண்மையில் பரிவோடு பார்க்கப்பட வேண்டியவர்கள்! ஏனெனில், இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அடிதட்டிலிருந்து முதன்முதல் கல்லூரியில் காலடிவைத்தவர்கள்! இவர்களின் குடும்பச்சூழலோ குடிகாரத்தகப்பன், கூலிவேலை செய்து படிக்க வைக்கும் அம்மா என்பதாகத் தான் இருக்கின்றது. பிள்ளைகள் பெரும்பாலும் தந்தையைப்பார்ப்பதே தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்! தனிமைப்பட்ட தாயின் அதீத பாசம் அவர்களை முரடர்களாக்கி விடுகின்றது. உலகத்திலேயே மிகவும் உன்னதமான பதவி தாயாகவும், தகப்பனாகவும் பொறுப்பேற்பது தான்! பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் பெறும் ஞானம் என்பது ஒரு வகை என்றால், பெற்றோர்களின் பல்வேறு நடவடிக்கைகளில், அணுகு முறைகளில் பிள்ளைகள் கண்டடையும் கல்வி என்பது மற்றொரு வகை! பிள்ளை வளர்ப்பின் பரிணாம வளர்ச்சி என்பது பண்பட்டவர்களாக குழந்தைகளை உருவாக்குவது என்பது மட்டுமல்ல, பெற்றோர்களும் தங்கள் சகிப்புத்தன்மையாலும், பெருந்தன்மைகளாலும் தங்களை பண்படுத்திக் கொள்வதுமாகும்! ஆனால், நமது சமூக கட்டமைப்பில் குடும்பம் அதற்குரிய குணாதிசியங்களை இழந்து கொண்டிருக்கிறது. கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய களங்கள் அமைதி குலைந்து கந்தர் கோலமாக காட்சியளிக்கின்றன! மறுபுறம் சமூகத்தளமோ சகலவிதத்திலும் சீரழிந்துள்ளது. ஆசிரியர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் பார்த்து பின்பற்றத்தக்கவர்களல்ல. ஆன்மீக மையங்களோ ஆபத்தானவையாக மாறிவருகின்றன. தொண்டு செய்பவர்களாக கூறுபவர்கள் பொதுச்சொத்தை சூறையாடுகிறார்கள். வர்த்தகத்தில் தொழில்தர்மம் காணாமல் போய்விட்டது. கொள்ளை லாபம் வைத்து சம்பாதிப்பவர்கள் கெட்டிக்காரர்களாகப் புகழப்படுகிறார்கள்..!! அரசியல் என்பது அத்துமீறுவதற்காக கைகொள்ளப்படும் கருவியாகிவிட்டது. இந்தச்சூழலில் மாணவர்கள் மட்டும் சாதுவாக இருப்பது சாத்தியமேயில்லை. அவர்கள் அப்பாவியாக இருந்தாலுமே கூட நமது சினிமா, டி.வி.பத்திரிக்கைகள் அவர்களை அவ்வாறு தொடர அனுமதிப்பதில்லை. பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதே இன்று பெருமபாலான ஊடகங்களின் தொழில் தர்மமாகிவிட்டது. அரசு கல்லூரி மாணவர்கள் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள...நாதியில்லை! அரசு கல்லூரிகளில் கலை, கலாச்சார விழாக்கள் இல்லை. ஒவ்வொரு இளம் உள்ளத்திலும் பீறிட்டு எழும் கலை, கலாச்சார படைப்பாற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துத் தருவதில்லை. அதனால் அவர்களே தான் தோன்றித்தனமாக மனம் போன போக்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆடித்தீர்க்கிறார்கள்..! இளம் பருவ ஆற்றலென்பது காட்டாற்று வெள்ளமாகும். அதை இருபுறமும் பண்பாடு, கலாச்சாரமெனும் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தி தண்ணீர் வெள்ளத்தை தகுந்த வழியில் சென்று சேரவும், சமூகத்திற்கு பயன்படவும் செய்யவேண்டியது மூத்தோர் அனைவரது கடமையாகும்! நாம் அனைவருமே அக்கடமையை எந்த அளவுக்கு செய்கிறோம்..? குடும்பத்தோடு நிறுத்திவிடுவதும் குற்றம் தான்! நாம் பொதுத்தளத்தில் எவ்விதம் வெளிப்படுத்துகிறோம்..? பணம் சம்பாதிப்பதற்கானதாக மட்டுமே நம் உழைப்பு முழுமையும் தருகிறோமா? நம் கையில் கிடைக்கிற பணம் அதர்ம வழியில் வருகிறதா? அல்லது சமூகம் பயனடைய நாமும் பயன்பெறத்தக்க அளவில் வருகிறதா...? ஏனெனில், நாம் இளைய தலைமுறையினருக்கு வெறுமனே உபதேசம் செய்வதில் உபயோகம் ஒன்றுமில்லை. நம் செயல்பாடுகளும், வாழ்க்கையுமே அவர்களிடம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைத்துக் கொள்வோமாக! நாம் சொல்லொன்றும், செயலொன்றுமாக வெளிப்பட்டால் நாம் சொல்வதெல்லாம் செல்லாக் கசாகிவிடும் இளைய தலைமுறையிடம்! ஆக, இந்த கட்டுரையின் அடிநாதம் இளைய தலைமுறையின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை எச்சரிப்பதல்ல...! எச்சரிக்கை பெரியோர்களுக்கே!

கிரிக்கெட்டில் சூதாட்டம் அனுமதிக்கப்படுமானால்...

-சாவித்திரிகண்ணன் 

இந்தியாவில் வேறெந்த விளையாட்டுக்கும் இல்லாத செல்வாக்கு கிரிக்கெட்டிற்கு உள்ளது. இந்தியர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் ஒரு மயக்கம், போதை அல்லது வெறியே உண்டு. 

சோறு, தண்ணி, தூக்கம், வேலை, கடமை, படிப்பு, குடும்பம்.. என எல்லாவற்றையும் புறந்தள்ளி கிரிக்கெட்டில் பைத்தியமாக இருக்கும் பலரைக் கொண்டது இந்த தேசம்..! 

இந்த விளையாட்டு இங்கு வெள்ளையர்கள் விதைத்த விதை! இங்கு மட்டுமல்ல, தங்கள் காலனியாதிக்க நாட்டிலெல்லாம் பிரிட்டிஷரால் கால்கோளப்பட்ட விளையாட்டு! 

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற காலனியாதிக்க நாடுகளில் தான் கிரிக்கெட் களேபரங்கள் உள்ளன. மாறாக வளர்ச்சியை மையமாகக் கொண்ட அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுகள் கிடையாது. 

ஆனால், இன்று வெள்ளைகாரர்களே வியக்கும் வண்ணம் இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு வாரியமாகத் திகழ்கிறது. 

இந்தியாவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு மாத்திரமல்ல, அதையும் தாண்டிய மிகப்பெரும் பொருளாதார சக்தி. அரசாங்கங்களையும், ஆட்சியாளர்களையும், நீதிபரிபாலான அமைப்புகளையும் கூட கட்டுப்படுத்தும் சக்தி! 

எனவே தான் சமீபத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்பித்துள்ள நீதிபதி முக்தல் கமிட்டியின் பரிந்துரைகள் கண்டு நாம் பதட்டப்படவேண்டியுள்ளது. "இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரம்மாண்டமாக கறுப்புபணம் புழங்குகிறது! இதில் நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கமும் உள்ளது! எனவே, இதை முடிவுக்கு கொண்டுவர அல்லது கட்டுப்படுத்த அரசாங்கமே கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிடுவது தான் தீர்வு. அரசாங்கத்திற்கு பெரும் வருமானமும் கிடைக்கும்..." என்கிறது. நீதிபதி முக்தல் கமிட்டி. 

நீதிபதி முக்தல் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமை நிதிபதி. இந்த குழுவின் மற்றொரு உறுப்பினர் கூடுதல் சொலிசிடர் ஜெனரலான நாகேஸ்வரராவ், மற்றொரு உறுப்பினர் அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினரான நிலாய்தத்தா! 

சென்ற ஆண்டு மேமாதத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் ஆட்டக்காரர்களான ஸ்ரீசாந்த், அங்கீத், அஜித் சாண்டிலா ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து மேலும் சுனில்பாட்டிலா, கிரண்டோலோ, மணீஸ்குட்வேர் ஆகிய ஆட்டகாரர்களும் கைதானார்கள். 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனும் கைதானார்கள். 

இந்த விவகாரத்தை தானே ஒரு விசாரணை கமிட்டி அமைத்து பூசிமெழுகி, புதைக்கப்பார்த்தார் சீனிவாசன். ஆனால், அது ஈடேறவில்லை. ஆகவே, உச்சநீதிமன்றம் ஒரு மூவர்கமிட்டி அமைத்து விசாரணை அறிக்கை கேட்டது. 

அப்படி அமைக்கப்பட்ட கமிட்டியான முக்தல்கமிட்டி இந்த விசாரணை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை கழுவுகிற மீனில் நழுகிற மீனைப்போல அமைந்துள்ளது. 

தொலைபேசி உரையாடல்கள், போலீஸ்விசாரணை அறிக்கைகள், நேரடி சாட்சியங்கள் அனைத்துக்குப் பிறகும் நீதிபதிகள் ஒரு மித்த கருத்துக்கு வரவில்லை. 'இந்த ஆறு ஆட்டக்காரர்களுக்கும் சூதாட்டத்தில் பங்கு இருந்தது. குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இவர்கள் பல நூறுகோடி பணப்புழக்கத்தில் சம்பந்தப்பட்டனர்' என்பதை உறுதிபடுத்துவதில் இவர்களுக்குள் பலத்த கருத்து வேறுபாடு. "இருக்கும் ஆனா இருக்காது" என்பதாக சொதப்பியுள்ள ஒரு அறிக்கை தந்துள்ளனர். 

இந்த மாகானுபாவர்கள் தான் இந்த லட்சணத்தில் 'கிரிக்கெட் சூதாட்டத்தை இந்திய அரசு சட்டபூர்வமாக்கலாமே...' என திருவாய் மலர்ந்தருளி உள்ளனர். 

மேற்படி ஆறுகிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சென்னை கிங்ஸ் ஆட்ட உரிமையாளருமான குருநாத் மெய்யப்பனும் சூதாட்டத்தில் பங்கெடுத்த சூதாடிகள் என்பது இந்த நாட்டின் பாமர மனிதனுக்கு கூட பட்டவர்த்தனமாக தெரியத்தக்க அளவில் உண்மைகள் அம்பலப்பட்ட பிறகும் கூட குற்றவாளிகளை சுட்டிக்காட்டுவதில் தடுமாற்றம் கொண்ட ஒரு கமிட்டி அரசுக்கு சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதில் வியப்பில்லை தான்! 

"கிரிக்கெட்டில் தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுபடுத்துவது நடைமுறையில் சாத்தியமல்ல, கிரிக்கெட் ஆட்டக்காரர்களையே கூட ஓரளவு தான் எங்களால் கட்டுப்படுத்தமுடியும்..." 

இப்படி அடிக்கடி பேசிவருபவர் வேறுயாருமல்ல, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தலைவர் சீனிவாசன் தான்! 

இதே கருத்தை தான் சென்ற ஆண்டு நவம்பரில் இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐயின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் கூறினார்; கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளில் பெட்டிங் என்ற பெயரிலான முறைகேடுகளை தவிர்க்க சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கிவிடலாம்.." 

இந்தியாவில் ஊழல்களை விசாரிக்கும் ஒரு அமைப்பின் தலைவர் மனநிலையையும், சிந்தனைபோக்கையும் வெளிச்சம் காட்ட அவரது இந்த ஒரு கருத்து போதுமானது. எந்த தார்மீக பார்வை கொண்ட ஒருவரும் இது போன்ற கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பில்லை என்பதை நாம் உணர்வோம். 

ஆக, இப்படியான கருதாக்கங்களை வலுப்படுத்தும் விதமாக - இதன் தொடர்ச்சியாக நீதிபதி முக்தல் கமிட்டி கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க பரிந்துரைத்துள்ளது. புக்கிகள், சூதாடிகள், இவர்களை இயக்குபவர்கள், அனுமதிப்பவர்கள், ஆதாயமடைவர்கள்... போன்ற தரப்புகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்க வகையில் இப்படியான பரிந்துரை அமைந்துள்ளது. இது நம் இந்திய சமூகத்தையே இருளில் ஆழ்த்திவிடும். 

இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை படித்தவர்கள் தொடங்கி பாமரர்கள் வரை உள்ள பல கோடி கிரிக்கெட் பைத்தியக்கரார்களில் இது வரை சில, பல ஆயிரம் பேர்கள் தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடிவிடும். ரூ100பெட் கட்டினால் ஆயிரம், இரண்டாயிரம் கிடைக்க வாய்ப்புண்டு. ரூ 1000கட்டினால் லட்சரூபாயைக் கூட அள்ள முடியும் என ஆசைக்காட்டினால் இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட பலியாகிவிடுவார்கள். இந்த அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டத்தால் பல கோடி இந்தியக் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். ஏற்கெனவே லாட்டிரி மற்றும் குதிரைபந்தய சூதாட்டங்களில் வாழ்விழந்தோர்களின் கண்ணீர் கதைகள் சொல்லி மாளாது. இந்நிலையில் அதிக மக்களை ஈர்க்கும் கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அங்கீகரித்தால் வேறு வினையே வேண்டாம். 

சமீபத்திய ஒரு சர்வதேச நிறுவன ஆய்வறிக்கை சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் எடுத்த கருத்து கணிப்பிலிருந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தற்கொலை உணர்வு மிகுந்திருப்பதையும், அவர்கள் அடிக்கடி வன்செயல்களில் ஈடுபடுவதையும், பெரும்பாலோர் மது உள்ளிட்ட போதைக்கு பழக்கப்பட்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளது. மேலும் அந்த ஆய்வு, "சூதாடிகள் காலப்போக்கில் உழைப்பில் ஈடுபாடற்றவர்களாய், பொறுபற்ற பேர்வழிகளாய் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் சுமைகளாகி விடுகின்றனர்" என்கிறது. 

அதுவும், கிரிக்கெட் விளையாட்டில் முதலில் எந்த அணி விளையாடுவது என பூவா? தலையா? போட்டு பார்ப்பது தொடங்கி, ஒவ்வொரு பால் வீசப்படும் போதும் எத்தனை ரன்கள்? எத்தனை ஓவர்கள்? எப்போது ஆட்டமிழப்பார், எந்த அணி எவ்வளவு எடுக்கும், எந்த அணி ஜெயிக்கும் என ஒவ்வொரு நிமிடத்துக்கும் பெட்டிங் கட்டிக் கொண்டே இருப்பார்கள் எனும் போது ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் அதன் எதிர்வினையாக பல லட்சம் குடும்பங்கள் பணம், சொத்து, அந்தஸ்த்து இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிடுவது சர்வ சாதாரணமாகிவிடும். 

ஆக, மிகப்பெரிய சமூக அழிவிற்கு வித்திடும் ஒரு பரிந்துரையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லாவிட்டால் இன்றில்லாவிட்டாலும் வருங்காலத்தில் மெல்ல மெல்ல இக்கருத்து செல்வாக்கானவர்களைக் கொண்டு 'லாபி' செய்யப்பட்டு கிரிக்கெட் சூதாட்டத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை பெற்றுத் தந்துவிடும். 


அப்படியானால் பெரும் கறுப்புபணப்புழக்கத்தை கட்டுபடுத்த என்னவழி? நிழல் உலக தாதாக்களின் ஆதிக்கத்தை தடுக்க என்னவழி? 
என்ற கேள்விகளை ஆழமாக அலசவேண்டும். இதில் ஆட்டக்காரர்கள் தொடங்கி அவர்களை ஆட்டுவிப்பவர்கள், ஆதரிக்கும் பார்வையாளர்கள் அனைவருமே தங்களை ஆத்ம பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும். 

உடலுக்கும், உள்ளத்திற்கும்புத்துணர்ச்சி தரும் விளையாட்டுகளான கபடி, ஹாக்கி, தடகளம், கால்பந்து, கூடைப்பந்து... என பல விளையாட்டுகள் இருக்கும் போது ஏன் கிரிக்கெட் மட்டும் அதி முக்கியத்துவம் பெற்றது? 

இதை சாத்தியப்படுத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கங்கள் என்ன? கையாளப்பட்ட தந்திரங்கள் என்ன? பெற்றுவரும் ஆதாயங்கள் என்ன...? என அனைத்திற்கும் விடைதேடினால் கறுப்பு பண புழக்கத்திற்கும், நிழல் உலகதாதாக்களின் ஆதிக்கத்திற்கும் விடை கிடைக்கும்! 

பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவில் பிரசவிக்கப்பெற்ற கிரிக்கெட் சுதந்திர இந்தியாவில் பிரட்டிஷாரை அண்டி வாழ்ந்து அதிகாரத்தை அனுபவித்து வந்த மேல்தட்டு வர்க்கத்தால் மட்டுமே ஆரம்பகாலங்களில் விளையாடப்பட்டு வந்தது. அன்றைய தினம் மயிலாப்பூர், மந்தைவெளி, மாம்பழம் போன்ற பகுதிகளில் கிரிக்கெட் கிளப் வைத்து தங்களுக்குள் மும்மரமாக விளையாடிவந்தார்கள். 

1970 களில் இந்தியாவில் தொலைகாட்சி பிரபலமாகத் தொடங்கியபோது கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பியதன் மூலம் கிரிக்கெட்டிற்கு செல்வாக்கு பெருகத் தொடங்கியது. 

1975லே ஐந்து தினப்போட்டி ஒரு நாள் போட்டியாக மாற்றம் பெற்றது. கிரிக்கெட் நடக்கும் நாட்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு கிரிக்கெட் வெறி வளர்த்தெடுக்கப்பட்டது! பாகிஸ்தானோடு விளையாட்டு என்றால் தேசபக்தி என்ற மாயை கட்டமைக்கப்பட்டது. 1983ல் இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றது இந்தியாவில் வரலாறு காணாத களேபரக் கொண்டாட்டமாக சித்தரிக்கப்பட்டது..! 

இந்திய கிரிக்கெட் ஆட்டகாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு பரிசுத் தொகைகளையும் வீட்டுமனை போன்ற சலுகைகளையும் அள்ளி வழங்கினர். 

இதற்கான அவசியம் என்ன? மக்கள் கவனத்தை சமூக பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப இந்த யுக்தி கையாளப்பட்டதாகவே சமூக விமர்சகர்கள் கூறுகிறார்கள். 

1990களில் உலகமய, தாராளமய கொள்கை இந்தியாவில் ஏற்கப்பட்டபோது கிரிக்கெட்டும் மிகப்பெரிய ஏற்றம் கண்டது. கிரிக்கெட்டில் பணபுழக்கம் அதிகரித்தது. போட்டிகளுக்கான கட்டணங்கள் உயர்ந்தன. ஸ்பான்சர்கள் குவிந்தன. விளம்பர வருமானங்கள் பெருகின. 

1980களின் மத்தியில் மெல்ல நுழையத் தொடங்கிய 'பெட்டிங்' கலாச்சாரம் 90களில் வேகம் பெறத் தொடங்கியது. மக்களின் கிரிக்கெட் மோகத்தை, பிரேமையை காசாக்கி கொள்ள கிரிக்கெட் தரகர்கள், புக்கீகள் களம் கண்டனர். பெரும் வெற்றியடைந்து மிகப்பெரிய கோடீஸ்வர்களாயினர். தங்களுக்கு உகந்தவர்களை அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் அடையாளம் கண்டனர். கைகோர்த்தனர். கைமேல் பலனும் கண்டனர்! 

சூழ்ச்சிக்கு பேர் போன தொழில் அதிபர்கள், தந்திரமான அரசியல்வாதிகள், பேராசை கொண்ட பிரபலங்கள் இதில் அணிசேர்ந்தனர். 
விளையாட்டை மையப்படுத்தி திரைமறைவு வில்லங்கங்கள் நடந்தேறின. 

1994ல் நடந்த பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தீவிரம் காட்டாமலிருக்க இரண்டரைகோடி ரூபாய் கொடுத்ததாக கிரிக்கெட் தரகர் முகேஸ்குமார் குப்தா 2000ல் சி.பி.ஐ விசாரணையின் போது தெரிவித்தார். 

2000ஆம் ஆண்டில் அசாருதீன், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர்... உள்ளிட்ட சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதாயினர். இந்த கைதினால் பல உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை புனருத்தானம் செய்து கொள்ளவேண்டும் எனப்பலர் எழுதினர். ஆனால் பி.சி.சி.ஐ யோ களவாணித் தனத்தை எப்படி கமுக்கமாகச் செய்வது என்ற பாடத்தைத் தான் இதிலிருந்து பெற்றதோ என்று நினைக்க தோன்றும் வண்ணம் நடந்து கொண்டது. 

ஒரு வகையில் கிரிக்கெட்டிற்கு கிடைத்த அபார விளம்பரமும், மிதமிஞ்சிய பணமும், அதற்காக கட்டமைக்கப்பட்ட மாயையும் தான் கிரிக்கெட் விளையாட்டையே சீரழித்தது. 

கவாஸ்கர் காலத்தில் 5நாள் போட்டிக்கு ஆட்டக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த சம்பளமே ரூ2000தான்! 

இன்றோ, ஒரு போட்டிக்கு வழங்கப்படுவது ரூ20லட்சத்திலிருந்து 50லட்சம் வரை! இதோடு ஒரு நாள் போட்டிக்கான ஊதியம் ரூ 2லட்சம். இவை தவிர விளம்பரங்கள் வாயிலாக ஆண்டுக்கு பல கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். சச்சின் டென்டுல்கரின் ஒராண்டு விளம்பரவருமானம் மட்டுமே ரூ 200கோடி! 

கிரிக்கெட் வியாபாரத்தை விஸ்வரூபமாக்கவும், சூதாட்டத்தை மேன்மேலும் வேகப்படுத்தவும் ஆமர்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக். 

இது தான் சந்தையில் மாடுவாங்குவது போல, கிரிக்கெட் ஆட்டகாரர்களை சந்தைபடுத்தி ஏலம் எடுத்தது. கிரிக்கெட் ஆட்டகாரர்களை நமது ஊடகங்கள் கிரிக்கெட் வீரர்கள் என எழுதிவருவது மிகப்பெரிய அபத்தம். சோரம் போவதற்கு தானே உடன்பட்டவர்களை எப்படி வீரர்கள் என்று அழைப்பது...? 

இதே போல் பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை 'இந்திய கிரிக்கெட் களவாணிகள் வாரியம்' என்றழைப்பதே சாலப்பொருந்தும்! 

2007ல் தொடங்கிய இந்த விபரீதம் விஸ்வருபம் பெற்றுவளர்கிறது. கடைசியாக நடந்த ஏலத்தில் தங்களை விற்க அணிவகுத்து நின்ற ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை 514. இதில் புதிதாக சோரம் போகத் துணிந்தவர்கள் 259. டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேதர்ஜாதவ் என்ற ஆட்டக்காரர், "இன்னும் அதிகவிலைக்கு ஏலம் போவேன் என எண்ணினேன்... என்ன செய்ய? கிடைத்ததைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ள வேண்டியது தான்.." என்று ஊடகங்களிடம் வெளிப்படையாகப் புலம்பினார்... என்றால் பாருங்கள்! இவர்களுக்கு சோரம் போகிறோமே என்ற சொரணை கூட இல்லாத அளவுக்கு அவர்கள் மட்டுமல்ல, இந்த சமுகமே மரத்துப் போய்விட்டது...! 

2007ல் தோனி தான் 6கோடி என அதிகமாக விலைபேசப்பட்டவர். 2014ல் யுவராஜ்சிங் ஏலம் போன தொகை 14கோடி. ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அணிகளுக்கும், வீரர்களுக்கும் இன்ன பிறவற்றுக்குமான முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ 3000கோடி. அள்ளிய பணம் 5000கோடி! 

இந்த விளையாட்டுகளை பிரபலபடுத்த ஆபாசநடனங்கள், கேளிக்கைகள் என கலாச்சரா சீரழிவுகள் அரங்கேற்றப்பட்டன ஆபாசநடனங்கள், கேளிக்கைகள் என கலாச்சரா சீரழிவுகள் அரங்கேற்றப்பட்டன. ஊடகங்களின் பெரும் வெளிச்சமும் இவற்றிற்கு கிட்டியது. இதன் விளைவாக இந்த போட்டியின் பெருமதிப்பு தற்போது 20,000கோடியை கடந்துவிட்டது. 

'வல்லான்வகுத்ததே சட்டம்' என்பது தானே யதார்த்தமாக இருக்கிறது. அதன்படி அவர்கள் இன்னும் தங்களை வலிமைபடைத்தவர்களாக்கி கொள்ள கிரிக்கெட் சூதாட்டத்தில் இப்போது சுமார் 2லட்சம் கோடி பணப்புழக்கம். இருக்கும் என நம்பப்படுகிறது. இதில் புக்கீஸ்கள் அடையும் ஆதாயம் இரண்டரை சதவிகிதம்! நடத்துபவர்கள் அடையும் ஆதாயங்களுக்கு கண்க்கு வழக்கே இல்லை. 

கிரிக்கெட் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் நம் சமூகம் மீளமுடியாத வீழ்ச்சிக்கு செல்லும் என்பது திண்ணம், எனவே இதனை நம் முழுபலத்தையும் திரட்டி எதிர்பதோடு கிரிக்கெட் விளையாட்டை தனியார்களிடமிருந்து விடுவித்து இந்திய அரசு விளையாட்டைத் துறையின் கீழ் ஒரு விளையாட்டாக கொண்டு வர வேண்டும். கிரிக்கெட்டிற்கான தனி முக்கியத்துவம் தகர்த்தெறியப்படவேண்டும். இப்படி செய்தாலே கறுப்பு பணப்புழக்கம் காணாமலாகிவிடும். நிழல் உலக தாதாக்கள் வெளிச்சத்தில் நமக்கென்ன வேலை? என விலகி விடுவார்கள். வில்லங்களிலிருந்து விடுபடவேண்டும் என்றால் கிரிக்கெட் விளையாட்டையும், போட்டிகளை அரசுடைமையாக்குவது ஒன்றே தீர்வாகும்.