Tuesday, March 11, 2014

மக்களாட்சி வழிமுறையில் மன்னராட்சியா?

                                                                                                                      -சாவித்திரிகண்ணன் 

இந்தியா என்பது உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடைபெறும் நாடு. இங்கே மக்கள் வாக்களிப்பதன் மூலம் தான் எந்த ஒரு கட்சியும் அதன் தலைவரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால், அப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தலைவர்கள் - தாங்கள் பெற்றிருப்பது மக்கள் தந்த அதிகாரம் என்பதையும், நிர்வகிப்பது மக்களின் வரிப்பணத்தால் என்பதையும் வசதியாக மறந்துவிடுகிறார்களா? 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆட்சியாளர்கள் அரசு செலவில் ஆட்சியின் சாதனை குறித்த விளம்பரங்கள் செய்யக்கூடாது. தங்கள் பிம்பங்களை அரசாங்க கட்டிடங்களிலோ, அரசின் உரிமைக்குரியவற்றிலோ பிரபலப்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் அரசு கட்டிங்களிலும், அம்மா உணவகங்களிலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவங்கள் விரைவில் மறைக்கப்படும் அல்லது அகற்றப்படக்கூடும் என தேர்தல்கமிஷன் தெரிவித்துள்ளது. 

இது போன்ற நிலைமைகள் நாற்பதாண்டுகளுக்கு முன்பு இருந்ததில்லை. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரோ, குமாரசாமி ராஜாவோ, ராஜாஜியோ, காமராஜரோ முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர்களின் உருவங்கள் அரசுகட்டிடங்களில் தென்பட்டதில்லை. அரசு நலத்திட்ட உதவிகளில் அரசின் லட்சனை மட்டுமே இருக்கும். 

தற்போது தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் அரசு கட்டிங்கள், குடிநீர்பாட்டில்கள் சிறிய பேருந்துகள், எம்.ஜி.ஆர் நினைவிடம் ஆகியவற்றில் அரசு செலவில் முதலமைச்சர் படமும், அ.தி.மு.க கட்சி சின்னமும் முன்னிலை படுத்தப்பட்டதை உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தி உள்ளார். 

ஆனால், தி.மு.க ஆட்சியின் போதும் மக்கள் நலத்திட்ட உதவிகளில், வழங்கப்பட்ட இலவச பொருட்களில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் படம் இடம் பெற்றது. பேருந்துகளில் கூட அவரது உருவமும், வாசகமும் இடம்பெற்றது. 

எனவே அந்தந்த காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை அடையாளப்படுத்த செய்யும் முயற்சிகள் தவறாகுமா? இதன்மூலம் மக்கள் பலனடைவதை மட்டும் கருத்தில் கொண்டால் போதாதா? என ஒரு தரப்பின் பார்வை வெளிப்படுகிறது. ஆனால், " இது மக்களாட்சி, மன்னராட்சியல்ல, அந்தந்த ஆட்சிகாலங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் பிம்பங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்கு....!" என்பது சமூக ஆர்வலர்களின் ஆணித்தரமான வாதமாக வெளிப்படுகிறது. 

ஆயுத எழுத்து,
  தந்திடிவி,
 7.3.2014

No comments: