Tuesday, March 11, 2014

அரசியலுக்கு படையெடுக்கும் அதிகார வர்க்கத்தினர்



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்... படிக்காதவர்கள் கட்சி அரசியலின் வாயிலாக அதிகாரத்திற்கு வந்து, படித்துவந்த உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் நிலைமாற வேண்டும்' என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது.

ஆனால், அரசியலை சாக்கடை என வர்ணித்து அதில் இறங்கி அவமானப்படுவதா? என்ற கேள்விகள் படித்தவர்கள் தரப்பில் வைக்கப்பட்டன. 
ஆனால், தற்போது சமீபகாலமாக மிக உயர்ந்த பதவி வகித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியலுக்கு அணிவகுத்து வர ஆரம்பித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் இதற்கு முக்கியகாரணம் எனலாம்! 
ஊழல் எதிர்ப்பு என்ற தார்மீக கோபம் படித்த இளைஞர்களை தெருவில் இறங்கி போராட வைத்தது. நியாயம் கேட்டுப் போராடிப் பயனில்லை நியாயம் வழங்கும் இடத்திற்கு நாம் வருவதே சரியான தீர்வாக இருக்கமுடியும் என படித்தவர்களை சிந்திக்க வைத்தது. அதன்விளைவாக பிறந்ததே ஆம்ஆத்மி அரசியல் கட்சி.

ஆம்ஆத்மிக்கும் முன்பே ஆந்திராவில் ஜெயபிரகாஷ் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி லோக்சத்தா என்ற கட்சியை தொடங்கி சுயேட்சையாக தேர்தல் போட்டியிட்டு வென்றது ஓர் முன்னுதாரணமானது.

ஜெயபிரகாஷின் அரசியல் நுழைவு ஆந்திர அரசியல்களத்தில் மட்டுமே அதிர்வுகளை உருவாக்கிய தோடில்லாமல் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் கூட படித்த இளைஞர்கள் பலரை அக்கட்சியின் அணிக்குள் இணைத்து தேர்தலில் அரசியல்களத்தில் இறக்கியது.

ஆம்ஆத்மி கட்சியின் புதியவர்களாட்டும், லோக்சத்தாவின் இளைஞர்களாட்டும் ஏற்கெனவே இருக்கும் அரசியல்கட்சிகளின் அணுகுமுறையில் அதிருப்தி கொண்டு அதற்கு மாற்றான புதிய சக்தியாக தங்களை அடையாளம் காட்ட வந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால், தற்போது ஓய்வுபெற்ற அதிகாரிகளின் பட்டாளமே ஒரு சில அரசியல்கட்சிகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவருகிறது. குறிப்பாக பா.ஜ.கவில் முன்னாள் இந்திய ராணுவத தளபதி வி.கே.சிங் தன்னுடன் நூற்றுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் பட்டாளத்துடன் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அப்படி அவர் இணையும் நிகழ்ச்சியில் அங்குள்ளவர்கள், "வருங்கால பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.சிங் ஜீ வாழ்க" என கோஷம் எழுப்பியது குறித்தும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

இவரை போலவே இந்திய அரசுத்துறையில் உயர் அதிகாரப்பொறுப்பில் இருந்தவர்கள் பலர் பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளனர். 

முன்னாள் உள்துறை செயலாளராக இருந்த ஆர்.கே.சிங், ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாகவும், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்டவருமான ஹர்தீப்சிங் பூரி.
மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால்சிங், 

இந்திய உளவுத்துறையான 'ரா'வின் முன்னாள் தலைவர் சஞ்சீவ்திரிபாதி.
எண்ணெய்வளம் மற்றும் இரும்புத்துறையின் செயலாளராக இருந்தவரும், நாகலாந்தின் தலைமை செயலாளராக பணியாற்றியவருமான ராகவ் சரண்பாண்டே.

தொழிலாளர் துறை செயலாளராயிருந்த ஹர்கேஷ் சிங் சித்து,
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலான அருண்ஓரான், (இவர் பா.ஜ.கவில் ஐக்கியமாக இவரது மனைவியோ ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் ஜார்கண்ட் மாநில அமைச்சராக உள்ளார். அவர் பெயர் கீதாஸ்ரீ)

ஜார்கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பியான முக்தியார் சிங்..... என பல அதிகாரிகள் பா.ஜ.கவில் ஐக்கியமாகி உள்ளனர். மேற்குவங்கத்திலோ முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளரான ராதாகாந்தி திரிபாதி, முன்னாள் தேர்தல் ஆணையாளர், ஐந்து முன்னாள் டி.ஜி.பிக்கள் எனப்பலரும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர்.

இதேபோல் ஆம்ஆத்மி கட்சியிலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்ஸான விசால்நாத்ராம், ராமாசங்கர்சிங், ஸ்வரன்சிங் போன்றோர் இணைந்துள்ளனர்.

இவர்களைத்தவிர சர்ச்சைக்குள்ளான இந்தியாவின் அமெரிக்க தூதரக அதிகாரி தேவயானியின் அப்பா உத்தமகோபர்கடேவும் அரசியலில் இறங்கப்போவதாகவும், அதற்கான கட்சியை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார். உத்தம் கோபர்கடே ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உயர் அதிகார பொறுப்பில் பல காலம் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் அதிகாரத்தை அரசியலின் வாயிலாக அடைய நினைத்து களத்திற்கு வந்துள்ள அதிகாரிகள் குறித்த பல விதமான கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? 
ஊழலுக்கு எதிராக செயல்பட்ட தருணங்கள் எத்தனை? 
காட்டிய உறுதிப்பாடு என்ன? 
அரசியலில் ஈடுபடும் எண்ணம் முன்பே இருந்ததா? 
அப்படி எனில் பதவியை துறந்து அப்போதே வந்திருக்கலாமே!

இப்போது அதிகாரத்திற்கு வருவதற்கான அனுகூலமுள்ள கட்சியாக கருதப்படும் பா.ஜ.கவில் அதுவும் தேர்தல் நெருங்கும் போது சேருவதும், சேர்ந்தவுடனேயே தேர்தலில் நிற்க 'சீட்' கேட்பதும் எதைக் கருதி?

இந்தியாவின் ராணுவத்தளபதி, தேர்தல்ஆணையாளர், தலைமைச் செயலாளர் போன்ற பொறுப்பில் இருந்த இவர்கள் ஏற்கெனவே பதவியில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளனரா? 
ஒரு அரசு அதிகாரி கட்சி சார்பற்ற மக்கள் சேவராக இருக்கவேண்டும் என்ற நியதி மீறப்பட்டுள்ளதா?

ராணுவத்துறையிலும், நிர்வாக இயந்திரத்திலும் கட்சி ஆதரவு போக்கு எதிர்காலத்தில் வித்தூன்ற இவர்கள் காரணமாகக்கூடுமா? அப்படி ஆதரவு போக்குடன் இருந்தால், ஓய்வுபெற்ற பிறகு எதிர்காலத்தில் தானும் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு சாதகமாகலாம் எனக் கருதும் போக்கு தலைதூக்குமா?
எனப் பல கேள்விகள் எழுகின்றன.

அதே சமயம் தங்களின் பழுத்த நிர்வாக அனுபவம், திறமை, மக்களின் மீதான ஈடுபாடு காரணமாகவும் அதிகாரிகள் அரசியல் களத்திற்கு வரலாம். ஆனால், உத்தம் கோபர்கடே போன்ற ஊழல் அதிகாரிகள் தங்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துகொள்ளவும் அரசியல் பாதுகாப்பை தேடலாம்! 



No comments: