Tuesday, November 12, 2013

வன்முறைகளினூடான அரசியல் நாகரீகம்

                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


சோலர் மின்சக்தி திட்டத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஊழல் செய்ததாக கேரளாவில் கடந்த 6மாதங்களுக்கும் மேலாக தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சட்டசபை முற்றுகை போராட்டம் என்பதாக சட்டசபைக்குள் மார்க்கசிஸ்ட் தொண்டர்கள் நுழைந்து தலைமைச் செயலகத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
முதலமைச்சர் உம்மண்சாண்டி செல்லும் இடங்களிலெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் வடகேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த போலீஸ் தடகள போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற முதல்வர் உம்மண்சாண்டி மீது கற்கள், தடிகள்... போன்றவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்டு முதல்வர் உம்மண்சாண்டி திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாள் சிகிச்சை எடுக்க வேண்டியதாயிற்று.

மாற்றுக் கட்சியினரை கருத்தியல் ரீதியாக சந்திப்பதற்கும் மேலாக வன்முறையை கையில் எடுப்பதையும், பகை அரசியலை முன்னெடுத்து கட்சித்தொண்டர்களை களத்தில் இறக்குவதையும் மேற்குவங்கத்தை அடுத்து கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரங்கேற்றி வருகிறது என்ற குற்றசாட்டு சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது.

கேரளாவில் 1970கள் தொடங்கி வன்முறைக்கு சுமார் 150 பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்!

அதேபோல, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தரப்பிலும் மோதல்களில் சுமார் 300தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே படிப்பறிவில் 95% வளர்ச்சியை எட்டியுள்ள மாநிலத்தில் கட்டுபடுத்தவியாலாத கட்சி வன்முறைகள் மேலோங்கி இருப்பது ஒரு பெரிய முரண்பாடாகும்!

ஒவ்வொரு அரசியல் கட்சியுமே இவ்விதமான கொலைகளுக்கு தொழில்ரீதியான கொலைகாரர்களை பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் முன்வைக்கின்றன.

இந்தச்சூழலிலும், " என் மீதான தாக்குதல்களுக்கு கட்சிக்காரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்றும், பந்த், கடையடைப்பு, பொதுசொத்துகளுக்கு இழப்பு எதையும் ஏற்படுத்தக்கூடாது" என முதல்வர் உம்மண்சாண்டி கறராக கூறியுள்ளதையடுத்து அவரது கட்சிக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாகப் போராடியுள்ளனர்.

மார்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் மருத்துவமனைக்கு நேரில் சென்று உம்மண்சாண்டியை பார்த்து நலம் விசாரித்துள்ளார். அரசியல் நாகரீகத்தின் அடையாளமாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.

முதல்வரை தாக்குவது எங்கள் நோக்கமல்ல... கட்சிக்கு அப்பாற்பட்ட சில விஷமிகள் இத்தாக்குதல் நடத்தியுள்ளனர் என கேரளா மார்க்சிஸ்ட் தலைவர் பினாராய்விஷயன் கூறியுள்ளார்.

ஆனால், எடுக்கப்பட்ட வீடியோவில் மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பை சார்ந்தவர் கல் எறிவது பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 17பேர் கைதாகி உள்ளனர்.

ஆனால், உம்மண்சாண்டியோ, "பினாராய்விஜயன் சொல்வது போல் வன்முறையில் இருந்து விலகி இருப்பதில் மார்க்சிஸ்ட்கட்சி உறுதிகாட்டினால் வரவேற்கிறேன்" எனப்பேசியுள்ளார்.

தனக்கு 'இசட்பிளஸ்' பாதுகாப்பு கொடுக்க உள்துறை அமைச்சகம் முன்வந்ததையும் மறுத்துள்ளார். " நான் மக்களைவிட்டு விலகி இருக்க விரும்பவில்லை. மக்கள் கையில் தான் என் பாதுகாப்பே உள்ளது" எனக்கூறியுள்ளார்.

கேரளாவின் முன்னாள் முதல்வர்கள் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, ஈ.கே நாயனார், அச்சுதானந்தன், இன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி என அனைவருமே மிகவும் எளிமையானவர்கள். அரசியல் நாகரீகமும், எளிமையும் கேரள அரசியல் தலைவர்களின் பொதுப்பண்புகாக உள்ளன. அதேசமயம் வன்முறை சார்ந்த அரசியல் கேரளத்தின் இயல்பாய் இருப்பது ஒரு விநோதம் தான்!

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
30.10 .2013

No comments: