Tuesday, November 12, 2013

தாய்மொழி தெரியாதவர்களுக்கு தரப்படாது அரசு பணிகள்

                                                                                                                -சாவித்திரிகண்ணன்

கேரளா அரசு ஒரு சிறந்த அரசாணை வெளியிட்டுள்ளது. 'கேரள அரசு பணியில் சேர்வதற்கு மலையாள மொழி அறிவு கட்டாயம்' என அந்த அரசாணையில் முதல்வர் உம்மண்சாண்டி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒராண்டிற்கு முன்பு இதே உத்தரவை அவர் பிறப்பித்தபோது கேரளாவில் வாழும் மொழி சிறுபான்மையினரான தமிழர்கள், கன்னடர்கள் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே, அவர்கள் எதிர்ப்பை கவனத்தில் இருத்திக்கொண்டு, அதேசமயம் அந்த மொழிச் சிறுபான்மையினரே கூட எதிர்க்க இயலாத வகையில் தற்போது மீண்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அரசாணையில், "10ஆம்வகுப்பு, 12ஆம்வகுப்பு அல்லது பட்டப்படிப்பு எதிலுமே மலையாள மொழிபாடத்தேர்வு எழுதாதவர்கள் தனிப்பட்ட முறையில் 'மலையாளமிஷின்' நடத்தும் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றாலே போதுமானது" எனக்கூறப்பட்டுள்ளது.

இதற்காக அம்மொழியைக் கற்கும் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு அவசியமான - மற்ற மாநிலங்களும் பின்பற்றத்தகுந்த அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை. இந்த அரசாணையின் பின்ணணியில், 'அரசு அலுவலகங்கள் ஆங்கில மொழிதெரியாத பெருவாரியான மக்கள் வந்து பயன்பெறும் இடம் என்பதால் அங்கே அவர்களின் தாய்மொழி தெரிந்த அலுவலர்கள் பணியில் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும் என்ற காரணத்தோடு, தாய்மொழி புழக்கம் என்பது அரசு அலுவலகங்களில் உயிர்ப்போடு திகழவேண்டும்' என்ற நோக்கமும் உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டிலோ தமிழ்மொழி எல்லா நிலைகளிலும் காணாமல் போய்க் கொண்டுள்ளது.

மற்ற தென்னிந்திய மாநிலங்களில் பள்ளிக்கல்வியில் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும் ஒரு பாடமாக இயல்பாக இருக்கிறது. அது மட்டுமின்றி உயர்நிலை அரசு அலுவலகங்களில் 70முதல் 80% அவரவர்களின் தாய்மொழியிலேயே நிர்வாகச் செயல்பாடுகள் நடக்கின்றன. நம் தமிழ்நாட்டிலோ பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுவதிலும் சிக்கல், பேசுவதற்கும் தடங்கல்கள்!

இது மட்டுமின்றி அரசு அலுவலகங்களையும் தமிழ் ஆளவில்லை. வங்கிப் பணிகளிலும் வாழவில்லை. இதனால் ஆங்கில அறிவு இல்லாதவர்கள் தாய்மண்ணான தமிழகத்திலேயே அந்நியப்பட்டு போக நேர்கிறது.

இந்தியை ஒழித்துகட்டுவதற்காக மூன்று காலகட்டங்களில் முப்பெரும் போராட்டங்களைக் கண்டு அதில் பல அப்பாவிகளின் உயிர்களை பலி கொடுத்த தமிழகத்தில் தான் இன்று தமிழுக்கு இடமில்லை.

இந்தியாவில் 60% மக்கள் பேசுகின்ற இந்திக்கு இடமில்லை என்று 10% படித்த மக்களிடம் மட்டுமே புழக்கத்திலுள்ள ஆங்கிலத்தை ஆராதித்தனர்! - தமிழகத்தின் 45ஆண்டுகால ஆட்சியாளர்கள்! மொழிவெறியின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழ்மொழி பெற வேண்டிய பலன்களை பெறவில்லை.

1936ல் தமிழ்சொல் பேராகராதி 1,24,405 சொற்கள் கொண்டு உருவானது. அதற்குபின் வரவில்லை.

1960 ல் சென்னை பல்கலைக்கழகம் ஆங்கிலம் தமிழ் அகராதி கொண்டு வந்தது. அதற்கு பின் தொடரவில்லை.

1958ல் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் பெருமுயற்சியில் அறிவியல் கலைச்சொற்கள் தமிழ் அகராதி உருவானது. அதற்கு பின் முயற்சியில்லை.

1965ல் தமிழ் ஆட்சிமொழி கையேடு வெளியிடப்பட்டது. பிறகு முயற்சியில்லை.

அரசு அலுவலகங்களில் மக்களின் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், புகார்கள், நில ஆவணங்கள், வரிபற்றிய விபரங்களை படித்தறிய, எடுத்துச் சொல்ல, விளக்க ஒவ்வொரு அதிகாரிக்கும், அலுவலருக்கும் தமிழ்மொழி இன்றி அமையாதது.

எனவே இப்படி ஒரு அரசாணை அல்லது சட்டம் தமிழ்நாட்டிற்கு மிக,மிக அவசியம்.

இது இரண்டு வகையில் மேலும் பலன்கள் தரும்.

1. தமிழ்வழிக்கல்வி படித்துவரும் எளிய மக்களுக்கு வேலை உத்திரவாதமாகும்.

2. தமிழ்கற்காமல் ஆங்கில வழி கற்றவர்களுக்கு தமிழ் படித்தறிவதற்கான ஆவலையும், தேவையையும் ஏற்படுத்தும்.


தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
21.10 .2013

No comments: