Monday, November 11, 2013

மருத்துவத் துறையால் நிகழும் உயிர் இழப்புகள்

                                                                                                                    -சாவித்திரிகண்ணன்


மிகவும் அத்திபூத்தாற் போலத்தான் மருத்துவத் துறையால் நிகழும் பாதிப்புகள் குறித்த தீர்ப்புகள் வெளிவருகின்றன.

அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள ஒரு தீர்ப்பு மருத்துவதுறையிலும், அது சார்ந்த சட்டத்துறையிலும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

குழந்தைகள் மனோதத்துவ டாக்டர். அனுராதா தோல் நோய் சம்பந்தமான சிகிச்சையால் உயிரிழந்தார். மே. 1998ல் கல்கத்தா AMRI மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சோக மரணத்திற்கு நீதிகேட்டு அனுராதாவின் கணவரான டாக்டர் குணால் சாகா 15ஆண்டுகள் இடையறாது ஒவ்வொரு படி நிலையாகப் போராடினார். கடைசியாக உச்சநீதிமன்றம், " அனுராதாவின் உயிர்இழப்புக்கு அவருக்கு மருத்துவர்களால் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம். ஆகவே சம்பந்தப்பட்ட மூன்று மருத்துவர்களும், மருத்துவமனையும் இணைந்து இதற்கு 5.96கோடி இழப்பீடு தரவேண்டும். இந்தத்தொகையை வழக்கு தொடரப்பட்டது தொடங்கி தற்போது வரைக்குமான வட்டியுடன் சேர்த்து தரவேண்டும்" என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இழப்பீடு சுமார் 11கோடி கிடைக்கக்கூடும்.

சமீபகாலமாக மருத்துவத்துறை மிகவும் வியாபாரமாகவும், மனிதாபிமானமின்றியும் செயல்படுவதாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லி மருத்துவ கழகத்திற்கு மட்டுமே மாதாமாதம் 20 முதல் 30புகார்கள் வருகின்றன. ஓட்டுமொத்தமாக இந்திய அளவில் வருடத்திற்கு மருத்துவதுறை மீதான புகார்கள் சுமார் 20,000வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத் துறையின் தவறான சிகிச்சைகள், டாக்டர்களின் பொறுப்பின்மை, தகுதியின்மை, மோசமான மருத்துவ பராமரிப்புகள், அதீதமாக பணம்வாங்கிய வகையில் குவியும் புகார்களில் மிகச்சில மட்டுமே அக்கரை எடுத்து விசாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீதியான மருத்துவதுறை தவறுகளால் ஆண்டுதோறும் 1,95,000பேர் உயிர்இழக்கிறார்கள் என சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை மருத்துவரீதியான உயிரிழப்புகள் பல, சரியான கவனம் பெறாமலே போய்விடுகின்றன.

ஏனெனில் பலரும் 'நம் தலைவிதி அவ்வளவு தான்' என ஏற்றுக் கொண்டு அமைதியடைகிறார்கள்.

அப்படியே புகார்கள் செய்தாலும் அவற்றில் 70% புகார்கள் விசாரிக்கப்படாமல் தள்ளுபடியாகிவிடுகின்றன.

டெல்லி மருத்துவக் கவுன்சிலைப் பொறுத்தவரை டாக்டர்களை அழைத்து கண்டித்து அனுப்பபடுவதோடு முடிந்துவிடுகிறது.

இது வரை எந்த ஒரு டாக்டரும் பணிநீக்கமோ, தகுதிநீக்கமோ கூட செய்யப்பட்டதில்லை.

ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவத்துறை புகார்கள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை. அமெரிக்காவில் சென்ற ஆண்டு மட்டுமே தன்னுடைய தவறுகள் காரணமாக மருத்துவதுறை தரநேர்ந்த இழப்பீடு தொகை 3பில்லியன் கோடி டாலர்களாகும்!

இந்தியாவில் மருத்துவதுறை புகார்கள் குறித்த நீதிகிடைக்க முதலில் உள்ளூர் காவல்நிலையம், மாவட்ட நுகர்வோர் அமைப்பு, மாநில மருத்துவ கவுன்சில் ஆகியவற்றில் புகார் தர வேண்டும்.

அதற்கு அடுத்த கட்டமாக தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் கழகம் செல்லவேண்டும். இவற்றின் தீர்ப்புகளை எதிர்த்து மருத்துவமனைகள் மேல் முறையீடு செய்து கொண்டே இருப்பார்கள். இதற்கு அடுத்தடுத்த கட்டமாக உச்சநீதிமன்றம் சென்று தான் இறுதி தீர்ப்பு பெற இயலுகிறது. மிகச்சிலர் தான் இதில் இறுதிவரை போராடி நீதி பெற்றுள்ளனர்.

1995ல் பிரபல டென்னிஸ் வீரர் சந்திரசேகர் மருத்துவ சிகிச்சை காரணமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதற்கு ரூ 15லட்சம் பெற்றார்.

மே - 2009ல் இன்ஜினியரிங் மாணவர் பிரசாந்த் இதயப்புற்றுநோய் தொடர்பாக உயிரிழந்ததிற்கு 1கோடி இழப்பீட்டை 19வருடப் போராட்த்திற்கு பின் அவரது குடும்பம் பெற்றது.

டாக்டர்களை மக்கள் கடவுளுக்கு நிகராகத் தான் நினைத்து செல்கிறார்கள் ஆனால், அவர்களில் ஒரு சிலர் காலன்களாக மாறி உயிரிழப்புக்கு காரணமாகும் சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டமானவை.  நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியவை.

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
25.10.2013

No comments: