Wednesday, November 13, 2013

வியக்கவைக்கும் தமிழ்திரையுலக வியாபாரச் சாதனைகள்!


                                                                                                                -சாவித்திரிகண்ணன்

இந்திய சினிமா 100ஆண்டுகால வரலாறு கொண்டது. 

இந்திய சினிமாவில் இந்திய மொழிக்கு அடுத்தபடியான பெரிய பங்களிப்பு தரும் மொழிப்படம் என்றால் அது தமிழ்படங்களே! தமிழ்மொழியில் இதுவரை 5,300படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன.

இந்திமொழிப்படங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளிவருவது தமிழ்மொழிபடங்களே!

அதோடு இந்திப்படங்களுக்கு அடுத்தபடியாக வசூல் சாதனைகளில் மிஞ்சி நிற்பது தமிழ்மொழிபடங்களே.

அது மட்டுமின்றி தமிழ்மொழிபடங்களின் விளம்பரம் என்பது உலகசினிமா வட்டாரத்தையே அதிசயப்படவைக்கிறது!

தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா காலங்களில் படங்களின் வசூல் ஆயரங்களில் இருந்தது. அன்று லட்சத்தை தாண்டினாலே சாதனையாக பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் படங்களின் செலவு லட்சங்களைக் கண்டது அப்போது இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களின் சம்பளம் ஆயிரங்களில் தான் இருந்தது.

கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த திரைபடங்களின் வசூல் கூட 1980களுக்குப் பிறகு தான் கோடிகளைத் தொட்டுக் கடந்தது.

ஆனால், 1990களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படங்களின் வசூல் கூட 1980 வியக்கத்தக்க வகையில் ஏறுமுகமாயின.

1996ல் வெளியான 'இந்தியன்' திரைப்படவசூல் -32கோடி என்ற உச்சத்தை தொட்டது. அதற்குப்பிறகு 1999ல் வந்த 'படையப்பா' அதை விஞ்சி 37கோடி என்ற உச்சத்தை தொட்டது.

இதன்பிறகு 2000ஆம் ஆண்டுகளில் பிலிம் இண்டஸ்ட்டி பிரமிக்கத்தக்க எல்லைகளைத் தொட்டது. 2005ல் சந்திரமுகி 25கோடி செலவு, 65கோடி வசூல்.

2007ல் வெளியான ஏ.வி.எமெமின் சிவாஜி 60கோடி செலவில் உருவானது அதன் வசூல் 128கோடி என்பது இந்திய திைருலகத்தையே திகைக்க வைத்தது.

ஆனால் 2008ல் கமலஹாசனின் தசாவதாரம் அதைக்காட்டிலும் அதிக செலவில் 61கோடியில் தயாராகி 94கோடி வசூலைகண்டது.

2009ல் வெளியான 'அயன்' 15கோடி செலவில் 60கோடி வசூலானது. 

2010ல் வெளியான 'எந்திரன்' படம் தான் இந்திய திரை உலகே காணாத இமாலய வசூலாக 375கோடியைத் தொட்டது. படத்தின் செலவு 160கோடி!
இந்த வசூல் சாதனையை இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளியான அமீர்கானின் '3இடியட்ஸ' தான் முறியடித்து, 385 கோடி என்ற உச்சத்தை தொட்டது. 
சமீபத்தில் வெளியான ஷாருக்கனின் சென்னை எக்ஸ்பிரஸ் 315கோடி வசூலானது.

ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு அடுத்தபடியாக விஜயின் படங்களான நண்பன் (110கோடி) துப்பாக்கி,தலைவா போன்றவை 100கோடி வசூலைக் கடந்தபடங்களாகும். 'வேலாயுதம்' 60கோடி வசூலை தந்தது.அஜீத்தின் மங்காத்தா 68கோடியை கண்டது. தற்போது வெளியாகியுள்ள அஜீத்தின் ஆரம்பம் 100கோடியை கடக்கும் என நம்பப்படுகிறது. இது போன்ற 'திமிங்கல' படங்களுக்கு இடையே சிறிய மீன்களென சிறு படங்களும் கணிசமாக வெளியாகி சினிமா இண்டஸ்டிரியை வாழவைக்கிறது.

'மெரினா' படம் 1கோடியில் தாயாராகி 3கோடி வசூலானது. இது போல குறைந்தபட்ஜெட்டிலும், பெரிய ஸ்டார் பலம் இல்லாமலும் வெளிவந்த எதிர்நீச்சல், பீட்சா, வழக்குஎண் 18/9, சூதுகவ்வும், இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நீர்பறவை, வெண்ணிலாகபடிக்குழு... போன்ற பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு சில லட்சங்கள் அல்லது ஒரிரு கோடி லாபங்களை தந்துள்ளன. உண்மையில் சிறிய பட்ஜெட் படங்கள் தான் திரையுலகை உயிர்ப்போடு வைத்துள்ளன.

இவை ஒரு புறமிருக்க, தமிழ்படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியும் வசூலை குவிக்கின்றன. கஜினி, போக்கிரி, சிங்கம், பந்தாபரமசிவம் போன்றவை இந்தியில் ரீமேக்காகி ஒவ்வொன்றுமே 100கோடிவசூலைத் தாண்டியது.

இவை தவிர, மொழிமாற்றப் படங்கள் சிலவும் தமிழகத்தில் ஓரளவு வசூலை பெற்றுத் தருகின்றன. ஹாலிவுட் படங்களான அவதார், தி அமேசிங் ஸ்பைடர்மேன், ஸ்கைபால் போன்ற படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் ஒரு சில கோடி லாபங்களை அள்ளித்தந்துள்ளனர்.

தமிழ்மொழிபடங்களின் வெளிநாட்டு வியாபாரமும், வசூலும் சமீபகாலங்களில் மிகவும் விரிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்திபேசும் மக்கள் இந்தியாவில் 54% உள்ளனர். ஆனால் தமிழ்பேசும் மக்களோ 7.5 % தான்! சமீபத்தில் பிக்கி (FICCI) அமைப்பின் தகவல்படி தமிழ்திரையுலகின் ஆண்டுவருமானம் சுமார் ஆயிரம் கோடியை நெருங்கி உள்ளது.

தமிழர்கள் கலை படைப்புகளை உருவாக்குவதிலும், ரசிப்பதிலும் காட்டும் ஈடுபாடு ஈடிணையற்றது. அவர்கள் புலம்பெயர்ந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்தக் கலாச்சாரத்தில் திளைத்தாலும் இந்த ஈடுபாடு குறைவதில்லை.

ஆண்டிப்பட்டியில் வாழ்ந்தாலும், அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தமிழனின் திரைப்பட ரசனை தேக்கமின்றி வளர்வதாகவே உள்ளது.

தியேட்டர்களின் கட்டண உயர்வு, சிறப்பு திரைப்படக் காட்சிகள் என்பதாக முதல் மூன்று நாட்கள் கூடுதல் கட்டணம்... என என்ன நிகழ்ந்தாலும் ரசிகர்கள் திரைப்படங்களை கைவிடுவதில்லை.

இதனால் தான் தமிழ்சினிமா இண்டஸ்டிரியை நம்பி வாழும் தொழிலாளர்கள் பலமும், எண்ணிக்கையும் இந்தியாவிலேயே வேறெங்கும் காண முடியாத விசித்திரமாகும்! 

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
13.11 .2013 

No comments: