Monday, November 11, 2013

அடிமைகள் நிறைந்த இந்தியா

                                                                                                                -சாவித்திரிகண்ணன்


நாகரீகம் மிகவும் வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய நவீனயுகத்திலும் "உலகத்தில்' 2கோடி 98லட்சம் பேர் அடிமைகளாக உள்ளனர். இதில், இந்தியாவில் மட்டுமே கிட்டதட்ட சரிபாதி அடிமைகள் அதாவது 1கோடியே 47லட்சம் பேர் உள்ளனர்." என ஒரு சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளத. 'வாக்ஸ்டிட்' என்ற ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற அந்த நிறுவனம் 162 நாடுகளை ஆய்வு செய்துள்ளது. இந்த வகையில் உலகில் அடிமைகள் வாழாத நாடே கிடையாது என்றும் அது உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்தியா              -1கோடி 47லட்சம் பேர்
சீனா                     - 29 லட்சம் பேர்
பாகிஸ்தான்     - 22 லட்சம் பேர்
நைஜிரியா         - 7லட்சம் பேர்
பிரிட்டன்             - 4,600பேர்
எத்தியோப்பியா -6.5லட்சம்பேர்
என்ற அதன் அடிமைகள் எண்ணிக்கை பட்டியலில் வளராத ஏழைநாடுகள் தொடங்கி வளரும் நாடுகள்வரை அனைத்தும் உள்ளன. எண்ணிக்கைகளே வித்தியாசப்படுகின்றன.

மன்னராட்சி காலங்களில், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் ஆதிக்க மனோபாவம் ஓங்கியிருந்த சூழலில் உலகம் முழுமையும் அடிமைபடுவோரும், அடிமைப்படுத்துவோருமாக இரு பிரிவுகள் தொடர்ந்து இருந்துள்ளது.

ஆனால் 19ஆம் நூற்றாண்டில் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற புதிய கருத்தாக்கங்கள் மேலெழுந்து வந்தன. இதையடுத்து காலணி ஆதிக்க நாடுகளில் ஏறபட்ட சுதந்திர எழுச்சி போராட்டங்கள் வழியாக மக்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்று பட்டார்கள்.

இந்தியாவில் மகாத்மாகாந்தி நடத்திய வேள்வி தேசவிடுதலைக்கானதாக மட்டுமின்றி அனைத்துவிதமான ஆதிக்கத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்கும் அக விடுதலைக்காகவும் அமைந்தது என்பதே அதன் தனிப்பெரும் சிறப்பாகும்!

ஆயினும் 65ஆண்டுகள் சுதந்திரம் இன்னும் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பதை தான் இந்த ஆய்வுத் தகவல்கள் அறுதியிட்டுச் சொல்கிறது.

சுமார் 1000ஆண்டுகளாக இந்திய நாடு பல அந்நிய படையெடுப்பாளர்களான முகலாய மன்னர்களாலும், ஆங்கிலேயர்களாலும் அடிமைப்படுத்த பட்டிருந்ததால் நம்மில் பலருக்கே ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வு இன்னும் மறையவில்லை.

செங்கற்சூளைகளில், விவசாயப்பண்ணைகளில், அரிசி மில்களில், நெசவுக்கூடங்களில், கட்டிட வேலைகளில், ஹோட்டல் பணிகளில்,..... என பல இடங்களில் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதும், நமது அதிகாரிகள் துணையுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களை விடுவிப்பதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தறிநெசவில் குழந்தை தொழிலாளர்கள் குடும்ப கடனை அடைக்க கொத்தடிமைகளாக உழல்வதும், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில், உணவகங்களிலும் 12 மணிநேரமாக உழைப்பதும் நாம் அறிந்த தகவல்களே!

வறுமைகாரணமாக குடுமபத்தாராலேயே அடகு வைக்கப்படும் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக கடத்தி விற்கப்படும் பெண்கள், நிர்பந்தத்தால் திருமணம் என்ற பெயரில் வயதான ஆண்களுக்கு மணம் முடிக்கப்படும் இளம்பெண்கள், வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு சென்று அங்கு அடிமையாக உழலும் அப்பாவிகள்... என பலதரப்பட்ட அடிமைச்சூழல்கள்.


எத்தனை சீர்திருத்தவாதிகள், சட்டங்கள் வந்தாலும் மனிதனின் ஆதிக்க மனோபாவம் அதை தகர்த்து தன் விருப்பங்களை நிறைவேற்றிகொள்வதாகவே உள்ளன!

அவ்வளவு ஏன், படித்தவர்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலுமே கூட வெளிப்படையாக இல்லையென்றாலும் கூட ஆதிக்க மனோபாவமும் அதன் விளைவாக அடிமை குணாம்சம் கொண்ட

'அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சம்' என்ற உண்மையான ஆன்மீக விழிப்புணர்வு மட்டமே எந்த ஒரு மனிதனையும் ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுவிக்கும் அகவிடுதலைக்கு துணைபுரியும்.

புத்தர், ஆதிசங்கரர், ராமானுஜர், அருட்பிரகாச வள்ளலார், விவேகானந்தர், மகாத்மாகாந்தி... போன்ற மகான்களின் கருத்துகள் சமூகதளத்தில் இன்னும் பரவலாகவும், ஆழமாகவும் சென்றடையும் போது அவை அடிமைகள் இல்லாத இந்தியாவுக்கான பலமான அடித்தளமாகும்!

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
18.10.2013


No comments: