Friday, October 18, 2013

அபாயகட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம்



                                                                                                                -சாவித்திரிகண்ணன்

உலகின் பணக்காரவல்லரசு நாடு...

அனைத்துலகத்தையும் கட்டுபடுத்த வல்ல ஆதிக்க சக்தி...
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளோர் அண்ணாந்து பார்த்து வியக்கும் சொர்க்கபுரியான அமெரிக்கா,
தற்போது பொருளாதார நெருக்கடியில் தள்ளாடுகிறது...! 

மொத்த அரசு ஊழியர்கள் 21லட்சம் பேரில் எட்டு லட்சம் பேர் கட்டாய விடுப்பென்றும், தற்காலிக வேலைநீக்கம் என்றும் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் துறையினர் -4லட்சம்
வணிகத்துறையினர் - 40,200
சுகாதாரத்துறையினர் -40,000
போக்குவரத்து துறையினர் -18,500
விண்வெளித்துறையான நாசாவில் - 19,000
என பல துறையில் உள்ளோரும் வேலை இழந்துள்ளனர். வேலை இழந்த அரசு ஊழியர்களில் 30,000க்கும் மேற்பட்டோர் அதிபர் ஒபாமாவிற்கு கண்ணீர் மல்க கடிதம் அனுப்பி உள்ளனர்.

அவர்களுக்கு சமாதானம் தெரிவித்துவரும் ஒபாமா, 'வெள்ளைமாளிகையில் வேலைபார்க்கும் 1,265பேருமே கூட வேலை இழந்துள்ளதையும், தன்னுடைய 4ஆசியநாடுகளின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதையும் உருக்கமாக விவரித்து, 'அனைத்தும் விரைவில் சீராகும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார். பாதுகாப்பு துறையினர் மட்டும் மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் மேலும் கொஞ்சம் கடன் வாங்கி பொருளாதார நெருக்டியை சமாளிக்க ஒபாமா முயன்றார். ஆனால், "அதிகபட்ச கடன் உச்சவரம்பு 16,70,000கோடிடாலர் தான் இதற்கும் மேல் கடன்வாங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என எதிர்கட்சியான குடியரசு கட்சி தடைபோட்டுவிட்டது.

அமெரிக்காவில் எதிர்கட்சியான குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பலமாக உள்ளது.. ஓபாமா கொண்டுவந்த பட்ஜெட் மசோதா செனட் சபையில் செல்லுபடியானபோதிலும், பிரதிநிதிகள் சபையில் பின்னடைந்து விட்டது.
பட்ஜெட் மசோதா ஒட்டுஎடுப்பில் 
செனட்டில், குடியரசு கட்சிக்கு -221ஓட்டும்,
ஜனநாயக கட்சிக்கு -228ஓட்டும் கிடைத்தன! ஆனால்,

பிரிதிநிதித்துவ சபையில்
குடியரசு கட்சிக்கு -54ஓட்டும்
ஜனநாயகக் கட்சிக்கு -46ஓட்டும் கிடைத்தன!
அக்டோபர் -17வரைதான் அரசு கஜானாவில் இருக்கும் பணத்தை கொண்டு சமாளிக்க முடியும் அதற்குப்பின் என்னாகுமோ...? என ஓபாமா கலங்கிய வண்ணம் உள்ளார்.

"ஓபாமாவினால் கொண்டுவரப்பட்ட - ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவிய 'அனைவருக்கும் அரசின் மருத்துவகாப்பீடு' திட்டமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம். அதனை வாபஸ்பெறவேண்டும்' என குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், "அது எங்களின் லட்சியத்திட்டம். ஏழை,எளிய, நடுத்தரவர்க்க மக்கள் பலன் பெறும் திட்டம் என ஒபாமா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

"ஈராக், ஆப்கானிஸ்தான்போர்களுக்கு தேவையில்லாமல் பெரும் பணத்தை குடியரசுகட்சி செலவிட்டதே பொருளாதார நெருக்கடி உருவாகக் காரணம்" என ஓபாமா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"அமெரிக்க மக்கள் தங்கள் ஆடம்பரச் செலவுகளை குறைக்க முன்வரவேண்டும். உதாரணத்திற்கு தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பியூட்டிபார்வருக்கு கொண்டு சென்று அலங்கரிக்கவும், ஆடம்பர உடைகளை அவற்றிற்கு அணிவிக்கவும் மட்டுமே அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 2000கோடி டாலருக்கும் அதிகமாகச் செலவு செய்கின்றனர். இந்தியாவில் நடுத்தரவர்கத்தினரின் சேமிக்கும் பழக்கமே இந்தியப் பொருளாதாரத்திற்கு பலம் சேர்த்துள்ளது... என இந்தியாவை ஒப்பீடு செய்து அமெரிக்க நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

உலக மனிதவள மேம்பாட்டில் அமெரிக்கா 16வது இடத்தில் உள்ளது. எனவே, பல வகையில் அமெரிக்கா தன்னை சீரமைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
"அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு உள்நாட்டு பிரச்சினை மாத்திரமல்ல. அது உலக அளவில் பல தாக்கங்களை தரும்" என ஐ.எம்.எப் கூறியுள்ளதானது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல!

கச்சா எண்ணெய்விலைச்சரிவும், பங்குச் சந்தை வீழ்ச்சியும், சாப்ட்வேர் துறையில் 'அவட்சோர்சிங்' செய்யும் நாடுகளில் ஏற்பட்டு வரும் வேலை இழப்பும் அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் எதிர்வினைகளே! 


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
07.10.2013

No comments: