Friday, October 18, 2013

பாகிஸ்தான், அச்சுறுத்தல்விடிவு எப்போது?


                                                                                                                  -சாவித்திரிகண்ணன்

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையிலான சண்டை கடந்த 10நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்திய எல்லையில் செப்டம்பர் 24ல் சுமார் 30முதல் 40தீவிரவாதிகள் நுழைந்தனர். அப்போது தொடங்கி இதுநாள் வரையிலான இந்திய ராணுவத்தின் உக்கிரமான தாக்குதலில் 15தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ஜவான்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே எல்லைதாண்டிய பயங்கரவாதச்செயல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைகளில் தொடர்ந்தும், அவ்வபோதும் அரங்கேற்றி வந்தாலும், கடந்த 8ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு இது வரை 120ஊடுருவல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.

செப்டம்பர் 29ந்தேதி இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ்ஷெரிப்பை சந்தித்தபோது இது குறித்து கடும் கண்டணத்தை தெரிவித்தார். அதோடு கூடவே ஐ.நா.சபை கூட்டத்தில் பேசும் போது பகிரங்கமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவும், நிதிஉதவியும், பயிற்சியும் ஊக்குவிப்பும் தருவதோடு இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகிறது' என உலக அளவில் பதிவு செய்தார்.
என்ற போதிலும் கூட பாகிஸ்தான் அரசு எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் முற்றுபுள்ளிவைக்க முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவம் அங்குள்ள ஆட்சித் தலைமைக்கு கட்டுப்பாடு நடக்கிறதா? அல்லது கட்டுமீறி செயல்படுகிறதா? என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

முன்பு இதே நவாஷ்ஷெரிப் பதவிபொறுப்பில் இருந்த போது தான் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். அப்போது இந்திய ராணுவம் தீவிரமாகப்போராடி தக்க பதிலடிதந்தனர். இதனால் பாகிஸ்தானில் நவாஷ்ஷெரிப்பின் செல்வாக்குசரிந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இராணுவ தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப் நவாஷ்ஷெரிப்பை வீழ்த்தி நாட்டின் அதிபரானார்.

14வருட இடைவெளியை அடுத்தே நவாஷ்ஷெரிப் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடிந்தது. இந்நிலையில் முன்பு தனக்கு ஏற்பட்ட தோல்விக்கும் அவமானத்திற்கும் பரிகாரம் காணவும், தன்செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் அவர் இந்தியாவுடன் மோதுவதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்துள்ளாரோ... என்று கூட அரசியல் பார்வையாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

தீவிரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்பது பல நேரங்களில் நிறுவப்பட்டுள்ளது. அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா... போன்ற பல தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இவற்றை பாகிஸ்தான் அரசாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்காவே நேரடியாக பாகிஸ்தான் களத்தில் இறங்கி சென்றே கொல்ல நேர்ந்தது. இந்த வகையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தருவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இது வரை 1,30,000கோடி (one hundred and thirty thousand) ரூபாய் கொடுத்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை.

எல்லை கடந்த பயங்கரவாதம் தொடர்பாக இந்திய அரசு பாகிஸ்தான் அரசுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தியாயிற்று.
ஏராளமான முறை எச்சரிக்கைகள் கொடுத்தாயிற்று.

அளவு கடந்த பொறுமையுடன் அறிவுரைகள் தந்தாயிற்று. எதற்குமே பலனில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நின்றபாடில்லை. இனி, இந்தியாவின் உறுதியான செயல்பாடுகளே பாகிஸ்தானுக்கு பதிலாக அமைய வேண்டும் என்பதே தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்பாகும்.

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
04.10.2013

No comments: