Friday, October 18, 2013

அபாயகட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம்



                                                                                                                -சாவித்திரிகண்ணன்

உலகின் பணக்காரவல்லரசு நாடு...

அனைத்துலகத்தையும் கட்டுபடுத்த வல்ல ஆதிக்க சக்தி...
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ளோர் அண்ணாந்து பார்த்து வியக்கும் சொர்க்கபுரியான அமெரிக்கா,
தற்போது பொருளாதார நெருக்கடியில் தள்ளாடுகிறது...! 

மொத்த அரசு ஊழியர்கள் 21லட்சம் பேரில் எட்டு லட்சம் பேர் கட்டாய விடுப்பென்றும், தற்காலிக வேலைநீக்கம் என்றும் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புத் துறையினர் -4லட்சம்
வணிகத்துறையினர் - 40,200
சுகாதாரத்துறையினர் -40,000
போக்குவரத்து துறையினர் -18,500
விண்வெளித்துறையான நாசாவில் - 19,000
என பல துறையில் உள்ளோரும் வேலை இழந்துள்ளனர். வேலை இழந்த அரசு ஊழியர்களில் 30,000க்கும் மேற்பட்டோர் அதிபர் ஒபாமாவிற்கு கண்ணீர் மல்க கடிதம் அனுப்பி உள்ளனர்.

அவர்களுக்கு சமாதானம் தெரிவித்துவரும் ஒபாமா, 'வெள்ளைமாளிகையில் வேலைபார்க்கும் 1,265பேருமே கூட வேலை இழந்துள்ளதையும், தன்னுடைய 4ஆசியநாடுகளின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதையும் உருக்கமாக விவரித்து, 'அனைத்தும் விரைவில் சீராகும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார். பாதுகாப்பு துறையினர் மட்டும் மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் மேலும் கொஞ்சம் கடன் வாங்கி பொருளாதார நெருக்டியை சமாளிக்க ஒபாமா முயன்றார். ஆனால், "அதிகபட்ச கடன் உச்சவரம்பு 16,70,000கோடிடாலர் தான் இதற்கும் மேல் கடன்வாங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என எதிர்கட்சியான குடியரசு கட்சி தடைபோட்டுவிட்டது.

அமெரிக்காவில் எதிர்கட்சியான குடியரசு கட்சி பிரதிநிதிகள் சபையில் பலமாக உள்ளது.. ஓபாமா கொண்டுவந்த பட்ஜெட் மசோதா செனட் சபையில் செல்லுபடியானபோதிலும், பிரதிநிதிகள் சபையில் பின்னடைந்து விட்டது.
பட்ஜெட் மசோதா ஒட்டுஎடுப்பில் 
செனட்டில், குடியரசு கட்சிக்கு -221ஓட்டும்,
ஜனநாயக கட்சிக்கு -228ஓட்டும் கிடைத்தன! ஆனால்,

பிரிதிநிதித்துவ சபையில்
குடியரசு கட்சிக்கு -54ஓட்டும்
ஜனநாயகக் கட்சிக்கு -46ஓட்டும் கிடைத்தன!
அக்டோபர் -17வரைதான் அரசு கஜானாவில் இருக்கும் பணத்தை கொண்டு சமாளிக்க முடியும் அதற்குப்பின் என்னாகுமோ...? என ஓபாமா கலங்கிய வண்ணம் உள்ளார்.

"ஓபாமாவினால் கொண்டுவரப்பட்ட - ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவிய 'அனைவருக்கும் அரசின் மருத்துவகாப்பீடு' திட்டமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம். அதனை வாபஸ்பெறவேண்டும்' என குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால், "அது எங்களின் லட்சியத்திட்டம். ஏழை,எளிய, நடுத்தரவர்க்க மக்கள் பலன் பெறும் திட்டம் என ஒபாமா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

"ஈராக், ஆப்கானிஸ்தான்போர்களுக்கு தேவையில்லாமல் பெரும் பணத்தை குடியரசுகட்சி செலவிட்டதே பொருளாதார நெருக்கடி உருவாகக் காரணம்" என ஓபாமா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"அமெரிக்க மக்கள் தங்கள் ஆடம்பரச் செலவுகளை குறைக்க முன்வரவேண்டும். உதாரணத்திற்கு தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பியூட்டிபார்வருக்கு கொண்டு சென்று அலங்கரிக்கவும், ஆடம்பர உடைகளை அவற்றிற்கு அணிவிக்கவும் மட்டுமே அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 2000கோடி டாலருக்கும் அதிகமாகச் செலவு செய்கின்றனர். இந்தியாவில் நடுத்தரவர்கத்தினரின் சேமிக்கும் பழக்கமே இந்தியப் பொருளாதாரத்திற்கு பலம் சேர்த்துள்ளது... என இந்தியாவை ஒப்பீடு செய்து அமெரிக்க நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

உலக மனிதவள மேம்பாட்டில் அமெரிக்கா 16வது இடத்தில் உள்ளது. எனவே, பல வகையில் அமெரிக்கா தன்னை சீரமைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
"அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு உள்நாட்டு பிரச்சினை மாத்திரமல்ல. அது உலக அளவில் பல தாக்கங்களை தரும்" என ஐ.எம்.எப் கூறியுள்ளதானது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல!

கச்சா எண்ணெய்விலைச்சரிவும், பங்குச் சந்தை வீழ்ச்சியும், சாப்ட்வேர் துறையில் 'அவட்சோர்சிங்' செய்யும் நாடுகளில் ஏற்பட்டு வரும் வேலை இழப்பும் அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் எதிர்வினைகளே! 


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
07.10.2013

பாகிஸ்தான், அச்சுறுத்தல்விடிவு எப்போது?


                                                                                                                  -சாவித்திரிகண்ணன்

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையிலான சண்டை கடந்த 10நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்திய எல்லையில் செப்டம்பர் 24ல் சுமார் 30முதல் 40தீவிரவாதிகள் நுழைந்தனர். அப்போது தொடங்கி இதுநாள் வரையிலான இந்திய ராணுவத்தின் உக்கிரமான தாக்குதலில் 15தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ஜவான்கள் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே எல்லைதாண்டிய பயங்கரவாதச்செயல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைகளில் தொடர்ந்தும், அவ்வபோதும் அரங்கேற்றி வந்தாலும், கடந்த 8ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு இது வரை 120ஊடுருவல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.

செப்டம்பர் 29ந்தேதி இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ்ஷெரிப்பை சந்தித்தபோது இது குறித்து கடும் கண்டணத்தை தெரிவித்தார். அதோடு கூடவே ஐ.நா.சபை கூட்டத்தில் பேசும் போது பகிரங்கமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவும், நிதிஉதவியும், பயிற்சியும் ஊக்குவிப்பும் தருவதோடு இந்தியாவிற்கு எதிராகச் செயல்படுகிறது' என உலக அளவில் பதிவு செய்தார்.
என்ற போதிலும் கூட பாகிஸ்தான் அரசு எல்லைதாண்டிய பயங்கரவாதத்தில் முற்றுபுள்ளிவைக்க முடியவில்லை.

பாகிஸ்தான் ராணுவம் அங்குள்ள ஆட்சித் தலைமைக்கு கட்டுப்பாடு நடக்கிறதா? அல்லது கட்டுமீறி செயல்படுகிறதா? என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

முன்பு இதே நவாஷ்ஷெரிப் பதவிபொறுப்பில் இருந்த போது தான் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். அப்போது இந்திய ராணுவம் தீவிரமாகப்போராடி தக்க பதிலடிதந்தனர். இதனால் பாகிஸ்தானில் நவாஷ்ஷெரிப்பின் செல்வாக்குசரிந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இராணுவ தளபதியாக இருந்த பர்வேஷ் முஷாரப் நவாஷ்ஷெரிப்பை வீழ்த்தி நாட்டின் அதிபரானார்.

14வருட இடைவெளியை அடுத்தே நவாஷ்ஷெரிப் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடிந்தது. இந்நிலையில் முன்பு தனக்கு ஏற்பட்ட தோல்விக்கும் அவமானத்திற்கும் பரிகாரம் காணவும், தன்செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் அவர் இந்தியாவுடன் மோதுவதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்துள்ளாரோ... என்று கூட அரசியல் பார்வையாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

தீவிரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்பது பல நேரங்களில் நிறுவப்பட்டுள்ளது. அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா... போன்ற பல தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இவற்றை பாகிஸ்தான் அரசாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்காவே நேரடியாக பாகிஸ்தான் களத்தில் இறங்கி சென்றே கொல்ல நேர்ந்தது. இந்த வகையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு தருவதற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இது வரை 1,30,000கோடி (one hundred and thirty thousand) ரூபாய் கொடுத்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை.

எல்லை கடந்த பயங்கரவாதம் தொடர்பாக இந்திய அரசு பாகிஸ்தான் அரசுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தியாயிற்று.
ஏராளமான முறை எச்சரிக்கைகள் கொடுத்தாயிற்று.

அளவு கடந்த பொறுமையுடன் அறிவுரைகள் தந்தாயிற்று. எதற்குமே பலனில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நின்றபாடில்லை. இனி, இந்தியாவின் உறுதியான செயல்பாடுகளே பாகிஸ்தானுக்கு பதிலாக அமைய வேண்டும் என்பதே தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்பாகும்.

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
04.10.2013

சேவை பெறும் உரிமைசட்ட அமலாக்கம் எப்போது?



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தகவல்பெறும் உரிமைசட்டத்தைப் போலவே சேவை பெறும் உரிமைசட்டம் ஒன்றும் நமது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிசம்பர் 2011ல் இது பாராளுமன்றத்தில் அமைச்சர் நாராயணசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிறகு பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பபட்டது.
அதில் நிறைய திருத்தங்கள், மாற்றங்களை நிலை குழு பரிந்துரைத்தது.

இதனை மார்ச் 2013ல் மத்திய அமைச்சரவை பரிசீலித்து ஒப்புதல் தந்தது.

ஆனபோதிலும் இது, இன்னும் அமலாகாமல் தொங்கலில் விடப்பட்டுள்ளது. இது அமலாகும் பட்சத்தில் 11அரசுதுறைகளில் 250சேவைகளை காலதாமதமில்லாமல் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் - அதாவது 15நாட்களிலிருந்து 30நாட்களுக்குள் மக்கள் பெறமுடியும்.

ரேஷன்கார்டு, ஜாதிச்சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட்,ஓய்வூதியம், திரும்பப்பெறும் வருமானவரிபிடித்தம் போன்ற மக்களின் அடிப்படையான, அத்தியாவசியமான தேவைகளை குறிப்பிட்ட குறைந்தபட்ச காலக்கெடுவிற்குள் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

இந்தச்சட்டம் - சேவை பெறும் உரிமைசட்டம் - அமலாகுமானால் இந்திய குடிமக்களின் கணிசமான பிரச்சினைகள், அரசு அலுவங்களால் ஏற்படும் மன உளைச்சல்கள் முடிவுக்கு வந்துவிடும் என நம்பப்படுகிறது.

அண்ணாஹசாரே, அரவிந்த் கேஜ்வரிவால், லோகீசத்தாகட்சியினர் போன்ற சமூக ஆர்வலர்களாலும், அமைப்புகளாலும் சேவைபெறும் உரிமைசட்டம் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இந்தியாவில் 14மாநில அரசுகள் இத்திட்டத்தை அமலாக்க முன்வந்துள்ளன.

இதில் மத்திய பிரதேச பா.ஜ.க அரசு 2010 -லேயே இந்த சட்டத்தை அமலாக்கத் தொடங்கி, அதில் சிறப்பான முக்கியத்துவம் அடைந்தவகையில் 2012ல் ஐ.நா.சபையே பாராட்டி விருது வழங்கியுள்ளது. இதேபோல் கேரளாவும், பீகாரும்2011முதல் நன்றாக அமல்படுத்திவருகின்றன. கர்நாடக அரசு இதில் கணிசமான அளவு முன்னேறி வருகிறது. உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியானா, ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரகாண்ட், கேரளா, ஒரிசா, அஸ்ஸாம் போன்றவை சென்ற ஆண்டில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. மேற்குவங்கமும், குஜராத்தும் இந்த ஆண்டு முதல் இந்த சேவைபெறும் உரிமைசட்டத்தை அமலாக்க ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளன.

இச்சட்டம் அமலானால் லஞ்சம், ஊழலுக்கு இடமிருக்காது. ஏனெனில் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேவைதர மறுக்கும் அரசு ஊழியர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதமாக ரூ250 தன் சம்பளத்திலிருந்து தந்தாகவேண்டும். இந்த அபராதம் ரூ 50,000வரை கூட சம்பந்தப்பட்ட விவகாரத்தை பொறுத்து வேறுபடும்.

எனவே கடமையை கண்ணியமாக செய்தேயாக வேண்டிய கட்டாயம் அரசு ஊழியர்களுக்கு நிர்பந்திக்கப்படுகிறது.

ஒவ்வொரு அரசு துறைகளும் நோட்டீஸ்போர்டில் தங்களின் சேவைவிபரத்தை வெளியிடவேண்டும். ஒவ்வொருதுறையிலும் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். அவர் மக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நம்நாட்டில் சில தனியார் பீட்சா விற்கும் நிறுவனங்கள் கூட, 'உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு இணங்க 30நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கிறோம். இதில் காலதாமதமானால் காசில்லாமல் இலவசமாகவே நீங்கள் பெறலாம்' என விளம்பரம் செய்யும் போது, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகள் இதைக்காட்டிலும் வேகமாக, விசுவாசமாகவல்லவா செயல்படவேண்டும்.

ரகுராமராஜன் கமிட்டி இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
பல துறைகளில் முன்னிலையில் விளங்கும் தமிழகம், மக்களுக்கு சேவையை உறுதிபடுத்துவதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருக்கவேண்டும் என்ற விருப்பம் தமிழக மக்களுக்கு ஏற்படுவது இயல்புதானே!
அரசு ஊழியர்களிடையே வெளிப்படைத் தன்மை, கடமை உணர்ச்சி, பொறுப்பேற்கும் மனோபாவம் போன்றவற்றை நிர்பந்திக்கும் சேவைபெறும் உரிமைசட்டம் தமிழகத்தில் அமாலகும் நாள் எந்நாளோ?

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
03.10.2013

Monday, October 7, 2013

வேண்டும், வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை!




                                                                                                               -சாவித்திரிகண்ணன்

இந்திய மக்கள் உரிமைக்கழகம் என்ற PUCL அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநலவழக்கில் உச்சநீதிமறம்ம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவந்த '49'ஓவிற்கு விடிவுகாலம்.

அதன் முக்கிய அம்சங்கள்;

  • ஓட்டுபோட்டு வாக்காளர்கள் ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமை போன்றதே 'எந்த வேட்பாளரும் சரியில்லை' என பதிவு செய்யும் உரிமையும்!

  • அரசியல் சட்டம் இந்திய குடிமக்களுக்கு ஆர்டிகல் 19 (1)ல் கூறியுள்ளடியான பேச்சுரிமையையும், தன் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் 49(0)வைப் அமல்படுத்துவதன் மூலம் உறுதிபடுத்துகிறோம்.

  • .தற்போதும் கூட அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தனிபடிவத்தை கேட்டுவாங்கி நிரப்பித்தரவேண்டும். இதன்மூலம் வாக்காளரின் ரகசியத்தை காப்பாற்றத் தவறுகிறோம். ஆகவே, 'Voting Machine' லேயே' யாருக்கும் ஓட்டுப்போடவிருப்பமில்லை என்ற 'பட்டன் வைக்கப்படவேண்டும்.

  • அரசியல் கட்சிகள் குற்றமற்ற நல்ல வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என்ற உந்துதல் பெறுவதற்கு இந்த எதிர்மறை ஓட்டுகள் வழிவகுத்து அரசியலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

  • தவறான நபர்களை, குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் இருந்து மக்கள் விலக்கி வைக்க துணைபுரியும்.

  • நமது அரசியல் களம் தூய்மைபெறவும், ஜனநாயகம் உயிர்ப்புடன் விளங்கவும் இந்த எதிர்மறை வாக்குகள் வழிவகுக்கும்.

  • அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில், கிரிஸ், உக்ரைன், சிலி, பங்காளதேஷ், நேவிடா, பின்லாந்து, கொலம்பியா, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய 13நாடுகளில் ஏற்கெனவே இம்முறை வழக்கில் உள்ளது.

  • தேர்தல் கமிஷன் இதனை உடனே நடைமுறைபடுத்தவேண்டும். இதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கவேண்டும்.

இந்த தீர்ப்பில் உள்ள முக்கிய குறைபாடு;

  • ஜெயிக்க கூடிய வேட்பாளர் பெற்றுள்ளதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் எதிர்மறை ஒட்டுகள் விழுந்திருந்தால் என்ன நிலைபாட்டை மேற்கொள்வது என்பதை உச்சநீதிமன்றம தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை.

  • அப்படி எதிர்மறை ஓட்டுகள் அதிகமாக சில தொகுதிகளில் விழுந்திருப்பின் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில், ஆட்சி அமைப்பதில் ஏற்படும் சிக்கல்களை, இழுபறிகளை எப்படி எதிர்கொள்வது?

  • இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? நமது நாட்டில் சட்டம் இயற்றும் உரிமை பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்ற வகையில் மத்திய அரசும், அரசியல்கட்சிகளும் இத்தீர்ப்பு குறித்து எடுக்கப்போகும் முடிவுகள் என்னவாக இருக்கும்? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இந்த தீர்ப்பை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, "முழுமனதோடு வரவேற்கிறேன்" என இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும், ஜனநாயகம், அர்தத்தோடும் உயிர்ப்போடும் விளங்குவதற்கு இந்த தீர்ப்பு ஒரு அருமையான சிறந்த படிநிலையாகும். இதனை நான் நீண்டகாலமாக வலியுறுத்திவந்தேன். இது வரை நாம் வாக்களர்களுக்கு வழங்கியது பாதி உரிமையே, இனிவழங்க உள்ளதே முழுஉரிமை" என மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரான சோம்நாத் சட்டர்ஜியோ, 
"இது நடைமுறை சாத்தியமற்றது...
இதில் சிக்கல்களும், குழப்பங்களுமே மிஞ்சும்...
என் கருத்துப்படி உச்சநீதிமன்றத்திற்கு இப்படி சொல்ல உரிமை இல்லை. இருந்தால் தெளிவுபடுத்தட்டும்" எனக் கூறியுள்ளார்.

'வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை 'Voting machine' லேயே வைக்க வேண்டும்' என நூற்றுக்கணக்கான பொதுநல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து பாராடிவந்தனர். இந்நிலையில் இத்தீர்ப்பு அமலாகுமா? என்பது பாராளுமன்றத்தில் இனி ஏற்படவிருக்கும் விவாவத்தின் போதே தெளிவாகும்.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 



நேரடி மானிய திட்ட சர்ச்சைகள்



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

இந்திய நடுவண அரசு செயல்படுத்தும் நேரடி மானியதிட்டத்தின் மூலம் சமையல் காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் தருவதற்கு மாற்றாக, பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்பதற்கு தமிழக முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், 

இத்திட்டம் குறித்த சில தகவல்களைப் பார்ப்போம்:

இதுவரை அடிப்படைத் தேவையான பொருட்கள் சமூகத்தின் அடித்தளமக்களுக்கும் சாதாரண மக்களுக்கும் எட்டாக்கனியாகிவிடக்கூடாது என்பதற்காக சலுகைவிலையில் பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம், அரசு அலுவலகங்கள், அலுவலர்கள் மூலம் தரப்பட்டு வந்தது. 

நேரடி மானியதிட்டத்தின் நோக்கங்கள்;

  • பொது விநியோகத்திட்டத்தில் 58% பயனாளிகளுக்கு சென்று சேர்வதில்லை.
  • நிறைய ஓட்டைகள் உள்ளன.
  • அதீத ஊழல்கள் தழைத்தோங்க்கின்றன
  • செயல்படுத்தும் இடைத்தாரகர்களே பயன்பெறுகின்றனர்.
ஆகவே, பயனாளிகளை நேரடியாகச் சென்றடையவும், வேகமாகப் பயன் அடையவும் நேரடி மானியத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் பட்ஜெட்டில் 1,64,000மிச்சபடுத்தமுடியும், ஊழலை குறைக்க முடியும் என்பது மத்திய அரசு தருகின்ற விளக்கங்கள்.

எந்தெந்த திட்டங்களில் நேரடிமானியம் தரப்படவுள்ளன.

  • கல்விக்கான ஸ்காலர்ஷிப்
  • ஓய்வூதியம்
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிவாரணம்
  • கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்
  • சமையல்கேஸ், மண்ணென்ணெய்
  • உணவுப்பொருட்கள்
  • கல்விக்கான மானியம்
  • உரங்கள்
போன்ற 13வகை மத்திய அரசு திட்டங்கள் நேரடிமானியத்திட்டத்தின் வழி தருவதாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

எப்படி செயல்படுத்துவார்கள்?

National Payment Corporation of India என்ற அமைப்பின் மூலம் மத்திய அரசு ஆதார்அட்டை பெற்றுள்ளவர்களின் வங்கி கணக்கில் இப்பணம் நேரடியாக செலுத்தப்படும்.

வேறு எந்த நாடுகளில் இது போன்ற திட்டங்கள் உள்ளன?

தென்ஆப்பிரிக்கா, துருக்கி, சிலி, கொலம்பியா, ஈக்வாடர், ஜன்மைக்கா உள்ளிட்ட சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதை ஒத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்றவற்றில் ஒரு சில திட்டங்கள் பகுதியளவு நேரடிமானியமாக தரப்படுகின்றன.

இது வரை எந்த அளவு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜுவ் சுக்லா சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளபடி, 
"இதுவரை இந்தியாவில் சுமார் 40கோடிப் பேருக்கே ஆதார் எண் தரப்பட்டுள்ளது.
தரவேண்டியவர்களின் எண்ணிக்கை 80கோடிக்கும் அதிகம்.

16மாநிலங்களைச் சேர்ந்த 20மாவட்டங்களில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது அதில் சமையல் கேஸ்சிலிண்டருக்காக 90லட்சம் நபர்களின் வங்கி கணக்குகளில் ரூ480கோடி போடப்பட்டுள்ளது.

ஜனவரி 24க்குள் இந்தியாவில் மொத்தம் 289மாவட்டங்களில் செயல்படுத்தும் நிலையை எட்டுவோம். அதாவது 50% இந்தியாவில் செயல்படுத்திவிடுவோம். என்கிறார் ராஜீவ்சுக்லா

ஆய்வுகள் தரும் சில அதிர்ச்சி தகவல்கள்:

  • வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்தை வேறு அவசர தேவைகளுக்கு பயன்படுத்தியதாக 70% மேற்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
  • பெரும்பாலான பெண்கள் பணமாக தருவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்
  • ஆண்களில் 40% மேற்பட்டோர் பணம் வேறுவகையினங்களில் செலவழிவதாகக் கூறி நேரிடியமானியத்திற்கு பதிலாக பொதுவிநியோகமே தேவை என வலியுறுத்தி உள்ளனர்.
  • ஸ்காலர்ஷிப், ஓய்வூதியம், வேலையில்லாபட்டதாரிகளுக்கான நிவாரணம், கிராமப்புற வேலைவாய்புபதிட்டம் போன்றவைகளில் நேரடிமானியம் மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.

நேரடி மானிய திட்டம் குறித்த அச்சங்கள்;

  • உரியநேரத்திற்கு, உரியவிலையில் பொருட்கள் பெறும் உரிமை மறுக்கப்படும் 
  • பொதுவிநியோகத்திட்டமுறை ஒழிக்கப்படும் ஆபத்துள்ளது.
  • பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழப்பர்.
  • மாநில அரசுகள் புறக்கணிக்கப்படுதல்
  • மத்திய அரசு - அதாவது தேசியகட்சிகள் - மக்களிடையே ஓட்டு அறுவடை செய்யும் தந்திரம்!
  • காலப்போக்கில் மானியங்களை படிப்படியாகக் குறைத்து, அறவே ஒழித்துக் கட்டுவது
  • ஆதார் அட்டையை அனைவருக்கும் தருவதற்கே பல ஆண்டுகள் ஆகும்....
  • ஆதார் அட்டைக்கு தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது விபரீதத்திற்கு வழிவகுக்கும்.
இறுதியாக மானியங்களை பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதும் நேரடி மானியதிட்ட செயலாக்கத்தைகேள்விகுள்ளாகியுள்ளது.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும், 
01.10.2013