Tuesday, September 24, 2013

கபளீகரமாகும் காடுகள்

                                                                                                                 -சாவித்திரிகண்ணன்


மத்திய கணக்கு தணிக்கைதுறை மற்றொரு முறைகேட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வனங்கள் சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் துறைகளால் இணைந்து கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் வனத்துறை நிலங்களை தனியார்களுக்கு தாரைவார்த்த வகையில் ரூ 30,000கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்பது மத்திய கணக்குத் துறையின் கண்டுபிடிப்பு.

இந்தியாவின் பொருளாதாரம் எப்படி சரிந்துவருகிறதோ அதை விட அதிகமாக இந்தியாவின் சுற்றுச்சூழல் அம்சங்கள் சரிந்து வருகின்றன.

பொருளாதாரத்தை கூட பெருமுயற்சி எடுத்து மீட்டுவிடமுடியும். ஆனால் அழிக்கப்பட்ட பிறகு இயற்கைவளங்களை மீண்டும் உருவாக்குவது சுலபமல்ல. புவிவெப்பமாவதைத் தடுக்க வனவளம் மிக மிக அவசியம்!

காடு இல்லாவிட்டால் நாடு இல்லை, மனிதர்களுக்கு வாழ்க்கை இல்லை.
அடந்த காடுகளும், அழகிய மலைகளும் இயற்கையின் பொக்கிஷங்கள். 
நமக்கு மழைகிடைக்க, நீர் கிடைக்க மாத்திரமல்ல, அரிய மூலிகைகள், மரங்கள், பறவைகள், விலங்கினங்கள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளன காடுகள்.

காடுவளத்தில் நாம் உலக அளவில் கவனிக்கப்படும் நாடாக உள்ளோம்.
உலக பறவையினங்களில் 12.5% மானவை இந்தியக்காடுகளில் உள்ளன. 47,000வகை மூலிகைகள் 90,000வகை விலங்கினங்கள், பூச்சிகள்.... போன்றவற்றோடு விலை உயர்ந்த தேக்குமரங்கள், சந்தனமரங்கள், நிலக்கரி... போன்றவையும் காடுகளின் சொத்துகள்.
இவை தொடர்ந்து களவாடப்படுகின்றன. அதிகாரவர்கத்தினரும், மஃபியாவும் கை கோர்த்து இதைச் செய்கின்றனர்.

ஏராளமான பண்ணை தோட்டங்கள், பங்களாக்கள், ரிசார்டுகள், தொழிற்சாலைகள் காடுகளை ஆக்கிரமித்து கட்டமைக்கப்படுகின்றன. இதன்விளைவாக,

1970களில் இந்தியாவின் வனப்பகுதி 6,40,000சதுரகிலோமீட்டர்!
ஆனால், தற்போதோ 3,50,000சதுகிலோமீட்டராக சுருங்கியுள்ளது.

இந்த மாற்றத்திற்காக லட்சக்கணக்கான பழங்குடிகள் இடப்பெயர்வுக்கு நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர். இடப்பெயர்வுக்கு மறுப்பவர்கள் சித்திரவதைகள், கொலைகள், மானபங்கம் போன்றவற்றுக்கு ஆளாக்கப்பட்டுவருகின்றனர். இந்த எண்ணிக்கைக்கு கணக்கு வழக்கில்லை. 

ஆனால், 3,00,000த்திற்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளன. இந்தியாவில் தினசரி சராசரியாக 330ஏக்கர் வனநிலம் பறிபோகின்றது என்ற வபரம் தகவல் அறியும் உரிமைசட்டம் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து காடுகளை காப்பாற்ற ஏராளமான சட்டங்கள், மசோதாக்கள், திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1953 -ல் காடுகள் தேசியமயமாக்கப்பட்டன.
1969 -ல் காடுகள் உரிமைச்சட்டம்
1972 -ல் காட்டு விலங்குகள் பாதுகாப்புசட்டம்
1988 -ல் தேசிய காடுகளுக்கான கொள்கை
2002 -ல் காடுகளுக்கான தேசிய கமிஷன் உருவாக்கம்
2007 -ல் வன உரிமை மசோதா 

இவை எல்லாமே உன்னத நோக்கங்கள் கொண்டவை. சந்தேகமில்லை.
ஆனால், எவையுமே முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை... என்பது ஒவ்வொரு ஆண்டும் தனது மொத்த வனப்பரப்பில் இந்தியா 0.6% இழந்து கொண்டு இருப்பதிலிருந்து தெரியவருகிறது.

உச்சநீதிமன்றம் எத்தனையோ சுற்றுச்சூழல் வழக்குகளில் மத்திய, மாநில அரசுகளை, அதிகாரிகளை எச்சரித்துள்ளது, கண்டித்துள்ளது. உச்சநீதிமனற்த்தின் அதிகாரமளிக்கப்பட்ட மத்திய கமிட்டி நமது வனவளங்கள் பறிபோவது குறித்த பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது.

எனினும், ஆளும் தலைமையிடம் ஒரு உறுதியான நிலைபாடு வனவளத்தை பாதுகாக்கும் விஷயத்தில் வெளிப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. 

தந்திடிவிக்காக
செய்தியும், பின்ணணியும்,
16.9.2013 

No comments: