Thursday, September 26, 2013

சீறிப்பாயும் சிமெண்ட் விலை...! மலைக்கவைக்கும் மணல்விலை...!


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

நடுத்தர மக்களின் லட்சியக்கனவான வீடு, இனி என்றென்றும் கனவாகவே, பழங்கதையாகவே நிறைவேறாமலாகி விடுமோ.,.. என்ற அச்சம் சீறிப்பாய்ந்துள்ள சிமெண்ட் விலையாலும், மலைக்கவைக்கும் மணல் விலையாலும் ஏற்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் கட்டுமானப்பணிகளை கடுமையாக பாதிக்கிறது. கட்டுமான மதிப்பீடு சுமார் 40சதவிகிதம் எகிறிவிடும்... குறிப்பாக சிமெண்ட் விலை என்பது தற்போது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டாகிவிட்டது. 

"எந்த நியாயமான காரணமும் இன்றி செயற்கையாக சிமெண்ட் நிறுவனங்கள் கூட்டாக 'லாபி' செய்து விலையை ஏற்றுக்கின்றன..." என்பது கட்டுமானப்பணிகளைச் செய்யும் நிறுவனங்களின் குற்றச் சாட்டாகும்.

நமது தமிழ்நாடு அரசின் சிமெண்ட் நிறுமான 'டான்செம்' ஒரு மூட்டை சிமெண்ட்டை ரூ 240 முதல் 255க்குள் தரமுடிகிறபோது தனியார் நிறுவனங்களோ ரூ 330லிருந்து ரூ 350க்கு விற்கிறார்கள். டான்செம்மின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 9லட்சம் டன்கள் தான் என்பதால் மக்களின் தேவையை பூர்த்திசெய்ய இது போதுமானதல்ல.

மத்தியிலுள்ள 'காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியாவிற்கு இந்த பிரச்சனையை பில்டர்ஸ் அசோசியேஷன் கொண்டு சென்றபோது இது குறித்து விசாரணை நடத்திய பிறகு, "சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 11பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் 'லாபி' செய்து செயற்கையாக விலையை ஏற்றி விற்பது மிகவும் கண்டத்திற்குரியது..." எனக்கூறியது.

சிமெண்ட் விலையை சீர்படுத்த மத்திய, மாநில அரசுகள் செய்த முயற்சிகள்;

நிதி அமைச்சர் சிதம்பரம் சிமெண்ட் நிறுவனங்களுக்கு சில சலுகைகளை அறிவித்து விலையை குறைக்கும் படி வேண்டுகோள் வைத்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே 15ரூபாய் உயரந்தது. பிறகு மீண்டும் சிமெண்ட் நிறுவனங்களை அழைத்து சில வரிச் சலுகைகள் அறிவித்தார். 
ஆயினும் அடுத்தவாரமே சிமெண்ட் விலை ரூ 20 எகிறியது. இதனால் சென்ற ஆட்சியில் முதலமைச்சர் கருணாநிதி, "சிமெண்ட் நிறுவனங்களை தேசியமயமாக்க போவதாக அறிவித்தார்" - இந்த அறிவிப்பும் மத்தாப்புச் சிதறலாய் மறைந்தது. ரேஷன் கடைகள் மூலம் சிமெண்ட் மூட்டை விநியோகம் சில காலம் தொடர்ந்தது. 

மற்ற இடங்களில் சிமெண்ட் விலை;

வட இந்திய மாநிலஙக்ளில் சிமெண்ட் விலை தமிழகத்தை விட ரூ 100 குறைவாக உள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்தால் ஒரு மூட்டைவிலை ரூ200க்கு தரமுடியும். சில பெரிய கட்டுமான நிறுவனங்கள் இவ்விதம் சிமெண்ட் மூட்டைகளை தருவித்துக் கொள்கின்றன.

மலைக்கவைக்கும் மணல்விலைகள்;

மணல்விலை ஒரு லோடு ரூ 3,500லிருந்து ரூ5500ஆக ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மணல் அள்ளும் மஃபியாக்கள் சிலரின் பேராசையே இதற்கு காரணம். "தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இதனை தடுக்கவேண்டும். ஏனெனில், இவர்கள் அள்ளும் மணலுக்கு பெறக்கூடிய விலையில் நூற்றுக்கு 20சதவிகிதம் கூட அரசுக்குத் தருவதில்லை". 

ஏற்படும் பாதிப்புகள்;

  • தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிக்கும்

  • கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 50பெரிய நிறுவனங்கள் ஓரளவுசமாளித்துவிடக்கூடும். ஆனால் சுமார் 600 நடுத்தர நிறுவனங்கும், ஆயிரக்கண்க்கான சிறிய 'காண்டிராக்ட் பணி எடுப்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

  • கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 50லட்சம் கட்டிடத்தொழிலாளர்களில் கணிசமனோருக்கு வேலைவாய்ப்பு அரிதாகிவிடும்.

  • சிமெண்ட், மணல் விலை அதிகரிப்பில் வீடுகட்டும் நடுத்தர மக்களின் பட்ஜெட் 40%வரை உயர்வதால் திண்டாட்டமாகிவிடும் அரசு நிறுவனங்களின் கட்டுமானப்பணிகளே கூட இதில் பாதிக்கப்படுகின்றன.

இது ஒரு புறமிருக்க, கட்டுமானத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி போக்கை ஆரோக்கியமாக கருதுவதற்கில்லை. விபரீதமாகவே தோன்றுகிறது.

தான் தோன்றித்தனமாக நகரங்கள் விரிவாகிச்செல்லவும், தேவைக்கும் அதிகமான வீடுகளை ஆங்காங்கே வாங்கி அதை ஒரு வளரும் முதலீடாக மக்கள் கருதவும் கட்டுமானத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் கணிசமானவை குடியேற ஆளின்றிக் கிடக்கின்றன. தேவைக்கும் அதிகமாக வீடுவாங்கி குவிப்பவர்களைத் தடுக்க சட்டபூர்வமாக அரசாங்கம் எதையேனும் செய்தாகவேண்டும். இந்த வகையிலாவது சிமெண்ட், மணல் பயன்பாடு குறைத்துவிலையும் குறையட்டுமே! 
தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
21.9.2013 


No comments: