Tuesday, September 24, 2013

அழகிபோட்டிகளின் பின்னுள்ள பொருளாதார அரசியல்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

அமெரிக்காவின் அழகுப்பெண்ணாக இந்திய மரபு வழி வந்த நீனாதவுலூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஓர் இந்திய வம்சாவழிப்பெண் அமெரிக்க அழிகியாகத் தேர்வானது அங்கு சிலரிடம் இனவெறுப்பு, பாகுபாடு சார்ந்த பார்வையை தோற்றுவித்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, இந்தியப் பெண்கள் அடிக்கடி உலக அழகிகளாக, பிரபஞ்ச அழகிகளாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.!!

குறிப்பாக, 1951முதல் நடக்கும் உலக அழகிப் போட்டிகளில் இந்தியா மட்டுமே ஐந்து முறை வென்றுள்ளது. இந்த வகையில் இந்தியா உலக அழகி போட்டிகளில் பங்குபெறும் 180நாடுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அதுவும் குறிப்பாக 1990களில் உலகமய, தாராளமய பொருளாதாரக் கொள்கையை இந்தியா ஏற்கத் தொடங்கிய பிறகு 1994ல் ஐஸ்வர்யாராய் 97ல் டயானா ஹெய்டன், 99ல் யுக்தாமுகி, 2000ல் பிரியங்கா சோப்ரா எனத் தொடர்ச்சியாக இந்தியப்பெண்கள் உலக அழகி பட்டம் சூட்டப் பட்டுள்ளனர். பிரபஞ்ச அழகி, புவி அழகி போன்ற போட்டிகளிலும் அவ்வப்போது இந்தியப்பெண்கள் அழகிபட்டம் வென்றாலும் அது அவ்வளவு பிரதான கவனம் பெறவில்லை.

உலகில் 199நாடுகளில் சில இஸ்லாமிய மற்றும் பழமைவாத நாடுகளைத் தவிர்த்து 180நாடுகள் பங்குபெறும் அழகிபோட்டிகளில் இந்தியப்பெண்களுக்கு அவ்வப்போது அழகிபட்டம் சூட்டப்பெறுவதில் ஒரு பொருளாதார அரசியல் மறைந்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஏனென்றால், இந்தியாவில் எத்தனையோ தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றைக் கூட தரவரிசையில் முதல் 200 இடங்களில் அங்கீகரிக்க மறுக்கும் மேற்கத்திய நாடுகள்,

இந்தியாவில் எத்தனையோ அற்புதமான திரைப்படைப்புகள், திரைக்கலைஞர்கள் இருந்தாலும் அவற்றை சட்டைசெய்யாத அமெரிக்க ஹாலிவுட் பார்வைகள்...
இந்திய பெண்களை அழகிகளாக தேர்ந்தெடுப்பதற்கும், ஸ்லம்டாக் மில்லியனரையும் ஏ.ஆர்.ரகுமானையும் தேர்ந்தெடுப்பதற்கும் சில பொருளாதார அரசியல் உள்நோக்கங்கள் இருக்கின்றன.

இருபதாண்டுகளுக்கு முன்பு வரை இந்தியப்பெண்களிடம் அழகு சாதனப்பொருட்கள் அதிகம் பரிச்சயமில்லாமல் தான் இருந்தது,உஞ்சள்பூசி குளிப்பதும், மருதாணி இட்டுக்கொள்வதும், பொட்டுவைத்து, பவுடர்பூசி, பூவைப்பது மட்டுமே பெருமளவு புழக்கத்தில் இருந்தது.

ஆனால், கடந்த இருபதாண்டுகளில்இந்தியாவில் அழகு சாதனபொருட்களின் சந்தை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி அழகு சாதனப் பொருட்களின் இந்திய சந்தை 10,000கோடியை கடந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது 30% வளர்ச்சியை பெற்று வருகிறது இன்றைய இந்தியாவில் மாநகரம், பெருநகரம் தொடங்கி சிற்றூர்கள் வரையில் ஆங்காங்கே அழகிப்போட்டிகள் நடக்கும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது.

இதன் விளைவாக தெருவுக்கு தெரு ப்யூட்டி பார்லர்கள், மட்டுமின்றி நியூட்ரிசியன் டயட் சென்டர்கள் பெருகியுள்ளன. தங்கள் உடலை அழகாக, டிரிம்மாக வைத்துக் கொள்வதில் இளம் பெண்களோடு இன்று ஆண்களும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

அழகு சாதனப் பொருட்களின் சந்தையில் 25%த்தை ஆண்களுக்கானவை பிடித்துள்ளன. அந்த வகையில் தற்போது ரூ 2,450கோடி ஆண்களின் அழகு சாதனச் சந்தை பெற்றுள்ளது.

உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த ஆண்டு முழுவதும் சில கார்ப்ரேட் நிறுவனங்கின் மாடலாக ஒப்பந்தம் செய்யப்படுகிறார். இதன்மூலம் விதவிதமான துணிகள், நகைகள், காலணிகள் தொடங்கி கார்களின் விளம்பரம் வரை இந்த அழகி பயன்படுத்தப்படுகிறார்.

இப்படியாக பலதரப்பட்ட நுகர்வுகாலச்சாரத்தை வேகமாக இந்தியாவில் வளர்த்தெடுக்க உலக அழகிகள் தேர்வு மேலைநாடுகளுக்கு உதவிவருகின்றன என்பதே மறுக்க முடியாத யதார்த்தம்.

கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இந்தியாவில் நுகர்வு கலாச்சாரம் 20 மடங்கு அதிகரித்துள்ளதில் அழகிபோட்டிகளின் பங்களிப்பை புறந்தள்ள முடியாது.

இதனால் தான் இந்த ஆண்டு உலக அழகிபோட்டி இந்தோனேஷியாவில் நடந்த போது கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு உலக அழகி போட்டிக்கு மாற்றாக பெண்களுக்கான கண்ணியமான போட்டி ஒன்றும் அந்நாட்டில் எதிர்ப்பாளர்களால் அரங்கேற்றப் பட்டது.

இதேபோல் இந்திய மண்சார்ந்த, மரபுசார்ந்த, அறிவார்ந்த கண்ணியமான போட்டிகளை இந்திய இளந்தலைமுறையினரிடம் நடத்துவதில் சில சுதேசி இயக்கங்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

தந்திடிவி, 
செய்தியும் பின்னணியும்,
18.9.2013

No comments: