Thursday, September 26, 2013

வரி ஏய்ப்பாளர்களை பாதுகாக்கிறதா மத்திய அரசு..?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்


வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களின் பெயரை வெளியிட மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.
இது மக்களிடையே அதிர்ச்சியையும், சந்தேகத்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் வருமானவரித்துறை அதிரடிசோதனை, கலால்வரித்துறை ஆய்வு, நீதிமன்ற வழக்குகள்... போன்ற சமயங்களில் எத்தனையோ பிரபலமானவர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர்கள் ஏற்கெனவே அம்பலப்பட்டுள்ளன...!

இதில் அரசியல் தலைவர்கள் கூட விதிவிலக்கல்ல.

எடியூரப்பா 300ற்று சொச்சம் கோடி வரி ஏய்ப்பு 
நிதின் கட்கரியின் நிறுவனங்கள் பலவற்றில் வரி ஏய்ப்பு

ராகுல்காந்தி ஹரியானா ஹசன்பூரில் 6.5ஏக்கர் நிலம் வாங்கியதில் ஏக்கர் ரூ 65லட்சம் சந்தை மதிப்பை 1.5லட்சமாக பத்திரபதிவு செய்ததாக ஓம்பிரகாஷ் சௌதாலா குற்றசாட்டு...
கார்களுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதியில் BMW கார் நிறுவனம் 650கோடி வரி ஏய்ப்பு!

2ஜி அலைகாற்றை விவகாரத்தில் 
நோக்கியோ செல்போன் நிறுவனம் - 18,000கோடி வரி ஏய்ப்பு 
வோடோபோன் செல்போன் நிறுவனம் 11,000கோடி வரி ஏய்ப்பு

விஜய் மல்மையா ராயல் சேலஞ்சர்ஸ்சுக்காக - 75கோடி வரி ஏய்ப்பு, சரவணாஸ்டோர்ஸ், சக்தி மசாலா... என்று பத்திரிகைகளில், விஷ்வல் மீடியாக்களில் வெளியாகி விவாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்க, மற்றபலரை காப்பாற்ற நிதி அமைச்சகம் முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது. 

ஓட்டுமொத்தமாக இந்தியாவில் 4.83லட்சம் கோடி ரூபாய் வரிஏய்ப்பு நடந்துள்ளது. இவற்றில் 411சர்வதேச நிறுவனங்களும் அடக்கம்!

சேவைவரி ஏய்ப்பு, கலால்வரி ஏய்ப்பு, சுங்கவரி ஏய்ப்பு, வருமானவரி ஏய்ப்பு என பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனினும் எவ்வளவு போராடி முயன்றாலும் இதில் 10%த்தை வசூல் செய்வதே பகிரத பிரயத்தனம். 5% வசூலிக்க முடிந்தால் அதுவே அபூர்வ வெற்றியாகும் என அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

நமது நிதி அமைச்சகத்தின் பல செயல்பாடுகள்... அணுகுமுறைகள் வரி ஏய்ப்பிற்கான வழி ஏற்படுத்தி தருவதாகவே அமைந்துள்ளது என பொருளாதாரநிபுணர்கள் கூறுகிறார்கள்.
உதாரணத்திற்கு வருடாவருடம் சிகரெட் நிறுவனங்களுக்கு மட்டும் தவறாமல் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இப்படி அதிகப்படுத்தும் போது கூடுதலாக வரிவசூலாவதில்லை... காரணம் வரிஏய்ப்பிற்கு அவர்கள் வழிதேடிவிடுகிறார்கள்.

இந்த வகையில் சுமார் 100கோடி ரூபாய் சிகரெட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதை காலால்துறை கண்டுபிடித்துள்ளது.

இதே போல் சேவைவரியை ஏராளமான நிறுவனங்கள் அப்படியே மறைத்து மிகக்குறைவாகவே கட்டுகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் நுகர்வார் தான் ஏமாற்றப்படுகிறார்கள்.

எனவே இது விஷயத்தில் மத்திய அமைச்சகம் மறுபரிசிலனை செய்யவேண்டும்.

இந்தியாவில் மாநந்திர சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே வருமானவரியில் இருந்து தப்பமுடியாது.

டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சிறுவியாபாரங்களில் ஈடுபடுவோர், ரியல் எஸ்டேட் தரகர்கள்.. போன்ற பல பிரிவினர் லட்சலட்சமாக சம்பாதித்தாலும் முறையாக கணக்கு காட்டுவதில்லை...

வரிஏய்ப்பு நிகழ்த்துவதற்கென்றே மொரிஷியஸ், கேமன்தீவுகள், பிரிட்டிஷ்வர்ஜின் தீவுகள், பெர்முடாதீவு, மிகச்சமீபத்தில் லித்திவியா போன்ற மிகச்சிறு நாடுகளுடன் இந்தியா வரிவிலக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

நமது ரிசர்வ் வங்கி தரும் ஒரு தகவல் நம்பமுடியாத அதிர்ச்சியைத் தருவதோடு, எப்படி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பதையும் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

இந்தியாவிற்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 75%லிருந்து 80% மேற்படி சிறு தீவுகளிலிருந்து வந்துள்ளது. இதில் மொரியஷில் இருந்து மட்டுமே 40% அந்நிய முதலீடு வந்துள்ளது. வரி ஏய்ப்புக்கு வசதியாக பல நிறுவனங்கள் இத்தீவுகளை தங்கள் முகவரியாக்கிவிடுகின்றன!

வருமானவரித்துறையிலிருந்து ஒய்வுபெற்ற அதிகாரி பி.வி.குமார் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல், 'வரிஏய்ப்பு மூலமாக இந்தியாவிலிருந்து இது வரை வெளிநாடுகளுக்கு கறுப்புபணமாக கடத்தப்பட்டுள்ள பணத்தின் மதிப்பு 20,79,000கோடிக்கும் அதிகமாகும்' என அதிர்ச்சி தருகிறது.

இது இந்தியாவின் வெளிநாட்டுக்கடனை காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்பது தான் கவனத்திற்குரியதாகும்.

வறுமைகோட்டிற்கு கீழ் 30%மக்களை வைத்துக் கொண்டு இவ்வளவு அதிக வரிஏய்ப்பிற்கு வழி செய்துள்ள நாடு இந்தியாவாகத் தான் இருக்கும்!

தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
20.9.2013 

No comments: