Tuesday, September 24, 2013

கைதிகளுக்கு விடிவு எப்போது?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

தில்லியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், சமூக சேவகருமான சுமா செபாஸ்டியன் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு - அனைவரும் கவனம் செலுத்த தவறிய - ஒரு முக்கிய விஷயத்தை கொண்டுவந்துள்ளார்.

இந்திய சிறைச்சலைகளில் விசாரணை கைதிகள் என்பதன் பெயரால் வருடக் கணக்கில் சிறைப்பட்டிருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய ஆதரவற்ற கைதிகள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சனா பிரகாசும் இது தொடர்பான விபரங்களை, விளக்கங்களைத் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நாட்டில் எவ்ளவோ பிரச்சினைகள் இருக்கும் போது சிறைச்சாலைகளில் இருக்கும் அபாயகரமான கைதிகள் மீது ஏன் அக்கரைகாட்டவேண்டும்? என்று பலருக்குத் தோன்றும்.

கற்பழிப்பு பேர்வழிகள், பிக்பாக்கெட்காரர்கள், திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள், ரவுடிகள், கொலைகாரர்கள், பஞ்சமா பாதகத்திற்கு அஞ்சாத பயங்கரவாதிகள் ஆகியோரே நமது சிறைசாலைகளில் அடைபட்டிருக்கிறார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

இதில் ஒரளவு உண்மை இருக்கறிது. ஆனால், உண்மையில் சுமார் 60முதல் 70%கைதிகள் விசாரணைகைதிகளாக சிறைச்சாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்குமாக அலைகழிக்கப்பட்டவண்ணமுள்ளனர் என்பதே யதார்த்தமாக உள்ளது!

தற்போது இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கமுடிந்த கைதிகளின் எண்ணிக்கை 3,32,782 தான்! ஆனால், அதையும் மீறி சுமார் 60,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் கைதிகள் சிறைகொட்டிகளில் திணிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 13,900கைதிகளை மட்டுமே அடைக்க கூடிய தமிழக சிறைகளில் தற்போது சுமார் 22,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

நமது காவல்துறை, வழக்கறிஞர்கள், பிரபல அரசியல்வாதிகள் அல்லது செல்வாக்கோடு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள், நீதிமன்ற மன்ற நடைமுறைகள் போன்றவை குறித்தெல்லாம் ஓரளவு அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையான குற்றவாளிகள் எப்படியெல்லாம் தப்பித்துக் கொள்கிறார்கள் அல்லது விரைந்து விடுவிக்கப்படுகின்றனர் என்பதும், அப்பாவிகள், கேள்விகேட்க நாதியில்லாத ஏழை, எளிய கைதிகள் - வாய்த்தகராறு முற்றி கை கலப்பில் கைதானவர்கள் - வருடகணக்கில் சிறையில் உள்ளனர் என்பதும்!

சமீபத்திய சில மனித உரிமை அமைப்புகள் ஆய்வில் சில பட்டவர்த்தனமான உண்மைகள் தெரியவந்துள்ளன.

சில நெருக்கடியான வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை பிடிக்க முடியாததே போலீசார், ஏற்கெனவே சிறு, சிறு வழக்குகளில் கைதாகி விடுதலையான அப்பாவிகளை பிடித்து பொய்வழக்கு ஜோடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கின்றனர். நீதிமன்றங்களின் பணிச் சுமைகளுக்கிடையே வாய்தா மீது வாய்தா, வழக்கு தள்ளிவைப்பு... என வருடக்கணக்கில் இவர்களும் விசாரிக்கப்படாத விசாரணை கைதிகளாக அலைகழிக்கப்படுகின்றனர்.

பிணையில் விடுதலையாக பணமில்லை, எடுக்க ஆளில்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கானோர்.

'வெளியில் வந்தால் போக்கிடமில்லை' என்ற நிலையிலிருப்பவர்கள் ஜெயிலில் போலீசாரின் அடிமைகளாக மாறி பலதரப்பட்ட பணிகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர்.

என்ன காரணத்திற்காக கைதாகியுள்ளோம் என்றே தெரியாமல் விரக்தியில் மனமுடைந்து கிடப்பவர்கள்...


எனபலதரப்பட்டவர்கள் நீதிமறுக்கப்பட்டவர்களாக நெடுநாள் சிறைகளில் வாடி வதங்கி கொண்டுள்ளனர். 'ஒரு நாகரீகமான சமூகம் இந்த அநீதி தொடர அனுமதிக்கலாகாது'. அதுவும், 'பல குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாது' என்பதை வெறும் ஏட்டளவில் வாரத்தைகளில் கூறிக் கொண்டு, நடைமுறையில் எதிர்மறையாகச் செயல்படுகிறோம்' என்பதே சமூக ஆர்வலர்களின் பார்வையாகும்.

இது போன்ற ஒரு வழக்கு 1979ல் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தபோது உச்சநீதிமன்றமே ஒரு குழுவை நியமித்து விசாரித்து 27,000விசாரணை சிறைக்கைதிகளை விடுவித்தது. ஆனால் மீண்டும், மீண்டும் இது போன்ற நிலமைகள் ஏற்படாதவண்ணம் சில தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால் தான் இதற்கு தீர்வாகும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவு படுத்தப்பட்டு, குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நீதிபரிபாலனம் செய்யப்படுவதும் அப்பாவிகள் அநாவசியமாக சிறைகளில் அல்லப்படுவதை தவிர்க்க வழி வகை காண்பதும் மிக மிக முக்கியமாகும்.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
14.9.2013 

No comments: