Tuesday, September 24, 2013

அரசாங்கத்தின் கடமை மலிவுவிலை வியாபாரமா? நல்ல நிர்வாகமா?



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


சமீபகாலமாக நம் தமிழக அரசு சில மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறைந்த விலைக்கு டிபன், சாப்பாடு என அம்மா கேண்டீன்! குறைந்த விலைக்கு காய்கறிகடை, தற்போது அம்மா மினரல் வாட்டர்...!

இவை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன சந்தேகமில்லை. ஆனால், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இதில் அடிப்படை தீர்வு கிடைக்கவில்லை.

கொள்ளை லாபத்திற்கு சாப்பாடு, டிபன் தரும் ஹோட்டல்கள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல் 30ஆண்டுகள், 'ஹோட்டல் பண்டங்களின் விலையை அவரவர்களும் இஷ்டத்திற்கும் நிர்ணயிக்க முடியாது' என்ற நிலைமை இருந்தது. இட்லி விலையை ஹோட்டல்காரர்கள் பத்துபைசா உயர்த்தினாலும் அது சட்டசபையில் கடும் விவாதப் பொருளானது! அந்தச்சூழல், அந்த மெக்கானிசம் - அரசின் ஆளுமை - இன்று இல்லை.

அதே போல் காய்கறிகள் விலையேற்றதிற்கான அடிப்படை காரணிகள் களையப்படைப்படவில்லை.
தண்ணீரைக் காசாக்கும் கார்பரேட் நிறுவனங்களின் செயலை நமது அரசும் செய்யத்தான் வேண்டுமா?

சுத்தமான குடிநீரை ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் அரசு ஏற்பாடு செய்யக்கூடாதா?

ஒரு குடம் தண்ணீருக்கு ரூபாய் இரண்டோ, மூன்றோ தரநேர்வதையோ பெரும் சிரமமாக கருதுகிற பெரும்பாலான மக்களிடம் பாட்டில் தண்ணீருக்கு பத்து ரூபாய் கேட்கலாமா?

20ரூபாய்க்கு பாட்டில் தண்ணீர் வாங்க முடிந்தவர்களுக்கு பத்து ரூபாய் பாட்டில் தண்ணீர் வரப்பிரசாத மாகலாம்! ஆனால், ஏழை, எளியவர்கள் நிலை?

அவர்கள் கேட்பதெல்லாம் அரிசியைக் கூட இலவசமாகத் தரமுடிந்த நமது அரசு அடிப்படை தேவையான தண்ணீரை காசு வைத்து விற்கலாமா? என்பது தான்!

மற்றொரு முக்கியமான கேள்வி, மக்களுக்கான தேவைகளையெல்லாம் அரசே உற்பத்தி செய்து விற்பனை செய்வது சாத்தியமா?

அரசின் செயல்பாடு சிறந்த நிர்வாகமா? குறைந்த லாபத்திலான வியாபாரமா?
இதை விட குறைந்த விலையில் குடிநீர் விற்க சில தானியார்கள் கூட முன்வரலாம் ஆனால், சிறந்த நிர்வாகத்தை மக்கள் அரசிடம் மட்டும் தானே எத்ரபார்க்க முடியும்? வியாபாரிகள் கொள்ளை லாபமீட்டுவதை அரசு தடுத்து நியாயவிலையில் கிடைக்க செய்யும் நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாதா? 

No comments: