Thursday, September 26, 2013

சமாதானம் வேண்டும் இலங்கைதமிழர்கள்


                                                                                                               -சாவித்திரிகண்ணன்

இலங்கையில் மாகாண கவுன்சில்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் வடமகாணகவுன்சில் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மொத்தமுள்ள 38இடங்களில் 30 இடங்களைப் பெற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
இதேபோல் வடமேல்மாகாணத்திலும் மத்திய மகாணகவுன்சிலிலும் தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணியான மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு மாபெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளது. 

யாழ்பாணம் மன்னார், கிளிநொச்சி, முல்லை, வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாண கவுன்சிலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுமார் 65% வாக்குகள் பெற்றுள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரொலியான, கொத்மலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 10லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்களை வாக்களார்களாகக் கொண்டுள்ள இடங்களில் மலையகத் தமிழர்கட்சிகளின் ஆதரவில் ராஜபட்சேவின் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு சுமார் 64% வாக்குகளைப் பெற்றுள்ளது. குருநாகம், புத்தளம் உள்ளிட்ட வடமேல் மாகாணசபையிலும் ராஜபட்ச

இலங்கை அரசின் தொடரும் இனப்பாகுபாடு, ராணுவ மேலாதிக்கம், ராஜபட்சேவின் குடும்ப ஆதிக்கம்... போன்ற பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இத்தேர்தல்கள் நடந்தன.

காமன்வெல்த் நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 2000சுதந்திரமான தேர்தல் பார்வையாளர்கள் களத்தில் இருந்துள்ளனர்.

இதனால் தேர்தலில் ஆளும்தரப்பின் ஆதிக்கம், குறிப்பாக ராணுவ மேலாதிக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள், வீடுகள் இடிப்பு, துப்பாக்கி சூடுகள் நட்க்காமலில்லை.

காமன்வெல்த் நாடுகளின் பார்வையாளர்கள் ராணுவ ஆதிக்கமும், நிர்பந்தங்களும் இருந்ததை உறுதிபடுத்தியுள்ளதோடு அதே சமயம் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறி உள்ளனர்.

'கஃபே' என்ற அமைப்பு 576 தேர்தல் விதிமீறல்கள் நடந்துள்ளன" என சுட்டிக்காட்டியுள்ளது. 

நமது இந்தியாவில் இருந்து சென்றுள்ள முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் தங்கள் குழு பல்வேறு இடங்களை பார்வையிடவும், மக்கள், கட்சித்தலைவர்களை சந்திக்கவும் ஆட்சியாளர்கள் எந்த தடையும் செய்யவில்லை. எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை" எனக்கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளும் போது குறைந்த வன்முறைகளோடு ஒரளவு நியாயமாக தேர்தல் நடைபெற்றுள்ளது என கருதவே வாய்ப்புள்ளது.

வடமாகாணக் கவுன்சில் தலைவரான முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஷ்வரன் 1,32,255மக்களின் ஆதரவை தனிப்பட்ட முறையில் பெற்றுள்ளார்.

இவர், "ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான அதிகார பகிர்வே நடைமுறை சாத்தியம்" என்பதை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

மிந்த தேர்தல் வெற்றி மக்கள் சமாதானத்திற்காக அளித்த வாக்குகள்" என மற்றொரு முக்கியத் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.

"தமிழர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை, அடிப்படையான உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்கே முதலிடம். அதற்குப் பிறகே அதிகார பகிர்வு" என்றும் சி.வி.விக்னேஷ்வரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

யாழ்பாணத்தில் தேர்தல் வெற்றிகளிப்புகளோ, கொண்டாட்டங்களோ எதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவில்லை.

"ஆளும்கட்சி மன்ணை கவ்வியது, இது ராஜபட்சேவிற்கு விழுந்த அடி..." போன்ற வார்த்தை ஜாலங்கள், பழிதூற்றல்கள் வெளிப்படவில்லை.

தற்போதைய தமிழர் தலைவர்கள் மிகுந்த விவேகத்தோடும் ராஜதந்திரத்துடனும் செயல்படுவதையே இவை உணர்த்துகின்றன.

'தமிழ்தேசிய கூட்டமைப்பில் கருத்துவேற்றுமைகள் தலைதூக்காமல், ஒற்றுமையுடனும், விவேகத்துடனும் செயல்பட்டு அவர்கள் தமிழர்களுக்கான தேவைகளை உரிமைகளை படிப்டியாக வென்றெடுக்க வேண்டும்' என்பதே இலங்கை தமிழர்கள் வாழ்வில் அக்கரையுள்ளவர்களின் பிரார்த்தனையாகவுள்ளது.

'இதற்கிடையில், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் சில தஙகள் அரசியல் உள்நோக்கங்கள் சார்ந்து ஏதேனும் விபரீதமாகப்பேசி அங்குள்ள சிங்கள அரசை உசுப்பிவிட்டு மீண்டும், இலங்கைத் தமிழர்களை ஆபத்துக்கு ஆட்படுத்தவேண்டாம்' என்பதே வெற்றிபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுதலாக உள்ளது.


தந்திடிவிக்காக,
செய்தியும், பின்ணணியும்,
23.9.2013 


No comments: