Friday, August 30, 2013

மத்திய அரசும், மாநில அரசுகளும்!



சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கிடையே இருக்க வேண்டிய இணக்கமான உறவு பிணக்கமாகிக் கொண்டு வருகிறது.
மாநில அரசுகள் கூடுதல் அதிகாரங்களை எதிர்பார்க்கின்றன. மாநில அரசுகளை மத்திய அரசு கலந்து பேசி விவாதித்து திட்டம் தீட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
மத்திய நிதி தொகுப்பிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஆதாரங்களை எதிர்பார்க்கின்றன.

இவை யாவும் நீண்டகால எதிர்பார்ப்புகளே! இவை எதுவும் புதிதல்ல!
நமது நாடு Fedaral என்று சொல்லக்கூடிய கூட்டாட்சி தத்துவத்தின் சில கூறுகளையும், Unidary என்று சொல்லக்கூடிய மையப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பின் சில கூறுகளையும் உள்ளடக்கிய கலவையாகும்! இதன்படி மத்திய அரசு சில அதிகாரங்களையும், மாநில அரசு சில அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அத்துடன் இரு அரசுகளுக்குமே பொதுவான சில அதிகாரங்களையும் கொண்டு செயல்படுகின்றன.

உலகம் இந்தியாவை மதிக்கவேண்டுமெனில் ஒரு வலுவான மத்திய அரசு தேவை என்பதும், மக்களின் அடிப்படைத் தேவைகளும், அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் சில நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட சுதந்திரமான மாநில அரசுகள் தேவை என்பதுமே நிதர்சனம்!
இதில் மத்திய அரசை வலுவிழக்கச் செய்வதும் ஆபத்து!
மாநிலங்களின் சுதந்திரமான நிர்வாகத்தை சீர்குலைப்பதும் ஆபத்து!
ஆனால், துர்ரதிர்ஷ்டவசமாக இன்று இந்த இரண்டுமே இந்தியாவில் அரங்கேறி, விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கி வருகின்றன.

மத்திய திட்டக்கமிஷனிடமிருந்து ரூ.28,000 கோடி நிதியை நமது மாநில முதல்வர் எதிர்பார்த்தார். கேட்டார், கிடைத்தது. அந்த வகையில் மகிழ்ச்சியே! இதோடு இன்னும் சில கூடுதல் எதிர்பார்ப்புகளும் நமது மாநில அரசுக்கு இருப்பதையும் கூறியுள்ளார். அவற்றை சீர்தூக்கிப் பார்த்து தக்க முடிவெடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குள்ளது.
பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி தரும் போது வளர்ச்சி திட்டம் சார்ந்த பணிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதே சமயம் மாநில அரசின் மக்கள் நலன் சார்ந்த மானியங்கள், இலவசங்களுக்கு அதிக நிதி தர விரும்புவதில்லை.

நமது மாநில அரசை பொறுத்தவரை தனது மொத்த நிதியில் சுமார் 40% த்தை மானியங்கள், இலவசங்களுக்கே செலவழிக்கிறது. எனவே வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி இல்லாமல் போகிறது.

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச அரிசி, பள்ளி இறுதி மாணவர்களுக்கு இலவச லேப் டாப்! அனைத்து குடும்பத்தினருக்கும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி இத்யாதி இத்யாதி.... என சமூக நலன் மேம்பாடு என்ற தலைப்பில் நமது மாநில அரசு செலவிடும் நிதியை பொதுவாக மத்திய திட்டகமிஷன் அங்கீகரிப்பதில்லை!

இந்திய தணிக்கை துறை தமிழகத்தை பற்றி குறிப்பிடும் போது, பல திட்டப் பணிகளில் முடக்கம், ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்துவது, மீதமான நிதியை திருப்பி அனுப்பாதது, தேவையில்லாமல் கடன்களை தள்ளுபடி செய்வது, எதிர்பாரா செலவுகள் என்ற தலைப்பில் ஏகப்பட்ட செலவுகளை செய்வது, எல்லாவற்றிற்கும் சிகரமாக இஷ்டப்படி இலவசங்களை அள்ளி இறைப்பது போன்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
இவற்றை உணர்ந்து தன் தவறை சரி செய்வது தமிழக அரசின் கடமை, பொறுப்பு!

வளர்ச்சி திட்டங்களையும், தமிழக முதல்வரின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும் மதித்து, தமிழக முதல்வர் கேட்கும் தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டங்கள்- குறிப்பாக காவிரி - குண்டாறு இணைப்பு மற்றும் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கான நிதிச்சுமையை பகிர்ந்துகொள்வது, கூடன்குளம் மக்களுக்கான மறுவாழ்வு திட்ட நிதி போன்றவை அத்தியாவசியமானவை! எனவே இரு அரசுகளும் இணக்கமாகச் செயல்பட்டு தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்!


5.6.2012

No comments: