Friday, August 30, 2013

கருப்புப் பணம் கையகப்படுத்தப்படுமா?



கறுப்புப் பணத்தை ஸ்வீஸ்நாட்டு வங்கிகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும்...என்ற முழக்கம் சில ஆண்டுகளாக வலுத்து வந்தது. இதைத் தொடர்ந்து இந்த முழக்கத்தை 2009- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க முன்வைத்தது. 2011-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ÔÔகறுப்புபண முதலைகள் குறித்த பெயர்களை வெளியிடுவதில் மத்தியஅரசுக்கு என்ன தயக்கம்?,ÕÕ என வினா எழுப்பியது.

இத்தனை விதமான நெருக்கடிகளையடுத்து தற்போது ஸ்வீஸ் நாட்டு அரசாங்கத்துடன் இந்திய அரசு அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புபணத்தை முதலீடு செய்துள்ளவர்களின் பெயர் விபரங்களை கேட்டுப் பெறுவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது, இனிமேல் இதனால் நம் நாடு அந்த கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு மீட்டெடுத்துவிட முடியும் என்று நம்பப்படுகிறது.

இது சாத்தியமா?
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு 25லட்சம் கோடியிலிருந்து 75லட்சம் கோடி வரை இருக்கலாம் என பரவலாகப் பேசப்பட்டபோதிலும் ஸ்வீஸ்நாடே தந்துள்ள தகவல்படி சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களின் பணம் உள்ளது. மற்ற எந்த நாட்டினரைவிடவும் இந்தியர்களே மிக அதிகமாக கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளனர். இந்தியர்களை ஒப்பிடும் போது இதில் மூன்றில் ஒரு பங்கு கூட ரஷ்யர்கள் போடவில்லை. நான்கில் ஒரு பங்கு கூட பிரிட்டிஷார் போடவில்லை, பத்தில் ஒரு பங்கு கூட சீனத்தவர் போடவில்லை!
சென்ற ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் ஸ்விஸ்வங்கியில் பணம் போட்டுள்ள 2,000 இந்தியர்கள் குறித்த விரிவான விபரங்களை வெளியிட்டது. யார் யார்? எந்தெந்த வங்கிகளில்? எத்தனையெத்தனை கணக்குகள்? எவ்வளவு பணம்? என்ற அனைத்து விபரங்களுமே அதில் இடம்பெற்றிருந்தது. இந்த பெயர்பட்டியலில் தமிழக பிரபலங்கள்- குறிப்பாக முன்னாள் பிரதமர், இந்நாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர், அவரது குடும்பத்தினர், பிரபல தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அதோடு இந்திய மற்றும் மாநில அளவில் ஊழல்களில் அடிபட்ட பலரது பெயர்களும், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட்டில் சம்பந்தப்பட்டோர் பெயர்களும் இடம் பெற்றன.
11ஆம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட வரலாறுகள் தான் எத்தனையத்தனை?
இன்று நம் இந்தியர்களன்றோ இங்கிருக்கும் மக்களை வறுமையில் ஆழ்த்தி வெளிநாடுகளுக்கு நம் செல்வங்களை கொண்டு சென்று குவிக்கின்றனர். இந்த பணத்தை மீட்டெடுத்து இந்தியாவிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எவரெவர் வாயிலாக நடக்க வேண்டுமோ அவர்களில் பிரதானமானவர்களே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற கசப்பான உண்மைகளை நாம் நெஞ்சில் நிறுத்தி தான் இந்த பிரச்சினை தீர்க்க வழி தேடவேண்டியுள்ளது.

இந்தச் சூழலில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்கள் விழித்துக்கொள்ள போதுமான அவகாசம் முன்பே தரப்பட்டுவிட்டது. இப்போதும் தரப்பட்டுள்ளது. மீண்டும் அப்பணத்தை அவர்களாகவே கொண்டுவர இந்திய அரசு சில சலுகைகள் தரக்கூடும் என நாம் நம்பலாம்!
இந்த வகையில் அந்நிய நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தில் ஐந்து சதவிதம் மீட்டெடுக்கப்பட்டால் அதுவே பெரும் சாதனையாக இங்கே பிரகடனப்படுத்தப்படும்.
ஏற்கெனவே இந்தியாவிற்குள் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளதாக பிரபல பொருளாதார நிபுணர்களும், ஊடகங்களும் எழுதிவந்தபோதும் அவை எதுவும் இதுவரை மீட்டெடுக்கப்படவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
எப்படியெப்படியோ உழைத்து குடும்பத்தினரை காப்பாற்ற முட்டி மோதி, போராடி பாடுபடும் கோடானுகோடி மக்களின் உயிர்துடிப்பான செயலாற்றல்களின் விளைவே இந்தியா இன்னும் செழித்திருக்கக் காரணமாகும்!

இந்திய மக்களின் சேமிப்பு, பண்பாடு மற்றும் ஒழுக்கம் சார்ந்த அறநெறிகள், ஆன்மீக ஆற்றல் போன்றவையே, இந்தியாவை யார்யாரெல்லாம் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் வீழ்த்தப்படாமல் உயிர்த்திருக்க காரணமாகும்.
இந்தியர்களின் சாத்வீக குணமே ஊழல்வாதிகளுக்கு சாதக அம்சமாயுள்ளது.

பொழுதெல்லாம் நம் செல்வங்கள் கொள்ளைகொண்டு போவதோ?
என பாரதியார் குமுறியது இன்றும் பொருந்துகிறது.

1.5.2012

No comments: