Friday, August 30, 2013

உன்னத பதவிகளில் வேண்டாம் அரசியல்


அரசியல் சட்ட வரைமுறைகள், நிர்வாக விதிமுறைகள் போன்றவை இருப்பதால் தான் இந்தியா இன்னும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

உயர்ந்த பதவிகளில் உன்னதமான மனிதர்கள் உட்காரும் போது மேற்படி அம்சங்கள் அவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. அதே இடங்களில் மோசமான மனிதர்கள் வரும்போது அவர்கள் வரம்பு மீறி போகாத வண்ணம் நாட்டை காப்பாற்றுவது சட்டங்களும், நிர்வாக விதிமுறைகளுமே!
இந்திய தேர்தல் ஆணையர், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தகவல் ஆணையர் போன்றவர்களை நியமிப்பதில் பிரதமர், சட்ட அமைச்சர், தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு முடிவெடுக்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி ஆதரித்துள்ளார்.

மேற்படி மூன்று உயர்பதவிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான பதவிகள். இவை மூன்றுமே அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அமைப்புகள்!
இந்தியா சுதந்திரம் பெற்றது தொடங்கி இருக்கும் அமைப்புகள் இந்திய தேர்தல் கமிஷனும், ‘CAGஎனப்படும் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமுமாகும்! இதன் தலைவர்களை பிரதமர் பரிந்துரைக்க, குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பிற்பாடு சமீபத்தில் உருவானது தகவல் அளிக்கும் ஆணையமாகும். இதன் தலைவரை பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கேபினேட் அமைச்சரோடு கலந்து ஆலோசித்து நியமிக்கிறார்.

இதுவரையிலுமான இந்த மூன்று அமைப்புகளின் செயல்பாட்டில் அரசியல் குறுக்கீடுகள், அத்துமீறல்கள், அநியாயங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்பதை எவரும் ஒத்துக் கொள்வர். இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக முதல்முதலாக பதவிஏற்ற சுகுமார்சென் தொடங்கி ஆர்.கே.திரிவேதி, பெரிசாஸ்திரி, டி.என்.சேஷன், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபால்சாமி, தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி வரையிலுமானவர்களில் நவீன் சாவ்லாவை தவிர்த்து அனைத்து ஆணையர்களும் அப்பழுக்கற்ற யோக்கியமானவர்கள்! மக்களிடம் மரியாதை பெற்றவர்கள்!
 அதேபோல் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் வரிசையில் டி.என்.சதுர்வேதி தொடங்கி வி.என்.காகுல் தற்போதுள்ள வினோத்ராஜ் வரையுள்ள 11 ஆணையர்களுமே பரிசுத்தமானவர்கள். எந்தக் குற்றச்சாட்டிற்கும் ஆட்படாதவர்கள்!

இதில் தலைமை தகவல் ஆணையரை எதிர்கட்சித் தலைவரை ஆலோசித்து தேர்ந்தெடுப்பதன் மூலம் எந்த புரட்சியும், புதிய நம்பிக்கையும் பிறந்ததாகச் சொல்ல முடியாது! ஆனால் இதில் ஒரு ஜனநாயக மரபு கடைபிடிக்கப் படுவது வரவேற்கத் தக்கதே!

 தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் நியமனத்தில் எதிர்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜின் எதிர்ப்பு அலட்சியப்படுத்தப்பட்டு, கே.சி.தாமஸ் நியமிக்கப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற தலையீட்டால் பதவிவிலக நேர்ந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாயிருந்த தினகரன் போன்றவர்கள் ஊழல் புகார்களுக்கு உள்ளாகியுள்ளதையும் மறுக்க முடியாது! அத்வானி கூறிய அந்தக் குழுவில்  அபிப்ராய பேதங்கள் உருவாகி, அரசியல் மேலோங்கி, அவலங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது. அப்போது ஆளும் தரப்பின் ஈகோ மேலெழுந்து அரசியல் உள்நோக்கங்கள் அரங்கேறுவது தவிர்க்க முடியாததாகிவிடும்!

ஆகவே, இப்போது இருக்கும் நடைமுறையில் இல்லாத அரசியல் தலையீடுகள், புதிய நடைமுறையில் புகுந்துவிடும் வாய்ப்புமுள்ளது. பா.ஜ.க ஆளும் கட்சியாக இருந்து ஆட்சியை நடத்தியபோது தோன்றியிராத யோசனையை அல்லது செயல்படுத்தாத ஒரு திட்டத்தை, இப்போது கூறுவது ஏற்புடையதல்ல! அத்வானி அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று கூறும் கருணாநிதி தமிழக தலைமை தேர்தல் ஆணைய நியமனத்தில் எதிர்கட்சித் தலைவரை புறக்கணித்து தன்னிச்சையாக ஒரு தகவல் ஆணையரை எல்லோர் எதிர்ப்புகளையும் ஏகோபித்து பெற்ற ஒரு தகவல் ஆணையரை நியமித்தவர் என்பதை எங்ஙனம் மறக்க இயலும்?

6.6.2012

No comments: