Friday, August 30, 2013

நிலக்கரி சுரங்க ஊழல்!


ஊழல் ஊழல் ஊழல்...
எங்கெங்கும் ஊழல், எல்லாவற்றிலும் ஊழல்... எதில் தான் இல்லை ஊழல்? என்ற நிலைமைக்கு நம் இந்தியத் திருநாடு வந்துவிட்டது போலும்!
ஆனால், இப்போது வெடிக்கத் துவங்கியுள்ள ஊழல் இது வரையிலும் நடந்துள்ள ஊழல்களுக்கெல்லாம் தாய் ஊழல்என நமது பாராளுமன்ற உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள், நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக மத்திய தணிக்கை அதிகாரி மார்ச் மாதமே பிரதமருக்கு அறிக்கை தந்துவிட்ட நிலையிலும், இன்னும் அவை ஏன் பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை என்ற கேள்விக்கணைகளால் கலவரப்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களவை மூன்று முறையும், மக்களவை ஒரு முறையும் ஒத்தி வைக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மூன்றாண்டுகளில் 30 மெகா ஊழல்களா...?” என எதிர்கட்சியினர் எரிமலையாக வெடித்தனர்.
ஆனால், “இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை முறையாக வெளியான பிறகே இது பற்றிப் பேச முடியும்என நிலக்கரி துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் சமாளித்துள்ளார்.
அப்படி என்ன ஊழல் நடந்துள்ளது சிகிநிஎனப்படும் மத்திய தணிக்கை துறை என்ன கூறியுள்ளது.

* இந்தியாவில் உள்ள 155 நிலக்கரி சுரங்களில் உள்ள நிலக்கரியை தோண்டி எடுக்க சுமார் 100 தனியார் நிறுவனங்களுக்கு - குறிப்பாக மின் உற்பத்தி, எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு 2004-2009 காலகட்டத்தில் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மாபெரும் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது.
* இந்த உரிமம் வழங்கப்பட்டதில் சரியான சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இஷ்டம் போல் தரப்பட்டுள்ளன.
* மிக, மிக குறைந்த விலைக்கு இந்த உரிமங்கள் தரப்பட்டுள்ளன.
* தேவையற்ற சலுகைகள் இத்தனியார் நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளன.
* இந்நிறுவனங்கள் தாங்கள் பெற்ற உரிமத்தை மற்ற சில நிறுவனங்களுக்கு விற்று பெரிதாக லாபம் ஈட்டியுள்ளன. பல சுரங்கங்களில் அதிக அளவில் தோண்டி அள்ளப்பட்டுள்ளன. மற்ற சில சுரங்கங்களில் வேலைகளே தொடங்கப்படவில்லை!
* இதன் மூலம் இந்திய அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவை சி.ஏ.ஜி அறிக்கையின் சாராம்சங்களே! இன்னும் இது முழுமையாக வெளிவரும் பட்சத்தில் பெரும் அரசியல் புயல் அடிக்கக்கூடும்! அந்தப் புயல் சில அதிகாரிகளை, ஒரு சில அமைச்சர்களை சிறைக் கம்பிகளின் பின்னால் தூக்கி எறியக் கூடும் என எதிர்பார்க்கலாம்! மத்திய அரசே ஆட்டம் காணலாம்!

நிலக்கரி என்பது இந்திய மண்ணுக்கு இயற்கை தந்த கொடையாகும்!
இந்திய மின் உற்பத்தியில் 50% நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களில் இருந்தே பெறப்படுகிறது. ஆகவே தான் 1973லேயே அனைத்து நிலத்தடி நிலக்கரி செல்வதாரங்களையும் இந்திய அரசு தேசியமயமாக்கியது. நமது இந்திய நிலக்கரி சுரங்கங்களில் சுமார் 50 பில்லியன் டன் நிலக்கரி இருக்கலாம் எனவும், அவை இன்னும் 20 வருடத் தேவைகளை நிறைவு செய்ய வல்லது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் நிலக்கரி மூலமான அனல் மின் உற்பத்தியில் ஒரு லட்சம் மெகாவாட் அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது.

ஆனால் நமது விலைமதிக்க முடியாத இந்த இயற்கை செல்வத்தை - கறுப்பு வைரத்தை தனியார் நிறுவனங்களின் பகாசூரக்கொள்ளைக்கு இடம்  கொடுத்து விட்டதால் எதிர்கால இந்தியாவின் மின் உற்பத்தி கேள்விக்குள்ளாகியுள்ளது. சி.ஏ.ஜி கூறியுள்ளபடி, ‘இந்த உரிமம் வழங்கப்பட்டதன் நோக்கம் தோல்வியடைந்துள்ளதுஎன்பது கடந்த மாதம் இந்திய அனல் மின் நிலையங்களில் நிலவும் இமாலய நிலக்கரி பற்றாக்குறையும், அதன் விளைவாக பல்லாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவலும் உறுதி படுத்துகின்றன!

ஆகவே, அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட்இருக்க, தனியார் நிறுவனங்கள் நமது இயற்கை வளங்களை சூறையாட அனுமதிக்கப்பட்டது ஏன்? என்ற விசாரணை முழுமையாகவும், வெளிப்படையாகவும், நடந்து உண்மைகள் வெளிக்கொணர வேண்டும். இனி இது போன்ற ஊழல்களுக்கு இடமளிக்காத வண்ணம் முறையான சட்டவிதிமுறைகள் வகுக்கப்படவேண்டும். இந்த ஊழல் சம்பந்தப்பட்டவர்களை, சமரசத்திற்கு இடமின்றி தண்டிக்க வேண்டும்!

23.5.2012

No comments: