Friday, August 30, 2013

நித்தியானந்தர் துறவியா?



ஆன்மீக பூமி என்ற அடையாளம் பாரததேசத்திற்கு பன்நெடுங்காலமாகவே உண்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னணி கொண்ட ஆன்மீகச் செறிவைக் கொண்டவை நமது ஆன்மீக வேர்கள். நாம் அறிந்து கொள்ளத் தவறிய ஆயிரமாயிரம் ரிஷிகள், துறவிகள் இந்த பாரத பூமியை பண்படுத்தியுள்ளனர். வரலாற்று தகவல்களுக்குள் வந்தவர்கள் என்ற அளவிலேயே புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், திருஞானசம்மந்தர், ராமானுஜர், இராமலிங்க அடிகள் என்றழைக்கப்பட்ட வள்ளலார்... போன்ற மாபெரும் ஆன்மீக ஆளுமைகளை உலகிற்கு தந்த புண்ணிய பூமி இது.
துறவு என்ற அதி உன்னத நிலை நாடாளும் மன்னர்களைக் கூட தன் முன் மண்டியிட வைக்கும் வல்லமை கொண்டது. இதனால் காலமாற்றத்தில் துறவு கொண்டோர் காலடியில் மன்னர்களும், வசதிபடைத்தவர்களும் தங்கள்சொத்துகளை குவித்தனர். அவற்றை நிர்வகிப்பதன் மூலம் ஆன்மீகத்தை பரப்பி தழைத்தோங்கச் செய்யலாம் என்ற வகையில் ஆன்மீக மடங்கள் உருவாயின. எங்கே சொத்துக்கள் வரம்பின்றி குவிகின்றனவோ அங்கே சர்ச்சைகளும் தவிர்க்கமுடியாதவையாகின்றன. சமீபத்தில் 1500 ஆண்டு பழமைவாய்ந்த மதுரை ஆதினமடத்தின் 293வது ஆதினகர்த்தராக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டதை பல்வேறு ஆன்மீக அமைப்புகள், ஆதினங்கள், இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து கண்டணங்கள் வெளியிட்டுள்ளன.

நித்தியானந்தர் மீது பாலியல் வழக்கு, வருமானவரி ஏய்பு வழக்கு, பொருளாதாரமோசடி வழக்குகள் உள்ளன. தன் மீதுள்ள கறைகளை மறைக்கவும், மதுரை ஆதினத்திற்கென உள்ள நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்றும் நோக்கத்திலேயேயும் அவர் ஆதினப்பதவியை பெற்றுள்ளார். இதற்காகத்தான் அவர் பல கோடி ரூபாயை முந்தின ஆதினகர்த்தருக்கு தந்துள்ளார். மேலும் அவர் சைவ வேளாள மரபில் வந்தவரல்லஎன்பது எதிர்க்கும் தரப்பினரின் வாதம்.

என் மீதான வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. மதுரை ஆதினத்தின் சொத்துகள் மீது எனக்கு ஆசையில்லை. மதுரை ஆதினத்தின் புகழை உலகநாடுகள் பலவற்றில் பரப்பி ஆன்மீகப் பணியை விரிவுபடுத்தவே இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். நானும் சைவ வேளாளர் மரபில் வந்தவன் தான்...என்பது  நித்தியானந்தரின் விளக்கம்.

ஆனால் இந்த விளக்கத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தன்னிடம் விளக்கம் கேட்காமல் தன்மீது அவதூறு பரப்பிய ஆதினகர்த்தர்கள் மீது கூட்டுச்சதி, மானநஷ்டம், அவதூறு, ஜாதி குறித்த அவதூறு, மத உணர்வுகளை தூண்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு போடப் போவதாகவும், சில ஆதினமடங்களுக்கு எதிராக தன் சீடர்கள் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

அன்பு, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவற்றின் அடையாளங்களாக விளங்க வேண்டிய ஆன்மீக வழிகாட்டி, சாதரணமனிதரைப் போல் உணர்ச்சிவசப் பட்டுள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மேலும் அவர் ஆதினகர்த்தராக பதவியேற்றபோது மதுரை மடத்திற்கு சொந்தமான நான்கு பெரிய கோயில்கள் உள்ளன. அவையனைத்தும் கைப்பற்றப்பட்டு அவற்றை புனரமைக்கும் பணிகளை நடத்த உள்ளோம். அதே போல மதுரை மடத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டிய மீனாட்சி அம்மன் கோயிலையும் எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும் கைப்பற்றி மடத்தின் கீழ் கொண்டு வருவேன்என அறிவித்தார்.

அவர் குறிப்பிட்டுள்ள கோயில்கள் அனைத்தும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்வருகின்றன. அதுவும் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலம் என்பது ஒரு ஜனநாய அரசாங்கத்தின் கீழ் உள்ள மக்களின் விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்!
நித்தியானந்தரின் பேச்சில் அவரது அதிகார எல்லைகளை விரிவுபடுத்தும் ஆசைகளும், தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பணியவைக்கும் ஆவேசமும் வெளிப்படுகின்றன. அவர் அரசாங்கத்தையும், மக்களையும் கூட சவாலுக்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. இவை ஆன்மீகத்திற்கு பெருமையல்ல.

3.5.2012

No comments: