Friday, August 30, 2013

ஊரக வேலைவாய்ப்பா? ஊழலில் மக்கள் பங்கேற்பா?



மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்றொரு மிக பிரம்மாண்டமான திட்டம், நமது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்திலேயே இது போல் அதிக மக்கள் பயன்பெறும் ஒரு திட்டம் வேறொன்று உதாரணத்திற்கு கூட கிடையாது.
சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர்.

தற்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.யான தம்பித்துரை வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “சென்ற ஆண்டு இத்திட்டத்தில் தமிழகத்திற்கு 2,900கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 5,800 கோடி ஒதுக்கப்படும்என்று அறிவித்துள்ளார். இந்த திட்டம் பிப்ரவரி 2006 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு முக்கிய நோக்கங்கள் இதற்கு சொல்லப்பட்டன. ஒன்று, எளிய, ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 100 நாட்களாவது உத்திரவாதப்படுத்தி, வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது. மற்றொன்று இத்திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களை தூர்வாறுவது, கால்வாய்வெட்டுவது போன்ற வேலைகள் தரப்பட்டு, அதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பது.

நோக்கங்கள் உன்னதமானவை. ஆனால்  இந்த ஆறாண்டுகால அனுபவத்தில் இது எந்த அளவு நடைமுறை சாத்தியமாகி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
முதல் ஓரிரு ஆண்டுகள் ஓரளவு சிறப்பாகவே இத்திட்டம் அமலாகி, பற்பல ஆக்கபூர்வமான வேலைகள் நடந்தேறின. ஆனால் தற்போதோ, தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் மேற்கொண்ட ஆழமான ஆய்வில், செலவழிக்கப்படும் பணத்திற்கு 10 சதவிகித வேலை நடந்தேறினாலே அதிசயம் தான் என்ற நிலை தோன்றியுள்ளது.
காரணங்கள் என்ன?
இதில் நடக்கும் அபரிமிதமான ஊழல்கள், அதாவது, மஸ்டர் ரோல் ஊழல்!
* நூறு பேருக்கு வேலை தந்து, 150 பேருக்கு தந்ததாக எழுதும் கணக்கு.
* ரூ 100க்கு பதில் குறைவான ரூபாய் தந்து, மக்களை ஏமாற்றும் போக்கு.
* ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்களை, பேருக்கு அழைத்து வேலைவாங்குவது போல் பாவ்லா காட்டி உழைப்பில்லாமல் பணம் தருவது... போன்ற அம்சங்கள் இத்திட்ட அமலாக்கத்தில் காணப்படுகின்றன.

இதனால் ஒழுங்காக மனசாட்சிபடி வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வே மக்களிடமிருந்து விடுபட்டு கவர்மெண்ட் பணம், சும்மா தந்தா என்ன?’ என்ற மனநிலையே பரவலாக காணப்படுகிறது.
இது மிகவும் ஆபத்தானது.

தங்கள் கிராமத்திற்கு, தாங்கள் பயன் பெறுவதற்கான ஒரு திட்டத்திற்கு, பணம் பெற்றுக் கொண்டும் வேலைசெய்ய ஆர்வமின்றி மக்கள் மனநிலை இருக்கிறதென்றால், ஊழல் நிர்வாகம் மற்றும் ஓட்டுவங்கி அரசியலின் விளைவாகத் தான் இதை கருதவேண்டும்.
ஏழை எளியமக்களின் ஒரே மூலதனம் உழைப்புதான்!
உழைப்பே கௌரவம்! உழைப்பு ஒன்றே அவர்கள் சொத்து!
உழைப்பு என்பது வாழ்க்கை நெறி!
இதிலிருந்து மக்கள் மனநிலை பிறழ்ந்து போவதற்கா ஆண்டுக்கு சுமார் 70,000 கோடி செலவிடப்பட வேண்டும்..?

 எனில், இந்தியாவின் எதிர்காலம் என்னாவது?
ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் எண்ணம் தலைமைக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் உழைக்கும் எண்ணம் மக்களுக்கு வரும். மகாத்மா காந்தியின் பெயரால் இத்திட்டம் அமலாகிறது. காந்தியின் கட்டளை ஏற்று, அன்று நாடெங்கும் மக்கள் தங்கள் உழைப்பை சிரமதானம் என்ற பெயரில் உற்சாகமாகத் தந்தனர். அதில் எத்தனையெத்தனையோ உன்னத காரியங்கள் நடந்தேறின. வறுமை தாண்டவமாடிய அன்றைய காலகட்டத்தில் கூட பணம் தேவைப்படாமல் உழைக்கும் மனம் இருந்தது!
யோசிப்போம்!
* திட்டத்திற்காக மக்கள் என்பது தவறு.  எப்படியாவது செலவழித்து கணக்கு காட்ட வேண்டும் என்ற நிலைமாறி,
மக்களுக்காக திட்டம், திட்டத்தினால் நாடு பெறும் நன்மைகள்என்ற கண்ணோட்டம் உறுதி பெற வேண்டும்.

அபரிமிதமான நிதி, அளப்பறிய மக்கள் சக்தி இரண்டையும் முறையாக கையாளும் அரசியல் அறமும், நிர்வாகத்திறமும் இணைந்தால், இத் திட்டத்தால் இந்திய நாடே இமலாயப் பலன்களைப் பெறும் என்பது உறுதி!
கூடுதல் நிதியை தமிழகத்திற்கு கேட்டுப்பெற்றது வரவேற்கத்தக்கது என்றாலும், உரிய பலன்கள் நாடும், மக்களும் பெறும் வண்ணம் தமிழக முதல்வர் இத்திட்டத்தை அமலாக்க வேண்டும்.


17.5.2012

No comments: