Friday, August 30, 2013

இன்னுமோ தீண்டாமை...?



இன்னும் எத்தனைகாலம் தான் தொடருமோ இந்த தீண்டாமைக் கொடுமைகள்?
டீ கடைகளில் இரட்டை டம்பளர் முறை
கோயில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை
செருப்பு போட்டுக் கொண்டு தெருவில் நடக்கக்கூடாது
தோளில் துண்டு போட அனுமதி இல்லை...
இதெல்லாம் 50 வருடத்திற்கு முந்திய நடைமுறைகளல்ல!
இப்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கும் தீண்டாமைக்கொடுமைகள்!

தற்போது வெளிவந்துள்ள செய்தி நம்மை வெட்கி தலைகுனிய வைக்கிறது. விருதுநகர் மாவட்டம் கொட்டாகாய்ச்சியேந்தல் பஞ்சாயத்து தலைவர் கருப்பன் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
பஞ்சாயத்து தலைவரான கருப்பன் அவர்களை தரையில் அமரவைத்து துணைத்தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நாற்காலியில் அமர்ந்து கூட்டம் நடத்துகிறார்கள். பஞ்சாயத்து கிளார்க் உட்பட யாரும் அவரது பேச்சை சட்டை செய்வதில்லை. இது கருப்பனின் புகார்! இது போன்ற சம்பவங்கள் இங்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரங்கேறிக் கொண்டுள்ளன... என்பதை இங்கு மீளவும் ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்!
பஞ்சாயத்து தலைவரை குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதி மறுத்து, அடித்தசம்பவம் புதுக்கோட்டை கருவடத்தெரு பஞ்சாயத்தில்!
பஞ்சாயத்து கட்டிடத்திற்குள் கூட நுழைய அனுமதியில்லை என வெளியில் கட்டாந்தரையில் உட்கார வைக்கப்பட்ட தொப்பம்பட்டி வாகரைத் தலைவர்!

மரியாதையா கேட்குறே...என கொலைவெறித் தாக்குதலுக்குள்ளான திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி... என பட்டியல் போட்டால் மாளாது...!

தமிழ்நாட்டில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டகாய்ச்சியேந்தல் பஞ்சாயத்துகளில் பலவருடங்களாக தேர்தலே நடத்த முடியாத அவலம் தொடர்ந்ததும், அப்படியே நடந்தாலும் அதில் ஆதிக்க சாதியினர் நிறுத்திய ஒருவர் வெற்றி பெற்றவுடன் ராஜீனாமா செய்ததும் வரலாறு! பிறகு இந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ 25லட்சம் சிறப்பு ஒதுக்கீடு செய்து எப்படியெப்படியோ ஆதிக்க சாதி மக்களை தாஜா செய்து தேர்தல் ஒரு வழியாக நடத்தப்பட்டது.

உசிலம்பட்டி, திருமங்கலம் போன்ற பகுதிகளில் சில பஞ்சாயத்துகள் ஏலம்விடப்பட்டு, ஏலத்திற்கு எடுத்தவர் தனக்கு கட்டுப்பட்ட தாழ்த்தப்பட்டவர் ஒருவரை பொம்மை தலைவராக்கி ஆட்டுவிப்பதும் அரங்கேறிவருகிறது. இப்படிப்பட்ட இடங்களில் தலைவர் கைகட்டி ஓர் ஓரமாக நிற்பதும், போடச் சொன்ன இடத்தில் கையெழுத்து போடுவதுமான அவலங்கள் அரங்கேறுகின்றன.
பகுத்தறிவு பேசும் திராவிடகட்சிகள் இதில் பாராமுகமாயுள்ளன! செல்வாக்குள்ள பெரியகட்சிகள் இதை தடுக்க திராணியற்று அல்லது விருப்பமற்று  வேடிக்கை பார்க்கின்றன.
பெரியார்திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்களும், மதுரை மக்கள் கண்காணிப்பகம் போன்ற என்.ஜி.ஓக்களுமே இந்த தீண்டாமையை எதிர்கின்றன!
தாழ்த்தப்பட்டவர் குடியரசு தலைவராகலாம், மாநில முதல்வராகலாம், மாவட்ட கலெக்டராகலாம், நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சபாநாயகராகலாம்... ஆனால் அவை எங்களை ஒரு போதும் நேரடியாய் பாதிப்பதில்லை!

இங்கே என் கிராமத்தில் எந்த தாழ்த்தப்பட்டவரும் எனக்கு சமமாய் வளர்வது எனக்கு சம்மதமில்லை..என சாதி ஆதிக்கத்தில் புரையோடியுள்ளவர்களை என்று கரை சேர்க்கப் போகிறோம்!
அனைத்து உயிர்களும் ஆண்டவன் படைப்பே!

அவரவர் செயல்களுக்கு மாத்திரமல்ல, எண்ணங்களுக்கான எதிர்வினையிலிருந்து கூட எவரும் தப்ப முடியாது!
தீண்டாமை அனுஷ்டிப்பவர்களை சமரசமின்றி சமூக பகிஷ்காரம் செய்யவேண்டும்! தண்டிக்க வேண்டும்!

7.6.2012

No comments: