Wednesday, July 3, 2013

தனி ஈழம் சாத்தியமா?



``தனி ஈழம் அமையவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் நிறைவேறாத ஆசை. தனி ஈழத்திற்காக இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்`` என்று தி.மு. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் தமிழர்கள் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக, தேவைகளுக்காக தவித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் அதற்காக நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று அங்கிருக்கும் அரசோடு பேசிக் கொண்டிருக்கும் நிலையில், இம்மாதிரியான ஒரு கருத்து தமிழகத்தின் ஒரு முதுபெரும் தலைவரிடமிருந்து வெளிப்பட்டால் அது அந்த இருதரப்பினருக்கும் இடையேயான இணக்கமான பேச்சுவார்த்தையை பாதிக்காதா? இது பேசத்தகுந்த நேரம் தானா? என்பது மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழர்களிடமிருந்தோ அல்லது தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த இலங்கை அரசியல் கட்சியிடமிருந்தோ கூட இந்த கோரிக்கை சமீபகாலமாக வெளிப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம்.
தமிழர்களாகிய நமக்கு உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமையக் கூடாதா? என்ற எண்ணம் அல்லது நப்பாசை இருக்கலாம்! ஆனால் யதார்த்தங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை சுமார் 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு மிகச் சிறிய தீவு. அதில் தற்போது இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 11 சதவிகிதம் மட்டுமே! வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த வகையிலும், போரில் இறந்தவகையிலும் சுமார் ஆறேழ சதவிகிதம் குறைந்துள்ளது தமிழர்களின் எண்ணிக்கை! இப்போது அங்கிருக்கும் 11 சதவிகிதத் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் சிங்களமக்கள் பகுதிகளில் அவர்களோடு கலந்து வாழ்கிறார்கள். அப்பகுதியிலேயே நிலம், வீடு வாங்கி உத்தியோகமோ, வியாபாரமோ செய்கிறார்கள். அத்துடன் யாழ்பாணத்தில் சுமார் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக வசிக்கும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எப்போதும் தனி ஈழத்திற்கு எதிரான கருத்து நிலையே கொண்டுள்ளனர். காரணம் அவர்கள் உயர்ஜாதி இந்து தமிழர்களிடம் இன்று வரை அங்கீகாரமும், அரவணைப்பும் பெற முடியாதவர்களாக அதே சமயம் சிங்கள அரசுதரப்பில் ஆதரவு பெற்றவர்களாக உள்ளனர். இதோடு இலங்கையில் 5.5 சதவிகிதமாக வாழம் தமிழ் முஸ்லீம்களும் தனி ஈழத்தை ஆதரிக்க முடியாமைக்கு இதே காரணத்தையே கொண்டுள்ளனர். மேலும் முஸ்லீம்கள் இலங்கை அரசிலும் பங்குவகிக்கின்றனர்.
1980களில் தமிழர்கள் அதிகமாக வாழம் பகுதிகளாக வடக்கு கிழக்கு மாகணங்கள் அறியப்பட்டன. இன்றோ சிங்களர் பகுதிகளில் சுமார் இரு தசாப்தங்களாக தமிழர்கள் வாழ்வது போலவே தமிழர்கள் பகுதிகளிலும் சிங்களர்கள் குடியமர்ந்துள்ளனர். மேலும் ஒரு சின்னஞ்சிறிய தீவு இரு தனி நாடுகளானால் தனித்தனிராணுவம், வெளிஉறவுத்துறை ஒப்பந்தங்கள் என்ற சூழல்களில் அவை இரண்டுமே வல்லரசு நாடுகளின் கைப்பாவையாக மாறிவிடும் ஆபத்துள்ளது. இச் சூழல் இந்தியாவிற்கும் பேராபத்து.
இலங்கை என்பது தனிப்பட்ட ஒரு நாடு. ஜனநாயக சோஷலிச குடியரசாக தன்னை பிரகடனப் படுத்தியுள்ள நாடு. அது .நாவின் உறுப்பினராக உள்ளது. அணிசாராநாடுகள், சார்க் நி77, காமென்வெல்த் போன்றவற்றில் அங்கம் வகிக்கிறது.
எனவே இலங்கையை இரு கூறாக பிரிக்கும் முயற்சியில் இந்தியஅரசு இறங்கினால் சர்வதேச சமுகம் அதை அனுமதிக்காது.
இந்தியா அதற்கு துணைபோனால் பிறகு காஷ்மீரை இங்கே தனி நாடாக்கவேண்டியதிருக்கும்! எனவே ஒன்றுபட்ட இலங்கை என்பதும், அதில் இரு இனத்தவரும் சம அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்பதுமே இந்திய அரசின் திடமான நிலை பாடு இன்று இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் இதுவே. இச்சூழலில் நாம் இங்கிருந்து கொண்டு அவர்களை பிரிவினைக்கு தூண்டிவிட்டால், அது மேன்மேலும் அவர்களை பாதிக்கும். அங்கேயுள்ள இணக்கமான சூழலை கெடுக்கும்.
நம்மால் முடிந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வோம். அல்லது நல்லதை நினைத்து அமைதிகாப்போம்.
மீண்டும் ஒரு மீளமுடியா துயரத்திற்கு அவர்களை ஆளாக்க வேண்டாமே!

18.4.2012

No comments: