Wednesday, July 3, 2013

மனிதநேயம் இல்லாத மருத்துவத்துறை ஊழல்கள்



உலகத்திலேயே அதிக அளவு நோயாளிகளைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது யுனெஸ்கோவின் கணிப்பு.
இந்திய மக்களில் கணிசமானவர்கள் பசியாலும், வறுமையாலும், சுகாதார சீர்கேட்டினாலும் நோய்வாய்ப்படுகின்றனர். இப்படி நோயில் வீழ்ந்தவர்கள் தாங்களாகவே நோய் எதிர்ப்பாற்றல் கொண்டு தேறினால் தான் பிழைக்க வழியுண்டு என்ற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் நம் இந்திய அரசோ சுமார் ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே மருத்துவத்திற்கு என நிதி ஒதுக்குகிறது. ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளோ ஆறு சதவிகிதம் ஒதுக்குகிறது. இப்படி ஒதுக்கப்பட்ட ஒரு சதவிகிதம் நிதி இது வரை எப்படி செலவழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தற்போது உத்திரபிரதேசத்தின் முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி .கே.சுக்லா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
நாட்டையே உலுக்கி எடுத்த இந்த உத்திரபிரதேச ஊழல் சம்பவம் பல திகில்களையும், அதிரடி திருப்பங்களையும் உள்ளடக்கியதாகும்...! தேசிய சுகாதார மேம்பாட்டு திட்டம் என்பது இந்தியாவில் மிகவும் பின்தங்கி உள்ள 18 மாநிலங்களில் மட்டும் அமலாகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 10,000 கோடி அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் ஸ்வாகா செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் போலிகளை வாங்கிய வகையிலும், பொய்டாக்குமெண்டுகளை உருவாக்கிய வகையிலும் இந்த ஊழல் அரங்கேறி உள்ளது.
இந்த ஊழல் அன்றைய முதல்வர் மாயாவதியின் ஆசியோடு நடைபெற்றுள்ளதோ என்று மக்கள் வலுவாக சந்தேகம் கொள்ளும் சம்பவங்கள் அநேகம் நடந்தேறின.
இந்த ஊழல் வெளிப்படத் தொடங்கியதும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகளான பி.பி.சிங், ஆர்யா ஆகிய இருவர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதற்கடுத்து மேலும் நான்கு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்தனர். சுகாதார அமைச்சர் பாபுசிங் குஷ்வாகா கைதாகி பின் விடுதலை ஆகிறார். அதே போல் தற்போது கைதாகியுள்ள .கே.சுக்லாவும் ஏற்கெனவே கைதாகி அரசியல் நிர்பந்தங்களால் பெயிலில் விடுதலையானவர் தான்!
மேற்படி கொலையுண்ட அதிகாரிகள் எங்கே நம் ஊழலை அம்பலப்படுத்தி விடுவார்களோ... என்று .கே.சுக்லாவிற்கு ஏற்பட்ட பயமே கொலைகளுக்கான காரணமாயிற்று என்று சி.பி. சொல்கிறது. இந்த சம்பவத்தில் மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் கைதாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ஆயினும் இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தண்டிக்கப்படபோவதில்லை என நாம் நம்பலாம்!
மலேரியா, காலரா, வைரஸ் காய்ச்சல், மஞ்சக்காமாலை, டி.பி, ஆஸ்த்துமா, சர்க்கரைவியாதி, ஊட்டச்சத்தின்மை... போன்றவற்றால் நாளும் நாளும் மக்கள் மடிந்து கொண்டிருக்க மருத்துவ துறையிலே அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணி அமைத்து கொள்ளை அடிப்பது தொடர்கதையாக உள்ளது.
சுகாதார அமைச்சராக பொறுப்பேற்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் சுத்தமானவர்களாக இல்லாமல் போவதால் தான் மக்கள் உயிரோடு அநாயசமாக ஊழல் விளையாடிவிடுகிறது. ஆகவே குறைந்த பட்சம் இனி மருத்துவத்துறைக்கு நியமிக்கப்படும் மந்திரிகளும், அதிகாரிகளும் மட்டுமாவது நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாகும்!
ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்றவற்றால் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்கள் - உடலில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்களா? மருத்துவ துறையில் ஏற்படும் ஊழல் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்களா? என்பது பட்டிமன்ற விவாதத்திற்கு உதவலாம்!
மொத்தத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நேர்மையின்மையே இந்த மனித நேயமில்லாத மருத்துவத் துறை ஊழல்களுக்கு காரணம்.
மொத்தத்தில் மனிதநேய பற்றாக்குறையே எல்லா பாதிப்புக்கும் காரணமாகும்.

6.5.2012

No comments: