Wednesday, July 3, 2013

எது உண்மையான தமிழ் வருடப்பிறப்பு



தமிழகத்தில் தையா? சித்திரையா? எது தமிழ் வருடப்பிறப்பிற்கு உகந்தமாதம்? என்பதில் தகதகக்கும் விவாதங்கள் அனல் பரப்பிக் கொண்டுள்ளன. விவாதங்கள், முரண்பட்ட கருத்துமோதல்கள் போன்றவை ஆரோக்கியமாக நடக்கும் பட்சத்தில் அவற்றிலிருந்து வெளிப்படும் உண்மைகளால் ஒரு சமுதாயம் வளர்ச்சி நோக்கி பயணிக்கும். ஆனால் அதுவே வெறுப்பு, துவேசத்தின் அடிப்படையில் நிகழ்வதும், வெட்டி விவாதங்களாக அமைவதும் வருத்தத்திற்குரியது.
தைதான் தமிழ்வருடத் துவக்கம் என்பவர்கள் தமிழ்மொழி, இன உணர்வு போன்றவற்றை முன்னிலைபடுத்துகின்றனர்.
சித்திரைதான் தமிழ்வருடத் துவக்கம் என்பவர்கள் இந்துமத பழக்கவழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்களை முன்நிறுத்துகின்றனர். நாம் இப்போது எந்தச்சார்புமற்ற ஒரு நடுநிலைக்கண்ணோட்டத்தில் இந்த பிரச்சினையை அணுகுவோமானால் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நமது தொன்மை நாகரீக மரபு என்பது முழுக்க, முழுக்க இயற்கை சார்ந்ததாக அமைந்திருந்தது என்பதைத்தான்! அதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி, சூரியன், சந்திரன் இந்த மூன்றிற்குமான இயற்கை சுழற்சியை அடிப்படையாக வைத்தே நாள், மாதம், வருடம் என்பதை அளவிட்டார்கள், அதன்படி,
கிழக்கில் உதித்த சூரியன் மேற்கில் மறைந்து மீண்டும் கிழக்கில் எழுந்து வரும் காலகட்டத்தை ஆறு பொழுதாக பிரித்து ஒரு நாள் எனக் கணக்கிட்டனர். பிரகாசமான நிலவு தேய்பிறையாகி மறைந்து பின் வளர்பிறையாகி முழு பிரகாசத்தை மீண்டும் வெளிப்படுத்துகின்ற- அதாவது சந்திரன் பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலத்தை ஒரு மாதம் என்றனர்.
அதேபோல் இளவேனில் தொடங்கி பின்பனிமூடிவதான ஆறுபருவகாலத்தை அதாவது பூமி சூரியனை ஒரு முழுச்சுற்று சுற்றிவரும் காலகட்டத்தை ஒரு வருடம் என்றனர். இதுபோலவே இயற்கை சார்ந்தே சூரியனும் சந்திரனும் பூமித்திய ரேகையை கடக்கும் போது ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் காலத்தை முக்கியத்துவமாகக் கருதினார்கள். ஏனெனில் வருடத்தில் ஒரே ஒரு நாளில் நிகழம் இந்நிகழ்வின்போது பகலும் இரவும் சமமான நிலையில் இருக்கிறது. இதை மையப்படுத்தி இதற்கு நெருக்கமான ஒரு நாளை வருடத்துவக்கமாகக் கொண்டனர்.
இது இளவேனில் காலத்தின் தொடக்கமாகும். தமிழர்கள் மட்டுமல்ல தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள், வடஇந்தியர்கள் என அனைத்து தரப்பினருமே இளவேனில் காலத்தின் ஏதாவது ஒரு நாளையே தொன்று தொட்டு வருடப்பிறப்பாக கருதுகின்றனர்.
இது ஏதோ இந்தியாவில் மாத்திரமல்ல, தொன்மை காலத்தில் மிக உயர்ந்த நாகரீகத்தை கொண்டிருந்த இந்த பூமியிலுள்ள முக்கிய சமுகங்கள் அனைத்துமே கோடையின் துவக்கத்தையே வருடத்துவக்கமாக பன்நெடுங்காலத்திலிருந்து கடைபிடித்து வருகின்றனர். இன்றுவரை இது எங்கேயும்  ஒரு விவாதப் பொருளாகவில்லை, தமிழகத்தைத் தவிர-என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோடைகாலத்தில் சூரியன் தகதகக்கும் போது பெறப்படும் சக்தியால் இயற்கைத் தாவரங்கள், விலங்குகள், புழுபூச்சிகள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுமே புத்துணர்ச்சி பெறுகின்றன. அதனால் தான் தொன்மை மரபுடைய கலாச்சாரங்கள் அனைத்துமே இயற்கை நியதிகளுக்கு ஏற்ப கோடை துவக்கத்தை புத்தாண்டாக கொண்டுள்ளன.
எனவே இதில் இனம், மொழி, மதம்... என்ற எந்த அரசியல் சார்ந்த பார்வைக்கும் இடம் கொடுக்காமல் இயற்கை நியதியை ஏற்போமாக!

17.4.2012

No comments: