Wednesday, July 3, 2013

கரைகாணா காவிரி பிரச்சினை!



வற்றிய ஆறு, வாடிடும் பயிர்கள், கண்ணீரில் விவசாயிகள், கையேந்தும் தமிழகம், கைவிரிக்கும் கர்நாடக அரசு...
இவை ஆண்டுக்காண்டு நாம் அனுபவிக்கும் துயரங்களாகத் தொடர்கின்றன.
உச்சநீதி மன்ற வழிகாட்டுதலில் நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றும், இறுதி தீர்ப்பு ஒன்றுமாக தந்தும் பயனில்லை!
நீர் தரவேண்டிய அரசின் நெஞ்சில் ஈரமில்லை!
நியாயத்தை தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசுக்கு வீரமில்லை! தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு தண்ணீரில்லை!
எனவே இதில் மாற்று வழி என்ன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு பிரச்சினை தீர்வில்லாமல் தொடர்கிறது என்றால் சம்மந்தப்பட்ட இரு தரப்பிலுமே ஏதோ சில தவறுகள் இருந்தேயாக வேண்டும்!
கர்நாடக அரசின் தவறுகள் குறித்து மட்டுமே நாம் காலம்காலமாகப் பேசிவருகிறோம். ஆனால் தமிழக தரப்பு தவறுகள் குறித்தோ, கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தோ நாம் கடுகளவும் அக்கரைகாட்டுவதில்லை!
1974 ஒப்பந்தம் வரையிலும் காவிரியில் நாம் 70 சதவிகிதத்தண்ணீரும், கர்நாடகா சுமார் 30சதவிகிதத்திற்கும் குறைவான தண்ணீருமே பயன்படுத்தி வந்தது. காலபரிமாண விவசாய வளர்ச்சியால் கர்நாடகம் அப்போது சுமார் 10 சதவிகித தண்ணீரை அதிகமாக பயன்படுத்த அனுமதி கோரியது. ஆனால் தமிழகமோ பழைய ஒப்பந்தத்தை அப்படியே நீடிக்கவே அடம் பிடித்தது!
இந்த விவகாரம் குறிப்பிட்ட காலத்திற்குள் விட்டுக்கொடுத்து உடன்பாடு எட்டப்படாததால் கர்நாடகத்தின் விவசாய நிலப்பகுதிகள் அதிகரித்தது. அதனால் அதன் தேவைகள் அதிகரித்தது! எனவே அதன் பிடிவாதமும் வளர்ந்து இன்று உள்ளத்தையும் நாம் இழக்க வேண்டியதாயிற்று.
தீதும் நன்றும் பிறர்தர வாரா- என்பது முன்னோர் வாக்கு!
நமது வறட்டு பிடிவாதங்களே இன்று வாடிடும் பயிர்களுக்கு காரணங்களாகும்!
முதலில் காவிரி நீரில் அரசியல் செய்வதை நாம் அறவே கைவிடவேண்டும்! கர்நாடகத்திடமிருந்து காவிரியை பெறுவதற்கு ஈடாக-பிரதிபலனாக- நாம் அவர்களின் தேவைக்கான பிறிதொன்றை பரிவர்த்தனை கொள்ள வாய்ப்புண்டா எனப் பரிசீலிக்கலாம்!
கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
என பாரதி காட்டிய வழியை கொஞ்சம் பரிசீலிப்போம்!
ஏனெனில்,
உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் உதவவில்லை!
நடுவர் மன்ற தீர்ப்புகளால் கண்ட நன்மைகள் ஒன்றுமில்லை!
மத்திய அரசை நம்புவதை விட மடமை வேறில்லை!
இது தானே நமது அனுபவம்!
ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறும் ஒப்பந்தங்களே இரு தரப்பிலும் நீடித்து நிலைக்கும்!
உலகம் எங்கினும் இது போன்ற ஒப்பந்தங்களே வெற்றி கண்டுள்ளன!
உதாரணத்திற்கு ராவி ஆறு தொடர்பாக பஞ்சாபுக்கும், ஜம்முகாஷ்மீருக்கும் இடையே 1976-ல் ஏற்பட்ட உடன்பாடும், ஒப்பந்தமும் இன்றுவரை தொடர்கிறது. காரணம்; பஞ்சாப் பதிலுக்கு மின்சாரத்தைத் தந்து காஷ்மீரை தன் கவனிப்பில் வைத்துக் கொண்டது!
மொத்தத்தில் பரஸ்பர அக்கரையும், புரிந்துணர்வும் ஏற்பட்டால் தான் தீர்வு. நீதிமன்ற நிர்பந்தங்களால் எல்லாவற்றையுமே நிறைவேற்ற இயலாது.
தேவை ராஜ தந்திரம்
வேண்டாம் ஈகோ யுத்தம்!

29.5.2012

No comments: