Wednesday, July 3, 2013

முடிவிலா பிரச்சினையா முல்லை பெரியாறு?



பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது பெரியாறு அணை பாதுகாப்பு!
முல்லை பெரியாறு அணை பிரச்சினையை முடிவிலா பிரச்சினையாக்கி முரண்டு பிடிப்பதில் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது கேரளா!
33 ஆண்டுகள்! எத்தனையெத்தனை ஆய்வுகள்! மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நீதி மன்றத் தீர்ப்புகள்!
ஆனால் அமைதியடையவில்லை கேரளம்! ஐயோ ஆபத்து என்ற அலறல் அடங்கியபாடில்லை!
உண்மையில் பிரச்சினை என்பது அணை பாதுகாப்பு சம்மந்தமானதல்ல, கேரள ஆளும்வர்க்கத்தின் சுயநலம் சம்பந்தப்பட்டது என்பதே உண்மை!
1979-ல் முதன்முதலாக ÔÔஇப்பிரச்சினை வெடித்தபோது, அன்றைய மத்திய நீர்வளத்துறை ஓராண்டு ஆய்வு நடத்தி அணையின் பாதுகாப்பை உறுதி படுத்தியது. கேரள அரசு நம்பவில்லை!
எனவே அணையை பலப்படுத்தும் முயற்சியை மூன்று கட்டங்களாக மும்முரமாக செய்து முடித்தது தமிழகம். இதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டம் 16 ஆண்டுகள்! செலவோ 25 கோடி! அதன் பிறகும் அணையின் அளவை உயர்த்த அனுமதிக்கவில்லை கேரளம்!
மீண்டும் மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்து அணையின் பலம் இரும்புக்கம்பிகள், கான்கிரிட் கலவைகள் கொண்டு பலப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தது. ஆயினும் கேரளம் தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.
வேறுவழியின்றி உச்சநீதிமன்றம் விரைந்தது தமிழக அரசு!
இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்தால் தேசிய ஒற்றுமைக்கு குந்தகமாகிவிடும். எனவே மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மூன்று நிதிபதிகள் குழு அறிவுறுத்தியது. இது நடந்தது 2001-ல்! அன்று அதை பொருட்படுத்தவில்லை மத்திய அரசு. இன்றுவரை அதை மத்திய அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை!
மீண்டும் உச்சநீதிமன்றக் கதவுகளை உலுக்கத்தட்டியது தமிழகஅரசு! நீதிபதிகள் மூவர் கொண்ட குழு முற்றாக விசாரித்து முழுமையானதொரு தீர்ப்பினை 2006ஆம் ஆண்டு நல்கியது. அதிலும் அணையின் பாதுகாப்பு உறுதியானது.
ஆனால், அதை அமல்படுத்த மறுத்ததோடு, அதற்கு எதிரான ஒரு சட்டத்தை கேரள சட்டமன்றம் உருவாக்கியது.
இது உச்சநீதிமன்ற அவமதிப்பு" என மேல் முறையீடு செய்தது தமிழக அரசு! பலனில்லை! ஐயோ அணை பலஹீனமாக உள்ளது. புதிய அணைகட்டப் போகிறோம் எனக் கேரளம் கூற, மீண்டும் உச்சநீதிமன்றம், ஆய்வுகள், விசாரணைகள் என இழுத்தடிக்கப்பட்டு இறுதியாக அணைபாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது ஏப்ரல் 26-ல்!- இவ்வாண்டு!
இந்த ஆய்வுக்காக அணைப்பகுதிகளில் எட்டு இடங்களில் மிக பிரம்மாண்டமாக செங்குத்தாக மேலிருந்து கீழ் மட்டம் வரை துளைகள் போடப்பட்டன. தீர்ப்பு வந்தவுடனே அவை முறையாக மூடப்பட்டிருக்க வேண்டும் நியாயப்படி! ஆனால் மாதம் ஒன்றுகடந்தும் அவை அடைக்கப்பட அனுமதி மறுக்கப்படுவதால் ஆபத்து ஏற்படவேண்டும், அணை உடைய வேண்டும் என்ற தன் உள்ளார்ந்த ஆதங்கத்தை அமல்படுத்த துடிக்கிறது கேரள அரசு என்பதே உண்மையாகும்! இன்னும் இதை செயல்திறனற்று வேடிக்கை பார்க்கிறது இந்திய அரசு! இதை அலட்சியம் என்பதா? புரியாத புதிர் என்பதா?
இந்தியாவிற்கும், பங்களாதேஷிற்கும் இடையே ஓடுகிறது கங்கை நதி- பிரச்சினை எழவில்லை! உத்திரகாண்ட், ஹரியானா, உத்திரபிரதேசம், ஹிமாச்சலபிரதேசம், டெல்லி என ஐந்தாறு மாநிலங்களில் அமைதியாக பங்கிடப்பட்டு வருகிறது யமுனாநீர்! இது மத்திய நீர்வளத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளது!
இதேபோல் பல நாடுகள் வழியே பாயும் நதிகளாக நைல்நதி, டான்யூப், வால்கா என சிலவற்றை கூறலாம்! அவற்றிலெல்லாம் சில்லறை தகராறுகள் கூட எழவில்லை!
ஆனால் இங்கோ இரு சகோதர மாநிலங்களுக்கிடையே சமரசமற்ற யுத்தம்! பெரியாறில் நாம் பெறுவதோ மொத்தம் 20 டி.எம்.சி, கேரளாவோ 80 டி.எம்.சி! கடலில் கலப்பதோ 70 டி.எம்.சி! கேரளாவில் ஓடும் 44 ஆறுகள் மூலமாக மேற்கு கடலில் கலக்கும் மொத்த தண்ணீரோ  2000 டி.எம்.சி! இதில் நாம் வேண்டுவதோ வெறும் 20 டி.எம்.சி!
ஆறுகளை தேசியமயமாக்கி, அரசியலிலிருந்து ஆறுகளை தனிமைப்படுத்தி, இந்திய மக்களின் இன்றியமையா பிரச்சினைக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும்.

28.5.2012

No comments: