Wednesday, July 3, 2013

விவாதமாகும் சிறுபான்மையினர் உள்ஒதுக்கீடு



சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஒன்றை மத்திய அரசு சென்ற ஆண்டு கொண்டு வந்தது.
அந்த சட்டத்தின் படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டில் 4.5% சிறுபான்மையினருக்கு தரப்பட்டது!
இதை ஆந்திராவின் உயர்நீதிமன்றம் செல்லாது என ரத்து செய்துவிட்டது.
தற்போது, இதற்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான அணுகுமுறை குறித்து இருவேறு விதமான வாதப்பிரதிவாதங்கள் அனல் பறக்கின்றன.
இந்த உள் ஒதுக்கீடு அவசியமா? அவசியமில்லையா? என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளன!
இதன்மூலம் சிறுபான்மையினருக்கு ஆதரவு, எதிர்ப்பு என்பதாக இந்திய சமுகம் பிளவுபடும் அவலமும், அதைக் கொண்டு அரசியல் செய்யும் அவலமும் நடந்து கொண்டு இருக்கின்றன.
எனவே இவ்விசயத்தில் மக்களுக்கு விழிப்பேற்படுத்தி, சில யதார்தங்களை புரிய வைத்து அனைவரையும் இந்தியர்கள் என்ற ஒரு மைய புள்ளியில் நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.
2004-ஆம் ஆண்டு தேர்தலின் போது தான் காங்கிரஸ்கட்சி தேர்தலில் வென்றால் நாங்கள் சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு செய்வோம் என்ற துருப்புசீட்டை ஓட்டு அரசியலுக்கு பயன்படுத்தியது.
அதைத்தொடர்ந்து சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டதும், அது இந்தியாவில் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பின்தங்கிய நிலைமை குறித்து துல்லியமான பதிவுகளை தந்ததும், அவை அரசியல் உள்நோக்கங்களோடு சூடான விவாதப்பொருளானதும் காங்கிரஸ் அரசுக்கு சாதகமானது. 2009 தேர்தலில் மீண்டும் அதே வாக்குறுதி! இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. அது நிராகரிக்கப்பட்டதற்கு நீதி மன்றம் கூறும் காரணம் இது தான்!
இந்த 4.5% த்தில் இஸ்லாமியர், கிறிஸ்த்துவர், சீக்கியர், பார்ச்சிகள் உள்ளிட்ட சுமார் 35 பிரிவினர் வருகின்றனர். இவர்கள் பலவகை மத இன குழுக்களாயிருக்கும் போது, ஒரே (கேட்டகிரியில்) நிலைபாட்டில் எப்படி வைக்கமுடியும்? என்பதே!
இது மிகவு8888ம் நியாயமான கேள்வி. இந்தியாவில் இஸ்லாமியர்கள் 13% கிறிஸ்த்துவர்கள் 2.5% என ஒவ்வொரு சிறுபான்மையினருக்கான சதவிகிதத்தை கணக்கிடும் போது வழங்கப்பட்டிருக்கும் உள் இட ஒதுக்கீடு இவர்களுக்குள் உள் குத்தல்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதே உண்மை!
ஆக, அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ்கட்சி எடுத்த இந்த முடிவை இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரே கடுமையாக எதிர்ப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பின் தங்கிய நிலைமைகள், ஏழ்மை, வறுமை, கல்வி அறிவின்மை போன்றவை இன்று இந்தியாவில் இஸ்லாமியர்கள்  மட்டுமே அனுபவிக்கும் அவலங்களல்ல.
இதற்கு உள் ஒதுக்கீடு என்பது உதவாத தீர்வாகும்!
அதே சமயம் சிறுபான்மையினர் மீது சிறப்பு கவனம் கொள்வதும் நமது தலையாய கடமையே!
ஏனெனில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவது போலவும், கொடுமைப்படுத்தப்படுவது போலவுமான தோற்றத்தை சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் ஆதாயம் கருதி பேசி வருகின்றன. இதுவே தீவிர வாதத்திற்கு வித்திடுகிறது..
பாகிஸ்தானில் சிறுபான்மையின பெண்களும், சிறுவர், சிறுமியரும் கடத்தப்பட்டு கட்டாய மத மாற்றங்கள் நிகழ்வதையும், பலுசிஸ்தான், குவெட்டா போன்ற இடங்களில் இந்துக்கள் குடும்பம் குடும்பமாக  வெளியேறுவதையும் அந்நாட்டு மனித உரிமை கமிஷனே அம்பலப்படுத்தி உள்ளது.
ஆனால் இது போன்ற நிலைமைகள் இந்தியாவில் இல்லை என நாம் பெருமைப்படலாம்.
வேற்றுமைகளை வேரறுப்போம்! ஒற்றுமையை பலப்படுத்துவோம்.
நமது தேசம்காந்தி தேசம்! ஜீவகாருண்யத்தை மதிக்கும் தேசம்! நாம் அனைவரும் இந்தியர். அனைவரையும் உயர்த்துவோம்! அனைவரும் வாழ்வோம்! வளர்ச்சியும், வீழ்ச்சியும்  அனைவருக்கும் பொதுவாகட்டும்!
அரசியல் ஆதாயங்களுக்காக பகைமைத் தீயை மூட்டாமல், அன்பும், அறிவும் ஒருங்கிணைந்து நல்ல முடிவை எட்ட அனைத்து தலைவர்களும் முயற்சி செய்ய வேண்டும்.

30.5.2012

No comments: