Wednesday, July 3, 2013

பக்குவப் படவேண்டிய பாராளுமன்ற ஜனநாயகம்



1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது, இந்திய மக்களால் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசாங்கம் ஏப்ரல் 1952-ல் பதவி ஏற்றது. அப்போதும் கூட பிரிட்டிஷ் அரசியல் சட்டமே நமது பாராளுமன்றத்தை வழிநடத்தியது. மே-13 1952-தான் அம்பேத்கார் தலைமையிலான அரசியல் அமைப்பு சட்டக் குழுவினர் உருவாக்கி தந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அன்று தொட்டு கணக்கிட்டு நாம் தற்போது இந்தியப் பாராளுமன்றத்தின் 60வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறோம்.
இத்தருணத்தில் நமது பாராளுமன்ற ஜனநாயகம், அது செயல்படும்விதம், அதன் உறுப்பினர்களின் நடவடிக்கைகள்... போன்றவை குறித்து திருப்தி, அதிருப்தி, சமாதானம், விமர்சிப்பவர்களின் மீதான எதிர்விமர்சன பாய்ச்சல் ஆகிய அம்சங்களை நாம் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளில் கண்டோம்!
உண்மையில் நம் நாட்டில் ஜனநாயகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இன்னும் நாம் கூடுதல் சுயவிமர்சனத்துடன், கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் இதில் ஈடுபட்டால் நமது ஜனநாயகம் இன்னும் வலுப்படும்.
ஒரு பரந்துபட்ட பார்வையில் நமது பாராளுமன்றத்தை பார்க்கும் போது சில யதார்த்தங்களை புறந்தள்ள முடியாது.
நமது பாராளுமன்றம் என்பது ஓய்வு பெறும் வயதைக்கடந்த முதியோர்களால் 43 சதவிகிதம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் சேவை, அறிவு, திறமை, உழைப்பு... என்ற தகுதிகள் பரிசீலிக்கப்படாமல் வாரிசு அடிப்படையில் பாராளுமன்றத்தில் காலடி பதிந்துள்ளவர்கள்.
90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாக ஜாதி பிரதிநிதித்துவ பலத்தின் பின்னணியில் தேர்வானவர்கள்.
98 சதவிகிதத்தினர் பணபலத்தின் பலத்தோடு இந்த தகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
மக்களவையில் 30%, மாநிலங்களவையில் 16% க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
ஆயினும் இவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இச் சூழலில் நமது பாராளுமன்ற ஜனநாயத்தின் நம்பகத்தன்மை மற்றும் முதிர்ச்சியை விமர்சனத்திற்குட் படுத்த விரும்புகிறோம்!
இரட்டைஆட்சி உரிமையின் வாயிலாக 1919 தொடங்கி தான் பிரிட்டிஷார் நம்மை பாராளுமன்ற ஜனநாயகததிற்கு பழக்கப்படுத்தினார்கள். அப்போது மெத்தப்படித்தவர்கள், அறிவாளிகள், உயர் அந்தஸ்துள்ளவர்களே பெரும்பாலும் வாய்ப்புபெற்றனர். தற்போது கணிசமானவர்கள் சாதாரண நிலையில் இருந்து இந்த சாத்தியப்பாட்டை பெற்ற வகையில் நாம் சந்தோஷப்படலாம்!
அன்று சபை ஆண்டுக்கு 160 நாட்கள் நடைபெற்ற நிலைமாறி, தற்போது சராசரியாக 70 நாட்களே நடக்கிறது. அதிலும் கூச்சல், ரகளை...
மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நேரம் வீணாக்கப்பட்டு, அடிக்கடி சபை ஒத்தி வைக்கப்படுகிறது.
ஆரோக்கியமான விவாதம் என்பது மிக அபூர்வமாகவே இடம் பெறுகிறது.
மக்களுக்குத் தேவையான சட்டங்களை உருவாக்குவது, திட்டங்களைத் தீட்டுவது என்பது மிகக்குறைவான நேரங்களே நடக்கிறது, அதிலும் பல விவாதத்துடன் நின்றுவிடுகிறது. நிலைக்குழுவில் ஒப்புதல் பெற்ற சட்ட முன் வடிவுகள் பாராளுமன்றத்தில் தடுக்கப்பட்டுவிடும்! இன்றும் சில பாராளுமன்றத்தின் மக்களவையில் ஒப்புதல் பெற்று மேலவையில் ஆண்டுக்கணக்கில் ஒப்புதலாகமலே தொங்கும்!
முக்கியமான பல விவாதங்கள் நடக்கும் நேரங்களில் மிகக்குறைவான உறுப்பினர்களே சபையில் இருக்கிறார்கள்! கணிசமான உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கெடுப்பதிலோ, கேள்வி கேட்பதிலோ ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சிலர் அத்திபூத்தார் போல் என்றாவது பேசுவதுண்டு. ஒரு சிலர் எதுவும் பேசாமல் தங்கள் முழு பதவி காலத்தையும் முடித்துக் கொள்வதுண்டு. ஆனால் ஏறத்தாழ அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்கு வழங்கப்படும் அளப்பரிய சலுகைகள், சௌகரியங்களை அனுபவிப்பதில் எந்தக் குறையும் வைப்பதில்லை.
இந்த நிலைமைகள் மாற வேண்டும்.
குறைந்தபட்சம் ஓர் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு நாட்களாவது பாராளுமன்றம் நடைபெற வேண்டும். அதில் அனைத்து உறுப்பினர்களும் உயிர்ப்போடு பங்குபெற்று, ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். உணர்ச்சிகளைக் கடந்து, அறிவு பூர்வமாக மக்கள் நலன் சார்ந்து பேசுவதற்கு, விவாதங்களில் பங்கெடுப்பதற்கு அனுபவமில்லாத உறுப்பினர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம்!
நமது பாராளுமன்ற ஜனநாயகத்தை குறை கூறிக் கொண்டிருப்பதை விடவும், அந்த குழந்தையை வளர்த்தெடுப்பதில், அது எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சந்திக்கும் விதத்தில், அதை தயார்படுத்துவதற்கான பொறுப்பு ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டு என்பதை உணர்வோமாக!

14.5.2012

No comments: