Wednesday, July 3, 2013

சீரழியும் நிலையில் சிறு, குறுந்தொழில்கள்!



"தமிழகத்தில் புதிதாக 7 தொழிற்பேட்டைகள் திறக்கப்படும்" என தமிழக தொழிற்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறு, குறுந்தொழில்களை வளர்க்க, ஊக்குவிக்க திருநெல்வேலியில் இரண்டு இடங்களிலும், விழுப்புரத்தில் மூன்று இடங்களிலும், வேலூர் மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு இடத்திலும் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
இவை நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டிய அறிவிப்பு என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் தற்போது சுமார் 50 இலட்சம் பேர் சிறுகுறுந்தொழில்களை நம்பி வாழ்கிறார்கள். சுமார் ஏழு லட்சம் சிறு,குறுந்தொழிலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் எவ்வளவு தொழிற்பேட்டைகள் ஆரம்பித்தாலும் வரவேற்க்கலாம். நன்று. ஆனால் இதற்காக மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில் 50 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது நாளும் நலிந்துவரும் சிறுகுறுந்தொழில்களை தூக்கி நிறுத்த செலவில்லாத சில மேம்பாட்டு திட்டங்களை சிறு குறுந்தொழில் முகவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடும் மின்வெட்டு காரணமாக சிறுகுறுந்தொழிற்சாலைகள் இயங்க இயலாமல் ஸ்தம்பித்துள்ளன. பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமே தங்குதடையற்ற மின்சார விநியோகம் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுகுறுந்தொழில் முதலீட்டாளர்கள் வேண்டுவதெல்லாம் பெரிய தொழிற்சாலைகளைக் காட்டிலும் மிக அதிகமான வேலைவாய்ப்பை வழங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், எளிய மக்களின் வாழ்க்கையையும் உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருக்கும் சிறு, குறுந்தொழிலகங்களுக்கு தங்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கப்படவேண்டும் என்பதே! அதோடு சிறு குறுந்தொழில் தொடங்க தடையாகவுள்ள பல அரசு விதிமுறைகள், நடைமுறைவிதிகள் எளிமைபடுத்தப்பட்டு சிறு குறுந்தொழில்களுக்கு உடனடியாக லைசென்ஸ் மற்றும் கிளியரன்ஸ் வழங்க வேண்டும். மேலும் அந்தந்த தொழிலகங்களோ அல்லது கூட்டாக இணைந்தோ மின் உற்பத்தியில் ஈடுபட்டு தாங்களே அரசை எதிர்பாக்காமல் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
ஏற்கெனவே உள்ள தொழிற்பேட்டைகளில் சாலைவசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும்.
மிக அத்தியாவசியமாக  சிறு குறுந்தொழில்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு உகந்த சந்தையை அரசு உருவாக்கித் தர வேண்டும். இதில் உள்ள அதிக வரிகள் குறைக்கப்பட்டால் இன்னும் அதிகமாக சந்தைப்படுத்த ஏதுவாகும்! இதனால் வேலைவாய்ப்புகள் கூடுதலாகும்!
உண்மையில் தற்போதுள்ள தொழிற்பேட்டைகள் நலிவுற்று மின்பற்றாக்குறையால் ஸ்தம்பித்து, அடிப்படை வசதிகளற்று உள்ளன. இந்த குறைகள் அனைத்தும் களையப்பட்டு ஒவ்வொரு தொழிற்பேட்டையும்  மிஷிளி 9000 சான்றிதழ் பெறும் வகையில் தரம் உயர்த்தப்பட வேண்டும். இதை தமிழக அரசு செய்ய முன்வரும் பட்சத்தில் பல இலட்சம் குடும்பத்தில் விளக்கேற்றிய புண்ணியம் இந்த அரசுக்கு கிடைக்கும்!

11.5.2012

No comments: