Wednesday, July 3, 2013

பொதுவிநியோகமா? பொது சூறையாடலா?



2011-ஆம் ஆண்டு நமது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முடிவற்று தொடர்ந்து வண்ணம் உள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜும் இதைக் கடுமையாக விமர்சித்து, `இது தமிழகத்திற்கு பொருந்தாது` என்றார்.
இவ்வளவு கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படும் `உணவு பாதுகாப்புச் சட்டம்` என்பது என்ன?
அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களை மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதில் மூன்று பிரிவுகளாக மக்களை பாகுபடுத்தி உள்ளது இச்சட்டம். அதன்படி, வறுமையின் பிடியில் உள்ளோர், நடுத்தர நிலையில் உள்ளோர், சலுகைகள் தேவைப்படாதோர் எனப்பிரித்து முதல் பிரிவினருக்கு அரிசி கிலோ ரூ3 என்றும், அடுத்த பிரிவினருக்கு 50% சலுகை விலையிலும் பரிந்துரைக்கிறது. அதாவது அரிசியை கிலோ ரூ22க்கு கொள்முதல் செய்தால் வறுமை பிரிவுக்கு ரூ 3க்கும், நடுத்தரபிரிவுக்கும் ரூ 11க்கும் வழங்க வேண்டும்.
அதோடு இப்படி சலுகைகள் பெறுவோர் கிராமப்புறத்தில் 75% என்றும், நகர்புறத்தில் 40% என்றும் வரையறுக்கிறது. இதைத்தான் நமது மாநில அரசு ஏற்கமறுக்கிறது. ``தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 1,97,00000 ரேஷன் கார்டுகளில் தாங்களே, `வேண்டாம்` என்று கூறிவிட்ட சுமார் 12 லட்சம் குடும்பங்களைத் தவிர்த்து சுமார் ஒரு கோடியே 85லட்சத்து சொச்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியை தருகிறோம். நாங்கள் பாகுபடுத்தி பார்க்க விரும்பவில்லை`` என்பது மாநில அரசின் வாதம்.
ஆனால், இதை மத்திய அரசு ஏற்கவில்லை, ``தமிழகத்தைக் காட்டிலும் மிகவும் பின் தங்கிய பல மாநிலங்களே இதை ஏற்று நடைமுறைப் படுத்தும் போது தேவையில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் முற்றிலும் இலவசமாக அரிசி தரும் மாநில அரசின் தன்னிச்சை போக்கு ஏற்கமுடியாதது`` என மத்திய அரசு கூறிவிட்டது.
நாம் மத்திய அரசின் கருத்தோடு உடன்படுகிறோம். உண்மையில் தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்க பல அத்தியாயங்கள் தேவைப்படும் எனினும் ரத்தினச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள் முதல் செய்வது தொடங்கி, அதை அரவை நிலையங்களுக்கு கொண்டுவருவது, சேமிப்பு கிடங்குகளில்வைப்பது, அங்கிருந்து பொதுவிநியோகத்திட்ட மையங்களுக்கு கொண்டுசெல்வது, அதன் பிறகு நியாயவிலை
கடைகளுக்கு எடுத்துவருவது, கடைசியாக பொதுமக்களுக்கு விநியோகிப்பது வரையிலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஊழல், ஊதாரித்தனம், அதிகார துஷ்பிரயோகம், அலட்சியப் போக்கு, அபரிமிதமான விரயங்கள்... அரங்கேறுகின்றன.
இந்த வகையில் 25% போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பது, 60 சதவிகித குடும்பத்தினர் ரேஷன் அரிசியைத் தவிர்ப்பது, வாங்குபவர்களிலும் கணிசமானோர் அதை விற்றுவிடுவது, கணிசமான ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது மற்றும் வியபாரிகளுக்கு கூடுதல் விலையில் விற்கப்படுவது போன்ற அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் பொதுவிநியோகத்திட்டத்தில் 10 சதவிகிதமாவது உரிய மக்களுக்கு போய் சேருகிறதா? என்பது சந்தேகத்திற்குரியதாகும்!
இதற்காக மத்திய அரசு சுமார் 68,000 கோடியும், மாநில அரசு ரூ 4,000 கோடியும் அள்ளி இறைக்கின்றன. இந்தப்பணம் பெருமளவு அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், கடத்தல்காரர்கள், வியாபாரிகள், ரைஸ்மில் உரிமையாளர்கள், பொதுவிநியோகத்திட்ட ஊழியர்கள், சமுகவிரோதிகள்.. என பலதரப்பிலும் பட்டுவாடா ஆவதே யதார்த்தமாக இருக்கிறது. அதாவது ஏழைகளின் பெயரிலான திட்டத்தால் ஏராளமானோர் கோடீஸ்வரர்களாக லட்சாதிபதிகளாக வளம் வந்து கொண்டுள்ளனர். எனவே பொதுவிநியோகத்திட்டம். அதிலும் குறிப்பாக முற்றிலும் இலவசம் என்ற அம்சங்கள் கண்டிப்பாக மறு பரிசிலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். இவை ஊழலின் ஊற்றுக்கண்ணாகும்! உழைப்பும், சுயமரியாதையும் கொண்ட மக்கள் திரளை சோம்பேறிகளாக்கி கையேந்தும் இழிநிலைக்கு தள்ளுவதற்கா அரசாங்கம் கஜானாவிலிருந்து 65 சதவிகிதத்தை விரயமாக்கவேண்டும்? உணவு பாதுகாப்புச் சட்டம் இருக்கட்டும்! மக்களின் உழைப்பை, சுயமரியாதையை பாதுகாக்கும் சட்டம் வருமா? என்பதே சமுக ஆர்வலர்களின் தீராத கவலையாகும்!

24.4.2012

No comments: