Wednesday, July 3, 2013

மனிதனால் மண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகள்...?



நில அதிர்வு என்றாலே நிலைகுலைந்துவிடுகிறோம். மரணபயம் என்றால் என்ன என்பதற்கு அன்றைய தினம் அவரவர் பெற்ற அனுபவங்களே சாட்சியாகும்! அலுவளகங்களிருந்தும், வீடுகளிலிருந்து அலறித்துடித்தும், அதிர்ந்து நடுங்கியும் வெளியேறிய வெளிரிப்போன முகங்கள் வெளிப்படுத்திய வேதனைகள் எத்தனையெத்தனை?
இந்த அனுபவங்கள் ஒரு விஷயத்தை மனிதனுக்கு ஆழமாக உணர்த்தியது. இயற்கை மிகப்பெரியது - நம் சக்திக்கு அப்பாற்பட்டது . நாம் அதனோடு இணைந்து வாழ்ந்த கலாச்சாரத்திலிருந்து விலகி, அதனை எதிர்த்து, அதன் இயல்புத்தன்மையை சீர்குலைத்து, அதனின்று அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நில அதிர்வுகளுக்கு எத்தனையோ பல காரணங்கள். அதில், இயற்கை சுழற்சியில் ஏற்படும் மாறுதல்கள் முக்கிய காரணமாகும். அந்த இயற்கையின் சுழற்சிக்கு நாம் தரும் இடர்பாடுகள் கணக்கில் அடங்காது.
நிலநடுக்கத்தின் போது கம்பீரமாக நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் ஒரு சில நொடிகளில் பொல, பொல வென்று நொறுங்கி விழுந்து தரைமட்டமாகின்றன. அதே சமயம் அதன் அருகினில் அமைந்துள்ள பூங்காக்களில் உள்ள எந்தச்செடிக்கும் எந்த சிறிய பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த பூகம்பங்களால் ஒரு செடியிலுள்ள பூக்கள் கூட உதிர்வதில்லை.
காரணம் என்ன?
செடியின் வேரும், மண்ணும் கொண்டுள்ள சிநேகம் அப்படிப்பட்டது.
பொக்லைன் இயந்திரத்தால் பூமித்தாயின் மடியைத்துளைத்து நாம் கொண்டுள்ள உறவு எப்படிப்பட்டது?
பூமித்தாயை பொறுமைக்கு இலக்கணமாக கூறுவார்கள். எனினும் நாம் எண்ணற்ற அநீதிகளை அவளுக்கு தொடர்ந்து இழைத்து வருகிறோம் எனும்போது பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு தானே! அவள் பொங்கி எழுந்தால் மனிதகுலத்தால் பொறுக்கமுடியாது. ஆனால் இயற்கையின் அம்சங்களான மரம், செடி, கொடிகளுக்கோ, விலங்குகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
ஆம்! அவை விதிவிலக்குகளே.
இயற்கைக்கு விரோதமாயிருப்பது மனிதன் மட்டும்தானே!
எங்கே பூகம்பம் நிகழும்? எப்போது நிகழும்? என்பதை இதுவரை முன்கூட்டியே எந்த விஞ்ஞான சாதனத்தாலும் துல்லியமாகக்கணக்கிட முடியாது.
ஆனால் மண்ணில் ஊர்ந்துசெல்லும் பாம்புகளால் இந்த பூமிப்பந்தில் எந்த பிரதேசத்தில் பூகம்பம் நிகழும் என்பதை ஒரு வாரத்திற்கு முன்பே உணரமுடியும். இதை பாம்புகள்வெளிப்படுத்தும் உடல்பாஷைகளிலிருந்து உணர்ந்தறிந்து வெளிச்சொன்ன ஆன்மீக அறிவும், கலாச்சாரமும் ஒரு காலத்தில் நம் மரபில் இருந்துள்ளது.
பூகம்பம், சுனாமி போன்ற நிகழ்வுகளுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இப்போதும் சில பறவைகள் வானில் அபயக்குரல்களில் கிறீச்சிட்டு அலறியதை பார்த்ததாக பலரும் சொல்கிறார்கள். மழை, வெள்ளம் போன்றவற்றை எறும்புகளால் நாம் முன்னறிந்து கொள்கிறோம்.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதனால் ஏன் இதை முன்கூட்டியே அறிய முடியவில்லை என்ற சுயபரிசோதனைக்கு நம்மை நாமே உட்படுத்திக் கொள்ளவேண்டும்.
நாம் கொண்ட ஆறாம் அறிவால் அளவற்ற பேராசைகளுக்கு நாம் ஆட்பட்டு இயற்கையிடமிருந்து அந்நியப்பட்டுவிடுகிறோம். உண்மையில் மனிதனும் இயற்கையின் அம்சம் தான். இந்த உடலே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் கூட்டுக் கலவையில் உருவானதேயாகும். இந்த ஜந்தையும் சார்ந்து தான் நாம் வாழ்கிறோம். அதிலும் மண்னோடு மனிதனுக்குள்ள உறவு மகத்தானது.
மண்ணிலிருந்து தான் உணவைப் பெற்று பசி ஆறுகிறோம். மண்ணிலிருந்து நீரைப் பெற்று தாகம் தணிக்கிறோம். மண்ணிலிருந்து விளைந்த பருத்தியைக் கொண்டே உடை தரிக்கிறோம்.
மண்ணில் விளைந்த மூலிகை செடிகளிலிருந்து நோய் நீங்கி சுகம்பெறுகிறோம். மண்ணிலிருந்து தோன்றிய மரங்கள் காற்றை தூய்மைபடுத்தி, சுகமான தென்றலை நாம் சுவாசிக்க உதவுகின்றன. அந்த மரங்கள், செடி, கொடிகள் தரும் தயவால் தான் சுட்டெரிக்கும் சூரிய தகிப்பிலிருந்து தப்புகிறோம். அந்த மண் தந்த மரங்களும், இந்தப் பூமிப்பந்தில் மூன்றில் இருபங்காக இயற்கை வெளியெங்கும் விரிந்து பரந்திருக்கும் கடல் தண்ணீருமே ஆகாய வெளியில் அதிசயத்தக்க மாற்றங்களை உருவாக்கி மழையை தருவிக்கின்றன. இன்னும் என்னென்னவோ எண்ணற்ற பலன்களை பெறுகின்றோம். இப்படி அனைத்து வழிகளிலும் நம்மை அரவணைத்து வாழ்விக்கும் இந்த பூமிக்கு நாம் செய்யும் துரோகங்கள் எண்ணிலடங்காதது....
இயற்கையை அழித்து கான்கிரிட் காடுகளை கட்டமைக்கிறோம். அதற்கு ஆற்றுமணலை அள்ளி, ஆற்றுப்படுகைகளை பள்ளத்தாக்குகளாக்கிறோம். மலைகளை தரைமட்டமாக்குகிறோம்!
பூமியெங்கும் பிளாஸ்டிக்கழிவுகள், பாலீதீன்பைகளை நிறைத்து மண்ணுக்குள் மழைநீர் புகாதவண்ணம் இயற்கை சுழற்சியை இடர்செய்கிறோம்ஆலைக்கழிவுகளால் நிலம், நீர்வளம், காற்று என அனைத்தையும் அசுத்தப்படுத்தி அண்டவெளிகளிலும் அதிர்வை உருவாக்குகிறோம். இதனால் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்குகிறோம். பூவியை வெப்பமயமாக்குகிறோம்! விளை நிலமெங்கும் ரசாயன உரத்தை கொட்டி மண்ணை மலடாக்குகிறோம்.
இந்த பூமியை ரணகளப்படுத்தி நாம் விஞ்ஞான அறிவால் பெருக்கிக் கொண்டே போகும் நுகர்வு கலாச்சார வெறிக்கு ஒரு எல்லையே இல்லாத நிலை உருவாகிவிட்டது.
நிச்சயம் இதன் எதிர்வினையை மனிதகுலம் எதிர்கொண்டேயாக வேண்டும்.
இந்த மண்ணில் மரம், செடி, கொடிகள், பயிர்கள் இல்லாவிட்டால் ஒருசில ஆண்டுகளில் இந்த பூமி அழிந்துவிடுமாம்!
இந்த மண்ணில் புழு, பூச்சிகள் இல்லாவிட்டால் நான்கு ஆண்டுகள் கூட இந்த பூமி தாக்கு பிடிக்காதாம்!
ஆனால், மனிதனே இல்லாமல் போனால் அதனால் இந்த பூமிக்கு யாதொரு சிறுநஷ்டமும் கிடையாது.
இயற்கைக்கு நஷ்டமாகவே மனித குலத்தின் வளர்ச்சி மாறிக்கொண்டிருக்கிறது.
இதற்க்கொரு கடிவாளம் போடவில்லையெனில் நமக்குநாமே அழிவைத் தேடிக் கொண்டவர்களாவோம்!
ஆகவே, இயற்கையோடு இணைந்த வளர்ச்சிப்பாதையை வளர்த்தெடுப்போம். மண்நலம் காப்போம் மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்டெடுப்போம்!

14.4.2012

No comments: