Thursday, June 27, 2013

தங்கத்தை விட தண்ணீர் முக்கியம்!



தண்ணீர் வாரம் தற்போது இந்திய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடக்கவிழாவில் பேசிய பிதமர் மன்மோகன்சிங்கின் பேச்சு மிகவும் அர்த்தம் பொதிந்தது.
தண்ணீர் பிரச்சினை தொடர்பான சகல அம்சங்களையும் பிரதமர் தன்பேச்சில் அலசியிருக்கிறார்.
அதன் சாரம்சம் இவைதாம்.

  • நமது நாட்டில் தண்ணீர்வளம் தாராளமாக இருந்தும் தண்ணீர் பயன்பாடு தட்டுப்பாடாயுள்ளது.
  • தண்ணீர் சேகரிப்பில் திட்டமிடல்இல்லை.
  • நிலத்தடி நீர்வளம் வெகுவாக குறைந்துவருகிறது.
  • தேசிய தண்ணீர் கொள்கை உருவாக்கி மாநிலங்களுக்கிடையிலான நீர்விநியோக பிரச்சினைக்கு தேசிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
  • நிலத்தடி நீரை பொது சொத்தாக்கி, நீர்நிர்வாகத்தை வளப்படுத்த புதியதிட்டம் இயற்ற வேண்டும்.
  • பிரதமரின் இந்த பேச்சுக்கு பின்னணியில் இந்தியாவில் தண்ணீர் தொடர்பாக தற்போது நிலவும் யதார்த்தங்களை நாம் கவனத்¤ல் கொள்ளவேண்டும்.


இந்தியாவில் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா.. என வற்றாத பெரு நதிகளால் அவ்வப்போது மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பலத்த சேதாரம் ஏற்படுகிறது. அதேசமயம் இந்தியாவில் நதி நீரால் நனைக்கப்படாத பிரதேசங்கள் வறட்சியால் வாடி வதங்குகின்றன.
இந்த இரண்டு விளைவுகளுக்குமே ஆண்டுக்காண்டு அரசின் நிதி பெருமளவு விரயமாகிறது.
காரணம் ஆங்கிலேயர் காலத்தால் ஏற்படுத்தப்பட்ட அணைகள் மற்றும் சுதந்திரமடைந்து முதல் இருபதாண்டுகள் இந்தியாவெங்கும் கட்டப்பட்ட அணைகளைத் தவிர்த்து அதற்குபின் பெரிய அணைகள் கட்டுவதில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறு சிறு தடுப்பனைகள் கதவணைகள் கட்ட வேண்டும். கங்கை, காவிரி  இணைப்பு என்ற மாபெரும் திட்டம் எப்போதும் தற்போது சாத்தியமில்லை என்றாலும் ஆங்காங்கே அருகருகேயுள்ள நதிகள் இணைப்பு அந்தந்த மாநில அளவிலும், மாநிலங்களுக்கிடையிலும் விரைவாக நிறைவேற வேண்டும்.
காவேரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்தியும், போராடியும் காலம் தள்ளும் தமிழகம் ஆண்டுக்கு சராசரியாக 100 டி.எம்.சி. காவேரி நீரை கடலில் வீணாக்கி கொண்டிருக்கிறது.
முல்லைப்பெரியாறுக்கு முட்டுக்கட்டைபோடும் கேரள தன் மாநிலம் வழியாக மேற்கு நோக்கி பாயும் நதிகளின் நீரை சுமார் ஆயிரம் டி.எம்.சி.க்கும் அதிகமாக கடலுக்கு தாரைவார்க்கிறது. இதுபோன்ற நிலைக்கான தீர்வு; ஆங்காங்கே சிறிய சிறிய கதவணைகள், தடுப்பணைகள் கட்டுவதேயாகும்.
இதனால் நிலத்தடி நீர்வளம் பெருகுவதோடு, குடிநீர், விவசாயம் அனைத்தின் தண்ணீர்தேவையும் பூர்த்தியாகும்.
ஆக நீர்நிர்வாகத்தில் நாம் உலக அளவில் மிகமிக பின்தங்கியிருக்கிறோம் என்பதே உண்மை!
எனவே நீர்வள நிர்வாகத்தை உறுதிபடுத்த கறாராக சில தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். இவை போர்கால ராணுவ நடவடிக்கைக்களுக்கு இணையாக அமல்படுத்தாவிடில் இருபதாண்டுகளில் இந்தியாவில் தண்ணீருக்காக உள்நாட்டு யுத்தம் உக்கிரமாகிவிடும்.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட்டில் அணைகள் கட்ட, நீர்வளத்தை பாதுகாக்க பெரும் நிதியை ஒதுக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவில் இவை அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டாக வேண்டும்.

நமது நாட்டின் நீர்வளத்தை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் உறிஞ்சி கொழுத்துவருகின்றன. ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின் இந்தியச்சந்தை லாபம் மட்டுமே ஒரு லட்சம் கோடிஇதுபோன்ற நிறுவனங்களுக்கு வரைமுறைவகுப்பதோடு, வரியும் கூடுதலாக விதித்து நமது நீர்வளத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்திய நதிகள், ஆறுகள் பலவற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து அவை பயன்படுத்தவே லாயக்கற்ற அவல நிலை தொடர்வதை தடுக்க அரசு மற்றும் அந்தந்த தொழிற்சாலை பங்களிப்புடன் தண்ணீர் சுத்திகரிப்பு தவறாமல் அமலாக வேண்டும்.

அணைகள் கட்ட பெரும் நிதி ஒதுக்க வேண்டும். அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிமுடிக்க வேண்டும்.

நம் நாட்டின் நீர் ஆதாரங்களை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி சம்பாதிக்கும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வரைமுறை வகுத்து, வரியும் கூடுதலாக வசூலிக்கவேண்டும்.

ஓட்டு அரசியலும், குறுகியநோக்கங்களுமே மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பகிர்வுக்கு தடையாயுள்ளது. ஆகவே பிரதமர் கூறியபடி தேசிய நீர் கொள்கை வகுக்கப்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட நிபுணர்களைக்கொண்ட தேசிய அமைப்பை உருவாக்கி மாநிலங்களுக்கிடையிலான நதிகள் இணைப்பையும், தண்ணீர் பகிர்வையும் சாத்தியப்படுத்தவேண்டும்..
பிரதமரின் பேச்சு வாய்ப்பந்தலாக அமைந்திடாமல், வரவிருக்கும் நற்காலத்தின் அறிகுறியாக, ஆரம்பமாக அமையவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.

12.4.2012

No comments: