Thursday, May 2, 2013

தேர்தல்கமிஷன் VS அரசியல் கட்சிகள்



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தேர்தல் கமிஷனுக்கும், மத்திய அரசுக்குமான மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
நேர்மையான அரசியலை உத்திரவாதப்படுத்த தேர்தல்கமிஷன் சில திட்டங்களை, நெறிமுறைகளை உருவாக்குகிறது.
இது அரசியல்கட்சிகளுக்கு - கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு - அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
தேர்தல்கமிஷனை கட்சிகள் எதிர்க்கக் காரணங்கள் என்ன?

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சமரசம் கிடையாது

கணக்கு அறிக்கைகளை உரிய முறையில் சமர்பிக்காத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும்.

வழங்கப்படும் எல்லா தொகைகளுக்கும் பெயர், முகவரி, பான்நம்பர், செக்கா? ரொக்கமா? போன்ற விபரங்களோடு ரசீது தரவேண்டும்

இந்த நிபந்தனைகளை எப்படி ஏற்கும் அரசியல் கட்சிகள்...?

"ரூ 20,000க்கு குறைவான நன்கொடைகளுக்கு ரசீது கேட்கக்கூடாது" என்பது அரசியல் கட்சிகளின் வாதம்! இது வரையிலும் இதுவே நடைமுறையாகவும் இருக்கிறது. அதனால் இதனை சட்ட ஆணையத்தின் பரிசிலனைக்கு அனுப்பி வைப்பதாக பாவணை காட்டி, சுமார் ஒராண்டு இழுத்தடித்து, தற்போது சட்ட அமைச்சகமே ரூ 20,000க்கு குறைவான நன்கொடைக்கு ரசீது கேட்பதை எதிர்க்கிறது.
இதனால் தேர்தல் கமிஷன் தற்போது தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உண்மையில் தேர்தல் கமிஷன் மக்கள் சார்பாகத்தான் இந்த சீர்த்திருத்தங்களை அமல்படுத்த முனைகிறது.

மூன்றாண்டுகளில் ரூ 172.61கோடி நன்கொடை கிடைத்தாகக்கூறும் பகுஜன் சமாஜ்கட்சி ஒரே ஒரு நன்கொடைக்கான ரசீதைக் கூட தாக்கல் செய்யவில்லை. "அனைத்து நன்கொடைத் தொகைகளும் 20,000க்குள் கிடைத்தது தான்!" என ஒரே போடாக போட்டுவிட்டது பகுஜன்சமாஜ்கட்சி.

ஐந்தாண்டுகளில் 1385கோடி பெற்ற காங்கிரசும், 682கோடி நிதி பெற்றுள்ள பா.ஜ.கவும் தங்களின் பெருமளவு நிதி 20,000க்குள் கிடைத்த தொகை தான் என்றால் - இதை கேட்டு ஏமாறுவது என்பதோ அல்லது இந்த ஏமாற்றுக்கு துணைபோவது தான் தேர்தல் கமிஷ்னின் தலை எழுத்து என்பதோ ஏற்கதக்கதல்ல!

பத்துரூபாய் கொடுத்து அங்கத்தினராகும் எவருக்குமே ரசீது தருவது தான் ஒரு உண்மையான மக்கள் இயக்கத்தின் லட்சணமாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சிறிய நன்கொடையாளருக்குமே கூட, பணம் கொடுத்தற்கான அத்தாட்சியாக ரசீதை மட்டுமல்ல, பணம் எவ்விதம் செலவழிக்கப்பட்டது என்ற தகவலையும் தருவது தார்மீகக் கடமையாகும்.

இதை ஏற்க மறுக்கும் கட்சிகள் உண்மையில் மக்களிடமிருந்து தான் நன்கொடை பெறுகிறார்களா? அல்லது சட்டத்தை மீறி சலுகைகள் பெறும் நிறுவனங்களிடமிருந்து பெறுகிறார்களா? என்ற சந்தேகமே ஏற்படும்.

எப்போது அரசியல்கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகளை வெளிப்படையாக அறிவிக்க முன்வருகின்றனவோ அப்போதே பற்பல பெரும் தீமைகளுக்கு முற்றுபுள்ளி ஏற்பட்டுவிடும்.

ஏனெனில் சட்டவிரோதமாகவும், மறைமுகமாகவும் பெறப்படும் நிதிகளுக்காக சட்டங்கள் வளைக்கப்பட்டு, விதிமுறைகள் திருத்தப்பட்டு பொது நலன்கள் பலியாவது தான் தொடர்கதையாக இருக்கிறது.

எனவே, தேர்தல்கமிஷனின் கரத்தை பலப்படுத்தி, ஜனநாயகத்தை உறுதிபடுத்தவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உள்ளது. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-4-2013

No comments: