Thursday, May 2, 2013

கண்டுகொள்ளப்படாத கட்டாய கல்வி உரிமைச்சட்டம்



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

சட்டம் போடுவதில் யாருக்கும் சளைத்ததல்ல நம் அரசாங்கம்!ஆனால் அது அமல்படுத்தப்படுவது பற்றி போதுமான அக்கறை காட்டுவதில்லை.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை இன்னும் கூட தயக்கமின்றி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை!

இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2010ல் அமல்படுத்தப்பட்டது. "உலகில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இச்சட்டதை இந்தியாவில் அமல்படுத்தாது அவமானம்..!" என சமூக ஆர்வலர்கள் போராடிக் கொண்டுவரப்பட்டதே இச்சட்டம்.

இதன்படி, ஏற்கெனவே இந்திய அரசியலமைப்பு சட்டம் 21A பிரிவில் கூறப்பட்டுள்ளபடி கல்வியை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது அரசாங்கம்.

எனவே அனைத்து குழந்தைகளும் - குறிப்பாக 14வயதுவரையுள்ள குழந்தைகள் - கல்வியை பெறுவது அடிப்படை உரிமையானது! அதை கொடுப்பது அரசின் கடமையானது.

ஆனால் சட்டம் அமல்படுத்தப்பட்டு மூன்றாண்டுகள் ஆகியும் இது இன்னும் சாத்தியமாகவில்லை.
ஏன் சாத்தியமாகவில்லை...?
இதை சாத்தியப்படுத்துவது குறித்த எந்த விசேஷ முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் தற்போதும் கல்விகூடம் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை ஆறுகோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இந்தக் குழந்தைகளை கல்விக்கூடத்தில் சேர்க்கும் முயற்சியாக கூடுதல் பள்ளிகளை ஏற்படுத்தவோ, ஆசிரியர் பணியிடங்களை அதிகப்படுத்தவோ அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இருக்கும் கல்விக்கூடங்களில் உள்ள குறைகளாவது சரி செய்யப்பட்டுள்ளதா என்றால் அதுவும் நடக்கவில்லை...! 

தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் இந்தியாவில் 11லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படாதிருப்பதாக தெரிவிக்கிறது! இருக்கும் ஆசிரியர்களில் எட்டு லட்சத்து 60ஆயிரம் பேர் முறையான பயிற்சியும், திறமையும் இல்லாதவர்கள் என்கிறது! இதனால் 40% துவக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத அவலம் தொடர்கின்றன.

இவை மட்டுமின்றி பெண்கள் படிக்கும் 33% பள்ளிகளில் கழிப்பறைவசதியில்லை பெண்கள் பள்ளிகூடத்திற்கே இந்த நிலை என்றால் ஆண்கள் பள்ளிக் கூடங்களின் நிலை சொல்வதற்கே தகுதியற்ற நிலை!

இப்படி அரசானது கல்விக்கான தனது கடமைகளைச் செய்யாமல், தனியார் பள்ளிகள் 25% ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றது. இதனால் தனியார் பள்ளிகள் நீதிமன்றங்கள் சென்றன. இன்று வரை இதுவும் அமலாகவில்லை. அமலாவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் விளையாட்டுமைதானம் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடியவுள்ள நிலையில் இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால் இவை நெருக்கடிகளை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தக்குழு இன்னும் சில முக்கியமான சில பணிகளையும் செய்ய வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு;
கட்டாயக்கல்வி உரிமைசட்டத்தில் அறிவித்துள்ளபடி பள்ளிக்கூடம் சேர விரும்பும் குழந்தைகளையோ, பெற்றோர்களையோ 'இண்டர்வியூ' செய்யக்கூடாது. ஆனால் இதை பல தனியார் பள்ளிகள் கடை பிடிப்பதில்லை. குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே வடிகட்டி கல்வி கற்காமல் தடுப்பது பெரும்பாவமாகும். அத்துடன் தொடக்க வகுப்புகளில் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெறாத குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புவதும் கல்வியின் உன்னத நோக்கத்திற்கே களங்கமாகும். ஆனால் இவற்றை பல தனியார் பள்ளிகள் தயக்கமின்றி செய்கின்றன. கட்டாய கல்வி உரிமை சட்டத்தால் இந்த களங்கம் கூட கழுவப்படவில்லை - என்பது பெரும் தோல்வியே!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
29-3-2013

No comments: