Friday, May 3, 2013

போலி பாஸ்போர்ட்


                                                                                                                 -சாவித்திரிகண்ணன்

ஜனத்தொகையில் பெருத்த நாடு இந்தியா.
உலகிலேயே மிகக்குறுகிய இடத்தில் அதிகமான மக்களைக் கொண்டுள்ள நாடு இந்தியா!
உலகில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்டது இந்தியா! எனவே உள்நாட்டில் பிழைக்க வழியின்றி வெளிநாடு செல்பவர்கள் கணிசமானோர்!

படித்தவர்கள் அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் வேலைபார்க்கச் செல்கிறார்கள்.
படிக்காதவர்கள் துபாய், சவுதி அரேபியா போன்ற அரபுநாடுகளில் உடல் உழைப்பை தரச் செல்கிறார்கள்.
இவர்கள் மூலம் நமது நாட்டிற்கு கோடிக்கோடியாய் அந்நியச் செலவாணி குவிகிறது.

ஆனால், பாதுகாப்பற்ற வழிமுறைகளில் பிழைக்க வெளிநாடுசெல்வோர் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது.
அதிக எண்ணிக்கையில் நம்மவர்கள் அங்கு குவிவதால் மிக்குறைந்த கூலியைத் தான் தற்போது தருகிறார்கள். அதே சமயம் 12முதல் 16மணிநேரம் வேலை வாங்குகிறார்கள். காலக்கெடு முடிந்த நிலையில் பறித்து வைத்துள்ள பாஸ்போர்ட்டை தர மறுத்து பேரம் பேசுகிறார்கள். இதனால் உழைத்ததையெல்லாம் இழந்து வெறுங்கையோடு வெளிநாட்டில் இருந்து திரும்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனால் தான் நம் நாட்டில் போலிபாஸ்போர்டுடன் தாய்நாட்டிற்கு திரும்புவர்களின் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது.

பாஸ்போர்ட் இல்லாமல் அநாதைகளாக, பயந்து, பயந்து, பதுங்கியபடி அரபு நாடுகளில் அடிமைகளாக, கைதிகளாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அந்த அரசாங்கங்கள் உள்நாட்டில் இருப்பவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வேலைதரவேண்டும் என தற்போது சட்டம் இயற்றி உள்ளதால் மேலும் பல இந்தியர்களின் வேலைகள் பறிபோகக்கூடும்.
இச்சூழலில் அந்தந்த நாடுகளில் செயல்படும் நமது இந்தியத்தூதரகம் மனிதாபிமானத்துடன் இந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

போலிபாஸ்பார்ட்ட என்பது அனைத்து மூன்றாம் உலகநாடுகளிலும் நிகழும் ஒரு இயல்பான செயல்பாடாகிவிட்டது. பாகிஸ்தான், வங்காளதேசம் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் போலிபாஸ்போர்டுடன் வெளிநாடு செல்கின்றனர்.

நமது நாட்டில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களிலிருந்து வெளிநாடு செல்வோரே மிக அதிகம். அநேகமாக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு மலையாளியும் இரண்டு, மூன்று பாஸ்போர்ட்களை சர்வசாதாரணமாக வைத்துள்ளனர் என மத்திய அமைச்சர் வயலார் ரவி அவர்களே ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இந்தியாநாட்டின் தனிச்சிறப்பே அபரிமிதமான மனிதசக்தி இங்கு கொட்டிக் கிடப்பது தான்! அந்த சக்தியை சரியானபடி பயன்படுத்தினால் நாடும், வீடும் ஒரு சேரப்பயன்பெறும்.
அதற்கு உள்நாடுகளில் வேலையின்றி ஏற்படக்கூடிய படக்கூடிய அவஸ்தைகள், அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும்.
மக்கள்தொகையை கட்டுபடுத்த சீனாவைப்போல கறாரான சட்டங்களை இயற்றவேண்டும்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான உண்மைத் தன்மையை விசாரித்து அறிவது காவல்துறையின் கடமையாக உள்ளது. அந்த கடமையில் காவல்துறை தவறுசெய்வது தான் போலிபாஸ்போர்ட் புழக்கத்திற்கு பிரதான காரணமாகிறது. போலிபாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை கைது செய்வது மட்டும் போதாது. ஒரு வகையில் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே! போலிபாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜென்சிகளை முடக்கவேண்டும். இல்லையெனில், தீவிரவாதச் செயல்களுக்கு கூட போலிபாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜென்ஸிகள் துணைபோவதை தடுக்க இயலாது. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-4-2013

No comments: