Wednesday, May 22, 2013

சேது சமுத்திர திட்டம் சாத்தியமா?




சேது சமுத்திர திட்டம் மீண்டும் அரசியல் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்ட பணிகளை மீண்டும் தொடர்ந்தாக வேண்டும் என தி.மு. எம்.பிகள் வலியுறுத்த, அதை எதிர்த்து .தி.மு., பா.. எம்.பிகள் இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோர,. பாராளுமன்றமே ஸ்தம்பித்து அவையை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று!
மக்கள் நலன்சார்ந்தும், நடைமுறை சாத்தியப்பாடுகள் சார்ந்தும் பார்க்கப்படவேண்டிய ஒரு விவகாரம் ஒரு சாரரால் மத உணர்வுடனும், மற்றொரு சாரரால் தமிழர்களின் லட்சியக் கனவு திட்டம் என இன உணர்வுடனும் அணுகப்படுவதால் இத்திட்டம் குறித்த பெரும் குழப்பமே மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
எனவே நம்மைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ள உணர்ச்சி நிலைகளைக் கடந்து அறிவுபூர்வமாக நாட்டுமக்கள் நலன்சார்ந்து இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்பதே நோக்கம்.
1860ல் ஆங்கில கடற்படை தளபதி .டி டெய்லர் என்பவரால் விதைக்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் என்ற விதை நூறாண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் விரும்பப்படும் ஒரு விவாதப் பொருளாகி சுதந்திரம் பெற்ற பிறகு அது விஸ்வரூபமெடுத்து நேரு, இந்திராகாந்தி கால அரசுகளால் கமிட்டிகள் அமைத்து ஆராயப்பட்டது. பிறகு தி.மு. வின் தயவில் மத்திய அரசு இயங்கவேண்டிய சூழலில் 2005 ஜுலை 2ந்தேதி பிரதமர் மன்மோகன் சிங்கால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அப்போது இத்திட்டத்தால் தென் தமிழகம் வளம்பெறும், இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல்கள் இனி சேதுகால்வாய் வழியாக பயணிக்கும் இதனால் பயணநேரம், எரிபொருள் மிச்சம் போன்ற நன்மைகளோடு  தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச முக்கியத்துவம் பெறும் என்று இத்திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது. சுமார் 2,500 கோடி செலவில் 3 ஆண்டுகளுக்குள்ளாக இத்திட்டம் முடிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு இவற்றோடு இத்திட்டத்தால் இராமர் பாலம் இடிபடுகிறது என்ற இந்துத்துவ இயக்கங்களின் எதிர்ப்பும் சேர்ந்து வலுப்பெற்று இத்திட்டம் உச்சநீதி மன்றத்தால் செப்டம்பர் 2007ல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு தி.மு. மற்றும் இடது சாரிகளால் இத்திட்டத்திற்கு மேன்மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தாலும் கூட இது மீண்டும் தொடங்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இதற்கான காரணங்கள் என்ன? எதிர்ப்புகள் கண்டு மத்திய அரசு பின்வாங்கி விட்டதா? உண்மை நிலவரம்தான் என்ன?
சேது சமுத்திர திட்ட கால்வாயின் மொத்த நீளம் 167கி.மீ. இதில் ராமர்பாலம் எனப்படும் ஆதாம்பாலம் பகுதியில் 11 சதவிகிதமும், பாக்ஜலசந்தி பகுதியில் 30 சதவிகிதமும் பணிகள் முடிவடைந்த நிலையில் இத்திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டத்தை மேலும் தொடரமுடியாததற்கு தோண்டப்படும் பகுதியில் மீண்டும், மீண்டும் மணல் சேருவது ஒரு பிரச்சினையாகவும், தோண்டிய மணலை எங்கே கொட்டுவது என்ற நடைமுறைசிக்கலும் ஒரு காரணமென்றால் மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் மதிப்பீடு 4000 கோடி என்ற நிலையை எட்டியதும் ஒரு காரணமாகும்! இவ்வளவு செலவழிந்தாலும் இத்திட்டத்திற்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது என நிபுணர்கள் கூறியவிபரங்களும் முக்கிய காரணமாகும்!
குறுகலானபாதை, குறைந்த ஆழம், சிறிய உள்ளூர்  கப்பல்கள் மட்டுமே பயணிக்கமுடியும், மிகக்குறைந்த வேகத்திலேயே பயணிக்கமுடியும், இதற்கு எரிபொருள் செலவும் கூடும், இதனால் இலங்கையைச்சுற்றி பயணிப்பதற்கும் இப்பகுதி வழியே செல்வதற்கும் நேரம், செலவு போன்றவற்றில் பெரிய வித்தியாசமில்லை. இந்த கால்வாய் பகுதியில் மீண்டும் மீண்டும் மணல் சேர்ந்து கொண்டேயிருப்பதால் பராமரிப்பு செலவு அதிகம் என்று  தொழில் சார்ந்த நிபுணர்களின் கூற்று ஒரு புறமும், இந்த இயற்கை மணல் திட்டுகள் தென் இந்திய கடற்பகுதியில் சுனாமியின் சீற்றத்தை குறைக்கும் அரணாகத் திகழ்கின்றன என்ற சூழலியல் விஞ்ஞானிகளின் கூற்று மறுபுறமாக வலுப்பெற்று இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் கப்பல் போக்குவரத்தில் பலன் பெறும் இந்திய நிறுவனங்கள் எதுவுமே இத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதும் கவனத்திற்குரியது. 3600 வகையான கடற்செடி கொடிகள், உயிரினங்கள், 450 வகை அரிய மீன் இனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பவளபாறைகள் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளன... என மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பிலும் மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது!
29.3.2012

No comments: