Friday, May 24, 2013

தேய்ந்து வரும் தேசிய கட்சிகள்




கவிழுமா, தொடருமா? என்ற வகையில் கர்நாடகா பா.. அரசு நாளும் கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.
எடியூரப்பா இன்று பா..கவின் தேசியத் தலைமையைப் பொறுத்த அளவில் இடையூரப்பாவாகிவிட்டார்.
சட்ட விரோதமாக சுரங்கத்தொழிலில் அத்துமீறி செயல்படும் ரெட்டி சகோதரர்களுக்கு சலுகை காட்டினார் மற்றும் தன் மகனுக்கு தொழிற்சாலைத் தொடங்க தன் பதவியைத் தவறாக பிரயோகித்து நிலம் ஒதுக்கினார், என்ற குற்றச்சாட்டுகளை கர்நாடக மாநில லோக் ஆயூத்தா நீதிமன்றம் தீர விசாரித்து எடியூரப்பாவை, குற்றவாளி என தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வராக எடியூரப்பா தொடர்வது கேள்விக்குள்ளாகி தேசிய விவாதமாகி காங்கிரசைப் பார்த்து ஊழல் கட்சி என்று சொல்லும் பா.. தலைமை எடியூரப்பாவை  அரவணைப்பதா? என்ற தார்மீக ஆவேச குரல்களுக்கு மத்தியில் எடியூரப்பா பதவி விலகினார்.
அதன்பிறகு சதானந்தா கௌடாவின் தலைமையிலான பா.. அரசு அமைதியாகத் தான் சென்றது. ஆனால் பா.. அரசுக்கான பகைமை இன்று வெளியிலிருந்து வரவில்லை. கர்நாடக உயர்நீதி மன்றத்தில் எடியூரப்பாவின் மீது அவசரகதியில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்த கேள்வி பிரதானமாக்கப்பட்டு அதன் காரணமாக வழக்கு தள்ளுபடியானது.
இதில் உயர்நீதி மன்றம் எடியூரப்பாவின் மீது, தவறே இல்லை என எந்த இடத்திலும் ஊர்ஜிதப்படுத்தவில்லை, ஆனால் இதையே தனக்கு கிடைத்த வெற்றியாக அறிவித்துக்கொண்டு 50 எம்.எல்.ஏக்களை அணிசேர்த்துக் கொண்டு மீண்டும் முதல்வர் பதவிக்கு தேசியத் தலைமையை நிர்பந்திக்கிறார் எடியூரப்பா!
எடியூரப்பா மீது இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், பரவலாக அவரது இமேஜ் மக்களிடையே பாதிப்புக்குள்ளாகி இருப்பதாலும் அது பா.. இமேஜை தேசிய அளவில் பாதிப்பதாலும் அவரை மீண்டும் முதல்வராக்குவதா? வேண்டாமா? என பா.. வின் தேசியத் தலைமை பரிதவிக்கிறது.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.. போன்றவற்றின் தலைமை இன்றைய நிலையில் இருபக்கமும் அடிபடும் மத்தளமாகிவிட்டன. இதிலிருந்து கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கல்ல. ஒரு புறம் மாநில கட்சிகள், மறுபுறம் தன் கட்சியின் மாநிலத்தலைமைகள்! மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, உத்திரபிரதேசத்தில் கல்யாண்சிங் என உள்கட்சி பிரச்சினைகளால் பலஹீனப்பட்ட பா.. இன்று கர்நாடகா பிரச்சினையில் கதிகலங்கி நிற்கிறது!
அதேபோல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியாலும், மகாராஷ்டிரத்தில் சரத்பவாராலும் சரிவைப் பெற்றது காங்கிரஸ்!
பல மாநிலங்களில் இழந்த ஆட்சியை மீண்டும் மீட்டெடுக்க முடியவில்லை தேசியகட்சிகளால்..!
இதனால் காங்கிரஸ் இன்று 11 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கின்றது. அதிலும் ஆந்திரா, மகாராஷ்டிரா தவிர்த்து மற்றவை குட்டி மாநிலங்கள், பா..கவோ தனித்து 4 மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளோடு 5 மாநிலங்களிலுமாக 9 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.
சில மாநிலங்களில் இந்த தேசிய கட்சிகளை தேடிக்கண்டுபிடிக்கவேண்டிய நிலையில் தேய்ந்து துரும்பாகிவிட்டன!
அன்று பாரதப் பிரதமராயிருந்த நேருவிடம், மாநில முதலமைச்சர்கள் பதவியைத் துறந்து கட்சியை பலப்படுத்தவேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்து, அதற்கு தானே முன்மாதிரியாகி தமிழக முதல்வர் பதவியைத் துறந்து பக்தவச்சலத்தை முதலமைச்சராக்கினார் காமராஜ். இதனால் காமராஜரின் செல்வாக்கு கடைசிவரை கடுகளவும் குறையவில்லை. அன்று அரசியலில் அறம் இருந்தது.
இன்று அரசியல் அதிக லாபமீட்டும் வியாபாரங்களாகி விட்டன. அதில் பதவிகள் என்பவை பேரம் பேசப்படும் பங்கு வர்த்தகங்களாகிவிட்டன. மக்கள் தொண்டு, நாட்டு நலன் என்பவை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன! இதன் விளைவே இன்றைய நிகழ்வுகள்..!
தேசியத் தலைமையோ, மாநிலத் தலைமையோ நோக்கங்கள் உயர்வாக இருந்தால் இது போன்ற தாக்கங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
20.3.2012

No comments: