Thursday, May 2, 2013

புதிய தொழிற்பேட்டைகளை வரவேற்ப்போம்!


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் சுமார் 60லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்து கொண்டிருப்பன சிறு, குறு, நடுத்தரத் தொழில்களே!
ஆனால் இத்தொழில்கள் வளர்ச்சி பெறுவதற்கான சாதகமான சூழல்களின்றி பெரும் சங்கடங்களை அனுபவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் புதிதாக ஏழு தொழிற்பேட்டைகள் அமைக்க முன்வந்திருப்பது பாரட்டுக்குரியது. சட்டசபையில் தொழிற்துறை அமைச்சர் ப.மோகன் அறிவித்துள்ளபடி, விழுப்புரம் - காட்டுவன்னஞ்சூர், தர்மபுரி - பர்வதனஹல்லி, ஈச்சம்பாடி, அரியலூர் - மல்லூர், கடலூர் - பெரியநெசலூர், ராமநாதபுரம் - சக்கரக்கோட்டை, நாமக்கல் - வேட்டம்பாடி ஆகிய ஊர்களில் தொழிற்பேட்டைகள் அமைய உள்ளன!

இவை, தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை! அதுவும் குறிப்பாக கடந்த ஆறேழு ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்பேட்டை வரவேண்டும் என்ற குரல் பலமாக ஒலித்துவந்தது. ஏனெனில் இம்மாவட்ட மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைதேடி வெளியூர்களுக்கும் பக்கத்து மாநிலங்களுக்கும் செல்லும் அவலநிலை உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திற்கு இரு தொழிற்பேட்டைகள் என்பதை அம்மாவட்ட மக்கள் சூப்பர் - பம்பர் பரிசாகத் தான் பார்க்கின்றனர்.
அதேசமயம் இது அறிவிப்போடு நின்றுவிடக்கூடாது. ஏனெனில் கடந்த காலங்களில் அறிவிப்போடு மறைந்துபோன தொழிற்பேட்டைகள் உண்டு. 

தமிழகத்தில் தொழிற்பேட்டைகளின் பொற்காலம் என்பது காமராஜர் ஆட்சியில் 1960களில் ஆரம்பித்தது. ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை, கிண்டி தொழிற்பேட்டை போன்றவை அப்போது உருவானவை. இன்று சுமார் ஏழுலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஆனால் சமீபகாலமாக இவை மின்வெட்டு காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. சீரான மின்விநியோகம் வழங்கப்படாமல் எப்போது மின்சாரம் - வரும், போகும் என அறியவும் இயலாமல் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுளது. வேலை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன!
குறிப்பாக திருவள்ளூரின் காக்களுர் தொழிற்பேட்டை, கும்மிடிபூண்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளிலுள்ள சிப்காட்கள் பெரும் சிரமதசையில் உள்ளன!

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஒரே கோரிக்கை 'நாளொன்றுக்கு எட்டுமணிநேர சீரான மின்விநியோகம்' என்பது தான்! இதை தமிழக அரசு தயைகூர்ந்து தன் கவனத்தில் இருத்தல் வேண்டும்.

அத்துடன் தொழிற்பேட்டைகளின் சுகாதாரமற்ற சூழல்கள், மாசுபெருக்கம், போக்குவரத்து நெரிசல், ஆகியவை வாழத்தகுதியற்ற நிலைமைக்கு தொழிலாளர்களை நோயில் தள்ளுகின்றன. எனவே இந்நிலை சீர்செய்யப்பெறவேண்டும்.

புதிய தொழில் தொடங்குவோருக்கு உடனடியாக லைசென்ஸ் மற்றும் வசதிகள் உருவாக்கிதரவேண்டும்.

இத்துடன் பெண்களுக்கான தொழிற்பேட்டைகள் ஆங்காங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெண் தொழில் முனைவோர் தரப்பிலிருந்து சமீபகாலமாக மேலெழுந்து வருகிறது.

மகளிர் தொழிற்பேட்டைகளில் உணவுபொருட்கள் தாயரிப்பு, தையற்தொழில் எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, நர்சரி, அழகுகலை, ஸ்கிரிண்பிரிண்டிங் போன்ற பலவற்றுக்கான தேவைகள் நிறைவேறும்! 

மத்திய அரசு நிதி உதவியால் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வரும் சிறு, குறு நிறுவனங்கள் குழும மேம்பாட்டுத்திட்டத்தின் கீழான அந்தந்த தொழில்களுக்கான தொகுப்புகளில் சிறப்பான பொதுவசதிமையங்களை மாநில அரசு உருவாக்கித்தரவேண்டும்.

பழைய தொழிற்பேட்டைகள் நவீனப்படுத்தப்படவேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கே கிடைக்கவேண்டும்.

மொத்தத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் தமிழக அரசிடம் எதிர்பார்ப்பது சலுகைகளல்ல - தொழில் செய்வதற்கேற்ற சாதகமான சூழலையே! அதை சாத்தியபடுத்தினாலே சாதனைகள் பெருகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
03-4-2013

No comments: