Friday, May 24, 2013

தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை குறைப்பதா?




இந்திய தேர்தல் கமிஷனின் செயல்திறனை உலகநாடுகளே வியந்து பார்க்கின்றன.
சுமார் 60 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் தேர்தல்களை பாரபட்ச மில்லாமல் நடத்துவது என்பது கம்பி மீது நடக்கும் கலை!
அதுவும் பாமரர்கள் நிறைந்த, சாதி, மத ஆதிக்கம் மிகுந்த, அரசியல் போட்டாபோட்டிகள், பணபலம், வன்முறை எல்லாம் விளையாடும் தேர்தல்களத்தில் தேர்தலை சம நிலையுடன் நடத்துவது என்பது கைக்குழந்தையுடன் கம்பியில் நடப்பதற்கு ஒப்பாகும்!
இதை இந்திய தேர்தல் கமிஷன் சிறப்பாகவே செய்கிறது. சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், சில இயலாமைகள் தொடர்ந்த போதிலும் ஒட்டு மொத்தமாக மதிப்பிடும் போது இந்திய தேர்தல் கமிஷன் இயன்றவரை தன் எல்லைகளுக்குட்பட்டு சிறப்பாகவே செயல்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்துள்ளன. எனினும் இதில் காங்கிரஸின் மூன்று மத்திய அமைச்சர்கள் வரம்புமீறிப் பேசியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காதது கடும் விவாதத்திற்குள்ளானது.
தேர்தல் மேடைகளில், ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்பதும், எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இடம் கிடைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி தான் என்பதுமாக ஆளும் கட்சியினர் பேசுவது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களை கவலைப்பட வைத்தது. எதிர்கட்சிகளை ஆவேசப்பட வைத்தது. இதனால் தேர்தல் கமிஷன் சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிந்த சூட்டோடு தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்பை குறைப்பது குறித்தும், அதன் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்தும் மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது ஜனநாயகத்திற்கே பேராபத்தாகும்!
இந்திய தேர்தல் கமிஷன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்டது. நீதிமன்றங்களுக்கு இணையானது. தலைமை தேர்தல் கமிஷனர், தலைமை நீதிபதிக்கு இணையான அந்தஸ்த்து உள்ளவர். எனவே அந்த அமைப்பிற்கான அதிகாரங்களும், மரியாதையும் தனித்தன்மை வாய்ந்தது. அதை மதிப்பதே ஜனநாயகத்திற்கு அழகாகும்!
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இன்று எரிச்சலாகத் தெரியும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அவர்கள் எதிர்கட்சி  வரிசையில் இருக்கும் போது அத்தியாவசியமாக மாறிவிடும்! இதை காங்கிரஸ் கட்சி கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியவர்களுக்கு வெறுமே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது, அல்லது ரூ500 அபராதம் விதிப்பது என்பதெல்லாம் போதுமானதல்ல... அத்துமீறுபவர்களுக்கு இன்னும் அச்சம் தரத்தக்க அபராதமோ, தண்டனையோ தந்தால் என்ன? என்பதே மக்கள் எதிர்பார்பாக உள்ள இந்தச் சூழலில் தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை குறைப்பதல்ல, பலப்படுத்தி பாதுகாப்பது என்பதே ஜனநாயக சக்திகளின் கடமையாகும்!
20.3.2012

No comments: