Thursday, May 2, 2013

இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரம்....?



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

இந்தியாவிலேயே அதிகமான இன்ஜினியரிங் கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில் தான்!

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 560 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 525கல்லூரிகள் சுயநிதிக்கல்லூரிகள்.

இந்த 525 கல்லூரிகள் அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டவை என்பதாக தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. இதில் 200 கல்லூரிகளுக்கு தற்போது அண்ணாபல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போதுமான ஆசிரியர்களை நியமிக்காதது.
நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தகுதிக்குறைவு
லேப் வசதிகள் இல்லாமை 
அதிகமான மாணவர்களை சேர்த்திருப்பது 
மோசமான கல்வித் தரம்
குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிக்களின்மை
போன்ற பற்பல காரணங்களே நோட்டிஸ் அனுப்பட்டதன் பின்ணணியாகும்.

இந்த லட்சணத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் இருப்பதால் தான் சென்ற ஆண்டு 53,000இடங்களை இக்கல்லூரிகளால் நிரப்ப இயலவிலலை.
சேர்ந்தவர்களின் நிலையே 'சாபம்' எனும் போது, சேர நினைப்பவர்கள் சுதாரித்துக் கொள்வது இயற்கைதானே!

சமீபத்திய ஒரு ஆய்வு இன்ஜினியரிங் படித்துவிட்டு மாணவர்களில் 75சதவிகிதத்திற்கும் மேலானவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்த்திருக்ககும் இன்ஜினியரிங் முடித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3,17,000. சென்னை உயர்நீதிமன்றம் மிகச் சமீபகாலமாக வழங்கிய ஒரு தீர்ப்பில், "தமிழகத்தில் களான்களைப் போல் இன்ஜினியரிங் கல்லூரிகள் முளைத்துக் கொண்டு உள்ளன. இவற்றின் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளன. இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்பவர்கள் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்ல. இருக்கிற இன்ஜினியரிங் கல்லூரிகளே சரியான கல்வித்தரத்தில் இல்லாதபோது புதிய கல்லூரிகளுக்கான அனுமதியை AICTE ஏன் நிறுத்திவைக்கக்கூடாது?" எனக்கேட்டது.

ஆனால் இதை AICTE பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆண்டுக்காண்டு கல்லூரிகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்த ஆண்டு சுமார் 65,000இடங்களை நிரப்பமுடியாத நிலை உருவாகக்கூடும்!

கல்விக்கூடங்கள் என்பவை முன்நாட்களில் வருமானமில்லாத கௌரவமான தொண்டாகப் பாரக்கப்பட்டது. ஆனால் இன்றோ வருமானத்தை அள்ளித் தரும் கௌரவமான வியாபாரமாகிவிட்டது.

இந்நிலையில் சாராயம் காய்ச்சியவர்கள், சினிமாக்காரர்கள், சீட்டுகிளப் நடத்தியவர்கள், சில்லறை சேர்ப்பதற்காக அரசியலில் சேர்ந்தவர்கள், மோசடித் தொழில் செய்து முன்ஜாமீன் பெற்றவர்கள்.... எனபலதரப்பினர் கல்லா கட்டுவதற்காக கல்வி வியாபாரத்தை தொடங்கிவிட்டனர். எனவே இதில் வியாபாரத்தைக் கடந்த மோசடிகள் நடக்கின்றன.
இந்த பெருங்கூட்டத்தில் லட்சியத்தோடு சிலரும், நேர்மையோடுசிலரும், மனசாட்சிக்கு பயந்து சிலரும் கல்லூரிகளை நடத்தவே செய்கின்றனர்.

அண்டா குண்டாவை அடகுவைத்து, அம்மா தாலியையும் சேர்த்துவைத்து அதுவும் பத்தாமல் கடைசி ஆண்டு கட்டணத்திற்கு சொத்தையெல்லாம் விற்று, இன்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்கள் நல்ல கல்லூரிகளை தரமான கல்லூரிகளை - அடையாளம் கண்டு சேரவேண்டும்.

கடந்த காலங்களில் அந்த கல்லூரிகளின் கல்விதேர்ச்சி விகிதாச்சராங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

கற்ற கல்வியால் கரைசேர வேண்டுமேயல்லாமல், கடனாளியாகி வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாது. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
08-4-2013

No comments: