Thursday, May 2, 2013

நிதிநிலை அறிக்கை


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்க அம்சங்களும், வருந்தத்தக்க அம்சங்களும் சேர்ந்த கலவையாக வெளியாகியுள்ளது.

முதலில் வரவேற்கத்தக்க அம்சங்களைப் பார்ப்போம்.
மக்களின் மீது புதிய வரிச்சுமைகளை ஏற்றாத பட்ஜெட்.

பள்ளி கல்வித்துறைக்கு இது வரையில் இல்லாத அளவில் 16,965கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அடிப்படை கட்டமைப்புகள் சரிசெய்யப்படும் என நம்பலாம்.

அதே போல் உயர்கல்வித் துறையிலும் இந்த அரசு சிறப்பான அக்கரை செலுத்தி வருகிறது. கடந்த 2ஆண்டுகளில் 22 புதிய கலைக் கல்லூரிகள், ஒரு பொறியல் கல்லூரி உருவாக்கப்பட்டன. அதைப் போலவே தற்போதும் 10பல்தொழில் நுட்ப கல்லூரியும் 2 பொறியியல் கல்லூரிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது பெரிதும் வரவேற்கத்தக்க அம்சம்.
இதேபோல் காவல்துறை சிறப்பான கவனம் பெற்றுள்ளது. பொதுவாக இந்த அரசு காவல்துறையின் மீது அதீத கரிசனமுள்ள அரசாக உள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க 750கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரிய அணைகளின் புனரமைப்புக்கு ரூ360கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு பல்லாண்டுகாளக மேட்டூர் அணையில் சேர்ந்து குவிந்திருக்கும் மணல் அள்ளப்படுமேயானால் அணையில் மழைக்காலங்களில் கூடுதல் தண்ணீரை சேமிக்கலாம். அத்துடன் அந்த மணல் விற்பனையில் அரசுக்கு பல கோடி வருமானம் கிடைக்கும்.
65லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே போல் கடந்த இரண்டாண்டுகளில் தலா 64லட்சம் நடப்பட்ட மரக்கன்றுகள் என்னவாயிற்று? நட்டப்பிறகு பராமரிப்புக்கு என்ன ஏற்பாடு? கடந்த கால அனுபவங்களில் இருந்து இதில் நாம் படிப்பினை பெற்றிருக்க வேண்டமா? ஆண்டுகாண்டு பென்ஷன் விதவைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தவண்ணமுள்ளது. இரண்டே ஆண்டுகளில் இந்த நிதி உதவிதொகை 200விழுக்காடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது பெருக்கத்தின் விளைவா இது? என அரசு விசாரித்தறிய வேண்டும்.

வேளாண்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும், நீர்வளப்பாதுகாப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகக்குறைவாகும். அதே போல் சிறு, குறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சி சரியான வகையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மாநில அரசின் வரிவருவாயில் கணிசமான பங்கை அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஒய்வூதியங்கள் ஆக்கிரமித்துவிடுகிறது. இதற்கு அடுத்தபடியாக பற்பல இலவசதிட்டங்கள், மானியங்கள் வரிவருவாயின் பெரும்பங்கை பெற்றுவிடுகின்றன.

மத்திய அரசு வரிப்பகிர்வில் தற்போது 14.7%தான் தருகிறது என்பது கவலையளிக்கிறது. மாநில அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டதில் மாநில அரசுக்கு ரூ 500கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி என்பது இந்நிலையில் மிக மிக அரிதாகிவிடுகிறது.
புதிய மின் திட்டங்கள், புதிய பள்ளிக் கூடங்கள் 'நீர்விரயத்தை தவிர்க்கவும், நிலவளத்தை மேம்படுத்தவுமான சிறிய கதவணை, தடுப்பணைகள்
புதிய மருத்துவமனைகள், புதிய தொழிற்சாலைகள்போன்றவை தற்போது அமல்படுத்தமுடியாத அம்சங்களாகிவிட்டன! வருங்காலத்திலாவது இந்நிலைமை மாறவேண்டும். 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
21-3-2013

No comments: