Thursday, May 2, 2013

புதிய மாநகராட்சிகள்

                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் தற்போது மேலும் இரண்டு மாநகராட்சிகள் வர உள்ளன.
தஞ்சை நகரமும், திண்டுக்கல் நகரமும் மாநகராட்சியாக பரிமாணம் காண உள்ளன.
ஏற்கெனவே தமிழகத்தில் 10 மாநகராட்சிகள் உள்ளன. தற்போது 12 என்பதாக எண்ணிக்கை கூடியுள்ளது.

மாநகராட்சிகள் புதிது புதிதாக ஏன் தோன்றுகின்றன...? நகராட்சிகள், மாநகராட்சியாவதன் மூலமாக மக்கள் பெறும் நன்மைகள் என்ன? நஷ்டங்கள் என்ன?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் உள்ளாட்சி சம்பந்தப்பட்டதுமட்டுமல்ல, சர்வதேச பொருளாதார அரசியலும் சம்பந்தப்பட்டது.
முதலாவதாக உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டதன் நோக்கங்கள் சார்ந்து நாம் பார்க்கும் போது உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவம் புதியமாநகராட்சியால் பறிபோகிறது!

உதாரணத்திற்கு 155 வார்டுகளைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி 174சதுர கீமீயிலிருந்து 424 சதுர கி.மீயாக விரிவாக்கம் பெற்று கிரேட்டர் சென்னையானது. இதில் 9நகராட்சிகள், 8பேரூராட்சிகள், 25ஊராட்சிகளைச்சேர்ந்த சுமார் 500க்கு மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளில் இருந்தவர்களின் பதவிகள் பறிபோனது. அதற்கு மாறாக சென்னை மாநகராட்சியில் 45கூடுதல் கவுன்சிலர் பதவிகள் உருவாயின.

இதில் நாம் கவனிக்கவேண்டியது வேலைப் பகிர்வுகளும், பொறுப்புகளும் அலட்சியப்படுத்தப்பட்டு 500க்கு மேற்பட்ட நபர்கள் செய்த வேலைகளை 45நபர்களைக் கொண்டு நிர்வாகிக்கும் போக்கு! அதாவது, அதிகார பகிர்வு என்ற நிலைக்கு மாறாக அதிகார குவியல் என்பதாக உள்ளாட்சி அமைப்பு மாற்றப்படும் போக்காகும்.

இது உள்ளாட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்திற்கே எதிரானதாகும்.

சரி, இப்படி மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் வளம்பெற்றுள்ளனவா? வசதிகள் கூடியுள்ளனவா? என்ற கேள்விகளுக்கு அந்தந்த பகுதி மக்கள் அனுபவரீதியாகத் தரும் பதில்கள் 'இல்லை' என்பதாகும்.

உள்ளூர் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை, தேவைகளை தாங்களே திட்டமிட்டு செயலாற்றும் வாய்ப்புகளைத் தருவதே உள்ளாட்சி அமைப்புகளின் உள்ளார்ந்த லட்சியமாகும். இவை அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன.

ஆனால், இந்தியாவிலோ மாநில அரசுகள் உள்ளாட்சிகள் தன்னாட்சியுடன் செயல்படவே அனுமதிப்பதில்லை. அதற்கு ஒதுக்கவேண்டிய நிதியையும் ஒதுக்குவதில்லை. மாநில அரசிடம் கையேந்தும் அமைப்பாகவே உள்ளாட்சிகளை வைத்துள்ளனர். சுயசார்புடன் செயல்பட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நகராட்சிகள், மாநகராட்சியாக மாறியதால் ஆகப்போவது என்ன?

மாநகராட்சி மாற்றத்தால் வீட்டுவரி, சொத்துவரி, குடிதண்ணீர்வரி... உள்ளிட்டவை அதிகரிப்பது மக்களுக்கு சுமையாகிறது. காய்கறி, பழங்கள், ஹோட்டல் பண்டங்கள் என அனைத்தின் விலையும் அதிகரிக்கிறது. வீட்டுவாடகை உட்பட செலவினங்கள் அதிகமாகி மொத்தத்தில் பொருளாதாரச் சுமை மக்களுக்கு கூடுகிறது.

அதே சமயம் மாநகராட்சிக்கு வருமானம் கூடுகிறது. புதிய, புதிய பெரிய திட்டங்கள் தீட்ட முடிகிறது. இதில் குப்பைகளை அள்ளும் சேவை, குடிநீர் வழங்கும் சேவை, வீடுகளை கட்டித்தரும் திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்ற சர்வதேச நிறுவனங்கள் வாய்ப்புகள் பெறுகின்றன. வெளிநாட்டிலிருந்தும், உலகவங்கிகளிடமிருந்தும் மாநகராட்சிகள் கடன்பெற முடிகிறது. கொடுத்த கடனுக்கான வட்டியைப் பெறுவதும், புதிய வாய்ப்புகளை சர்வதேச நிறுவனங்களுக்கு உருவாக்கித் தருவதும் சர்வதேச நிதியமைப்புகளுக்கு மாநகராட்சிகளில் தான் சாத்தியப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள் தாங்களே செய்யவேண்டிய அடிப்படை கடமைகளை சர்வதேச நிறுவனங்களுக்கு கைமாற்றுவதற்கு மாநகராட்சி அந்தஸ்த்து சௌகரியமாகிறது.
இந்தச்சூழல்கள் இன்றைய இன்றியமையாத அரசியல் நெருக்கடிகளாகும். இந்த நெருக்கடிகளினூடாக நல்ல தரமான சாலை, முறையான பாதாளசாக்கடைத்திட்டம், சிறப்பான குடிநீர்திட்டங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள்... போன்றவற்றை நிறைவேற்றிக் கொண்டு மக்கள் திருப்தி அடைய வேண்டியது தான்!


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
11-4-2013

No comments: